காலத்தினாற் செய்த...
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (எம்.எஸ். சுவாமிநாதன்) சுதந்திர இந்தியாவில் வேறு எந்த ஒருவரையும் விட விவசாயிகளின் நலன்கள் பற்றி அதிகம் சிந்தித்தவர், அதிகம் அக்கறை கொண்டிருந்தவர். இவர் தனது வாழ்க்கைப் பாதையாக விவசாயத் துறையைத் தெரிவுசெய்தது தற்செயல் அல்ல. 1925ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாம்பசிவன், தாயார் பார்வதி தங்கம்மாள். தந்தை, நகரத்தின் புகழ்பெற்ற மருத்துவர். சொந்த மருத்துவமனை வைத்திருந்தார். சமூக அக்கறை மிகுந்தவர், கும்பகோணம் நகராட்சித் தலைவராகவும் இருந்தவர். தீவிர காங்கிரஸ்காரரான அவர் காந்தியின் சுதேசி இயக்கத்தில் பங்கேற்றவர். பிரிட்டிஷ் துணி எரிப்புப் போராட்டத்திற்குத் தனது மகன் சுவாமிநாதனையும் அழைத்துச் சென்றவர். இது சுவாமிநாதன்மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. ஆனால் சுவாமிநாதனுக்கு 11 வயதிருக்கும்போதே அவரது தந்தை ஹெபடைட்டிஸ் நோயால் தாக்கப்பட்டு இறந்துபோனார். தந்தையைப் போலவே இவரும் மருத்துவராக வேண்டும் என்பதே குடும்பத்திலிருந்த அனைவரின் எதிர்பார்ப்பும். அதன் பொருட்டே மருத்துவம் படிப்பதற்காக திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு அதில் 1944இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அடுத்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டிய அவர் கோயம்புத்தூரிலிருக்கும் வேளாண் கல்லூரியில் விவசாயப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். இந்தப் பாதை மாற்றத்திற்கு நீண்ட பின்னணி இருக்கிறது.
இவரது தந்தைவழித் தாத்தாவான கிருஷ்ணய்யர் முற்போக்கான சிந்தனைகொண்டவர் மட்டுமல்ல விவசாயத்தில் பல புதுமைகளையும் மேற்கொண்டவர். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு டெல்டா பகுதியில் கிருஷ்ணய்யரின் குடும்பம் மிகவும் புகழ்பெற்றது. இவரது அண்ணன்மீது அம்பலப்புழா மன்னர் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக மன்னர் அவருக்கு மான்கொம்பு கிராமத்தில் மாளிகை ஒன்றைப் பரிசளித்தார். குடும்பத்தின் விவசாயப் பின்னணியும் தந்தையின் பொது வாழ்க்கை அர்ப்பணிப்பும் சுவாமிநாதனின் ஆளுமையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இவர் பதின் பருவத்தில் இருக்கும்போது கும்பகோணத்திலிருந்த இவர்களது வீட்டில் காந்தி இரண்டுமுறை தங்கியிருக்கிறார். அந்த வயதில் காந்தியை நெருக்கமாகப் பார்த்தறியும் வாய்ப்பும் சுவாமிநாதன் மீது ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த போது
விடுமுறைக் காலங்களில் கேரளா விலும் தமிழ்நாட்டிலும் நெல் வயல்களுக்குச் சென்று பார்வை யிடுவது வழக்கம். நெல் விளைச்சல் குறைவாக இருப்பதையும் நெல் பயிரிடும் விவசாயிகள் ஏழ்மையில் இருப்பதையும் ஆனால் பணக்கார விவசாயிகள் ஏலக்காய், ரப்பர், தென்னை, காப்பி, தேயிலை போன்றவற்றைப் பயிரிட்டுப் பெரும் லாபம் ஈட்டுவதையும் பார்த்தார். இதே காலகட்டத்தில் ஏற்பட்ட வங்கப் பஞ்சமும் அதன் கோர விளைவுகளும் இவரது எதிர்காலப் பாதையைத் தீர்மானிப்பதில் நிர்ணயகரமான பங்காற்றின. இந்த இடத்தில் இவரது அம்மாவின் முக்கியத்துவத்தைச் சொல்லியாக வேண்டும். சமூக அக்கறை, மனிதநேயம் ஆகிய விஷயங்களில் தனது அம்மா வார்த்தைகள் மூலமாக அல்லாமல் செயல்களின் மூலமாகத் தன்னுள் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் குறித்துப் பலமுறை சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.
1947இல் கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் பல தங்கப் பதக்கங்களுடன் பட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டத்திற்காக தில்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ) சேர்ந்தார். விவசாயப் படிப்பிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் எதற்கும் இருக்கட்டுமென இந்திய குடிமைப் பணித் தேர்வு எழுதி இந்திய காவல் பணி அதிகாரியாக (ஐபிஎஸ்) ஆனார். ஆனால் விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் இருந்த அக்கறையால் விவசாயத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். யுனெஸ்கோவின் ஆராய்ச்சி உதவித் தொகை கிடைத்ததும் நெதர்லாந்து விவசாயப் பல்கலைக்கழகத்தில் மரபணுவியலில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். மிக உயர்தரத்திலான இவரது ஆராய்ச்சியின் காரணமாக அமெரிக்காவிலேயே பெரும் ஊதியம் கொண்ட வேலையுடன் வளமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் தனது அறிவு, உழைப்பு இரண்டுமே தனது நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்ற வேட்கையின் காரணமாக 1954இல் இந்தியா திரும்பினார்.
இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நினைவுகூர்வது 1960களின் இறுதியில் இந்தியாவில் நடந்த பசுமைப் புரட்சியின் காரணமாகவே. இதன் காரணமாகவே அவர் புகழப்படுகிறார், கடுமையாக விமர்சிக்கப்படுகிறார், சமூக வலைதளங்களில் அவதூறுகளுக்கும் உள்ளாகிறார். ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்று பசுமைப் புரட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா. பசுமைப் புரட்சி என்றால் என்ன, அது ஏன் அவசிய மாக இருந்தது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே சுவாமிநாதன் ஏன் ஒரே நேரத்தில் கொண்டாடப் படவும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பசுமைப் புரட்சி என்ற சொல்லாட்சி சுவாமிநாதனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருந்த தில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
1999இல் அமெரிக்காவின் ‘டைம்’ வார இதழ் இருபதாம் நூற்றாண்டு ஆசியாவின் இருபது முக்கியமான ஆளுமைகள் என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவிலிருந்து மூவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அவர்கள்: மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், எம்.எஸ். சுவாமிநாதன். இந்த அளவிற்கு முக்கியமான ஆளுமையாக அவர் கருதப்பட நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 1940களின் தொடக்கத்திலிருந்து 1960களின் இறுதிவரை இந்தியா உணவு தானியங்களுக்காக அமெரிக்கா போன்ற நாடுகளிடம் கையேந்தி நின்றது. கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியால் வாடும் நிலை. 1960களின் மத்தியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பீகாரிலும் உத்தர பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாகவும் சீனாவுடனான 1962ஆம் ஆண்டும் பாகிஸ்தானுடன் 1965ஆம் ஆண்டும் நடைபெற்ற போர்களின் காரணமாகவும் நிலைமை பெரிதும் மோசமானது. வாரத்திற்கு ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கும்படி நாட்டு மக்களைப் பிரதமரே கேட்டுக்கொள்ளும் அவல நிலை. (1967இல் திமுக பெரும் வெற்றி பெற்றதில் இந்தப் பஞ்சத்திற்கு முக்கியமான பங்குண்டு.) இந்த நிலை தொடருமெனில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையே பாதிக்கப்படும் ஆபத்திருந்தது. இந்நிலையில்தான் 1964இல் நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி எடுத்த முதல் சில நடவடிக்கைகளுள் ஒன்று அப்போது எஃகு, சுரங்கம், கனரகத் தொழிற்சாலை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியத்தை விவசாயத் துறையின் பொறுப்புக்கும் கொண்டுவந்தது. சாஸ்திரியின் தெரிவு எவ்வளவு சரியானது என்பதைக் காலம் நிரூபித்தது. இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான கோதுமையை இறக்குமதி செய்வதிலாகட்டும் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவாக இருந்த காலத்தில் வெளிநாடுகளிடமிருந்து உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இறக்குமதி செய்வதிலாகட்டும் மெக்சிகோவின் குட்டைரக கோதுமை விதைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதிலாகட்டும் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சன் உட்படப் பலருடனும் சுப்பிரமணியம் திறம்பட பேச்சுவார்த்தைகள் நடத்தி வெற்றி கண்டார். 1960களின் இறுதிவரை உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்திய இந்தியா 1970களின் தொடக்கத்திலேயே கோதுமை விளைச்சலைக் கணிசமாக அதிகப்படுத்தி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு கண்டது. இதன் முழுப் பெருமையும் சி. சுப்பிரமணியம் - எம்.எஸ். சுவாமிநாதன் கூட்டணியையே சேரும். அந்தக் காலகட்டத்தில் பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும் இந்திரா காந்தியும் இவர்களுக்கு அளித்த முழு ஒத்துழைப்பு இதைச் சாத்தியப்படுத்தியது. 1960கள்வரை இந்திய விவசாயிகள் கையாண்ட பாரம்பரிய முறைகளை இன்று பின்பற்றினால் இந்தியாவில் உற்பத்தியாகும் தானியங்களின் அளவை உற்பத்தி செய்ய இன்றிருப்பதைப் போன்று மூன்று மடங்கு அதிக விவசாய நிலம் தேவை. இதிலிருந்தே சாதனையின் அளவைப் புரிந்துகொள்ளலாம்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என சுவாமிநாதன் அழைக்கப்படுகிறார் என்றால் உலகளாவிய பசுமைப் புரட்சியின் தந்தை என அமெரிக்க தாவரவியல், விவசாய அறிவியல் அறிஞரான நார்மன் போர்லாக் அறியப்படுகிறார். இவரது கண்டுபிடிப்புகளும் முயற்சிகளும் ஆசியா, ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்க உதவின என்பதை அங்கீகரித்து 1970இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது உதவி பெற்றே மெக்சிகோ குட்டைரக கோதுமை விதைகளை சுவாமிநாதன் இந்தியாவிற்குக் கொண்டுவந்தார். தான் நோபல் பரிசு பெற்றபோது சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் போர்லாக்: “பசுமைப் புரட்சி ஒரு கூட்டணி முயற்சி. இந்த மாபெரும் சாதனைக்கான புகழ் இந்தியாவின் அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சேர வேண்டும். ஆனால் மெக்சிகோ குட்டைரகக் கோதுமைப் பயிரின் உள்ளார்ந்த சக்தியை முதலில் கண்டறிந்த உங்களுக்கே புகழின் பெரும் பங்கு சேர வேண்டும். இதுமட்டும் நடந்திருக்காவிட்டால் ஆசியாவில் பசுமைப் புரட்சியே நடந்திருக்காது என்று சொல்லிவிடலாம்.” இருபதாம் நூற்றாண்டு ஆசியாவின் இருபது முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராக டைம் பத்திரிகை சுவாமிநாதனைக் குறிப்பிடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. பசுமைப் புரட்சியின் விளைவுகளில் பாதகமானவையே இல்லையா, அதன் கடுமையான விமர்சகர்கள் கூறுவதில் உண்மையில்லையா என்றால், இருக்கின்றன என்பதுதான் நேர்மையான பதில். ஆனால் அந்தக் குறைகளை எத்தகைய சட்டகத்திலிருந்து விமர்சிப்பது என்பதில்தான் பிரச்சினை.
செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் எனப் பலவும் பயன்படுத்தப் பட்டன. விளைச்சலை மேலும் அதிகப்படுத்த வேண்டு வதற்காக இவற்றைப் பல பணக்கார விவசாயிகள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதன் காரணத்தால் விவசாய நிலங்களும் நிலத்தடி நீரும் மாசுபட்டதுடன், சுற்றுச்சூழலும் மாசுபட்டது. மேலும் நாம் உண்ணும் உணவும் வேதியற் பொருட்கள் மிகுந்தவையானதால் உடல்நலன் பாதிப்பிற்குள்ளானது. பாரம்பரிய விதைகள் பலவும் அழிந்துபோய், பல வகையான பயிர்களைப் பயிரிடுவது குறைந்துபோய்விட்டது. நில வளமும் நீர் வளமும் குன்றி நீடித்து நிலைக்கும் வளமான விவசாயம் என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது. மேலும் பசுமைப் புரட்சி பணக்கார விவசாயிகளுக்கே அதிகம் பலனளித்தது, கிராமப்புறங்களில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துச் சமூகப் பதற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது என்பன போன்ற விமர்சனங்கள் சரியானவையே. இவையனைத்தையும் சுவாமிநாதன் உணர்ந்தே இருந்ததுடன் இவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த விஷயத்தில் அறிவியலாளரின் பங்கு என்ன, ஓர் ஆட்சியாளர் செய்ய வேண்டியது என்ன என்பதுபற்றி அவருக்கு மிகத் தெளிவான, சரியான பார்வை இருந்தது.
பசுமைப் புரட்சியில் இருக்கும் இந்தக் குறைகள் களையப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார். நிலச் சீர்திருத்தம் முறையாக நடந்திருந்தால் பசுமைப் புரட்சியின் பலன்கள் ஏழை மக்களை மேலும் பரவலாகச் சென்றடைந்திருக்கும் என்று இடதுசாரிகள் வைத்த விமர்சனத்தையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டார். பள்ளிக் கல்விக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை போலவே உணவுக்கான உரிமையும் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து வாதிட்டுவந்தவர் அவர். இந்திய விவசாயிகளின், குறிப்பாகச் சிறு விவசாயிகளின் நலன்கள் குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தவர். சுவாமிநாதன் குறித்துக் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து, கள ஆய்வுகள் நடத்தியும் ஊடகங்களில் எழுதியும் பேசியும் வரும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் சாய்நாத் கூறும் விஷயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்ட விதர்பா பகுதிக்குத் தான் அவரை அழைத்துச்சென்றபோது அங்கிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த சுவாமிநாதன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுததாகக் குறிப்பிடுகிறார் சாய்நாத். படிக்காத விவசாயிகள்கூட அறிந்த சில ஆங்கில வார்த்தைகள் “சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்” என்று சாய்நாத் குறிப்பிடுகிறார். 2004இல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக சுவாமிநாதன் செயல்பட்டார். விவசாய உற்பத்திப் பொருளுக்கான குறைந்தபட்ச விலை உற்பத்திக்காக ஆகும் ஒட்டுமொத்தச் செலவைவிட 50% கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் சிறு விவசாயிகளின் நிலை மேம்படும் என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனத் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். மோடி அரசாங்கம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென விவசாயிகள் போராடியபோது முழுமையாக விவசாயிகளின் பக்கம் நின்றவர்.
பசுமைப் புரட்சிக்கு எதிரான கண்மூடித்தனமாகக் கருத்துகளைச் சமூக வலைதளங்களில் முன்வைக்கும் பலர் (இவர்களில் பலர் நம்மாழ்வார், வந்தனா சிவா போன்றோரைக் கொண்டாடுகிறவர்கள்) சுவாமி நாதனை வில்லனாகச் சித்திரிப்பதில் ஆச்சரியமில்லை. இவர்களில் பலருக்கு அறிவியலைப் பற்றிய புரிதல் இல்லை அல்லது அறிவியலைப் பின்நவீனத்துவக் கோட்பாட்டுச் சட்டகத்தின் மூலம் அணுகுகிறவர்கள். அறிவியல் குறித்த பின்நவீனத்துவ அணுகுமுறையை விவாதிக்க இங்கு இடமில்லை. (இதை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் Alan Sokal, Jean Bricmont ஆகியோர் எழுதிய ‘Fashionable Nonsense: Postmodern Intellectuals’ Abuse of Science’ என்ற புத்தகத்தைப் படிக்கவும்.) ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த E=mc2 என்ற கோட்பாடுதான் அணுகுண்டு கண்டுபிடிப்பிற்கான அடிப்படை என்பதாலும் அமெரிக்கா அணுகுண்டு தயாரித்தாக வேண்டும் என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராஃங்ளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார் என்பதாலும் ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவில் அவருக்கும் பெரும் பங்குண்டு என்று வாதிடுகிறவர்கள் பின்நவீனத் துவர்கள்; அறிவியலுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவுகளுக்கும் வித்தியாசம் பார்க்காதவர்கள். பசுமைப் புரட்சியின் அவசியத்திற்கும் அணுகுண்டு கண்டுபிடிப்பின் அவசியத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை இங்கு கவனிக்கத்தக்கது. அணுகுண்டை அமெரிக்கா தயாரிக்கும் முன்னர் நாஜி ஜெர்மனி தயாரித்திருந்தால் ஒட்டுமொத்த உலகமே பேரழிவைச் சந்தித்திருக்கும் (ஜெர்மனியால் அணுகுண்டைத் தயாரிக்க முடியாது என்பது தனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தால் அமெரிக்க அரசிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கவே மாட்டேன் என்று பின்னர் ஐன்ஸ்டீன் வருந்தினார்). பசுமைப் புரட்சி ஏற்படாதிருந்தால் இந்தியாவிலும் பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் பசியால் பல கோடிக்கணக்கான பேர் மடிந்திருப்பார்கள் என்பதுடன் பெரும் வன்முறைக் கலவரங்களும் ஏற்பட்டுப் பல லட்சம் பேர் மாண்டு இருப்பார்கள். இன்று பசுமைப் புரட்சியின் பாதகங்களை மட்டுமே கணக்கில் கொண்டு அதை இயற்கையின் மீதான வன்முறையாக விமர்சிப்பது மிகத் தவறான அணுகுமுறை. இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்ற அமெரிக்க அறிவியலாளர் ஜேர்ட் டயமண்ட் முன்வைத்த கருத்து நினைவுக்கு வருகிறது. அவரது கூற்றுப்படி மனிதகுலம் செய்த மாபெரும் தவறு விவசாயம் செய்யத் தொடங்கியதுதான். வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினமாகவே மனிதகுலம் தொடர்ந்திருந்தால் மனித இனம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் இந்தப் பூமியில் நீடித்திருந்திருக்கும். உலகம் முழுவதும் பரவும் தொற்றுநோய்கள், அணு உலை, அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகள், பூமி வெப்பமயமாதலால் ஏற்படும் ஆபத்து என எதுவும் இருந்திருக்
காது. அவர் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆனால் சில நூறு பேர்களைத் தவிர வாழ்நாளில் யாரையும் பார்க்க வாய்ப்பில்லாத, சராசரி மனித ஆயுள் சுமார் 30 ஆண்டுகள்தான் என்ற அந்த வாழ்க்கையை இன்று நம்மில் எத்தனை பேர் வாழ விரும்புவோம்?
இன்று மனிதகுலம் பெற்றுள்ள படிப்பினைகள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பல தீமைகளைப் பெரிதும் குறைக்க முடியும். ஆனால் அதற்கு உலகளாவிய ஒற்றுமை தேவை. அமெரிக்க முதலாளித்துவ முறையின் (பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளின் முதலாளித்துவம் வேறு மாதிரியானது) கீழ் அது அநேகமாகச் சாத்தியமல்ல என்பதும் உண்மை.
ஆகவே பசுமைப் புரட்சியின் பாதகங்களுக்கு சுவாமிநாதனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது பிழையானது. இந்திய மக்கள் அவருக்குப் பெரும் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள்.
மின்னஞ்சல்: thiru.jnu@gmail.com