கருகத் திருவுளமோ
Courtesy: THE NEW INDIAN EXPRESS
2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நவ்ஜோத் சிங் வழக்கில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் உறவுகொள்வது குற்றமல்ல என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுயவிருப்பத்துடன் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்னும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது. பால்புதுமையினரின் பாலின ஈர்ப்பைக் குற்றத்துக்குரியதாகக் கருதிப் பொதுச் சமூகம் அவர்களை ஒதுக்கும் நிலையை மாற்றவும், பால்புதுமையினர் தமது பாலீர்ப்பைக் குறித்த சமூக அழுத்தம், குற்றவுணர்வு, தனிமையுணர்வு போன்றவற்றிலிருந்து விடுபடவும் இத்தீர்ப்பு வழிவகுத்தது.
இந்தத் தீர்ப்பு பால்புதுமையினருக்கு அளித்த ஆசுவாசம் மிகப்பெரிது. ஆனால் சொத்துரிமை, கூட்டு வங்கிக் கணக்கு, தத்தெடுத்தல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. அவற்றைத் தீர்ப்பதற்காகத் திருமணச் சட்ட ஒப்புதல் வேண்டி நீதிமன்றத்தை அவர்கள் நாடினார்கள்.
பால்புதுமையினரின் திருமணச் சட்டத்திற்கு ஒப்புதல் வேண்டிப் பல நீதிமன்றங்களில் 20 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவ்வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் நான்கு வெவ்வேறு தீர்ப்புகளை அளித்திருக்கிறார்கள்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம், தத்தெடுப்பு ஆகியவை குறித்த நீதிபதிகளின் கருத்துகள் கவனம் பெற்றிருக்கின்றன. மத்திய அரசு தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ளும் செயல் இந்தியக் குடும்ப அமைப்புக்கு எதிரானது; ஆகவே அதற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என இவ்வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. கூடவே பால்புதுமையினரின் திருமணத்தை அங்கீகரிப்பது சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும் விழுமியங்களுக்கும் பல்வேறு மதங்களின் தனிச் சட்டங்களுக்கும் இடையிலான சமநிலையிலும் பெரும் சேதத்தை விளைவித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் புதிய சட்டங்களை இயற்ற முடியாது; சட்டங்களை நிர்வகிப்பதும் விவாதிப்பதுமே நீதிமன்றத்தால் செய்ய முடிந்தது எனவும் தன்பாலினத் திருமணச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கலாமா, சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்யலாமா என்பதை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்தியாவில் ஏறத்தாழ 14 கோடி பால்புதுமையினர் உள்ளார்கள் (பிபிசி செய்தியின் படி). இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 சதவிகிதமாக உள்ள இவர்களின் வாழ்வு, பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளில் இந்தத் தீர்ப்பு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. அவர்களை வழிநடத்துவதில் காவல் துறைக்கு நீதிமன்றம் சில வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது. அவையும் போதாமை கொண்டவைதான். அடித்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் மேல்தளத்தில் சில மாறுதல்களைச் செய்வதால் அச்சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பால்புதுமையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, காவலர்கள் அவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பவற்றை இத்தீர்ப்புகள் கவனப்படுத்தினாலும் திருமணம், சொத்துரிமை, தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம், அரசு அமைப்புகளின் போக்கு ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்ளும் சமூகமாகப் பால்புதுமையினர் (LGBTQAI+ சமூகத்தினர்) வாழ்கிறார்கள்.
விளிம்பு நிலையினரின் போராட்டங்கள் சமூகத்தின் பொது ஓட்டத்தோடு இணைந்து பயணிப்பதற்கான போராட்டங்களே. ஆனால் அப்போராட்டங்களைப் பொதுமக்களும் மத நிறுவனங்களும் அரசுகளும் அதன் துணை அமைப்புகளும் அணுகும் விதம் ஆழ்ந்த கவலையைத் தருகிறது. இன்றைய வாழ்விற்குப் பொருந்தாமலும் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் இருக்கும் மதக் கோட்பாடுகளின் பின்னணியில் இத்தீர்ப்பின் போதாமையை வாசிக்க முடிகிறது. அரசு கூறியிருக்கும் காரணமும் அதை உறுதிப்படுத்துகிறது. விளிம்புநிலையிலுள்ள குடிமக்களான பால்புதுமையினரின் சம உரிமைக் குரலையும் கண்ணியத்தையும் சிதைக்கும் நடவடிக்கையாக இதைக் கருத வேண்டியிருக்கிறது.
வளர்ந்துவரும் நவீன சிந்தனைகள், கருத்தாக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தங்களும் சமூக ஏற்புகளும் தேவைப்படுகின்றன. அதற்கு விரிந்த பார்வையும் அனைத்துவிதமான சிறுபான்மையினரின் நியாயமான உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் பரிவுணர்ச்சியும் தேவை. மத்திய அரசு இவ்வழக்கில் அளித்துள்ள பதில் அதன் பிற்போக்கான மனநிலையையும் மத நிறுவனங்கள் ஜனநாயக அமைப்பின்மேல் கொடுக்கும் அழுத்தங்களையும் வெளிக்காட்டுகிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம், உறவு தொடர்பான விஷயங்களில் அவர்களை எதிர்ப்பதிலும் வெறுப்பைத் துப்புவதிலும் பெரும்பாலான மத நிறுவனங்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றன. அந்நிறுவனங்கள் பண்பாட்டுக் காவலர்களாய்த் தம்மை வரித்துக்கொண்டு செயல்பட்டுவருகின்றன. பண்பாடு எது என்பதை வரையறுக்கும் அதிகாரத்தையும் அவை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் எளியோருக்கு எதிராக இவை கைகோப்பது இன்று நேற்றைய விவகாரமல்ல. பாரபட்சமற்ற அமைப்பை
அவை விரும்பாதது அந்நிறுவனங்கள் சமூக மக்களிடமிருந்து விலகிச் செல்வதையே காட்டுகிறது. இத்தீர்ப்பை விஷ்வ ஹிந்து பரிஷத்தும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசியும் வரவேற்றிருப்பது இவ்விஷயத்தில் மதச்சார்யுள்ள அமைப்புகளின் ஒருமித்த போக்கை எடுத்துக் காட்டுகிறது.
மத நிறுவனங்கள் ஆண் – பெண் உறவை மீறிய பல உறவுகளைத் தொடர்ந்து எதிர்த்தும் நிராகரித்துமே வந்திருக்கின்றன. ஆனால் அரசு எனும் நவீன ஜனநாயக அமைப்பும் மத நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பது ஜனநாயக விழுமியங்கள் குறித்த அதன் அசட்டையைத்தான் காட்டுகிறது. பண்பாட்டுக் களத்தில் அரசும் மத நிறுவனங்களைப் போல நடந்துகொள்வதையும் இது காட்டுகிறது. இரு மனிதர்களுக்கு இடையிலான நேசம், நட்புறவு, இணக்கத்தின் அடிப்படையில் உருவாகும் பிணைப்பை அபத்தமான பொற்காலத்தைக் காட்டிப் பேசிப் பால்புதுமையினர்களுக்கிடையிலான நேசத்தை மறுக்கிற போக்கு இது. உறுதியான ஜனநாயக வெளியிலும் பல்லினத்தவர், சமூகத்தவரின் பங்கேற்பை மறுக்கும் இக்கருத்துகள் ஜனநாயகத்தின் பண்படாத தன்மையைப் பிரதிபலிக்கிறது. இது ஒரு துயரமான தேக்கம். நவீனத்தையும் சமகாலத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடு என்றுதான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
சுமார் 200 வருடங்களுக்கு முந்தைய சட்டங்களும் தண்டனைகளும் இன்றைக்குப் பாரிய அளவில் மாற்றமடைந்திருக்கின்றன. அன்று குற்றமானது இன்றைக்குக் குற்றமல்ல என ஆகியிருக்கிறது. ஆனால் அன்றைக்கு இதனால் தண்டனை பெற்றவர், வாழ்வை இழந்தவருக்கு அதிகாரங்கள் எவ்விதமான பதிலை அளிக்க முடியும்? உதாரணமாக வானியலாளர் கலிலியோ கலிலிக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனைக்காகச் சில வருடங்களின் முன் இரண்டாம் போப்பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். குற்றம், நீதி, தண்டனை ஆகிய விஷயங்களில் ஆழ்ந்த கவனமும் அக்கறையும் அவசியமாகின்றன. ஒரு காலகட்டத்தில் தொட்டதற்கெல்லாம் மரண தண்டனை அளித்த சமூகங்கள் உண்டு. ஆனால் இன்று அந்நிலைமை பெரும்பாலும் மாறிக்கொண்டிருக்கிறது. பிறப்பினால் ஒவ்வோர் உயிரினமும் சமமானது; ஒவ்வொரு மனிதருக்கு மான உரிமைகள் கிடைப்பதற்கு உறுதிசெய்யப்பட்ட, பாரபட்சமற்ற அமைப்பு அவசியமாகிறது. அப்பார பட்சமற்ற அமைப்பு சமத்துவத்தைக் கட்டியெழுப்பு வதற்குச் சமூக அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு குழுவும், தரப்பும் பங்களிக்க வேண்டும்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் சமூக ஏற்பையும் சமூகப் பங்கெடுப்பையும் தம் இருப்பையும் தன்னுள் கொண்டிருப்பது. வங்கிக் கணக்கு, சொத்துரிமை, தத்தெடுப்பு போன்ற வாழ்வின் நடைமுறைப் பிரச்சினைகளோடு தொடர்புடையது; எளியவர்களின் வாழ்வோடு தொடர்புகொண்டது. மேல்தட்டு, கீழ்த்தட்டு எனச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பால்புதுமையினரும் கலந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இருப்பையும் உரிமையையும் மதியாதிருப்பது ஜனநாயகப் பண்பு ஆகாது. எளியவர்களின் இருப்பை உறுதி செய்வதும் சட்டம், அரசு ஆகிய நிறுவனங்களின் பணிதான். கூடவே திருமணம் மூலம் கிடைக்கும் சமூக அந்தஸ்தை அதிகார நிறுவனங்கள் மறுப்பது அந்நிறுவனங்களின் வறட்டுப் பிடிவாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் தன்னீர்ப்பாளர்கள் உள்ளார்கள் என்று கூறிய கருத்து கவனத்துக்குரியது.)
உலகில் பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வையும் விருப்பங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான அடிப்படை உரிமைகள் உண்டு. வாழும் இடம், பணி, கல்வி என அடிப்படை உரிமைகளை அவர்கள் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆனால் சாதி, மதம், பாலினம், வர்க்கம், இனம், நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிலரைப் பாகுபாட்டுடன் அணுகி அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவது அடிப்படை உரிமைகளை மறுத்துச் சமூக சமநிலையைக் குலைக்கக் கூடியது. சமூக அடையாளம், பாலியல் விழைவு, தேர்வு, விருப்பம், இயல்பு ஆகியவற்றின் மூலம் ஒருவர் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதும் பெரும்பாலோருக்குக் கிடைக்கும் உரிமைகள் மறுக்கப்படுவதும் ஜனநாயக ஓர்மையுள்ள சமூகத்துக்குப் பொருத்தமானதல்ல.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல நேரங்களில் சட்ட உருவாக்கத்துக்கும் சமூக ஏற்புக்கும் வழிகாட்டலாக இருந்திருக்கின்றன. இப்பிரச்சினையிலும் அவ்வாறனதொரு தீர்ப்பைப் பால்புதுமையினர் எதிர்பார்த்திருந்தனர். நீதிமன்றத் தீர்ப்பு அவர்களைச் சக்கையாக ஏமாற்றி அவர்களுக்கான உரிமைகளை மறுத்திருக்கிறது. சகமனிதர்களினால் கைவிடப்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தற்போது அரசாலும் நீதிமன்றத்தாலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள். பல காலங்களாகச் சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பல கோடிப் பால்புதுமையினருக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, அவர்களைத் தமக்குள் சுருண்டுகொள்ள வைத்து மேலும் பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளியிருக்கிறது. கைவிடப்பட்டவர்களின் குரல்கள் ஒரு சமூகத்தின் ஆன்மா போன்றவை. அக்குரல்களே சமூகத்தின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. பொதுச் சமூகம் அக்குரல்களுக்கு இடமளிப்பதும் அம்மக்களின் இருப்பைப் புரிந்துகொள்வதும்தான் அறிவியல் உணர்வும் அற உணர்வும் சமத்துவ நோக்கும் கொண்ட பண்பட்ட சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை அரசும் நீதிமன்றங்களும் மத நிறுவனங்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மின்னஞ்சல்: chenthuxe@gmail.com