முழுமை தேடிய கலைஞர்
கே. ஜி. ஜார்ஜ் சார் இறப்பதற்கு முந்தைய நாள் எதேச்சை யாக ஒருவரை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் பெயர் டாக்டர் மோகன் தாஸ். அமெரிக்காவிலிருந்து திரும்பி இப்போது இங்கே வசிக்கும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தோழர் பன்யன் ரவீந்திரன். மலையாளத்தின் பிரிய நடிகர் மதுவைச் சந்திக்கச் செல்ல இருந்தோம். இந்த டாக்டர்தான் தோழர் பன்யனை அழைத்து வந்தார். எந்தக் காலத்திலும் இனியும் வரவிருக்கும் காலத்திலும் மலையாளத்தின் பிரிய இயக்குநரான கே.ஜி. ஜார்ஜின் முதல் திரைப்படம் ‘ஸ்வப்னாடன’த்தின் கதாநாயகர் டாக்டர் மோகன் தாஸ். ஜார்ஜ் சாரைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். மீண்டும் சந்திக்கலாம், முடிந்தால் சாரைப் போய்ப் பார்க்கலாம் என்றும் சொல்லிப் பிரிந்த மறுநாள் கேட்ட செய்தி ஜார் சாரின் மரணமாக இருந்தது. அந்த மரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஒருபோதும் அது உடனடியாக வந்துவிடக் கூடாது என்று எந்த ஒரு கலை ஆர்வலனையும்போல நானும் விரும்பினேன்.
கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனைச் சிகிச்சையிலிருந்து முதியோர் இல்லப் பராமரிப்புக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் மனைவி செல்மா ஜார்ஜுடனும் இடையிடையே உரையாடிக் கொண்டிருந்தேன். மரணம் மிக அருகில் வந்து நிற்கிறது. இறந்துவிடக் கூடாது என்று பிரார்த்திக்கும்போதும் வலியில்லாமல் இன்னொரு நிரந்தர உலகத்துக்குப் பயணமாகட்டும் என்று சில நேரங்களில் மௌனமாக விரும்பியிருக்கிறேன். நமது அன்புக்கு உரியவர்கள் நமது வாழ்க்கையிலிருந்து சீக்கிரம் மறைந்து போகக் கூடாது என்றே எல்லாரும் விரும்புகிறோம். ஆனால் தவிர்க்க முடியாத மரணத்தின் பாதையில் ஒன்றாக இணைகிறோம்.
ஜார்ஜ் திரைப்படங்களின் மிகப் பெரும் தனித்துவம் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரங்களை அவர் கண்டடைந்ததுதான். ஒவ்வொரு சினிமாவையும் பார்வையாளர்கள் முற்றிலும் மாறுபட்டதாகவே அனுபவித்தார்கள் என்பதே உண்மை. எனினும் சில சமயம் அவை ஒரே இயல்பு கொண்டவை என்று சிந்திக்கவோ பார்க்கவோ தூண்டும். அதற்குக் காரணம் பார்த்தவையெல்லாம் மனித மனங்களின் தோற்றங்கள் என்பதே. முதல் படமான ‘ஸ்வப்னாடன’த்திலிருந்து அவர் ஆடியது மனங்களின் பரமபத விளையாட்டைத்தான்.
1976முதல் 1998வரையான இருபத்திரண்டு ஆண்டுகளில் எடுத்த பத்தொன்பது படங்களும் தனக்குப் பழக்கப்பட்ட வழிகளினூடேயுள்ள சஞ்சாரம் என்று ஜார்ஜ் குறிப்பிட்டிருக்கிறார். பழக்கமற்ற வழிகளிலான பயணம் கடினமானது. சில சமயம் நம்ப முடியாதது. கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த அணுக்கத்தை அவர் அறிந்திருந்தார். ‘ஸ்வப்னாடன’த்தின் கதாபாத்திரமான டாக்டர் கோபி அலைந்து திரிந்து மனநல விடுதிக்கு வந்துசேரும்போதும் அங்கிருந்து நோய் நீங்கிய பின்பு சொந்த வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் வாழ்வதும் வரவிருந்தவையோ அல்லது எடுக்கவிருந்தவையோவான திரைப்படங்களின் தொடர்ச்சியாகவே இருந்தன.
ஸ்வப்னாடனம் (1976)
‘ஆதாமின்டெ வாரியெல்லு’ - ஆலீஸ், வாசந்தி, அம்மிணி, ‘யவனிக’ - ரோஹிணி, ‘மற்றொராள்’ - சுசீலா, ‘ஈ கண்ணி கூடி’ - சூசன் பிலிப் என்ற குமுதம், ‘லேகயுடெ மரணம்: ஒரு ஃப்ளாஷ் பேக்’ - லேகா, ‘ஸ்வப்னாடனம்’ சாரதா ஆகிய எல்லாரும் கதாபாத்திரங்கள் என்பதை விட நமக்கு மிக அருகில் அனுபவத்தில் கண்ட மனிதர்கள் ஆகிறார்கள். மனப் பிறழ்விலும் தற்கொலையிலும் தப்பி ஓட்டத்திலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத இன்னொரு உலகத்துக்கு எல்லாவற்றையும் மோதியெறிந்துவிட்டு ஓடிப் போகிறவர்கள். ‘போலீசாச்சே வாப்பா கேட்டால் கொடுக்காமலிருக்க முடியுமா?’ என்று கேட்கும் ஆதரவற்ற அனார்க்கலியை ஜார்ஜ் கண்டெடுத்தது தனது சுற்றுப்புறத்திலிருந்துதான். கதையைப் பிறர் எழுதியிருந்தாலும் அதைத் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் ஜார்ஜின் திறமை அபாரமானது. ஒருபோதும் வெளிப்படாத மிகப் புதிரான பெண் மனத்தின் ஆழங்களை அத்தனை தன்வயத்துடன் ஜார்ஜ் சித்திரிக்கிறார். பெண்ணையும் பெண் மனதையும் இந்த அளவு அடையாளம் காட்டிய இன்னொரு இயக்குநர் இல்லை.
லேகயுடெ மரணம்: ஒரு ஃப்ளாஷ்பேக் (1983)
தோல்வியடைந்த தாம்பத்தியம் பல கதைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் அவற்றில் எதுவும் ஒரே போன்றவையல்ல. ‘ஸ்வப்னாடன’த்தில் டாக்டர் கோபி, சுமித்ராவை மணந்துகொண்டாலும் அவர்கள் விரும்பிய வாழ்க்கை அதுவல்ல. ‘மேளா’வில் குள்ளனும் சாரதாவும் சுற்றியிருப்பவர்களின் பார்வைகளால் ஒடுங்கிப் போகிறார்கள். ‘மற்றொரா’ளில் கைமளும் சுசீலாவும் வாழ்க்கையில் ஒருபோதும் நிகழாத ஒன்றினூடே பயணம் செய்கிறார்கள். வாழ்க்கையின் விஷம் புரண்ட நோட்டங்களும் சுற்றுப்புறங்களும் சந்தர்ப்பங்களும் ஒரே போன்று இருக்கவில்லை. ‘இரைகள்’ ஆனியின் இரவுகளும் ‘ஆதாமின்டெ வாரியெல்லு’ ஆலீசின் வீடும் வாசந்தியின் குடிகாரக் கணவனின் விடியற் காலமும் பயம், பகை, அதீத காமம், வெறுப்பு, அன்பின்மை ஆகியவற்றின் காட்சிகளையே சொல்லுகின்றன.
ஜார்ஜின் திரைப்படங்களின் கதைப் புலங்கள் வியப்பூட்டுபவை. ‘ஸ்வப்னாடன’த்தில் டாக்டர் கோபி தங்கும் மனநல விடுதியும் ‘மற்றொரா’ளில் கைமளின் மனைவி ஓடிப்போய் அடைக்கலமாகிற இடுங்கிய அறையும் ‘கோலங்க’ளில் எல்லாமும் கலந்த கிராமமும் ‘யவனிக’யில் நாடக மேடையும் முகாமும் அதை விடவும் உயிர்த் துடிப்புள்ள அய்யப்பனின் வீடும் ‘இரைக’ளில் பங்களாவும் நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்க்கையின் உண்மையையும் பொய்யையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வாழ்க்கைக் காட்சிகள் மனதில் ஆழங்களில் கிடக்கும் நிலைகளை வெளிப்படுத்துகின்றன. சொல்லப்படும் கதைகள் எல்லாமும் பெண்மனதால் சொல்லப்படுபவை.
முன்னுரைக்க முடியாததுதான் அரசியல். சினிமாவும் பார்வையும் தொடர்ந்து உருவாக்கும் அற்புதமே ‘இரைகள்’ என்ற சினிமா. உலகின் எந்த மூலையிலிருந்தாலும் மனித வாழ்வைப் பார்க்க முயலும் மாந்திரீகம் கே.ஜி. ஜார்ஜ் என்ற திரைப்படக்காரனிடம் உண்டு என்றும் விவாதிக்கச் சாத்தியமுள்ளவையும் அதற்கு வலுவுள்ளவையுமான கதைகள்தாம் அவருடைய சினிமாவின் பின்புலம்.
எண்பதுகளின் தொடக்கத்தில் பார்த்த சினிமா ‘இரைகள்’. பல ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல் ஒரு படப்பிடிப்புக்
காக அமெரிக்காவுக்குச் சென்றபோது அமெரிக்கன் பிராட்காஸ்டிங்க் கார்ப்பரேஷன் தொலைக்காட்சியில் (ஏபிசி டெலிவிஷன்) ஒளிபரப்பிய திரைப்படமொன்றைப் பார்த்தேன். அதன் கதை இப்போதும் மறக்கவில்லை. ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை நடத்தும் நபரின் குடும்பக் கதை அது. அவருக்கு மூன்று பிள்ளைகள். நோயாளியாக இருந்தாலும் அவருடைய பேச்சிலும் செயலிலும் அதிகாரச் செருக்குத் தென்படும். அப்பாவும் முதல் பிள்ளையும் இணைந்துதான் சுரங்கத்தையும் அதன் நடவடிக்கைகளையும் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்டாவது மகன் சுரங்கத் தொழிலாளர்களைத் திரட்டி அதன் வழியே ஆட்சிப் பீடத்தில் ஏறவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் முயல்கிறான். அவன் குடும்பத்தின் பகைவனும்கூட. மூன்றாவது மகன் போதை மருந்துக்கு அடிமை; நிரந்தரமாகப் பிரச்சனைகளை ஏற்படுத்துபவன். எல்லாவற்றின் மீதும் கோபமும் வெறுப்பும் கொண்ட மூன்றாவது மகன் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா உறுப்பினர்களையும் ஒவ்வொருவராகக் கொலை செய்வதுதான் கதை. படத்தைப் பார்த்து முடித்ததும் ‘இரைகள்’ படத்துடன் மிகுந்த ஒற்றுமை கொண்டிருப்பதாகத் தோன்றியது. அது என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த நொடியே நான் ஜார்ஜ் சாரை அழைத்துச் சொல்லவும் செய்தேன். அன்று அவர் என்னிடம் சொன்னதை ஒருபோதும் மறக்க மாட்டேன். “உலகம் முழுவதும் டிஜிட்டலாகிக்கொண்டிருக்கும் காலத்தில் காட்சிகள் எல்லாமே விரல்முனைக்கு வந்துசேர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் இன்னொருவன்மீது செல்வாக்குச் செலுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. நீண்ட காலம் நாம் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டோம். இனி நமது படங்கள் அவர்களையும் பாதிக்கட்டுமே.’’
சினிமாவைத் தெரிந்த நபருக்கு சினிமாவுக்கான பின்புலங்களை உருவாக்கிக்கொள்ள சுற்றிலும் கண்களை ஓடவிட்டால் போதும் என்று நிரூபித்த இயக்குநர் ஜே.ஜி.ஜார்ஜ். எழுபதுகளில் வெளிவந்த, ஏராளமான அரசியல் தளங்கள் கொண்ட ‘இரைகள்’ என்ற படம் இன்றும் மனிதர்களைப் பாதிப்பது எளிய காரியமல்ல. புதிய காலத் திரைப்படங்களிலும் அந்தக் கதையின் இழைகள் பின்னிச் சேர்க்கப்படுகின்றன. சொல்ல விரும்பிய காரியங்களைத் தான் இயக்கிய படங்களில் தெளிவாக வெளிப்படுத்திய பெர்ஃபெக்ஷனிஸ்ட் அவர் என்பதில் ஐயமில்லை. ஒரு ஃபிரேமை உருவாக்கும்போதே அதற்கு முழுமை வேண்டும் என்ற உறுதியுடன் காட்சியைக் காண்பவர் அவர்.
பரந்த சிந்தனை எளிய செயலன்று. அது இருப்பதனால் தான் அந்தத் திரைப்படங்கள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன. மலையாள சினிமாவில் ‘யவனிக’வைப் போன்ற கிரைம் திரில்லர் அதற்குப் பின்பு உருவாகவில்லை என்பது இதற்கு உதாரணம். நாடகத்தின் உள் நிகழ்வுகளை இணைத்து ஒரு திரை நாடகத்தை உருவாக்குவது மிகக் கடினமான செயல். ஆனால் நாடகத்தை நாடகமாகவும் திரைப்படத்தை அதன் மொழியிலுமாக வெளிப்படுத்த அவரால் முடிந்தது. நாடகம் நடைபெறும் மேடையில் அதன் முழுமை வெளிப்படுகிறது. அது ஒருபோதும் சினிமாவின் மிட்ஷாட் ஆகவோ க்ளோஸப்பாகவோ மாறாமல் நாடகமாகவே நிகழ்கிறது. அந்த நாடகத்துக்குள் ஒரு சினிமா இணைகிறது. அய்யப்பனின் மறைவின் விசாரணை வழியில் பரபரப்பான ஒரு சினிமாவும் நாடகக் காட்சிகளில் நாடகீயமான நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டு வேறுபட்ட அனுபவத்தை அளிக்கிறது. காட்சி ஊடகத்தின் முடிவற்ற சாத்தியங்களை ஜார்ஜ் என்ற திரைக்கலைஞர் இனம் கண்டிருந்தார்.
‘காழ்ச்ச’ என்ற பெயரிலான குறும்படத்திலும் ஒளிபரப்பாகாத தொலைக்காட்சித் தொடரிலும் இணைந்து பணியாற்ற முடிந்தது. பல கட்டங்களில் அவருடன் பயணம் செய்யவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் வாய்த்தது. தொலைதூர இடத்துக்குச் செல்லும்போது அதை அடைவதற்கான வழிகளையும் இடர்ப்பாடுகள் நேர்ந்தால் அவற்றைக் கடக்கும் முறைகளையும் மிகத் துல்லியமாகக் காண்பித்திருந்தார். நமது கலைப் படைப்புக்கு முழுமை வேண்டுமென்றால் நமது கண்கள் 360 டிகிரியிலும் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும். சுற்றுப் புறத்தின் ஒவ்வொரு துடிப்பையும் முணுமுணுப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் ஒரே வழி. அதை நம்முடையதாக மாற்ற முடியவேண்டும். அப்போது மட்டுமே நம்முடையதான ஓர் ஆளுமை அதில் உருவாகிறது. ‘என்னுடைய சினிமா என்பது அந்த ஆளுமையே ’ என்று அவர் கூறியிருக்கிறார். அப்படியான ஆளுமையை உருவாக்கிக்கொள்வதே ஒவ்வொரு கலைஞரும் செய்ய வேண்டியது.
வாழ்க்கையை விடத் தனது படைப்புகளையே ஜார்ஜ் நேசித்தார். மற்றவையெல்லாம் தற்காலிக நொடியின் பிரதிபலிப்புகள் மட்டுமே. தோல்வியடைந்த வாழ்க்கையை விடவும் வாழ்ந்து தீர்த்த வாழ்க்கையின் வெற்றியையே அவர் கொண்டாடினார். ஒற்றையிருப்பில் எழுதி முடித்த எல்லாத் திரைக்கதைகளும் வரவிருக்கும் காலத்தின் துடிப்புகள்தாம். க்ளாத் ஷப்ரால் சினிமாக்களின் மனமும் ஹிட்ச்காக் படங்களின் அற்புதங்களும் பார்த்தவையும் அறிந்தவையுமான திரைப்படங்களின் பாதைக்கு அவரை அழைத்துச் சென்றன. வாழ்நாளில் என்ன செய்தார் என்று கேட்டால் இன்னொருவருக்குத் தூண்டுதல் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கினார் என்பதுதான் ஜார்ஜ் சாரின் வாழ்க்கை வரலாறு.
மதுபால்: மலையாள எழுத்தாளர், நடிகர், இயக்குநர். காலச்சுவடுக்காக எழுதிய கட்டுரை.
தமிழில்: என்னெஸ்
மின்னஞ்சல்: kmadhupal@gmail.com