“நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
courtesy: livemint.com
இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும், அதிகம் விரும்பப்படும், அதிகம் தூற்றப்படும் எழுத்தாளர் என்று ராமச்சந்திர குஹாவை அழைக்க முடியும். இரு பாகங்களில் விரியும் ‘காந்தியின் வாழ்க்கை வரலாறு’, ‘சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் நவீன வரலாறு’ (India After Gandhi, 2007), ‘கிரிக்கெட்டின் சமூக வரலாறு’ (A Corner of a Foreign Field, 2002) போன்ற, கொண்டாடப்படும் பல நூல்களின் ஆசிரியர். சிப்கோ இயக்கத்தின் சமூக வரலாற்றை விவரிக்கும் இவருடைய முதல் நூல் (The Unquiet Woods: Ecological Change and Peasant Resistance in the Himalaya, 1989) இன்றுவரை அத்துறையில் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.
சூழலியல், சமூகவியல், கிரிக்கெட், வரலாறு, அரசியல் என விரிந்த தளங்களில் இயங்கிவருபவர். அடிக்குறிப்புகளுடன் கூடிய அடர்த்தியான ஆய்வு நூலாக இருந்தாலும் நடப்பு நிகழ்வு பற்றிய பத்தி எழுத்தாக இருந்தாலும் ஈர்க்கும் நடையில் எழுதக்கூடியவர். ‘யேல்’, ‘ஸ்டான்ஃபோர்ட்’ உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் வகுப்பெடுத்திருக்கிறார்; ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மால்கம் ஆதிசேஷையா விருது, ராம்நாத் கோயங்கா விருது, பத்மபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். பெங்களூரூவில் அவர் இல்லத்தில் மருதன் மேற்கொண்ட நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:
சமூகவியலும் வரலாறும்
உங்கள் படைப்புகளில் கோட்பாட்டு விவாதங்கள் அநேகமாக இடம்பெறுவதில்லை. அதனால் வரலாற்றை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. உங்களைப் பொருத்தவரை வரலாறு என்றால் என்ன?
வரலாற்றாசிரியர்கள் அவ்வப்போது கோட்பாடு சார்ந்த பெரிய விவாதங்களைத் தொடக்கிவைப்பதுண்டு. அந்த விவாதங்கள் வளர்ந்து வளர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். சில சமயம் அவை ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்துசேரும். பெரும்பாலும் முடிவின்றி வளர்ந்துகொண்டே போகும் அல்லது வலுவிழந்து மறையும். வறட்டுத்தனமான இத்தகைய விவாதங்களில் நான் பங்கேற்பதில்லை. இதன் பொருள் இந்த விவாதங்களெல்லாம் பலனற்றவை என்பதல்ல; அவை தேவைதான். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கிறார்கள், முட்டி மோதுகிறார்கள், செழுமைப்படுத்துகிறார்கள். அவற்றை வெளியிலிருந்து பார்வையிடுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். நேரடியாக அதில் இறங்க வேண்டாம் என்பது என் தேர்வு. தவிரவும், அவை அலுப்பூட்டுவதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
ஈ.எச். காரின் ‘வரலாறு என்றால் என்ன?’ உள்ளிட்ட நூல்களை வாசித்திருக்கிறேன். மார்க்சியம், சபால்டர்ன் ஆய்வுகள், பண்பாட்டு ஆய்வுகள் உள்ளிட்ட சிந்தனைப் பள்ளிகள் வரலாற்றியலின் போக்கை வெகுவாக மாற்றியமைத்திருக்கின்றன; நம் பார்வையை விரிவாக்கியிருக்கின்றன. அவற்றிடமிருந்து எனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள நான் தயங்கியதில்லை. வெவ்வேறு இடங்களில் அதைப் பதிவு செய்தும் இருக்கிறேன். பதிவு செய்யாத இடங்களில்கூட இவற்றின் தாக்கத்தை ஒருவர் அடையாளம் காண்பது கடினமல்ல.
ஒரு வரலாற்றுக் கோட்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட வாழ்வையும் நிகழ்வையும் ஆராய்ந்து விவரிப்பதில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். அதில் என் உழைப்பைச் செலவிட வேண்டும் என்றே நினைப்பேன்.
நீங்கள் வரலாற்றுத் துறைக்கு வந்தது எப்படி?
நான் முறைப்படி வரலாறு பயின்றவனல்ல. நான் பட்ட மேற்படிப்பு முடித்தது பொருளாதாரத் துறையில். ஆனால் அது எனக்கேற்ற துறையல்ல. அதில் தொடர்ந்து இயங்கும் திறன் எனக்கு இல்லையென்று விரைவிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது. 1980ஆம் ஆண்டு கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஐஎம்) சமூகவியலில் முனைவர் பட்டப்படிப்பைத் தொடங்கும்போது வெரியர் எல்வினை ஏற்கெனவே கண்டடைந்திருந்தேன். கணிதச் சமன்பாடுகளையும் புள்ளிவிவரக் கணக்கீடுகளையும் கொண்டல்ல, நேரடியான - உணர்வுப்பூர்வமான எழுத்துகள்மூலம் மனித வாழ்வை - சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும், பதிவு செய்யவும் முடியும் எனும் நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. சிப்கோ இயக்கம் என் ஆய்வுப்பொருளாக மாறியது இப்படித்தான்.
நான் என் ஆய்வைத் தொடங்கியபோது சிப்கோ இயக்கம் ஆரம்பித்துப் பத்தாண்டுகள்கூட ஆகியிருக்கவில்லை. செய்திகள், செய்திக் கட்டுரைகள் கடந்து நூல் எதுவும் எழுதப்படவில்லை. சிப்கோவை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் கருதியதாகக் கூடத் தெரியவில்லை. சிப்கோ இயக்கம் என்றில்லை, பொதுவாகவே சூழலியல் பிரச்சினைகள் கவனம் பெறாத காலம் அது. வேளாண் அமைப்பு, இந்திய தேசியவாதத்தின் வளர்ச்சி போன்றவற்றில் வரலாற்றாசிரியர்கள் கவனம் செலுத்திவந்தார்களென்றால் சாதி, உறவுமுறை, வர்க்கம், மதம் போன்றவற்றைச் சமூகவியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். நல்லவேளையாக நான் இந்த மைய நீரோட்டத்தில் சிக்கவில்லை.
சிப்கோ இயக்கம் குறித்த என்னுடைய முதல் புத்தகத்தை எழுதி முடிப்பது எளிதானதாக இல்லை. அலக்நந்தா பள்ளத்தாக்குக்குச் சென்று சிப்கோ இயக்கத்தின் முன்னோடி சண்டி பிரசாத் பட்டைச் சந்தித்தேன். முதல் சிப்கோ போராட்டம் நடைபெற்ற மண்டல் எனும் பகுதிக்குச் சென்று நேர்காணல்கள் செய்தேன். சிப்கோ இயக்கம், சூழலியல் வரலாற்றின் ஒரு பகுதியல்ல, ஒட்டுமொத்தச் சமூக வரலாற்றின் ஒரு பகுதி என எனது பயணங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் நான் சந்தித்து உரையாடியவர்களிடமிருந்தும் தெரிந்துகொண்டேன். எனது தேடல் என்னைக் காலனியக் காலத்துக்கு அழைத்துச்சென்றது. வனம், வனம் சார்ந்த சட்டம், வனத்தில் வாழும் மனிதர்கள், அவர்களுடைய விழைவுகள், பிரச்சினைகள், போராட்டங்கள் எதுவுமே வரலாற்றாசிரியர்களின் கவனத்துக்குப் போதுமான அளவுக்கு வந்துசேராதிருப்பதைக் கண்டேன்.
நான் பணியாற்றவேண்டிய இடம் இதுதான் என்று தெரிந்துபோனது. யார் கால் தடமும் பதியாத ஒரு பாதையில் தன்னந்தனியே நடப்பதுபோல் இருந்தது. ஏராளமான காலனியப் பதிவுகளைக் கண்ட டைந்தேன். பெரும்பாலும் யாரும் அதை எனக்கு முன்னால் பார்வை யிட்டதில்லை. ஓர் ஆவணக் காப்பகத்தை எப்படி பயன்படுத்துவ தென்பதை முதன்முறையாகக் கற்றுக் கொண்டேன். களங்களைப் பார்வையிடுவதைக் காட்டிலும் ஆவணங்களைப் பார்வையிடுவது எனக்குப் பிடித்துப்போனது.
உங்கள் கேள்விக்கான பதில், சமூகவியலிலிருந்து சூழலியலுக்கும் அங்கிருந்து வரலாற்றுக்கும் வந்துசேர்ந்தேன் என்பதுதான். இந்த மூன்றும் தொடர்பற்ற துறைகளாக எனக்குத் தோன்றவில்லை. வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தாலும் இவை மூன்றும் இணையும் ஒரு புள்ளியைக் கண்டடைந்தேன். அந்தப் புள்ளியிலிருந்து இயங்கியபடி மேலும் சில நூல்களை எழுதினேன். நான் சமூகவியலைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக இருந்த வெரியர் எல்வினின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் ஆராயும் நூலாக, Savaging the Civilized: Verrier Elwin, His Tribals and India (1999) உருப்பெற்றது. காலனிய வனச் சட்டங்களை எதிர்த்தும் பழங்குடிகளை ஆதரித்தும் வாழ்ந்து மறைந்த எல்வினின் சிந்தனை வளர்ச்சியின் வரலாறாகவும் அந்நூல் அமைந்தது.
ஈ.பி. தாம்ஸன்
நான் இந்நூலை எழுதியபோது வாழ்க்கை வரலாறு எழுதுவது வரலாறு எழுதுவதாகாது என்பதுதான் கல்விப்புலம் சார்ந்தவர்களின் நிலைப்பாடு. நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு மனிதரை மையப்படுத்துவதன்மூலம் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று நம்பினேன். சூழலியலுக்கும் வரலாற்றுக்கும் ஒரு பாலம் அமைக்க முடியுமென்றால் வாழ்க்கை வரலாற்றுக்கும் வரலாற்றுக்கும் இடையிலும் அப்படியொரு பாலம் அமைக்க முடியாதா? எந்த இடத்திலிருந்து தொடங்கி வரலாற்றை அணுக வேண்டும் என்பதற்கும் எத்தகைய ஆய்வுமுறையியலைக் கையாண்டு வரலாறு எழுத வேண்டும் என்பதற்கும் ஏன் கறாரான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்? அந்தக் கட்டுப்பாடுகளை ஏன் ஒருவர் மீறக் கூடாது? துறைகளுக்கு இடையில் ஏன் சுவர்கள் இருக்க வேண்டும்?
எந்த விதிமுறைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடைபடாமல் என் ஆய்வு என்னை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ அங்கெல்லாம் சென்றேன். சிப்கோ இயக்கம் ஒரு சிறு பகுதியை மையப்படுத்தியதென்றால்Environmentalism: A Global History (2000) உலகம் தழுவியதாக அமைந்தது. ஜான் மியூர், ரேச்சல் கார்சன், லூயிஸ் மம்ஃபோர்ட், காந்தி போன்ற சிந்தனையாளர்களையும் கென்யா, ஜெர்மனி, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் உருவான சூழலியல் இயக்கங்களையும் இந்நூலில் விவாதித்திருப்பேன்.
வரலாறு நெகிழ்ச்சித் தன்மை கொண்டது. அதை நாம் மென்மேலும் விரித்தெடுத்துக்கொண்டே செல்ல முடியும். எந்தத் துறையிலிருந்தும் வெளிச்சத்தைத் திரட்டிக் கொண்டுவந்து வரலாற்றின்மீது பாய்ச்ச முடியும்.
பொது வாசகர்களுக்காக எழுதப்படும் வரலாற்று நூல்கள் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
தகுந்த பல்கலைக்கழகங்களிலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே வரலாறு எழுத வேண்டும் என்றோ, அங்கீகாரம் பெற்ற பேராசிரியர்களின் ஆய்வு முறையியலைக் கையாண்டு எழுதப்படுவது மட்டுமே வரலாறு என்றோ நான் சொல்ல மாட்டேன். ஒரு நூல் எழுதப்பட்டிருக்கும் விதத்தை வைத்து மட்டுமே அந்நூலை மதிப்பிடுவேன்.
வெகுஜன ரசனைக்காக எழுதப்படும் நூல்களை வரலாறு என்று ஏன் அழைக்க முடியாது என்று சொல்கிறேன். இத்தகைய நூல்கள் என்னென்ன நடந்தன என்று வரிசைக்கிரமமாகத் தொகுத்து, சுவையாகக் கதைபோல் விவரிப்பதோடு நிறுத்திக்கொள்ளும். மிக எளிய ஒரு சித்திரத்தைக் கடந்து வேறு எதையும் வாசகர்களால் இவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. வரலாறு நுணுக்கமானது. ஒரு வரலாற்றாசிரியர் நிகழ்வுகளைத் தகுந்த பின்னணியில் பொருத்தி விரிவாக ஆராய்வார். ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்புகளிலிருந்து, வெவ்வேறு வகையான தரவுகளைச் சேகரிப்பார்; அவற்றின் உண்மைத்தன்மையைச் சோதிப்பார்; ஒப்பிடுவார். தடாலடியான முடிவுகளுக்கு வந்துசேராமல் திறந்த மனத்தோடு அனைத்தையும் தொகுத்துக்கொண்டு பரிசீலிப்பார். கவனமாகத் தன் தரப்பு வாதங்களை எடுத்துவைப்பார். இயன்றவரை பெரிய சித்திரத்தை வழங்க முயல்வார்.
அரண்மனைக்குள் நடப்பது அல்ல வரலாறு. பளபளப்பான சில அரசர்களின், அரசிகளின் வாழ்வை அழகுற விவரித்துவிட்டு, அப்போதைய சமூக மாற்றங்கள் அனைத்துக்கும் அவர்களே பொறுப்பு என்று சொல்லி முடித்துக்கொள்வது தவறான வரலாற்றுப் பார்வை. ஈ.ஹெச். கார் குறிப்பிடுவதுபோல் இந்த அரசர் நல்லவர், அந்த அரசி பொல்லாதவர் என்று முத்திரைக் குத்துவதோடு முடித்துக்கொள்வது வரலாறாகாது. சமூகத்தின் கதை விரிவாக, ஆழமாகச் சொல்லப்பட வேண்டும். ‘பாப்புலர் ஹிஸ்டரி’ என்னும் பெயரில் வெளிவரும் நூல்களில் இந்தக் குறைபாடுகள் மலிந்திருக்கின்றன.
இன்னொரு பக்கம், கல்விப்புலம் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் பல்லை உடைக்கும் நடையில் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். இலக்கியத்துக்கும் சமூக அறிவியலுக்கும் இடையில் வரலாறு அமைந்திருக்கிறது. இனிய, எளிய நடையில் கனமான வரலாற்று நூல்களை எழுதுவது சாத்தியம்; இது என் நம்பிக்கை.
ஆய்வும் வரலாறும்
ஆவணங்கள் அளவுக்குக் கள ஆய்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதுண்டா?
உங்கள் ஆய்வுப்பொருள் என்ன வென்பதைப் பொறுத்துத் தரவுகள் சேகரிக்கும் முறை மாறுபடும். எடுத்துக்காட்டுக்கு, பண்டைய அல்லது இடைக்கால இந்தியாவை ஆராய்பவர்கள் அவசியம் கள ஆய்வுகள் மேற்கொள்வார்கள். கல்வெட்டு, கட்டுமானம், சிற்பம், ஓவியம் என்று தொடங்கிப் பலவற்றை அவர்கள் நேரடியாகப் பார்வையிடுவார்கள். ஆவணங்களும் அவர்களுக்குச் சம அளவில் முக்கியமானவைதாம்.
வெர்ரியர் எல்வின்
என்னுடைய மையம் நவீன இந்தியா. குறிப்பாக 19, 20ஆம் நூற்றாண்டுகள்தான் நான் கவனம் செலுத்திவரும் காலகட்டம். தொடக்கம்முதல் இன்றுவரை இந்தப் பரப்புக்குள்தான் இயங்கி வருகிறேன். என்னுடைய தரவுகள் தூசு படிந்து கிடக்கும் இருண்ட அறைகளுக்குள் புதைந்துகிடக்கின்றன. என்னுடைய எல்லாப் புத்தகங்களும் பெருமளவு ஆவணக் காப்பகங்களிலிருந்து உருவானவை. என்னுடைய கள ஆய்வு ஆவணக்கிடங்குகள் அமைந்திருக்கும் இடங்களுக்குச் செல்வது மட்டும்தான். அயல்நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தாலும் அங்கும் நூலகம், ஆவணக்கிடங்கு என்று அறைக்குள் அமர்ந்துதான் பணியாற்றுவேன்; களத்தில் திரிந்து அல்ல.
பண்டைய வரலாற்றை ஆராய்பவர்களுக்குத் தரவுகள் அரிதாகவே கிடைக்கும். உங்களுக்கு அத்தகைய சவால்கள் இருக்காது அல்லவா?
நவீன வரலாற்றாசிரியர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகத் தரவுகள் கிடைப்பது உண்மைதான். ஆனால் வேறு வகையான சிக்கலை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். தரவுகளை எவ்வாறு அடையாளம் காண்பது? ஒரு குறிப்பிட்ட ஆய்வுப்பொருளுக்கு எத்தகைய தரவுகள் தேவைப்படும்? மலைபோல் குவிந்திருப்பவற்றில் எவை நமக்கானவை என்று எப்படிக் கண்டறிவது? இக்கேள்விகளுக்கு ஒருவர் அளிக்கும் விடையைப் பொறுத்தே அவருடைய தேடல் அமையும்.
எடுத்துக்காட்டுக்கு, நான் எழுத வந்தபோது காலனிய வரலாற்றை ஆராய்பவர்கள் அரசு ஆவணங்களை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தினர். செய்தித்தாள்களையோ துண்டுப் பிரசுரங்களையோ சட்ட ஆவணங்களையோ தனிப்பட்ட சேகரிப்பில் உள்ளவற்றையோ அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அந்த ஆளுமையின் எழுத்துகளையே பிரதானமாக எடுத்துக்கொள்வது இங்கே வழக்கமாக இருந்திருக்கிறது. காந்தி பற்றி எழுதிய அனைவரும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் நீண்டுசெல்லும் அவருடைய தொகுதிகளையே, அதாவது காந்தியின் எழுத்துகளையே அதிகம் சார்ந்திருந்தனர். இங்கும் காந்தியின் கடிதங்கள் ஆராயப்பட்டதுபோல் காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்கள் ஊன்றி ஆராயப்படவில்லை. இத்தனைக்கும் காந்தியின் தொகுப்புகளில் அவருக்கு வரப்பெற்ற கடிதங்களும் அடங்கியிருக்கின்றன. காந்தியைச் சுற்றி இயங்கியவர்களின் எழுத்துகள், உளவுக் குறிப்புகள், செய்திக் குறிப்புகள் எனத் தரவுகள் பல தரப்பட்டவையாக இருக்கின்றன. தேடலை மென்மேலும் அகலப்படுத்திக்கொண்டால்தான் விரிந்த பார்வையில் காந்தி கிடைப்பார்.
என்னைப் பொருத்தவரை தரவுகள் சார்ந்த சவாலானது வெவ்வேறு ஆவணக் காப்பகங்கள் தேடிப் பல்வேறு இடங்களுக்குச் செல்வதும் மேஜையின் முன்பு பல மணி நேரங்கள் செலவிடுவதும்தான். கடினமான உழைப்பைக் கோரும் பணி இது. ஒரு காந்தியை எழுதுவதற்கு இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
எழுத்தில் உள்ளதை மட்டுமே சான்றாகக் கொள்வீர்களா? வாய்மொழி வரலாற்றில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
வாய்மொழி வரலாறு எழுதப்படும் முறை குறித்து எனக்குச் சில ஐயங்கள் உண்டு. ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை இன்று நினைவுகூர்வது சாத்தியமா? அந்த நினைவுகளைக்கொண்டு வரலாற்றைக் கட்டமைக்க முடியுமா?
ஊர்வசி புட்டாலியா, ஸ்வெட்லானா அலெக்சிவிச் போன்றவர்கள் கட்டமைத்திருக்கிறார்களே!
ஊர்வசி புட்டாலியாவின் புத்தகத்தை (The Other Side of Silence, 1998) வாய்மொழி வரலாறு என்று அழைப்பதைவிடவும் குடும்ப நினைவுகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஸ்வெட்லானாவைப் பொருத்தவரை ஆவணக்காப்பகங்களில் காணக்கிடைக்காத சோவியத் யூனியன் குறித்த தரவுகளை வாய்மொழி வாக்குமூலங்களாகத் தொகுத்திருப்பார். ஒரே நிகழ்வு குறித்துப் பலருடைய வாழ்க்கை அனுபவங்களை அவர் திரட்டியிருப்பார். எனவே அவருடைய நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வாய்மொழி வரலாற்றை நான் முழுவதும் மறுதலிப்பதாகக் கொள்ள வேண்டாம். வரலாற்றியலில் அதற்கோர் இடம் இருப்பதை நான் அறிவேன். என்னளவில் நினைவிலிருந்து மீட்டுச் சொல்லப்படும் சொற்களைவிட எழுத்திலுள்ள பதிவுகளைக் கூடுதலாக நம்புகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய நினைவுகள் துல்லியமானவை என்று என்னால் சொல்ல முடியாது. 1997ஆம் ஆண்டு குறிப்பிட்ட நாளன்று இதுதான் நடந்தது, இப்படித்தான் நடந்தது என்று என் நினைவுகள் சொல்லும். அதே நாள் நான் எழுதிய ஒரு கடிதத்தை எடுத்து ஒப்பிட்டால் அது வேறொரு கதையைச் சொல்லும். பின்னுக்குச் செல்லச்செல்ல நினைவுகளோடு பிசகுகளும் கலந்துவிடுகின்றன. அந்தப் பிசகுகளையும் நாம் நினைவுகள் என்று நம்ப ஆரம்பிக்கும்போது நாம் சொல்லவரும் செய்தி மங்கலாகிவிடுகிறது.
நவீனத்துவமும் இந்தியாவும்
இந்தியாவில் நவீன காலம் எப்போது தொடங்கியது என்று அறுதியிட்டுச் சொல்வது சாத்தியமா?
காலம் எந்தவிதத் தடைக்கும் கட்டுப்படாமல் முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருப்பது உண்மைதான். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் காலத்தை மட்டுமல்ல வரலாற்றையும் சிறு சிறு அலகுகளாகப் பிரிப்பது சாத்தியம்.
நவீனத்துவம் பலவிதமான புரட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நகர்ப்புறப் புரட்சி. பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததை இது குறிக்கிறது. வேளாண்மையிலிருந்து மக்கள் இயந்திரங்களை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து தொழில்புரட்சி உருவானது. முடியாட்சியிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்தைத் தழுவிக்கொண்டபோது ஜனநாயகப் புரட்சி மலர்ந்தது. பெண்கள், தலித்துகள் என்று அதுவரை குரலற்று இருந்தவர்கள் சமவுரிமை பெற்றபோது சமூகப் புரட்சி ஏற்பட்டது. சமத்துவம், நீதி போன்ற விழுமியங்கள் வலுப்பெற்றன. நொடிதோறும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் நாம் தொழில்நுட்பப் புரட்சியைச் சந்தித்துவருகிறோம். இதுபோன்ற புரட்சிகள் வரலாற்றின் திசைவழியை மாற்றியமைக்கின்றன. அந்தத் தருணங்களைக் கவனப்படுத்திக் காலத்தைப் பிரிப்பதைச் சமூகவியல் அனுமதிக்கிறது.
இந்தப் புரட்சிகளை ஏற்படுத்தியதில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அவர்கள் ஏற்படுத்திய அமைப்புகளும் அந்த அமைப்புகள் கையாண்ட வழிமுறைகளும் இந்தப் புரட்சிகளைத் தோற்றுவித்தன. ஏன், பண்பாட்டுப் புரட்சியைக்கூட இந்த வரிசையில் சேர்க்க முடியும். தனிநபருக்கு, தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனியுரிமைக் கோட்பாட்டின் முக்கியத்துவம் காலனியத்தின்போதுதான் உணரப்பட்டது. அதுவரை இந்தியா பயணித்து வந்த திசையை இப்புரட்சிகள் தெள்ளத்தெளிவாகத் திருத்தியமைத்தன. அலையலையான இந்த மாற்றங்களையே நவீனக் காலத்தின் தொடக்கமாக நான் கொள்கிறேன்.
காலனியம் நமக்குப் பெருமளவு நன்மையையே பயத்தது என்று சொல்ல வருகிறீர்களா?
காலனியக் காலகட்டத்தை இருண்ட காலமாக என்னால் ஏன் பார்க்க இயலவில்லை என்பதைத்தான் விளக்கிக்கொண்டிருக்கிறேன். இந்தியா பல புரட்சிகளைச் சந்தித்தது, 19ஆம் நூற்றாண்டில்தான்; இதை ஒருவராலும் மறுக்க முடியாது.
அதே சமயம் இப்புரட்சிகள் அனைத்தும் கவனமாகத் திட்டமிடப்பட்டவை என்றோ இந்திய நலன்களை மனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டவை என்றோ சொல்ல முடியாது. காலனியத்தின் முடிவில் ஒரு புதிய இந்தியா உருப்பெற்று எழுந்து வந்தது என்றாலும் அது முற்றிலும் புதிய இந்தியாவாக இல்லை. பல அடிப்படைகள் இன்றும் மாறாமல் தொடர்வதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுகள் கடந்தும் சாதி அமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. சமூகங்களுக்கு இடையிலான உறவுகளில் சில அம்சங்கள் மாறாமல் தொடர்கின்றன. அதேபோல் இந்து முஸ்லிம் உறவும் நீண்டகாலமாகவே சிக்கலானதொன்றாக நீடித்து வருகிறது.
ஆம், பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரிட்டிஷ் பலனடைந்தது உண்மை. ஆனால் வகுப்புவாதத்தை உருவாக்கியதே பிரிட்டிஷ் காலனியம்தான் என்று இடதுசாரிகளிலேயே சிலர் சொல்லிவருவதை ஏற்பதற்கில்லை. இந்து முஸ்லிம் உறவில் விரிசல்களும் இருந்திருக்கின்றன, நட்புணர்வும் இருந்திருக்கிறது. குறிப்பாக, வட இந்தியாவில் இந்த முரணைக் காண முடியும்.
ஆனால் தொடர்ச்சியைக் காட்டிலும் பல புதிய சிந்தனைகள், புதிய அரசியல், புதிய சமுகம், புதிய தேசம் போன்றவை காலனியக் காலத்துக்குப் பிறகே நிகழ்ந்திருக்கின்றன. எனவே இங்கே ஒரு கோட்டைக் கிழிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக நவீனக் காலத்தைக் காண முடிகிறது. ஒரு சமூகவியலாளராக இதையே என்னுடைய ஆய்வின் தொடக்கப்புள்ளியாக வகுத்துக்கொண்டேன்.
காலனியத்திலிருந்து விடுபட்ட எல்லா நாடுகளிலும் இதேபோல் நவீனமயமாக்கல் நிகழ்ந்திருக்கிறதா?
காலனியம் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு விதமாக உருமாற்றியிருக்கிறது. பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளுக்கு இடையிலுமேகூடப் பெருத்த வேறுபாடுகளைக் காண முடியும். இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் ஆப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இன்னபிற இடங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களும் வெவ்வேறானவை. நான் நவீன இந்தியாவின் வரலாற்றாசிரியனாய் இருப்பதால் அதை மட்டும் இங்கே பேச விரும்புகிறேன். அதற்குமுன்பு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நவீன இந்தியா சந்தித்த அல்லது நவீன இந்தியாவை உருவாக்கிய மேற்கூறிய புரட்சிகள் அனைத்தும் காலனியவாதிகளால் மட்டும் நிகழ்ந்தவையல்ல. காலனியத்தை எதிர்கொண்ட, காலனியத்தை எதிர்த்த, காலனியத்தோடு உரையாடிய இந்தியர்களாலும் நிகழ்ந்தவை. எனவே காலனியம் என்று நான் குறிப்பிடுவதைக் காலனியக் காலம் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
courtesy: Man’s world India
பிற காலனிய நாடுகளோடு மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டாலும் இந்தியா தனித்துவமான நாடாகவே எனக்குக் காட்சியளிக்கிறது. அதற்குக் காரணம் இங்கே உருப்பெற்று எழுந்த தலைவர்கள். மாடிசன், ஹாமில்டன், ஜெஃபர்ஸன், ஃபிராங்க்ளின் போன்ற முதல் தலைமுறைத் தேசியவாதிகளை அமெரிக்கா கண்டிருக்கிறது. கியூபாவில் ஹோஸே மார்த்தி, செனகலில் லியோபோல்டு செங்கோர், கானாவில் க்வாமே என்க்ரூமா போன்றோர் தோன்றியிருக்கின்றனர். இவர்களெல்லோருமே சிந்தனையாளர்களாகவும் போராளிகளாகவும் திகழ்ந்தவர்கள். தங்கள் தேச விடுதலைக்காக அளப்பரிய பங்களிப்புகளை நிகழ்த்தியவர்கள். ஆனால் இவர்களோடு ஒப்பிடும்போது நம் தலைவர்கள் தனித்துவமாகத் திகழ்கிறார்கள். ராம் மோகன் ராய், பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, அம்பேத்கர், சையது அகமது கான், ஜோதிபா புலே, பெரியார், வெரியர் எல்வின், கமலாதேவி சட்டோபாத்தியாயா என்று நவீனத்துவப் புரட்சிகளுக்கு வித்திட்டவர்களை ஒரு தனி நூலில் (Makers of Modern India, 2012) தொகுத்திருக்கிறேன்.
எந்த வகையில் இந்தியச் சிந்தனையாளர்கள் தனித்துவமானவர்கள்?
லெனினின் தாக்கம் சோவியத்தின் சிதைவுவரை, சுமார் எழுபது ஆண்டுகள் நீடித்தது. மாவோவின் தாக்கம் அதைவிடவும் குறைவான காலமே நீடித்தது. பிரிட்டனில் சர்ச்சிலை இன்று நினைவுகூர்பவர்கள் குறைவு. பிரான்சின் செல்வாக்குமிக்க அரசியல் சிந்தனையாளராகத் திகழ்ந்த சார்லஸ் டி’ கால் ஐரோப்பிய யூனியன் உருவான பிறகு மறக்கப்பட்டார். ஆனால் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் இந்தியச் சிந்தனையாளர்கள் பேசியவையும் எழுதியவையும் இன்றும் பொருத்தப்பாடுடையவை. இன்றும் நமக்கு வழிகாட்டுபவை.
காந்தியின் சிந்தனைமுறையும் அம்பேத்கரின் சிந்தனைமுறையும் வெவ்வேறானவை; பல இடங்களில் முரண்பட்டவையும்கூட. காந்தி வழி வந்தாலும் நேருவின் அரசியல் பாதை தனித்துவமானது. சாதி, கல்வி, பெண்ணுரிமை, சமத்துவம், சமயச் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை மையப்படுத்தி இயங்கினார்கள். அவர்கள் பொருட்படுத்தி விவாதித்த பல பிரச்சினைகள் இன்றும் தொடர்வதால் அவர்களுடைய சிந்தனைகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன.
இந்தியச் சிந்தனையாளர்களிடையே நிலவிய பன்முகத்தன்மை இன்றைய காலத்துக்கு இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இவர்கள் ஆரம்பித்து வைத்த விவாதங்களை இன்றும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்; அதற்கான அவசியமும் நீடிக்கிறது. எதிர்கால இந்தியாவுக்கும் இவர்கள் பொருத்தமானவர்களாகவே இருப்பார்கள். இந்தியக் குடியரசுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள். நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரும் இவர்களைப் புறக்கணிக்கத் துணியமாட்டார்கள்.
காலனியமும் வரலாறும்
காலனியத்தை நவீனத்துவத்தோடு நீங்கள் தொடர்புபடுத்தும்போது, அதன் வன்முறை முகம் மறைந்துவிடுகிறது அல்லவா?
அப்படியல்ல. காலனியத்துக்கு இரு முகங்கள் இருக்குமென்றால் இரண்டையும் நடுநிலையோடு ஆராய வேண்டும் என்றே சொல்வேன். காலனிய காலத்தில் ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது, வன்முறை மிகுதியாக இருந்தது என்று யாரேனும் சொன்னால் எந்த ஒப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறீர்கள் என்றே கேட்பேன்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைதி நிலவி வந்ததுபோலவும் காலனியம் நுழைந்ததும் அந்த அமைதி ஒரே நாளில் உடைபட்டுப் பிளவுகளும் மோதல்களும் பீறிட்டுக் கிளம்பியதுபோலவும் ஒரு தோற்றம் வலிந்து உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் வேளாண் வரலாற்றை ஆய்வு செய்த தர்மா குமார் வந்தடைந்துள்ள சில முடிவுகள் முக்கியமானவை. காலனியம் நிலமற்ற விவசாயக் கூலிகளைத் தோற்றுவித்தது என்றொரு பொதுக்கருத்து நிலவுகிறது அல்லவா? அது தவறு. விவசாயக்கூலிகள் பிரிட்டனின் வருகைக்கு நீண்டகாலத்துக்கும் முன்பிருந்தே இருந்து வந்திருக்கின்றனர். பிரிட்டனின் காலனியாக இந்தியா மாறுவதற்கு முன்பு, முடியாட்சி நிலவிய காலத்தில், அதிலும் பொற்காலங்கள் என்று பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட காலத்திலேயே நிலமற்ற விவசாயக் கூலிகள் உருவாகிவிட்டனர். நிலவுடைமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொடுமையாக நடத்தியிருக்கிறார்கள். நிலத்துக்கான வரியும் அதிகமாக இருந்திருக்கிறது என்கிறார் தர்மா குமார்.
காலனியத்தின் குற்றங்கள் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு நல்ல வரலாற்றாசிரியர் அவற்றை மறைக்கவோ திரிக்கவோ முயல மாட்டார். அதேபோல் அவசரப்பட்டுத் தீர்ப்பும் எழுத மாட்டார். ஆனால் அரசியல்வாதிகளிடம் அந்தப் பக்குவத்தை எதிர்பார்க்க முடியாது.
அரசியல் விடுதலை மட்டும் போதாது. கல்வி, பண்பாடு, இலக்கியம், வரலாறு என அனைத்துத் தளங்களிலிருந்தும் ‘காலனித்துவ நீக்கம்’ செய்யப்பட வேண்டும் என்னும் முழக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வெறும் முழக்கமாக மட்டும் பார்க்கிறேன். இவ்வாறு சொல்பவர்கள் யாரேனும் இதை எவ்வாறு செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களா? காலனிய காலத்தின்போது பெற்றுக்கொண்ட எதுவும் வேண்டாம் என்று உதறிவிட்டு மீண்டும் பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச்செல்வதுதான் அவர்கள் திட்டமா? நவீன இந்தியா வேண்டாம், பாரதத்துக்கு மாறுங்கள் என்பார்களா? நவீனக் கல்விமுறையை ஒழித்துவிட்டு மனுநீதிக்கு உயிர்கொடுப்பார்களா? அனைத்து அந்நியத் தாக்கங்களையும் அகற்றிவிட்டுப் பரிசுத்தமான, பழைய இந்து மதத்தை இன்று மீண்டும் கொண்டுவருவது சாத்தியம் என்று அவர்கள் நம்புகிறார்களா?
கடந்த காலத்தை மாற்றியமைக்கும் வல்லமை யாருக்குமில்லை. நேரு குறிப்பிட்டதுபோல் இந்தியாவானது ஒரு பழங்காலப் பிரதி. அந்தப் பிரதியில் பலர் பலவற்றை ஒன்றன்மீது ஒன்றாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் மேலே, மேலே எழுதிக்கொண்டே செல்லலாமே தவிர ஒருவராலும் அடியில் உள்ளதை அழிக்க முடியாது. பழைமையும் புதுமையும் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன. பௌத்தம், சமணம், இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் அனைத்தும் ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. கன்னடம், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, தமிழ், வங்கம், உருது, ஆங்கிலம் எனப் பல மொழிகளுக்கிடையில் நெருக்கமான பிணைப்புகள் ஏற்பட்டுவிட்டன. எல்லாவிதமான பண்பாடுகளும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஒன்று கலந்திருக்கின்றன. இந்தியாவைக் குலைக்காமல் எந்த இழையையும் உங்களால் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது. கடலும் மலையும் காடும் பாலைவனமும் கொண்ட பெருநிலம் இந்தியா. இந்த வேற்றுமை இருக்கும்வரை மட்டுமே இந்தியா உயிர்த்திருக்கும்.
கடந்த காலக் குற்றங்களுக்கு பிரிட்டன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சிலரும் அது மட்டும் போதாது, கணிசமாக நமக்கு இழப்பீடும் தர வேண்டும் என்று வேறு சிலரும் கோருகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வரலாற்றைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் இத்தகைய கோரிக்கைகளை எழுப்புவார்கள். மன்னிப்பு, இழப்பீடு கோருவதெல்லாம் வெறும் அரசியல் விளையாட்டுகள். அவ்வாறு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. சரி, பிரிட்டன் நம்மிடம் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நமக்கு ஏன் இழப்பீடு தர வேண்டும்? பிரிட்டனால் ஆளப்பட்ட ‘நாம்’, இன்றைய ‘நாம்’ இரண்டும் ஒன்றா? இன்றுள்ளதைப் போல் அன்று ஒன்றுபட்ட இந்தியா இருந்ததா? இன்று நாம் காலனியத்தை எப்படிப் பார்க்கிறோமா அப்படித்தான் அன்றும் இந்தியர்கள் பார்த்தனரா? இங்கே எந்த இந்தியர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? இந்தியர்கள் அனைவரும் வெள்ளையர்களை எதிர்த்தனரா? வெள்ளையர்கள் அனைவரும் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தவர்களா? பிரிட்டிஷாரோடு உடன்பட்டு, அவர்களோடு கைகுலுக்கிப் பணியாற்றிய சமஸ்தானத்து இளவரசர்களை நாம் வேண்டுமானால் மறந்துவிடலாம். ஆனால் வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு திப்பு சுல்தானுக்கும் ஒரு மைசூர் உடையார் இருந்திருக்கிறார்.
கடந்த காலம் தட்டையானதல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கடந்தகால இந்தியர்கள், கடந்தகால பிரிட்டிஷார், கடந்தகால இஸ்லாமியர்கள், கடந்தகால இந்துக்கள் என்றெல்லாம் மனிதர்களை அவ்வளவு எளிதாக வகைப்படுத்திவிட முடியாது. பிரிட்டன் பல கொடுமைகளை நிகழ்த்தியது உண்மை. காடுகளை, சுற்றுச்சூழலை அவர்கள் நாசப்படுத்தியதை எனது நூல்களில் விரிவாகவே விவாதித்திருக்கிறேன். பிரிட்டன் இந்தியாவைச் சுரண்டியது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பிரிட்டன் இந்தியாவை நவீனப்படுத்தியதும்.
காந்தி
கார்ல் மார்க்ஸ் இந்த முரணைப் பேசியிருக்கிறார். ‘பிரிட்டனின் இந்திய ஆக்கிரமிப்புக்குப் பின்னால் மோசமான நோக்கங்கள் இருந்தன. ஆனால் தம்மையறியாமல் வரலாற்றின் கருவியாக பிரிட்டன் திகழ்ந்தது. இந்தியாவின் குறைகளை, பிளவுகளை இங்குள்ளவர்களில் ஒரு சிலரேனும் உணர்வதற்கும் இக்குறைகளை, பிளவுகளைக் களைவதற்குக் கடுமையாக உழைப்பதற்கும் காலனியம் காரணமாக இருந்தது.’ இந்தியா குறித்த மார்க்சின் அவதானிப்புகளில் இது முக்கியமானதென்று கருதுகிறேன்.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ராம்மோகன் ராய் தொடங்கி கோகலே, காந்தி, அம்பேத்கர், பெரியார், புலே என்று பலர் காலனிய காலத்தில் உருப்பெற்று எழுந்தது தற்செயலானதல்ல. இவர்களுடைய காலனிய எதிர்ப்பு கண்மூடித்தனமானது அன்று. பிரிட்டனின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை இவர்களில் சிலர் உணர்ந்திருந்ததால்தான் முக்கியமான சில சமூகப் பிரச்சினைகளில் பிரிட்டனின் பக்கம் இவர்களால் நிற்க முடிந்தது. அம்பேத்கரை வாசித்தால் இந்த உண்மையை உணர முடியும். பிரிட்டன் இந்தியர்களை ஒடுக்கியதென்றால் இங்குள்ள உயர்சாதியினர் தலித்துகளை நடத்திய விதத்தை என்னவென்று அழைப்பீர்கள்? ஆதிக்கம் செலுத்துவதும் சுரண்டுவதும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்துவதும் அநீதியென்றால் அந்த அநீதியை அந்நியர்களான பிரிட்டிஷார் மட்டுமா இழைத்தனர்? தேசிய விடுதலைப் போராட்டம் இந்து உயர்சாதியினரின் போராட்டமாக இருந்ததை அம்பேத்கரும் புலேவும் பெரியாரும் விமரிசித்துள்ளதை நாம் வசதியாக மறந்துவிடப்போகிறோமா?
மனச்சாட்சியுள்ள அனைவரையும் காலனியம் அசைத்து உலுக்கியது. நவீன அரசியல் சிந்தனை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாட்டுக்கூறுகள் எனப் பலவற்றை பிரிட்டிஷாரிடமிருந்து நேரடியாக இந்தியா பெற்றுக்கொண்டது. சமூகத்தின் பிளவுகளை அடையாளம் காண காலனிய அனுபவம் அவர்களுக்கு உதவியது. தலித்துகளும் பெண்களும் தொழிலாளர்களும் அடித்தட்டிலிருந்த ஏனையோரும் இதுகாறும் நடத்தப்படும் விதம் கண்டு இவர்கள் கோபமும் கவலையும் கொண்டனர். இந்தச் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது காலனியம்தான். நீங்கள் உண்மையிலேயே நவீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் எங்களை ஏன் அடிமைப்படுத்த வேண்டும்? உங்கள் நவீனத்துவம் இதைத்தான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்ததா என்று பிரிட்டிஷாரிடமே சில தலைவர்கள் கூர்மையாகத் திருப்பிக் கேட்கவும் முடிந்தது. பிரிட்டனால் ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியுமென்றால் ஏன் இந்தியாவால் முடியாது என்று உள்நோக்கிக் கேள்வி எழுப்பிக்கொள்ளவும் முடிந்தது.
இதற்குப் பதில் சொல்லுங்கள். ஒருவேளை பிரிட்டிஷார் வராமல் போயிருந்தால், இந்தியாவை இந்தியர்களாகிய மராத்தியர்கள் ஆண்டிருந்தால் ஜனநாயகம் மலர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சாதிப் பாகுபாடு இருந்திருக்காது என்பீர்களா? தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட்டிருக்குமா? காலனியம் நுணுக்கமான வரலாற்றைக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷார் மோசமானவர்கள், இந்தியர்கள் நல்லவர்கள் என்று கறுப்பு வெள்ளையாக அணுகுவது ஆபத்தானது. வருத்தமளிக்கும் வகையில் சில வரலாற்றாசிரியர்களே காலனியத்தை இப்படித்தான் தட்டையாக அணுகுகிறார்கள்.
கார்ல் மார்க்ஸ்
பிரிட்டிஷ் பேரரசின் கடந்தகாலத் தவறுகளுக்கு இன்றைய பிரிட்டிஷ் மக்கள் பொறுப்பேற்க வேண்டு மெனில் நம்முடைய கடந்த காலத் தவறுகளுக்கு நாம் பொறுப்பேற்கவும் முன்வர வேண்டும். இன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வங்காளப் பஞ்சத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றால் இன்றைய பிராமணர்கள் தங்கள் மூதாதையர்கள் தலித்துகளை நடத்திய விதத்துக்காகவும் மன்னிப்புக் கேட்கத் துணிய வேண்டும். செய்வார்களா?
தனிப்பட்ட முறையில் நான் சாதியத்தைக் கடைப் பிடிக்க மாட்டேன்; பிராமண மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்க மாட்டேன்; அவ்வாறு செய்பவர்களை ஆதரிக்கவும் மாட்டேன்; இதுதான் என் நிலைப்பாடு. மன்னிப்பு அல்ல மனமாற்றம்தான் இன்று தேவைப்படுகிறது. பிரிட்டன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, இந்தியாவைத் தனக்குச் சமமான நாடாக, இறையாண்மைமிக்க ஒரு நாடாகக் கருதி மதிக்க வேண்டும். அதே மதிப்போடு உறவு பேண வேண்டும். இதைத்தான் இன்றைய பிரதமரிடம் நாம் எதிர்பார்க்க வேண்டும். இதை அவர் செய்யத் தவறும்போது விமரிசிக்க வேண்டும்; அவ்வளவுதான்.
இங்கிருந்து எடுத்துச் சென்ற கோஹினூர் போன்ற கலைப்பொருள்களைத் திருப்பிக்கொடுக்குமாறு கோரலாமா?
இதுவொரு சிக்கலான கேள்வி. மேற்கு ஆப்பிரிக்காவின் தொன்மையான பேரரசுகளில் ஒன்றான பெனின் பேரரசு (இன்றைய நைஜீரியா) 13-16ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கிய ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கலைப்பொருட்களை பிரிட்டிஷ் காலனியப் படைகள் களவாடிச் சென்றுவிட்டன. ‘பெனின் படிமங்கள்’ எனப்படும் இக்கலைப்பொருள்களை பிரிட்டன் மொத்தமாகத் திருப்பி அளிக்க வேண்டும் எனும் குரல் நீண்டகாலமாகவே ஒலித்து வருகிறது. இன்னொரு பக்கம் உள்ளிருந்தே சிலர் ஐயங்களையும் எழுப்புகிறார்கள். ஒருவேளை பிரிட்டன் அனைத்தையும் திருப்பிக்கொடுத்துவிட்டால் ஆப்பிரிக்கர்கள் அவற்றை ஒழுங்காகப் பராமரிப்பார்களா? ஆப்பிரிக்க மக்கள் தாங்கள் விரும்பியபோதெல்லாம் அவற்றை அருங்காட்சியகம் சென்று பார்வையிட முடியுமா? அதற்கான சுதந்தர வெளி உருவாகியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. நான் இந்த விவாதங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். தீர்மானமாக எந்த நிலைப்பாட்டுக்கும் இன்னும் வந்துசேர முடியவில்லை.
சமகாலமும் வரலாறும்
நவீன வரலாற்றாசிரியராக உங்கள் ஆய்வுப்பரப்பு 19ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது என்றால் அது நிறைவடையும் புள்ளி எது?
பொதுவாக வரலாற்றாசிரியர்கள் நவீன இந்தியாவின் வரலாற்றை 1947ஆம் ஆண்டோடு முடித்துக்கொண்டுவிடுவார்கள். நான் அந்த எல்லையைக் கடந்து இன்றுவரை என் ஆய்வுப்பரப்பை நீட்டித்திருக்கிறேன். நவீன இந்தியா, உருவாகி முடிந்துவிட்ட ஒரு செயல்திட்டமல்ல; அது இன்னமும் வளர்ந்துகொண்டிருக்கிறது. தொடங்கும் இடம்போல் முடியும் இடம் என்றொன்றை நான் வகுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு கருதும் முதல் இந்திய வரலாற்றாசிரியராக அநேகமாக நான் இருக்கலாம்.
என்னுடைய எந்தப் புத்தகமும் சுதந்திரத்தோடு நிறைவடைந்ததில்லை. சிப்கோ இயக்கம் பற்றிய நூல் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 1980கள்வரை நீள்கிறது. வெரியர் எல்வினின் வாழ்க்கை வரலாறு 1902இல் அவர் பிறப்பில் தொடங்கி 1964இல் நிறைவடைகிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் கிரிக்கெட் வரலாற்றை விவரிக்கும் என்னுடைய நூல் A Corner of a Foreign Field, 2002 ஆங்கிலேய அதிகாரிகளிடமிருந்து தொடங்கி சச்சின் டெண்டுல்கர்வரை நீள்கிறது.
எனது சுதந்திர இந்தியாவின் வரலாறு India After Gandhi (2007) 1947இல்தான் தொடங்குகிறது. காந்தியின் தலைமையில் இந்தியர்களோடு கைகோத்துத் தேச விடுதலைக்காகப் போராடிய மேற்கத்தியர்களைப் பற்றிய எனது சமீபத்திய நூல் Rebels Against the Raj (2022) அன்னி பெசண்ட் இந்தியாவுக்கு வருகை தந்த 1893இல் தொடங்கி 1984இல் நிறைவடைகிறது. கொந்தளிப்பான நூறாண்டுகாலக் கதையாக இந்நூலைப் பார்க்கலாம்.
சுதந்திரத்துக்குப் பிறகான நிகழ்வுகள் சமீபத்தியவையாய் இருப்பதால் வரலாற்றாசிரியர்கள் அவற்றைத் தவிர்த்துவிடுகிறார்களா?
ஆம். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகான இந்தியாவின் கதையானது வெறுமனே அரசியல் கதை மட்டும்தான் என்று பலர் நினைக்கின்றனர். நேருவின் காலம் தொடங்கி இன்றுவரையிலான காலகட்டத்தைப் பத்திரிகையாளர்களோ அவர்களைப் போன்ற பிறரோ ஆராய்ந்தால் போதுமானது; ஒரு வரலாற்றாசிரியருக்கு அங்கே வேலையில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கிறது. நடந்து முடிந்தவற்றைத்தான் ஒரு வரலாற்றாசிரியர் ஆய்வுப்பொருளாகக்கொள்ள வேண்டும். இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும், இன்னமும் வளர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை அரசியல் ஆய்வாளர்களே அணுக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நான் வெளியிலிருந்து வந்தவனாய் இருப்பதால் துறை சார்ந்து நிலவும் இத்தகைய விதிமுறைகளை நான் பொருட்படுத்துவதில்லை.
1950கள், 60களில் நடந்தவை அன்றைய தேதியின் நடப்பு நிகழ்வுகளாக இருக்கலாம். அன்றைய தேதியில் அவற்றைப் பத்திரிகையாளர்களும் அரசியல் நிபுணர்களும் அலசியிருக்கலாம். இன்று அவை வரலாற்றின் பகுதியாக மாறிவிட்டன. எப்படி அசோகர் காலத்தை, ஔரங்கசீப் காலத்தை இன்று திரும்பிப் பார்க்கிறோமோ அப்படித்தான் சுதந்திரத்துக்குப் பிறகான நிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்கிறோம். மெளரியர், குப்தர் போன்றோர் பண்டைய வரலாற்றுக்கு நெருக்கமானவர்கள் என்றால் நேருவும் சாஸ்திரியும் தற்கால வரலாற்றுக்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதால் இவர்களெல்லாம் நன்கு அறியப்பட்டவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு விடுகிறோம்; அது உண்மையன்று.
இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்ததை நான் அறிவேன். என்னுடைய சமகாலத்திய அரசியல் நிகழ்வு அது. ஆனால் நெருக்கடி நிலை என்றால் என்ன, அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்று நான் புரிந்துகொண்டிருந்தேனா என்றால் இல்லை. அதன்பின் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே அவசரநிலையைத் தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது. 1991 தாராளமயமாக்கலும் அப்படித்தான். அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு, ஆதரவு போன்ற நிலைப்பாடுகளையொட்டியே விவாதங்கள் அமைந்தன. ஒரு பரபரப்பான அரசியல் பொருளாதார நிகழ்வாகவே அது பார்க்கப்பட்டது; இன்று அப்படியல்ல. இதே நிகழ்வை ஒரு வரலாற்றாசிரியர் இன்று அணுகும்போது காலனிய காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, நேருவின் சோஷலிசப் பொருளாதாரம், அவருக்குப் பிறகு அந்தப் பார்வை வளர்ந்த விதம், தாராளமயமாக்கலை நோக்கி இந்தியா நகர்ந்த கதை, அந்த நகர்வு பல்வேறு தளங்களில் ஏற்படுத்திய தாக்கம் என விரிவாகவும் ஆழமாகவும் ஆராய முடியும். பாபர் மசூதி இடிப்பும் சமீபத்திய நிகழ்வுதான். ஆனால் அன்று வெளிவந்த செய்திக்கட்டுரைகளை மட்டும் வைத்துக்கொண்டு அதைப் புரிந்துகொள்ள முடியுமா? இந்திய அரசியலில் 1992 ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அந்தத் தாக்கத்தை விரிவாக ஆராய வேண்டியவர்கள் வரலாற்றாசிரியர்கள் அல்லவா?
கடந்த முப்பதாண்டுகால வரலாறும் தலை முறைகளின் வரலாறாகும். அதைச் சமகால அரசியலாகக் குறுக்கிவிடக் கூடாது. நம் சமகாலம் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாற்றுக் காலமாக மாறியிருக்கும். மோடி ஆட்சியின் தாக்கங்களை இன்று நம்மால் முழுமையாகவோ துல்லியமாகவோ உணர முடியாது. பதினைந்து அல்லது இருபதாண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றாசிரியர் அனைத்துத் தரப்புத் தரவுகளையும் சேகரித்துப் பகுத்தாய்ந்து எழுதும்போதுதான் நம் காலத்தின் பிரச்சினைகள் துலக்கம் பெறும்.
அரசியலும் வரலாறும்
மோடியின் இந்தியாவில் வரலாற்றாசிரியராக இருப்பது என்றால் என்ன? தற்போதைய ஆட்சியை அச்சமின்றி விமரிசனம் செய்துவருவதால் ஏதேனும் சவால்களைச் சந்திக்கிறீர்களா?
நீங்கள் குறிப்பிடும் வகையிலான சவால்கள் குறித்து நான் அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு வரலாற்றாசிரியன் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்கிறேன்; ஆய்வு செய்வது, சிந்திப்பது, எழுதுவது, பேசுவது! இவற்றைக் கடந்து வேறெதுவும் செய்வதில்லை.
courtesy: RamachandraGuha-FB
ஒரு வாதத்தை எடுத்துவைக்கும்போது அது சரியாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர, இது யாருக்கு ஆதரவாக இருக்கும், யார் இதைத் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் யோசிப்பதில்லை. எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை விமரிசனங்களைச் சந்தித்து வந்திருக்கிறேன். மார்க்சிஸ்டுகளாலும் காங்கிரஸ் ஆதரவாளர்களாலும் முன்பு எதிர்க்கப்பட்டிருக்கிறேன். இப்போது மோடி ஆதரவாளர்களால் தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். முன்பைவிட இன்று தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் குரூரமான முறையில் வசவுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் நான் பெரிதுபடுத்துவதில்லை, ஏன் பொருட்படுத்துவதுகூட இல்லை. இப்படி வாழ்வதற்குப் பழகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்துத்துவத்தை நீங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறீர்கள். அதேசமயம் காங்கிரஸையும் ஆதரிப்பதுபோல் தெரியவில்லை. உங்கள் அரசியல் நிலைப்பாடு சற்றுக் குழப்பமூட்டுவதாக இல்லையா?
இயன்றவரை சார்புகளற்று இயங்க விரும்புகிறேன். திறந்த மனத்தோடு எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். தவறென்று படும்போது எல்லோரையும் சமமாக விமரிசிக்கிறேன். ஒரு கட்சியை, ஓர் அரசியல் கோட்பாட்டை ஆதரிக்கத் தொடங்கும்போது நம்மிடமிருந்து முதலில் பறிபோவது இந்தச் சுதந்திரம்தான்.
இந்துத்துவர்கள் என்னை இடதுசாரி என்றோ மார்க்சியர் என்றோ அழைக்கின்றனர். வலதுசாரிகளை எதிர்ப்பதற்கும் முன்பே மார்க்சியத்தை நான் விமரிசிக்கத் தொடங்கிவிட்டதால் இடதுசாரிகள் என்னை ஏற்றுக்கொள்வதில்லை. அரசியலற்று இருப்பதும் சாத்தியமில்லை, அவசியமும் இல்லை. எல்லாச் சார்புகளும் என்னைவிட்டு அகன்ற பிறகுதான் நான் எழுதத் தொடங்குவேன் என்று ஒரு வரலாற்றாசிரியர் சொல்வாரேயானால் அவரால் இறுதிவரை எழுத முடியாது. குடிமக்களுக்கு இருக்கும் அதே உரிமை அவருக்கும் இருக்கிறது. அரசியலை முற்றாக விலக்கிவைத்துவிட்டு வரலாற்றை எழுத முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. குறிப்பாக, நான் இயங்கும் நவீன வரலாறானது அழுத்தமாக அரசியலில் கால் கொண்டுள்ளது. அதனால்தான் ஒரு பக்கம் வரலாறு எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கட்டுரைகள் பத்திகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
பொதுக்கூட்டம், பேரணி, ஆதரவுக்கூட்டம், எதிர்ப்புக்கூட்டம் என்று எந்த அரசியல் நிகழ்விலும் ஒரு வரலாற்றாசிரியர் பங்கேற்கலாம். எந்தக் கட்சியை அல்லது அரசியல் கோட்பாட்டை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கிருக்கிறது. ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் ஒரு வரலாற்றாசிரியர் சேரக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து; அது அவர் பார்வையை மறைக்கும்; அவர் சிந்தனைகளைக் குழப்பும்; தனது சார்புகளை வரலாறு என்று அவர் முன்னிறுத்தத் தொடங்குவார்.
இதற்குமுன்பு இங்கே என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். வரலாற்றாசிரியர்களில் கணிசமானவர்கள் சிபிஎம் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்திருக்கின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் என்று தொடங்கிப் பல கல்விக்கூடங்கள் மார்க்சியச் சிந்தனைகளை ஏற்று, அச்சிந்தனைகளின் வழியே வரலாற்றை விவரித்து வந்துள்ளன. நக்சல்பாரி இயக்கத்தை ஆதரித்த வரலாற்றாசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்களுடைய எழுத்துகள் கட்சி சார்புள்ளவையாக, கோட்பாட்டுச் சாய்வு கொண்டவையாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய தாக்கங்களிலிருந்து ஒரு வரலாற்றாசிரியர் விடுபட வேண்டும். இடதா, வலதா என்பது முக்கியமல்ல. கெட்டித்தட்டிப்போன எந்தக் கோட்பாட்டுக்கும் ஒரு வரலாற்றாசிரியர் தன்னை ஒப்புக்கொடுக்கக் கூடாது. அப்போதுதான் அவர் எழுதும் வரலாறு உண்மையானதாக இருக்கும்.
பாபர் மசூதி இடிப்பு குறித்து நம் வரலாற்றாசிரியர்கள் எடுத்த நிலைப்பாட்டை நினைவுகூர்வது இங்கே பொருத்தமாக இருக்கும். அயோத்தியில் கோயில் அமைந்திருக்கவில்லையென்று இடதுசாரிகளும் இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் அன்று வாதிட்டனர். உண்மையில் அவர்கள் எப்படி வாதிட்டிருக்க வேண்டும் தெரியுமா? மசூதிக்குக் கீழே கோயில் இருப்பதற்குச் சாத்தியம் உண்டா, இல்லையா எனும் கேள்வி அர்த்தமற்றது. ஒருவேளை கோயில் இருந்திருந்தால்தான் என்ன? 16ஆம் நூற்றாண்டில் ஒரு முகலாய மன்னர் அதை இடித்தார் என்பதற்காக இன்று நாம் பழிவாங்கப்போகிறோமா? ஏதோ ஒரு மன்னரின் தவறுக்கு இன்றைய இஸ்லாமியர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்? மசூதியை இடிப்பதன் மூலம் கோயில் இடிப்பைச் சமன்படுத்திவிட முடியுமா? ஜேஎன்யு, அலிகார் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்கள் இக்கேள்விகளைத்தான் எழுப்பியிருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக வரலாறு பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்துக்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளையும் நம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் வழங்கியிருக்கிறது என்று அவர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளிடமிருந்து வரலாற்றாசிரியர்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என்கிறீர்களா?
ஒரு வரலாற்றாசிரியர் கட்சி ஆதரவை எதிர்நோக்குகிறார் என்றால் அவரிடம் அல்லது அவர் படைப்பில் ஏதோவொரு போதாமை இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றும். தன் திறனில் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பவர் அரசியல்வாதிகளை நெருங்க மாட்டார். அதிகாரத்திடம் உண்மையைப் பேச வேண்டுமே தவிர, அதன் நிழலில் ஒரு வரலாற்றாசிரியர் தங்கியிருக்கக் கூடாது. தனது நூலைப் பிரதமரை வைத்து ஒரு வரலாற்றாசிரியர் வெளியிடுவதை என்னால் ஏற்க இயலாது.
நேரு போன்ற கற்றறிந்த அரசியல்வாதியாக இருந்தால் உங்கள் முடிவு வேறாக இருக்கும் அல்லவா?
இருக்காது. மோடியை மட்டுமல்ல நேருவையும் ஒரு வரலாற்றாசிரியர் வழிபடக் கூடாது. நேரு வரலாறு அறிந்தவர், தனித்துவமான சிந்தனையாளர். இருந்தாலும் அவரைப் போன்றவர்களிடமிருந்தும் ஒரு வரலாற்றாசிரியர் விலகித்தான் நிற்க வேண்டும். மன்மோகன் சிங் கற்றறிந்தவரில்லையா? நானொரு புத்தகம் எழுதியிருக்கிறேன், வெளியிட்டு உதவ முடியுமா என்று கேட்டால் மறுக்கக் கூடியவரா? இருந்தாலும் நான் அதைச் செய்ய மாட்டேன்; செய்யவும் கூடாது. இத்தகைய தொடர்புகள் உடனடிப் பலன்களை வழங்கினாலும் நாளடைவில் உங்கள்மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும். அதிகாரத்திலிருப்போரை ஒரு வரலாற்றாசிரியர் எப்போதும் ஐயத்தோடே அணுக வேண்டும். ஓர் அதிகார மையமாக அவரே மாறுவதையும் இது தடுக்கும். வரலாற்றாசிரியர் மட்டுமல்ல எந்தவொரு எழுத்தாளருக்கும் இது பொருந்தும்.
மருதனுடன் குஹா
இந்துத்துவத்தைக் கடுமையாக விமரிசிக்கும் நீங்கள் ஏன் காங்கிரஸை ஆதரிப்பதில்லை என்று கேட்பவர்களுக்கும் மோடியை விமரிசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஏன் ராகுலையும் தொடர்ந்து விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் நான் அளிக்கும் பதில் இதுதான். ஒரு தரப்பு தோற்க வேண்டும்; அதற்காக இன்னொரு தரப்பின் குறைபாடுகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது அறமன்று. இந்துத்துவம் வீழ்த்தப்படுவதற்காகப் பரம்பரை ஆட்சியை நான் சகித்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட முதல்வர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் பாஜகவை எதிர்ப்பதால் அதே நிலைப்பாடு கொண்ட கட்சிகளை நான் ஆதரிப்பேன் என்று என்னை அழைத்தவர்கள் நினைத்துக்கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது. மன்னிக்கவும், உங்கள் அழைப்பை ஏற்க இயலாது என்றே ஒவ்வொரு முறையும் பதிலளித்திருக்கிறேன். அதிகாரத்திலிருப்பவர்களோடு மேடையைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்னும் கொள்கையில் உறுதியோடு இருக்கிறேன். அரசியல்வாதிகளை நான் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன்; அவர்கள் என்னைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கவும் மாட்டேன்.
வரலாற்றாசிரியர்களுக்கென்று சமூகப் பொறுப்புகள் உள்ளனவா?
அதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு குடிமகனாக நான் அரசியல் குறித்து விவாதிக்கிறேன். என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, உடன்படக்கூடிய பிரச்சினைகளில் தலையீடும் செய்கிறேன். இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்தபோது அதில் நான் பங்கேற்றேன். இந்திய வரலாற்றை, குறிப்பாக காந்தியை ஆராய்ந்தவன் என்னும் முறையில், இச்சட்டம் அநீதியானது, அறமற்றது என்று நம்பியதால் மக்களோடு மக்களாக நின்றேன். அதே சமயம் விவசாயிகளின் போராட்டத்தில் நான் பங்குபெறவில்லை. விவசாயப் பொருளாதாரம் குறித்து எதுவும் வாசிக்காததால் அது குறித்து என்னால் நிலைப்பாடு எடுக்க முடியவில்லை. பாரத் ஜோடா யாத்ராவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் நான் அதில் பங்கேற்பதைத் தவிர்த்தேன்.
தேசம், தேசியம், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலித்துகளும் சிறுபான்மையினரும் நடத்தப்படும் விதம் கவலையளிக்கும்படியாக இருக்கிறது. வாரணாசியிலுள்ள ஓர் ஏழை நெசவாளியையும் முடிதிருத்துநரையும் வண்டி ஓட்டுநரையும் ஔரங்கசீப்போடு ஏன் தொடர்புப்படுத்த வேண்டும்?
அந்நிய வெறுப்பு கடுமையாகப் பரவிக் கொண்டிருக்கிறது. யார் இந்து, யார் இந்தியர், யார் நம்மவர், யார் எதிரி ஆகிய கேள்விகள் கூர்மையடைந்துள்ளன. நாம், மற்றவர் எனும் அணிதிரட்டல் தீவிரமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. நம்மைப் போலில்லாமல் இருப்பவர்களை வெறுப்பதும் ஒதுக்குவதும் இயல்பானதொன்றாக மாற்றப்பட்டுள்ளது. இப்போக்குக்கு ஒரு வரலாற்றாசிரியராக நான் எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும்? எழுதுவதன்மூலம்தான். என்னுடைய சமீபத்திய நூல் Rebels Against the Raj இதைப் பற்றியதே. மக்களைக் குறுகலாக வகைப்படுத்தும் போக்கு எவ்வளவு தவறானது என்று சுட்டிக்காட்டும் ஒரு முயற்சியாக இதைக் கொள்ள முடியும். அன்னி பெசண்ட், மெடலின் ஸ்லேட் (காந்தியால் மீரா பென் என்று அழைக்கப்பட்டவர்), இதழியலாளர் பி.ஜி. ஹார்னிமன், சாமுவேல் எவான் ஸ்டோக்ஸ் (சத்யானந்தா) ஆகியோரோடு அதிகம் அறியப்படாதவர்களையும் (கம்யூனிச ஆதரவாளராக இருந்து எதிர்ப்பாளராக மாறிய பிலிப் ஸ்ப்ராட், சரளா எனும் காதரின் ஹெய்ல்மென், டிக் கெய்த்தான்) இந்நூலில் விவாதித்திருக்கிறேன். வெள்ளையர்கள் அனைவரும் காலனியவாதிகள், இந்தியாவை அடிமைப்படுத்த வந்தவர்கள், அநீதியானவர்கள் என்னும் பொதுக்கருத்துக்கு மாறாக இந்தியாவுக்காக, இந்தியர்களுக்காக இவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதை இன்றைய கொந்தளிப்பான சூழலில் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் குறித்து, தலித்துகள் குறித்து, பழங்குடிகள் குறித்து நாம் வளர்த்து வைத்திருக்கும் பல பிம்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாறு திரிக்கப்படும்போது, வரலாற்றின் பெயரால் குற்றங்கள் நிகழ்த்தப்படும்போது வரலாற்றாசிரியர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
சிந்தனையும் தாக்கமும்
காலாவதியான மார்க்சியர் என்று ஒருகாலத்தில் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர்கள். இன்றும் அதே நிலைப்பாடுதானா?
காலாவதியாகி நீண்டகாலமாகிவிட்ட மார்க்சியர் என்று வேண்டுமானால் இப்போது சொல்லிக்கொள்ளலாம். மற்றபடி அதே நிலைப்பாடுதான். கார்ல் மார்க்சின் பொருளாதாரப் பார்வைகள் இன்று பெருமளவில் வழக்கொழிந்து விட்டன. நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே ‘மதிப்பின் உழைப்புக் கோட்பா’ட்டை என்னுடைய பொருளாதாரப் பேராசிரியர்கள் நிராகரித்து விட்டனர். முதலாளித்துவத்தின் மரணம் குறித்த அவருடைய ஆரூடம் பொய்த்துவிட்டது; இருந்தும் மார்க்ஸின் சமூகவியல், வரலாறு சார்ந்த சில பார்வைகள் இன்றும் பலனளிக்கக் கூடியவை.
இதுவரையிலான சமூகத்தின் வரலாறு, வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இந்தியச் சமூக வரலாற்றை எடுத்துக்கொண்டால் வர்க்கத்தைக் காட்டிலும் சாதி, மதம் ஆகிய அடையாளங்கள் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன; என்றாலும் மார்க்ஸ் சுட்டிக்காட்டும் அடிப்படை உண்மை அழுத்தமானது. மனித குல வரலாற்றை இயக்கும் முக்கியச் சக்திகளில் ஒன்றாகச் சமூக முரண் இன்றளவும் நீடிக்கிறது. உழைக்கும் மக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில், தலித்துகளுக்கும் மேல்சாதியினருக்கும் இடையில், விவசாயக் கூலிகளுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் இடையில் தோன்றும் முரண்களும் அவர்களுக்கு இடையிலான போராட்டங்களும் நவீன இந்திய வரலாறு நெடுகிலும் நிறைந்திருப்பதை நாம் காண முடியும்.
மார்க்சின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு, தொழில்நுட்பம் பற்றியது. நம் சமூக வாழ்வை வடிவமைப்பதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கப்போவதை முன்னுணர்ந்து சொன்ன முதல் பெரும் சிந்தனையாளர் அவர். சமூக உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு பிணைந்திருக்கின்றன என்றார் மார்க்ஸ். புதிய கருவிகள் தோன்றும்போது உற்பத்தி முறைகளை மனிதர்கள் மாற்றியமைக்கிறார்கள். உற்பத்திமுறை மாறும்போது பொருளீட்டும் முறை மாறுகிறது. வாழ்க்கை முறை மாறுகிறது. சமூக உறவுகள் மாற்றமடைகின்றன. மனிதர்கள் சக மனிதர்களோடு கொள்ளும் உறவு தொழில்நுட்பத்தின் வரவால் பெருமளவு திருத்தியமைக்கப்பட்டு வந்ததை மார்க்ஸ் அளவுக்கு வேறெவரும் வலியுறுத்தியதில்லை.
இப்படி மார்க்சிடமிருந்து நான் சிலவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய நிராகரித்தும் இருக்கிறேன்; நான் மார்க்சியவாதி அல்ல; ஆனால் மிதவாத இடதுசாரி என்று என்னை அழைக்கலாம்.
உங்களைக் கவர்ந்த சிந்தனையாளர்களில், எழுத்தாளர்களில் சிலரைக் குறிப்பிட முடியுமா?
இந்திய விவசாயிகள் எழுச்சி குறித்து நான் வாசித்தவர்களுள் ரணஜித் குஹா முக்கியமானவர். அவருடைய கட்டுரைத் தொகுப்பான The Small Voice of Historyக்கு நான் எழுதிய திறனாய்வில் குஹாவின் வரலாற்றுப் பங்களிப்புகளை விவரித்திருப்பேன். குஹா முன்னின்று இயக்கிய ‘சபால்டர்ன் ஆய்வுகள்’ (முதல் தொகுதி) 1982இல் வெளிவந்தபோது நான் சமூகவியலில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். வரலாற்றில் ஆர்வம் கொண்ட சமூகவியலாளர்களைக் காண்பது அப்போது அரிதாக இருந்தது. ஜேஎன்யுவின் வரலாற்றுத் துறையிலிருந்தோருக்குச் சமூகவியல், மானுடவியல் போன்ற துறைகளில் ஆர்வம் இருக்கவில்லை. ரணஜித் குஹா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து, ஒரு கட்டத்தில் கட்சியைவிட்டு வெளியேறியவர். விவசாயக் கிளர்ச்சியை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் அவர். வரலாறு ஆய்வு செய்யப்படும் முறையை, எழுதப்படும் முறையை அவருடைய Elementary Aspects of Peasant Insurgency in Colonial India கேள்விக்குட்படுத்தியது.
சர்டோனோ கர்டோடிர்ட்ஜோ (Sartono Kartodirdjo) எனும் இந்தோனேஷிய வரலாற்றாசிரியரைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக இவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. சபால்டர்ன் ஆய்வாளர்கள்கூட இவரை எங்கும் மேற்கோள் காட்டி நான் பார்த்ததில்லை. கொல்கத்தாவிலுள்ள ஒரு நூலகத்தில்தான் முதன்முதலாக இவர் படைப்புகள் எனக்கு அறிமுகம் ஆயின. டச்சு காலனியத்துக்கு எதிராக மூண்ட விவசாயக் கிளர்ச்சிகளை ஆராய்ந்தவர் இவர். இரு முக்கியமான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். ஈ.பி. தாம்ஸனின் தாக்கத்துக்கு உட்பட்டவர் சர்டோனோ. சமூகவியலுக்கும் வரலாற்றுக்குமான உறவின் நெருக்கத்தை நான் அறிந்துகொண்டது இவர்களைப் போன்றோர் வாயிலாகவே. கிளிஃபோர்ட் கீர்ட்ஸின் ஆய்வுகளாலும் கவரப்பட்டிருக்கிறேன்.
இந்தியச் சமூகவியலாளர்களில் ஆண்ட்ரே பெத்தே எனக்குப் பிடித்தமானவர். எம்.என். சீனிவாசின் தாக்கத்துக்கும் ஓரளவு உள்ளாகியிருக்கிறேன். வெரியர் எல்வின், சி.எல்.ஆர். ஜேம்ஸ், லூயிஸ் மம்ஸ்ஃபோர்ட் போன்றோரின் படைப்புகள் முக்கியமானவை.
கிடியன் ஹேய், ஏ.ஏ. தாம்ஸன் போன்றோரின் கிரிக்கெட் எழுத்துகள் என்னைக் கவர்ந்தவை. சூழலியலில் மா. கிருஷ்ணன் போன்றோரைச் சொல்லலாம். வரலாற்றுத் துறையில் ரிச்சர்ட் ஈட்டன், லிண்டா கோலே (Linda Colley), ஈ.பி. தாம்ஸன் போன்றோரின் எழுத்து நடை மட்டுமல்ல, வரலாறு எழுதும் முறையும் பிடிக்கும். லாட்விய-கனடிய-அமெரிக்க அரசியல் கோட்பாட்டாளர் ஜுடித் ஷ்க்லர் (Judith Shklar) என்பவரைச் சமீபத்தில்தான் கண்டடைந்தேன். நுணுக்கமான நடையில் மிக நுட்பமாக வாதங்களை முன்வைக்கிறார்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு எழுத்தாளர் பல எழுத்தாளர்களின் தாக்கத்துக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தன் குரலை, தன் தனித்த பாணியைக் கண்டடைந்தாக வேண்டும். புனைவாசிரியருக்கு மட்டுமல்ல ஒரு வரலாற்றாசிரியருக்கும் இது பொருந்தும்.
இளம் வரலாற்றாசிரியர்களுக்கு யாரைப் பரிந்துரைப்பீர்கள்?
எல்லோரையும், எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்றே பரிந்துரைப்பேன். அவரைப் போல் எழுத வேண்டும், இவர் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உங்கள் அரசியல் தரப்பு எதுவோ அதை மறுக்கும் மற்றொரு தரப்பையும் சேர்த்து வாசிக்க வேண்டும்; மாற்றுச் சிந்தனைகளோடு உரையாட வேண்டும்.
இங்கே வழிபாட்டு உணர்வு மிகுதியாயிருப்பதால் சுலபமாக ஒருவருடைய தாக்கத்துக்கு உள்ளாகிச் சுருங்கிவிடுகிறார்கள். ரொமிலா தாப்பர் போல், இர்ஃபான் ஹபீப் போல் எழுத வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். நீங்கள் யாருடைய மாணவராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் ஆய்வை யார் வேண்டுமானாலும் வழிநடத்தியிருக்கலாம். அதற்காக நீங்கள் அவர்களைப் போலவே சிந்திக்க வேண்டும், அவர்கள் நடையிலேயே எழுத வேண்டும் என்றில்லை. யாருடைய நிழலாகவும் நீங்கள் இருக்க வேண்டியதில்லை.
எண்ணமும் எழுத்தும்
வாசிப்பு வழக்கம் குறைந்துகொண்டே வருவதைப் பார்க்கும்போது புத்தகங்கள் காணாமல் போய்விடுமோ என்னும் அச்சம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?
இல்லை. புத்தகங்கள் காணாமல் போய்விடும் என்ற எண்ணம் மிகை அச்சமாகும். பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்பைக் காட்டிலும் அதிகப் புத்தகங்கள் விற்பனையாயின என்று படித்தேன். தீவிர வாசகர்கள் எப்போதுமே சிறுபான்மையினர்தான். முந்தைய காலத்திலும் அவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்; எதிர்காலத்திலும் அவர்கள் தோன்றுவார்கள். வரலாற்று நூல்களைக் காட்டிலும் கதை போன்ற வரலாறுகள் அதிகமாகவும் தீவிர இலக்கியங்களைக் காட்டிலும் வெகுஜன நாவல்கள் அதிகமாகவும் விற்பது காலம்காலமாகத் தொடரும் வழக்கம். எதிர்காலத்திலும் இதே நிலை தொடரலாம்; ஆர்வம் மாறலாம், வாசிப்புக் கருவி மாறலாம், வாசிப்பு மறையாது.
நான் வசிக்கும் பெங்களூருவின், மகாத்மா காந்தி சாலையில், சுதந்திரமாக இயங்கும் புத்தகக் கடைகள் நிறைய இருக்கின்றன. நான் பார்த்தவரை அவை நன்றாகவே இயங்கி வருகின்றன. பல்லாண்டுகளாக இக்கடைகளில் நூல்கள் வாங்கிக்கொண்டிருக்கிறேன். என் எழுத்துப்பணிக்குத் தேவையான பல முக்கியமான நூல்கள் இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தவைதாம்.
இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். ஆர்கைவ் தளத்தில் (archive.org) பல அரிய நூல்களும் ஆவணங்களும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. அச்சில் இல்லாத, கடைகளில் கிடைக்காத நூல்களை இங்கே பார்வையிடுவேன்.
புத்தகத்துக்குப் பலர் பலமுறை இரங்கற்பா இயற்றிவிட்டார்கள். ஆனால் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மின்னூல் அறிமுகமானபோது புத்தகம் மறைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. இனி கிண்டில்தான் எல்லாமும் என்று சொன்னார்கள். வாசகர்களில் ஐந்து அல்லது 10% பேர்தான் கிண்டில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் கிண்டில் பயன்படுத்துவதில்லை. செய்திகளுக்கும் சில இணைய இதழ்களை வாசிப்பதற்கும் கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன். அதிகம் போனால் 1500 முதல் 2000 சொற்கள்வரை அதில் வாசிக்க முடியும். அதற்குமேல் என்னால் இயலாது. அச்சிட்ட புத்தகத்தைக் காட்டிலும் சிறந்த கருவி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேற்கில் வாழ்க்கை வரலாறுகள் புதிது புதிதாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே விரிவாக எழுதப்பட்டவர்களுக்கும்கூடப் புதிய நூல்கள் எழுதப்படுகின்றன. இங்கே ஏன் அந்நிலை இல்லை?
வாழ்க்கை வரலாறு எழுதும் வழக்கம் இந்தியர் களிடையே இல்லை என்று 2002ஆம் ஆண்டிலேயே ஒரு கட்டுரை எழுதினேன். சார்பின்றி ஓர் ஆளுமையை அணுகும் போக்கு இங்கு போதுமான அளவுக்கு வளரவில்லை. ஒருவரைப் புகழ்ந்து எழுதுவதுதான் வாழ்க்கை வரலாறு என்று கருதுகிறார்கள். தேசியத் தலைவர்கள் குறித்து எழுதப்படும் பல நூல்கள் இவ்வாறு சுருங்கி நிற்பதைப் பார்க்கிறேன். அரசியல் காரணங்களுக்காகவும் இவ்வாறு எழுதப்படுகின்றன. இதுபோன்ற புகழ்ச்சி இலக்கியங்களை இனம் காண்பது எளிது.
சமீபகாலங்களில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வெளிவந்துள்ளன. 2022இல் வெளியான மூன்று நூல்களைக் கவனப்படுத்த விரும்புகிறேன். முதல் நூல், இந்தி எழுத்தாளர் ஆக்ஞேயா குறித்து அக்ட்சய் முகுல் எழுதியிருக்கும் முன்மாதிரியான, விரிவான வாழ்க்கை வரலாறு Writer Rebel Soldier Lover: The Many Lives of Agyeya. கலை, இலக்கியம், அரசியல் என வண்ணமயமான பக்கத்தை மட்டுமல்ல, அடியாழத்தில் புதைந்துபோன இருண்ட பக்கத்தையும் வெளிச்சத்துக்குக்கொண்டு வரும் நூல் இது. ஓர் அசாதாரண சோஷலிஸ்டான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து ராகுல் ராமகுண்டம் எழுதியிருக்கும் நூல் The Life and Times of George Fernandes இரண்டாவது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று உருது பெண் எழுத்தாளர்களின் வாழ்வை In Bibis’s Room என்ற ஒரே நூலில் நாஸியா அக்தர் வழங்கி யிருக்கிறார். அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல நூல்கள் இவை.
அரசியல் மட்டுமின்றி அறிவியல், விளையாட்டு, இலக்கியம், சமூகம் சார்ந்த அதிகம் அறியப்படாத பலருடைய வாழ்க்கை வரலாறுகள் வருங்காலத்தில் எழுதப்படு மென்று நம்புகிறேன். என் பங்குக்கு ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்துக்காகக் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்களின் புதிய வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேர்ந்தெடுத்து வழங்கவிருக்கிறேன். முதல் மூன்று நூல்கள் (அசோகர், ஷேக் அப்துல்லா, கமலாதேவி சட்டோபாத்தியாய்) ஓராண்டுக்குள் வெளிவரும்.
உங்களைப் பொதுமக்களுக்கான அறிவுஜீவி என்று அழைக்கலாமா?
அந்தப் பதத்தை நான் வெறுக்கிறேன். அதில் ஆடம்பரம் நிரம்பிக்கிடக்கிறது. ஆய்வாளர்களுக்காக மட்டுமின்றி, முடிந்தவரை விரிவாக அனைவருக்காகவும் நான் எழுதுகிறேன்.
எல்லோரும் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்டால் ஆம், முடியும் என்பேன். ஒரு மருத்துவர் பொதுமக்களோடு உரையாட வேண்டுமானால் அவர் எளிமையான சொற்களாகப் பார்த்துக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்குப் புரியுமா, இதை அப்படியே சொன்னால் விளங்கிக் கொள்வார்களா என்றெல்லாம் யோசித்து, சாரத்தை மட்டும் எடுத்து அவர் அளிப்பார். ஒரு வரலாற்றாசிரியர் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்காது. ஏனெனில் அவர் அரூபமான கோட்பாடுகளையோ கற்பனைக்கெட்டாத கடினமான விளக்கங்களையோ அளிப்பதில்லை. அவர் மனிதர்களின் கதைகளைத்தான் சொல்ல வேண்டும். மனித உறவுகளை, முரண்களை, மோதல்களைப் பேச வேண்டும்.
ஒரு பக்கம், சிறிய பத்திகளை எழுதுகிறேன். நடப்பு நிகழ்வுகளை அவை நிகழும்போதே அலசுகிறேன். நிகழ்காலத்தைக் கடந்த காலத்தோடு தொடர்புப்படுத்துகிறேன். மற்றொரு பக்கம், நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான நூல்களை எழுதுகிறேன். பத்தி எழுதினாலும், புத்தகம் எழுதினாலும் தெளிவாகவும் புரியும்படியும் எழுத வேண்டும் என்றே விரும்புவேன். எளிமையாக எழுதுவதற்கே மெனக்கெடுவேன். ஆய்வாளர்களுக்காக மட்டுமின்றி, அனைவருக்காகவும் எழுதும்போது நடை எளிமையானதாக இருக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் சமூகவியல் கலைச்சொற்கள் பலவற்றை நானும் பயன்படுத்தியிருக்கிறேன். எழுத எழுத எளிய நடை பழகிப்போனது. அதன்பின் நான் எழுதிய அனைத்தும் பொது வாசகர்களுக்கானவை. நூல் எழுதுவதற்காகக் கடினமாக உழைக்கலாம்; அது எழுத்தில் தெரிய வேண்டிய அவசியமில்லை.
அறிவுஜீவித்தனம் குறைவாகவும் மக்கள்தன்மை அதிகமாகவும் இருப்பவரே மக்களுக்கான அறிவுஜீவி என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுதும்போது இதை எப்போதும் நினைவில் கொள்வேன். நான் நேரடியாக ஆய்வு செய்யாததை, ஓரளவேனும் படித்துத் தெளியாததை நான் எழுதுவதில்லை. பொருளாதாரம் குறித்தோ தொழில்நுட்பம் குறித்தோ கலை, இலக்கியம் போன்றவை குறித்தோ நான் எழுதாததற்குக் காரணம் இதுதான்.
சமூகத்தை மாற்றுவதற்காக அல்ல; அறிவுத் துறையில் பங்களிப்பதற்காகவே எழுதுகிறேன். ஒரு வரலாற்றாசிரியராக இதுவே என் முதன்மையான குறிக்கோள்.
மின்னஞ்சல்: marudhan@gmail.com