பெரிய திட்டத்தின் சிறிய வெளிப்பாடுகள்
தேர்தல் நெருங்கும் நேரத்துக்கான பதற்றம் மத்திய அரசின் நடவடிக்கைகளில் தெரிகிறது. தேர்தல் பரப்புரைக்கான கதையாடலைத் தேசப் பாதுகாப்பை ஒட்டி அமைப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் மைய அரசு இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அண்மையில் அரசு மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் இந்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன. நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனம் சீனாவிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டிற்காக அச்செய்தி இணையதளத்தின் பத்திரிகையாளர்களுடைய வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 3 அன்று தில்லி காவல் துறையினர் சோதனை நடத்தி அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அடுத்த நாள் நியூஸ்க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா, அந்நிறுவனத்தின் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் ஏழு நாள் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் நியூஸ்க்ளிக் அலுவலகத்தை மூடி முத்திரையிட்டார்கள்.
நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் தில்லி காவல் துறையினர் சோதனை நடத்தினார்கள். சோதனைக்குப் பிறகு அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றைத் தில்லி காவல் துறை பறிமுதல் செய்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடந்தது. சுமார் ஆறு மணிநேரம் நீடித்த விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
நியூஸ்கிளிக்கில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் சீன அரசுடன் நெருக்கமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி ‘தி நியூயார்க் டைம்’ஸில் வெளியான கட்டுரைதான் இந்த நடவடிக்கைகளுக்கான தூண்டுதல் எனச் சொல்லப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைச் சட்டம் என்னும் விமர்சனம் நெடுநாட்களாகவே முன்வைக்கப்பட்டுவருகிறது. இத்தகைய சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் அளவுக்கு அந்த செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாமீதான குற்றச்சாட்டுகள் என்னவென்பதுபற்றி அரசு எதையும் சொல்லவில்லை. இந்த இணையதளம் “சீனத் தொடர்புகள் கொண்ட ஒரு பயங்கரவாத வழக்கில்” விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் ‘பயங்கரவாதம்’ அல்லது சீன ஆதரவுப் பரப்புரையுடன் ஏதேனும் தொடர்பைச் சுட்டிக்காட்டும் எந்தவொரு கட்டுரையையோ அல்லது உள்ளடக்கத்தையோ இந்த இணையதளத்திலிருந்து காவல் துறை சுட்டிக்காட்டவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்படவில்லை; சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும் நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பங்களிப்பாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் பலருடைய கைப்பேசிகளும் மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
நியூஸ்க்ளிக்குக்கு எதிரான நடவடிக்கைகள் புதியவை அல்ல. 2021முதல் அமலாக்க இயக்குநரகம், வருமானவரித் துறை ஆகியவற்றின் கண்காணிப்பில் இந்த ஊடகம் இருந்துவருகிறது. நியூஸ்க்ளிக் இணையதளம் மத்திய அரசின்மீதான கறாரான விமர்சனத்திற்குப் பேர்போனது. ஊடகங்களின் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ள முடியாத இந்த அரசு பல வகைகளிலும் ஊடகங்களுக்குத் தொல்லை கொடுப்பது வழக்கமாகிவருகிறது. நியூஸ்க்ளிக் மட்டுமின்றிப் பல்வேறு ஊடகங்களும் இந்தப் போக்குக்கு இலக்காகிவருகின்றன. நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் காவல் துறை நடத்திய சோதனைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்த இந்தியா கூட்டணி, பாஜக அரசு தொடர்ந்து ஊடகங்களுக்கெதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. “கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வழிகளில் ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிபிசி, நியூஸ் லாண்டரி, தைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர்வாலா, தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அண்மையில் 13 ஆண்டுப் பழமையான குற்றச்சாட்டுக்களைத் தூசி தட்டி எடுத்து, எழுத்தாளரும் சமூகச் செயல் பாட்டாளருமான அருந்ததி ராய், காஷ்மீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோர்மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியைத் தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா வழங்கியுள்ளார். தில்லியில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருந்ததி ராய், ஷேக் ஷௌகத் ஹுசைன் உள்ளிட்ட சில தலைவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச் சாட்டின்மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிருப்திக் குரலை அடக்குவதற்கான முயற்சிகளை அரசு அயராமல் மேற்கொண்டுவருவதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு இது. தில்லி துணைநிலை ஆளுநர் இந்த வழக்கைத் தொடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு ஒரு நாள் முன்பு அருந்ததி ராய் நியூஸ்க்ளிக் ஊடக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளுக்கும் கைதுகளுக்கும் எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது உள்ள நிலை எவ்வாறு நெருக்கடி நிலையைக் காட்டிலும் அபாயகரமானதாக உள்ளது என்று அவர் பேசினார். அவர் பேச்சை நிரூபிக்கும் விதத்தில் அரசு அவர்மீதான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மட்டுமின்றி அரசை விமர்சிக்கும் அல்லது அரசை விமர்சிப்பவர்களை ஆதரிக்கும் திரைக்கலைஞர்களையும் இந்த அரசு விட்டுவைப்பதில்லை. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தித் திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப், நடிகை தப்ஸி பன்னு ஆகியோர்மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னை விமர்சிப்பவர்களை வாயடைக்கச் செய்யவும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை இந்த அரசு பயன்படுத்திவருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு உள்ளான சிலர் அஞ்சாமல் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்தாலும் ஒடுக்குமுறையின் சூட்டைத் தாங்க முடியாமல் பலரும் பணிந்துபோயிருப்பதையும் பார்க்கிறோம். மத்திய அரசுக்கு எதிரான குரல்கள் பெரிய ஊடக நிறுவனங்களில் பெருமளவில் தணிந்திருப்பதை வைத்து இந்தத் தாக்கத்தை உணர்ந்துகொள்ளலாம். பல அரசியல் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் பின்னணியிலும் இத்தகைய நடவடிக்கைகளின் நிழலைக் காணலாம். அதிருப்திக் குரல்களையும் கறாரான விமர்சனங்களையும் அடக்குவதில்தான் தன்னுடைய அரசியல் வலிமை அடங்கியிருக்கிறது என்று கருதும் அரசாங்கம்தான் இப்படி நடந்துகொள்ளும். பாஜக இத்தகைய மனநிலையில் இருப்பதைக் காட்டும் சம்பவங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமாக நிகழ்ந்துள்ளன.
விமர்சனம், எதிர்ப்பு, அதிருப்தி ஆகியவை ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கான மிக முக்கியமான அம்சங்கள். மடியில் கனம் உள்ள அதிகார மையங்கள் இவற்றை ஒடுக்க நினைப்பது இயல்புதான். தன்னுடைய பதற்றத்தையும் சகிப்பற்றதன்மையையும் மறைக்கத் தேசப் பாதுகாப்பு என்னும் கேடயத்தை உயர்த்திப் பிடிப்பது மிகவும் எளிதான, மலிவான தந்திரம். இந்தத் தந்திரத்தையே தன்னுடைய முதன்மையான அரசியல் ஆயுதமாகக் கொண்டிருக்கும் பாஜக இதன் மூலம் ஜனநாயக விழுமியங்கள்மீது தனக்கு இருக்கும் அவமரியாதையை வெளிப்படுத்துகிறது. பொதுவெளியில் அதிருப்திக் குரல்களை முடக்குவதன் மூலம் தன்னுடைய வலிமையைப் பறைசாற்றிக்கொள்ள முயலும் உத்தி உண்மையில் பாதுகாப்பற்ற தன்மையின் வெளிப்பாடுதான். மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை யுடன் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு இந்த அளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வுடன் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவது விசித்திரமானது.
தற்போதுள்ள அதிகாரத்தைக் கொண்டே நாட்டின் பல்வேறு அமைப்புகளைத் தனக்கேற்ப வடிவமைத்துவரும் பாஜக, மிச்சம் மீதியிருக்கும் அதிகாரத்தையும் வளைத்து முழு முற்றான அதிகாரம் பெறுவதைத் தன் இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள், பெரும்பாலான மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அதன் நோக்கம் நிறைவேறினால் ஜனநாயகத்தின் கதி என்ன ஆகும் என்பதை மேற்படி நடவடிக்கைகள் மூலமாக உணர்ந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டில் வரவிருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற பாஜக எந்த எல்லைக்கும் போகும். எதிர்ப்புகளற்ற முழுமையான அதிகாரமே அதன் இலக்கு. அது நிறைவேறுவதும் ஜனநாயகத்துக்குச் சமாதி எழுப்புவதும் இரு வேறு செயல்பாடுகள் அல்ல என்பதைத் தற்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளும் வாக்காளர்களும் சுய மரியாதை கொண்ட ஊடகங்களும் சுதந்திரத்தை விழையும் சிந்தனையாளர்களும் செயல்பட வேண்டும்.