லண்டன் மனிதர்கள்
வினீஷ்குமார், ஜி. குப்புசாமி, பத்மநாப ஐயர், பௌசர்
ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் முதல் நாவலான ‘ஷகி பெய்ன்’ 2020ஆம் ஆண்டின் புக்கர் பரிசை வென்றது. படித்து முடித்துப் பல நாட்களுக்குப் பிறகும் நம் தூக்கத்தைக் கெடுக்கும் வல்லமை வெகுசில நாவல்களுக்கு மட்டுமே உண்டு; இந்நாவல் அப்படிப்பட்ட அலைக்கழிப்பை என்னிடம் உண்டாக்கியிருந்தது. காலச்சுவடு கண்ணனிடம் இந்த நாவல் தமிழில் வந்தாக வேண்டிய அவசியத்தை விளக்கி, மொழிபெயர்ப்பு உரிமையைப் பெற்றுத்தரச் சொன்னேன். அதிர்ஷ்டவசமாக டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் முகவர் கண்ணனுக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்ததால் உடனே அனுமதி கிடைத்தது. அனுமதியோடு நாவல் நடைபெறும் கிளாஸ்கோ நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள ‘கோவ் பார்க்’ என்ற சர்வதேச எழுத்தாளர் உறைவிட முகாமில் இரண்டு மாதங்கள் தங்கி நாவலை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
எனது ஸ்காட்லாந்துப் பயணம் உறுதியானதுமே கண்ணன் லண்டனில் வசிக்கும் சில நண்பர்களையும் இயன்றால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்றார். இங்கிலாந்து என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருகின்ற பத்மநாப அய்யர், பௌசர் அகமது, றஷ்மி அகமது, சச்சிதானந்தன் சுகிர்தராஜா, உமையாழ் என்ற முகமது அப்துல் ரஃபீக் அகமது லுஃப்தி அனைவருக்கும் நான் ஸ்காட்லாந்து வரப்போகும் தகவலைத் தெரிவித்தேன். உடனே பௌசர் மற்ற நண்பர்களோடு கலந்தாலோசித்து எனது ஒரு வாரப் பயணத் திட்டத்தை வகுத்துவிட்டு, நான் எந்தத் தேதியில் வருகிறேன் என்று கேட்கத்தொடங்கிவிட்டார். நான் அப்போது கிளம்பவேயில்லை.
ஜூலை மூன்றாம் தேதி ‘கோவ் பார்க்’ முகாமை அடைந்தேன். இந்த எட்டு வாரத் தங்கலுக்கு எல்லா செலவுகளையும் முகாம் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வீசா உட்பட எதற்குமே நான் செலவு செய்யவில்லை. எவ்வித கவனக் கலைப்பும் இன்றி அமைதியாக அமர்ந்து எழுதுவதற்காகவே இங்கே என்னை அழைத்திருக்கும்போது, இவர்களிடம் ஒரு வாரத்துக்கு லண்டன் சென்றுவர எப்படி ‘லீவு’ கேட்பது என்று தயக்கமாக இருந்தது. கண்ணனிடம் கேட்டபோது, ‘அவர்கள் அவ்வளவு ‘ஸ்ட்ரிக்ட்’டாகவெல்லாம் இருக்க மாட்டார்கள்,’ என்றார். ஒரு வாரம் கழித்துத் தயக்கத்தை ஒதுக்கி, கேட்டுவிட்டேன். முதலில் எதற்காக என்று கேட்டார்கள். லண்டனில் உள்ள சக எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டும் என்பதையும், பௌசர் தனது புத்தகக் கடையில் எனக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதையும் சொன்னேன். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்கள். லண்டன் சென்றுவருவதற்கு எந்தெந்தத் தேதிகளில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்று 8ஆம் தேதி திரும்புவதற்கு அவர்களே பயணச்சீட்டுகளும் வாங்கித் தந்தார்கள்.
லண்டன் என் கனவு நகரம். அங்கு நான் முதலில் சந்திக்க – அல்ல - தரிசிக்க விரும்பிய பேராளுமை பத்மநாப அய்யர். ஆனால் முதலில் தன் வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்று றஷ்மி வற்புறுத்தினார். ஆகஸ்ட் நான்கு என் பிறந்தநாள் என்பதால் தன்னுடைய வீட்டில்தான் கொண்டாட வேண்டும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே உத்தரவிட்டிருந்தார். மூன்றாம் தேதி மாலை லண்டன் யூஸ்டன் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியவுடன் றஷ்மி என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். றஷ்மியின் மீது எனக்கு இருக்கும் அன்பைவிட , அவருக்கு என் மீது அன்பு அதிகம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். மிகச்சிறந்த கவிஞர் மட்டுமல்ல, அற்புதமான ஓவியருமாவார். கள்ளத்தோணியில் வந்த அகதிகளைக் கரையை அடையும் முன்பே இறக்கிவிட்டுவிட, கைக்குழந்தைகளோடும் சொற்ப உடைமைகளோடும் அந்தப் பெண்களும் சிறார்களும் கடல் அலைகளைத் தாண்டிப் பதற்றத்தோடு ஓடிவருகின்ற றஷ்மியின் ஓவியம் மனம் குலையவைப்பது. எனது பெரும்பாலான நூல்களுக்கு அட்டை வடிவமைப்பு றஷ்மிதான். வேறு யாராவது வடிவமைத்தால் என்னிடம் செல்லமாகக் கோபித்துக்கொள்வார். எழுத்தாளர்களை ஓவியமாக வரைவதில் பெரும் ஆர்வம்கொண்ட அவருடைய கைவண்ணத்தில் இடம்பெறாத நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் அநேகமாக எவரும் இல்லை. உலக எழுத்தாளர்கள் , இசைக் கலைஞர்கள் என அவர் வரைந்த ஓவியங்களை ஓவியக் கண்காட்சியாக நிகழ்த்த வேண்டும் என்று பல வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். சில எழுத்தாளர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வரைந்திருக்கிறார். ஆனால் அவர் அதிக முறை - சரியாகச் சொன்னால் பதினோரு முறை - வரைந்த முகம் என்னுடையது என்பது எப்போதுமே என்னைத் திகைக்க வைப்பது. “ஏன் என்னையே திரும்பத் திரும்ப வரைந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று பல முறை கேட்டிருக்கிறேன். அவர் சொல்லும் பதில் எப்போதும் ஒன்றேதான். “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஜீக்கே.” இந்தப் பதில் என்னை எப்போதும் சமாதானப்படுத்தியதில்லை. வேறு ஏதோ காரணம் இருப்பதாக உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கும்.
றஷ்மியின் வீட்டை அடைந்தபோது இரவாகிவிட்டது. திருமதி றஷ்மியும் அவர்களுடைய மகன்கள் அகமத்தும் அப்துல்லாவும் அன்பாகவும் அடக்கமாகவும் வரவேற்றதைப் போலில்லாமல் ஆறு வயது கடைக்குட்டி ஆமீனா ஆரவாரமாக வரவேற்றாள். பல வருடமாகப் பழகியதைப்போல எடுத்த எடுப்பிலேயே “மாமா, மாமா” என்று என் மேல் ஏறிக்கொண்டாள். எனக்குச் சற்றும் புரியாத மழலை ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக ஏதேதோ பேசினாள். இந்த எதிர்பாராத அன்புப் பிரவாகம் என்னைப் புரட்டிப்போட்டது. இரவு உணவுக்காக உட்கார்ந்தவுடன் என் மடிமீது ஏறிக்கொண்டு மீண்டும் ஏதேதோ கதைகள் பேச, அவளுடைய அம்மா வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு சென்றார். இந்த அளவுக்குக் குழந்தைகள் என்னிடம் கொஞ்சிப் பல வருடங்களாகிவிட்டன. குழந்தைகளின் விளையாட்டும் கொஞ்சல்களும் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தன.
சாப்பிட்டு முடிந்ததும் கூடத்தில் ஆமியோடு உட்கார்ந்து அவள் இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த கதைகளைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். நேரம் நள்ளிரவை நெருங்க, தூங்கச் செல்லலாம் என்று றஷ்மியைத் தேடினால் அவரும் மற்றவர்களும் சமையலறைக்குள் கதவைச் சாத்திக்கொண்டு என்னவோ செய்துகொண்டிருந்தார்கள். ஆமி, ஓவியப் பயிற்சி நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து தனது ஓவியத் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தாள். ஆமியின் அம்மா அவளைக் கூப்பிட, உள்ளே ஓடினாள். வெளியே வந்து என் கையைப் பிடித்து எழுப்பினாள். அவள் வேகமாக அபிநயத்தோடு சொல்வது தாமதமாகத்தான் புரிந்தது. “நான்தான் ‘உஃப்ஃப் உஃப்ஃப் ஊதுவேன், மாமா கட் பண்ணனும்... ஓகேவா?”
இப்போது சமையலறைக் கதவு திறந்தது. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. மேசையில் எரியும் மெழுகுவர்த்திகளோடு பிறந்தநாள் கேக்! அடுத்த அரை மணிநேரத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அகமதுவும் அப்துல்லாவும் ஏதோவொரு பரிசுப் பொட்டலம் கொடுத்தார்கள். றஷ்மி அவர்களிடம், என்னதாண்டா வாங்கினீர்கள் என்று கேட்டார். அவருக்கே தெரியவில்லை, அவர்கள் எனக்காக என்ன வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று பிரித்துப் பார்த்தால், தாடி ட்ரிம்மெர்! அவர்களுடைய அப்பாவைப் போலவே நானும் தாடி வைத்திருப்பேன் என்று பிள்ளைகள் நினைத்திருக்கிறார்கள்.
அடுத்த நாளும் ஆமீனா என்னை விட்டு விலகவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து நானும் அந்த ஐந்து வயதுக் குழந்தைக்குச் சமமாக சோஃபாவில் விழுந்து புரண்டு விளையாடிக்கொண்டிருந்தேன். கிளம்பும் நேரம் வந்தபோது அவளுடைய அம்மா ஏதோ விளையாட்டு காட்டி, மாடிக்கு அழைத்துச்சென்றுவிட்டார். அவளைத் தூங்கவைத்துவிட்டு என்னை வழியனுப்ப வாசலுக்கு வந்தபோது அவருடைய கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டேன். எப்படி இவர்களால் இவ்வளவு அன்பு செலுத்த முடிகிறது? நான் இவர்கள் வீட்டுக்கு வருவது இதுதான் முதல் முறை. எனக்குப் புரியவில்லை.
அடுத்த நாள் றஷ்மியுடன் தொலைபேசியில் பேசும்போது, அவருடைய மனைவி, நான் லண்டனில் இருக்கும் ஒரு வாரம் முழுவதும் தங்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி ஏன் திட்டமிடவில்லை என்று தன்னிடம் கோபித்துக்கொண்டதாகச் சொன்னார். ஆமி தூங்கி எழுந்து வந்ததும் நான் போய்விட்டதை அறிந்து வெகுநேரம் அழுதாளாம், அவர்களால் அடக்கவே முடியவில்லையாம்.
எனக்குள் புரியாமலிருந்த எல்லா கேள்விகளுக்கும் மூன்று நாட்கள் கழித்து விடை கிடைத்தது.
முகமது அப்துல் ரஃபீக் அகமது லுஃப்தி என்ற உமையாழுடன் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது. உமை மிகச் சிறந்த வாசகர். ஆங்கிலத்திலும் தமிழிலும் விரிவாகவும் ஆழமாகவும் வாசிப்பவர். மிகவும் கூர்மையான பார்வையை வெளிப்படுத்தும் சில நெடுங்கதைகளையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். நேர்மையான விமர்சகர். அவரை நிறைய எழுதச் சொல்லிப் பலமுறை வற்புறுத்தியிருக்கிறேன். இந்தமுறை நேராகவே சண்டை போட்டேன். வேலைப் பளு தன்னைத் தடுப்பதாகச் சொன்னார்.
முதலில் நேஷனல் காலரி சென்றோம். ரெம்பிராண்ட் என் அபிமான ஓவியர். பல வருடங்களுக்கு முன் டப்ளின் நேஷனல் காலரியில் சில ரெம்பிராண்ட் ஓவியங்கள்தான் காணக்கிடைத்தன. ஆனால் லண்டனில் ஒரு ஹால் முழுக்க ரெம்பிராண்ட் ஓவியங்கள்; அங்கேயே வருடக்கணக்காகத் தங்கிவிடலாமென்று இருந்தது. அடுத்த தளத்தில் வான்கோவின் பிரசித்தி பெற்ற சூரியகாந்தி ஓவியம், இரண்டு நண்டுகள், நாற்காலி உள்ளிட்ட எட்டு ஓவியங்கள். உமையாழிடம் கார்ல் மார்க்ஸ் கல்லறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்ததால், வான்கோவிலேயே திளைத்திருந்த என்னைப் பிய்த்து எடுத்துக்கொண்டு சென்றார்.
மார்க்ஸுக்கு அஞ்சலி செலுத்தி முடிந்ததும் ஓர் உணவகத்தில் அமர்ந்து நிதானமாக இலக்கிய அலசல் செய்ய நேரம் கிடைத்தது. கிளம்பும் நேரம் வந்ததும், றஷ்மியின் வீட்டு அனுபவத்தைச் சொல்லி வியந்தேன். உமையாழ் றஷ்மியின் உறவினர். நான் பேசி முடித்ததும், உமையாழ், “றஷ்மியின் வீட்டில் எல்லோரும் உங்கள்மீது அவ்வளவு அன்பாக இருந்ததற்கும், அவர் உங்களையே திரும்பத் திரும்ப வரைந்துகொண்டிருப்பதற்கும் காரணம் தெரிய வேண்டுமா?” என்று கேட்டார். “அவர்கள் வீட்டுக் கூடத்தில் பெரியதாக ஒருவரின் படம் மாட்டியிருக்குமே, பார்த்தீர்களா?” என்றார். நானும் ஆமீனாவும் விளையாட்டில் மூழ்கியிருந்ததால் கவனித்திருக்கவில்லை. யாருடைய படம் என்று கேட்டேன். “றஷ்மியின் வாப்பா” என்றார். “அப்படியே அச்சு அசலாக உங்கள் முகம் போலவே இருக்கும் அவருக்கு. ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை நீங்கள் வெளியே வந்தபோதுதான் உங்களை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். நடந்து வருவதும் தோற்றமும் அப்படியே றஷ்மியின் வாப்பா போலவே இருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. உங்களிடம் அவர்கள் அவரைப் பார்க்கிறார்கள் ஜீக்கே,” என்றார். ஸ்தம்பித்து அமர்ந்திருந்தேன். சில கணங்கள் கழித்து “றஷ்மியின் வாப்பா காலமான சில மாதங்கள் கழித்து ஆமினா பிறந்தாள்” என்றார் உமை. அடுத்த கால்மணி நேரத்துக்கு என்னால் எதுவும் பேச இயலவில்லை.
பிளாஸ்டோ, ஹை ஸ்ட்ரீட்டில் இருக்கும் பத்மநாப அய்யரின் வீட்டை அடையும்போது இரவு எட்டாகியிருந்தது. அந்தச் சிறிய வீட்டின் முதல் மாடியில் 82 வயது முதியவர் தனியாக வசித்து வருகிறார். அந்த வீடு ஏற்கெனவே பல புகைப்படங்களின் மூலமாக எல்லோருக்கும் பரிச்சயமாகியிருந்த ஒன்று. கிட்டத்தட்ட மூவாயிரம் புத்தகங்கள் வீடு முழுக்க அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
ஐயரின் அன்பளிப்பு
அழைப்பு மணியை பௌசர் அடித்தவுடன் அய்யரே படியிறங்கி வந்து வரவேற்றார். அந்த இடத்திலேயே அவர் பாதம் தொட்டு வணங்கினேன். பௌசரும் சபேசனும் அவர் வீட்டு வாசலுக்கு வெளியிலேயே நின்றுகொண்டார்கள். “உள்ளே இடம் கிடையாது. நீங்கள் மட்டும் போங்கள்” என்றார்கள். வடிவேலனும் வினீஷூம் நானும் உள்ளே நுழைந்தோம். வீட்டின் சித்திரம் என் மனத்தில் பதிந்திருந்ததால் வியப்படையவில்லை. ஆனால் ஏதோவோர் ஆலயத்துக்குள் அடியெடுத்து வைத்திருப்பதைப்போல உடல் சிலிர்த்தது.
அய்யர் பக்கத்துக் கட்டிலிலிருந்த புத்தகங்களை நகர்த்தி என்னை உட்காரச் சொன்னார். வடிவேலனையும் வினீஷையும் பார்த்து, “அந்தப் புத்தகங்களை ஒதுக்கி வச்சிட்டு உட்காருங்கோ” என்றார். அவர் காட்டிய திசையில் நான்கு அடி உயரத்துக்கு மூன்று வரிசைகளில் புத்தகங்கள். வடிவேலன் “பரவாயில்லைங்க அய்யா, நிக்கறேன்” என்றார். வினீஷ் அந்த இடுக்கமான இடத்தில் என்னை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தார்.
ஆமினாவுடன் ஜி. குப்புசாமி
ஆரம்ப விசாரிப்புகளுக்குப் பிறகு அய்யர் சுற்றிலும் வைத்திருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டிப் பேசத் தொடங்கினார். எல்லாமே ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள். அந்தப் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அய்யர் உற்சாகத்துடன் பேசும்போது 82 வயது தெரியவில்லை. அவருடைய ஆர்வங்கள் வெறும் இலக்கியத்தோடு நின்றிருக்கவில்லை. பல்வேறு காலகட்டங்களை, மரபுகளைச் சேர்ந்த ஓவியங்கள், கோவில் சிற்பங்கள், திரைப்படங்கள் பற்றிய நூல்களை அடுத்தடுத்து எடுத்துக்காட்டி விளக்கிக்கொண்டிருந்தார். Vanni என்ற ஓர் அகலமான நூலை எடுத்துத்தந்தார். அது படக்கதை வடிவத்தில் எழுதப்பட்ட நூல். “இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டார். இல்லையென்றேன். “உங்கட ஆத்தரே இந்தப் புத்தகத்தைப் பாராட்டி சொல்லியிருக்காங்க, பாருங்க” என்றார். பின்னட்டையில் அருந்ததி ராயின் பாராட்டு வாசகம். பெஞ்சமின் டிக்ஸ், லிண்ட்ஸே பொலாக் எழுதிய அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி முடித்ததும், கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம் பற்றித் தெரியுமா என்று கேட்டார். வெட்கத்தோடு தெரியாது என்றதும், அந்தப் பல்துறை வித்தகர் பற்றி விளக்கினார். அவருடைய கவிதை நூல்களை எனக்கு அனுப்பிவைப்பதாகச் சொன்னார். ஷியாம் செல்வதுரையின் இலங்கை இலக்கியத் தொகுப்பு, சோ. பத்மநாதன் மொழிபெயர்த்த இலங்கைச் சிறுகதைகள், வி.வி. கணேஷானந்தனின் ‘பிரதர்லெஸ் நைட்’ என்று அவர் சிலாகித்துச் சொல்லும் இலங்கை எழுத்துக்கள் எதுவுமே எனக்குத் தெரியாமல் இருப்பது அவமானமாக இருந்தது. சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டார். கணினியைத் திறந்து, தேடி, ‘ஆக்காண்டி, ஆக்காண்டி’ என்ற கவிதையை ஒருவர் வாசிக்கும் காணொளியை எடுத்துக் காட்டினார். அந்தக் கவிதையும், வாசித்த அந்தக் குரலும் மனதைக் குலையவைத்தன.
மேலும் அவமானப்படுவதிலிருந்து தப்பிக்க, பேச்சை மாற்றி அவர் ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனது முகநூல் பக்கத்தில் ஃபில் க்ளேவின் சிறுகதைத் தொகுப்பு இந்திய அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கவில்லை என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, அவராகவே அந்த நூலை லண்டனிலிருந்து வாங்கி அனுப்பியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவருக்கும் அது நினைவில் இருந்தது. “உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டுமென்று சொல்லுங்கள், வாங்கித் தருகிறேன், அல்லது இங்கே என் வீட்டில் இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார். இப்போது எல்லா புத்தகங்களும் இந்தியாவிலேயே கிடைத்துவிடுவதால், GRANTA போன்ற இலக்கிய இதழ்களைத்தான் லண்டனில் வாங்க நினைத்திருக்கிறேன் என்றேன். அவர் உடனே, “என்னிடமே சில ‘கிராண்டா’க்கள் உண்டு. நாளை பாரீஸ் செல்கிறேன். அடுத்த வாரம் திரும்பி வந்தவுடன், பௌசர் மூலமாகத் தபாலில் அனுப்பிவைக்கிறேன்,” என்றார்.
“உங்களிடம் நான் ஒரு உதவி கேட்கலாமா?” என்றார். எனக்குச் சற்று உடல் சிலிர்த்தது.
“என்ன செய்ய வேண்டும், அய்யா? நிச்சயம் செய்வேன்’ என்றேன்.
“அம்பலவாணர் சிவானந்தன் பற்றித் தெரியுமா?” என்றார்.
வழக்கம்போல நான் அறிந்திருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய அவர் கருப்பின மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்ததையும் Race and Class என்ற இதழை நடத்தியதையும் ஆங்கிலத்தில் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியிருப் பதையும் அய்யர் விளக்கியபோது பிரமிப்பாக இருந்தது.
“அவர் எழுதிய நாவல்களிலேயே மிக முக்கியமானது ‘WHEN MEMORY DIES ’. 58ஆம் வருடக் கலவரத்திலிருந்து ஆரம்பித்து மூன்று தலைமுறைகளாக நடந்துவந்த இன அழிப்பைச் சொல்லும் நாவல் அது. இந்நாவலைத் தமிழில் யாராவது மொழிபெயர்ப்பார்களாவென்று முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன். இதுவரை யாரும் உடன்படவில்லை. நீங்கள் மொழிபெயர்க்க முடியுமா?” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார். எனக்குக் கண்கள் கலங்கின.
“நிச்சயமாக நான் மொழிபெயர்க்கிறேன்” என்று உறுதியளித்தேன். “ஆனால் நான் மொழிபெயர்த்து முடித்ததும் எனது கைப்பிரதியை நீங்களோ அல்லது இலங்கை எழுத்தாளர் யாராவதோ வசனங்கள், இடப்பெயர்கள், கலாச்சார வழக்குகளைச் சரியாகத் திருத்தங்களும் மேலாய்வும் செய்து, பிறகு வெளியிட வேண்டும்,” என்றேன். ஒப்புக்கொண்டார். நேரமாகிவிட்டதால் கிளம்பினோம். பத்மநாப அய்யர் என்ற பேராளுமை எழுப்பியிருந்த பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் அறைக்குத் திரும்பினோம்.
பௌசரிடமும் பால சபேசனிடமும் அவர்கள் லண்டனுக்குக் குடியேறிய கதையைக் கேட்டேன். சபேசன் இனக்கலவரத்திலிருந்து குடும்பத்தோடு தப்பிவந்த கதையைச் சொல்லத் தொடங்கினார். இரவு மூன்று மணிவரை அவர் அனுபவித்த கொடூரங்களைக் கேட்டு வடிவேலனும் நானும் கதிகலங்கிப் போனோம். அவர்கள் சென்ற பிறகும் வெகுநேரத்துக்கு என்னால் உறங்க முடியவில்லை. ஐந்தரை மணிக்கு பாத்ரூம் செல்வதற்காக எழுந்தால், வடிவேலன் படுக்கையில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். கேட்டதற்கு “பொட்டு தூக்கம் வரலை சார். எவ்வளவு இழப்புகள், கொடுமைகளைத் தாண்டி வந்திருக்காங்க. நாம் எவ்வளவு சௌகரியமா சுகவாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நான் எம்.எஸ்., எம்.பி.ஏ. படிச்சிட்டு இங்கே வேலை பாக்குறதுக்கும் இவங்க அகதிகளா வந்து பெட்ரோல் ஸ்டேஷனிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பாத்துக்கிட்டு இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு! ‘கில்ட்’டியா இருக்குங்க. தூங்க முடியல.”
அடுத்த நாள் பௌசர் ஈஸ்ட் ஹாம் பகுதில் உள்ள தனது புத்தகக் கடையில் எனது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடனே சென்னை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கியதைப் போலிருந்தது. வெளியே வந்ததும் வீதியெங்கும் தமிழ் முழக்கம். சாயிபாபா, பெருமாள் கோயில்கள், சரவண பவன், ஏ2பி, தமிழகத்தின் எல்லா நகைக்கடை கிளைகளும் என்று ரங்கநாதன் தெருவில் நடப்பதைப் போலிருந்தது. ஐயாயிரம் மைல்கள் தாண்டி நடைபாதையில் தமிழ் சளசளப்பைக் கேட்கும்போது சிலிர்த்தது. பௌசர் கூட்டத்துக்குத் தமிழ் வாசகர்கள் வந்து குவியப்போகிறார்கள் என்று நினைத்தேன்.
ஐந்து மணியிலிருந்து காத்திருந்தோம். முதலில் மு. நித்தியானந்தன் (‘கூலித்தமிழ்’) அவர்களும் திருமதி மீனாவும் வந்தார்கள். பின்னர் பாஸ்கரன், சஞ்சயன், கே.கே. ராஜா, சபேசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர் மு. குலசேகரனின் உறவினர் மகன் ஆதவன் என்று எங்களோடு சேர்த்து மொத்தம் பதினோரு பேர் மட்டுமே. பௌசரின் பிடிவாதம் வியப்புக்குரியது. இலங்கை நூல்கள் மட்டுமன்றி எல்லா தமிழ் நூல்களையும் விற்பனை செய்யும் கடை லண்டனில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும் பௌசரின் புத்தகக் கடை மட்டுமே. வருடம் முழுக்க புத்தகக் கண்காட்சிகளை உற்சாகத்துடன் நடத்தி வருகிறார். லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் வசிப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. தமிழகத் தமிழர்கள் அவரிடம் நூல்கள் வாங்குகிறார்களா என்று கேட்டேன். சங்கடத்துடன் சிரித்தார்.
அடுத்த வாரம் ஸ்காட்லாந்துக்குத் திரும்பியதும் பத்மநாப அய்யரிடமிருந்து புத்தகங்கள் எனது வதிவிடத்துக்கு வரத் தொடங்கின. தபாலில் அனுப்புவது மட்டுமல்லாது, மின்னஞ்சலிலும் நூல்களை அனுப்பினார். அவருடைய சேகரிப்பில் இருந்த ஏழெட்டு ‘கிராண்டா’ இதழ்களோடு மேலும் பத்து இதழ்களைப் பழைய புத்தகக் கடைகளில் வாங்கி அனுப்பினார். INDEX என்ற ஓர் அபாரமான இதழையும் அறிமுகப்படுத்தினார். ‘கிராண்டா” வைப்போலவே அளவில் இருந்த ‘இண்டெக்ஸ்’ கருத்துரிமைக்காகச் செயல்படுகிற, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நூல்களின் தேர்ந்தெடுத்த பகுதிகளை வெளியிடுகிற இதழ். எனக்கு அனுப்பியிருந்த இதழ்களில் அமர்த்யா சென், குந்தர் கிராஸ் போன்ற ஆளுமைகளின் கட்டுரைகள் இருந்தன. அவருடைய நெறியாள்கையின் கீழ் உருவாகியிருக்கும் ‘நூலகம்’ இணையதளத்தைப் பற்றி (www.noolaham.org) நான் முகாமுக்குத் திரும்பிய பிறகுதான் அறிந்துகொண்டேன். பல்வேறு பகுப்புகளின் கீழ் கிட்டத்தட்ட எல்லா இலங்கை எழுத்தாளர்களின் நூல்களும் எண்ணிமப் படுத்திப் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டபோது அய்யரின் கால்களில் மானசீகமாக வீழ்ந்து வணங்கினேன்.
ஒரு கட்டத்தில் அய்யரிடமிருந்து தபாலில் வந்துகொண்டேயிருந்த நூல்கள் கவலை ஏற்படுத்த ஆரம்பித்தன. ஃபௌசரும் தன்னிடம் அய்யர் ஒப்படைத்திருந்த 15 கிலோ எடையுள்ள நூல்களை அனுப்பியிருந்தார். நான் திரும்பிச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த சுமையின் எடை ஒரு பைக்கு 28 கிலோ மட்டுமே. இரண்டு பைகள் அனுமதி. என் உடைகளையும் சமையல் பாத்திரங்களையும் புத்தகங்களோடு சேர்த்தால் 56 கிலோவுக்கு அதிகமாகிவிடும் போலிருந்தது. அய்யர் அவர்களை அழைத்து, நிலைமையைச் சொல்லி இனிமேல் புத்தகங்களை அனுப்பாதீர்கள். விமானத்தில் கூடுதல் எடைக்கு மேலதிகத் தொகை செலுத்த வேண்டிவரும் என்று கேட்டுக்கொண்டேன். அய்யர் மிகவும் சாதாரணமான குரலில், “புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு சூட்கேஸில் இருக்கும் உங்கள் சட்டை, பேண்ட், குக்கர் எல்லாவற்றையும் விமான நிலையத்தில் நிறைய குப்பை கூடைகள் இருக்கும், அவற்றில் போட்டுவிடலாமே,” என்று ஆலோசனை சொன்னார்.
மின்னஞ்சல்: gkuppuswamy62@yahoo.com