அதீத யதார்த்தமாகும் அபத்தவாதம்
பெருந்தொற்று
(நாவல்)
அல்பெர் கமுய்
தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை
நாகர்கோவில் - 1
பக். 366
ரூ. 450
பெருந்தொற்று ஒரு தேசத்தை, சமூகத்தை, தனி மனிதனின் எல்லைகளைக் குறுக்கிவிடும் அசாதாரணமான தன்மை உடையது. தேசம் விட்டுத் தேசம் செல்ல முடியாது. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்ய முடியாது. உங்கள் தெருவிலிருந்து அருகில் இருக்கும் தெருவிற்குள் நுழைய முடியாது. உங்கள் அக்கம்பக்கத்து வீட்டினரிடம் முன்புபோல் பேசவும் பழகவும் முடியாது. அதிர்ச்சி தரும் வகையில் பல நாட்கள் உங்கள் அறைக்குள் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளவும் நேரிடும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலிருந்து நாம் விலகி வந்திருக்கலாம். ஆனால் நமக்கு எதிரில் புதுவிதமான பெருந்தொற்றுகள் அமைதியாக வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. இந்நூல் அதற்கான எச்சரிக்கையைக் கசியவிடுகிறது.
அல்பெர் கமுய் எழுதிய ‘லா பேஸ்த்’ என்கிற பிரெஞ்சு நாவல் சமீபத்தில் வெங்கட சுப்புராய நாயகரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியாகி உள்ளது.
எழுத்தாளர் அல்பெர் கமுய் தான் பிறந்த ஓரான் நகரில் 1940 இல் பிளேக் நோய் பரவியதாக உருவகப்படுத்துகிறார். ஐரோப்பாவில் பதினான்காம் நூற்றாண்டில் ஐம்பது மில்லியனுக்கு அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய பிளேக் எனும் கருப்பு மரணத்தின் அச்சுறுத்தல் காலவோட்டத்தில் வழக்கொழிந்தும் மறந்தும் போனது. இது உலக நாடுகளில் அங்குமிங்கும் நிகழ்ந்திருந்தாலும் அதனால் உருவாகிய துண்டு துண்டான கருத்தாக்கங்கள் (கோவிட் காலத்திற்கு முன்புவரை) போதுமான வடிவமைப்பிற்குத் தேவையான விவாதங்களை நிகழ்த்தவில்லை.
பெருந்தொற்று தொடங்கியது முதல் முடியும்வரையில் தனது இருப்பில் நிகழ்த்தும் அனேக மாற்றங்களில் மனிதமனம், பழக்க வழக்கம், கலாச்சாரம், மதம், சிந்தனை, அன்றாட வாழ்வியல் நடத்தைகளிலும் பலவிதமான தாக்கத்தையும் விளைவையும் ஒருவிதப் புரட்சிகரத்துடன் ஏற்படுத்தாமல் ஓய்வதில்லை. ஒட்டுமொத்தச் சமூகமும் அரசு இயந்திரமும் வெளிப்பார்வைக்குப் புலனாகாத நகரத்தின் படிமமும் தொற்றுக்கு எதிராக எவ்விதமாக வினையாற்றுகின்றன? ஒட்டுமொத்த நிகழ்வுகளின் களமும் நகர்வும் நாவல்மீது அபத்தவாதத்தின் நிழலை எவ்விதம் கவிழ்த்துகிறது? இந்நாவலில், கேள்விக்கான பதில்கள் வரையறுக்கப்படுவதில்லை... மாறாக வாசிப்பினால் கிடைக்கும் குறுக்குவெட்டுத்தோற்றம் ஒருவிதமான வரைபடத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.
அல்ஜீரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள துறைமுக நகரான ஓரான், பிளேக் தொற்றுக்கு இலக்காகிறது. வழக்கம்போல் பெருந்தொற்றுக்கு மனிதர்கள் தங்கள் அறைகளில் மடிவதற்கு முன்பாக எலிகள் கொத்துக் கொத்தாக வீதிகளில் வந்து இரத்தம் கக்கி இறக்கின்றன. அச்ச உணர்வின் தொடக்கமான இந்நிகழ்வு மக்கள் அனைவரையும் கலவரப்படுத்துகிறது.
ஒருவகையான தெள்ளுப்பூச்சிகள் மூலம் எலிகள் பிளேக் நோயைப் பெறுகின்றன. தொற்றுக்கு இலக்கான எலிகள் நடமாடும் இடங்கள், அவை சுவைக்கும் உணவுகள் வழியாகவும் காற்று மூலம் மனிதர்களுக்கும் அவர்கள் மூலம் பிறருக்கும் தொடர்ந்து தீவிரமாகத் தொற்றுப் பரவல் ஆரம்பிக்கும்.
உலகமயமாக்கல், தகவல் தொடர்புச் சாதனங்கள், நவீன போக்குவரத்து வசதிகள் மூலம் நேரத்தையும் தூரத்தையும் இன்றைக்கு நாம் குறைத்துவிட்டோம். எனவே கோவிட் பெருந்தொற்று எல்லோருக்கும் பொதுவானதை மறுக்க முடியாத வகையில் நம்மீது அது தனது தடத்தை அழுத்தமாகப் பதித்தது. நோய்கள் மட்டுமே யாதொரு சமரசமும் இன்றிக் கம்யூனிசச் சித்தாந்தத்தைச் செயல்படுத்த வல்லவை.
மருத்துவர் ரியேவின் பார்வையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையாக இந்நாவல் விரிவடைகிறது. அவரது அறிக்கை சார்புத்தன்மையற்றுச் சொந்தக் கருத்துகளுக்கு இடமில்லாது வாசகர்களின் திறனாய்வுக்கு வித்திடும் நிகழ்வுகளின் விவரணையாக அமைந்திருக்கிறது. கதைமாந்தர்களின் உரையாடல் வழியாக ஆசிரியர் தமக்கான பாதையை உருவாக்கி அதில் அபத்தவாதத்தின் இரத்தத்தைப் பாய்ச்சுகிறார்.
கடிதங்கள் மூலம் மனத்தின் சுமையை இறக்கிவைக்கும் வாய்ப்பை நல்கிய நகர அஞ்சலகங்கள் தங்கள் சேவையை நிறுத்திக்கொள்கின்றன. போக்குவரத்து முடக்கப்பட்டு எல்லைகள் மூடப்படுகின்றன. நகரவாசிகள் நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியேறுவது முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது. நெரிசலைத் தவிர்க்கத் தொலைபேசி மையங்களும் கதவடைப்பு செய்கின்றன. தொலைதூரத்தில் இருக்கும் நேசத்துக்குரியவர்களுடன் ஓரிரு தந்தி வரிகள் மூலம் அன்பையும் தகவலையும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு சலிப்பைத் தருகிறது.
நோயின் கடுமை மிகவும் அதிகமாகும்போது மோச மானதொரு மரணத்தின் பயத்தைவிட மனித உணர்வுகளே மேலோங்கி நிற்பதில் தற்காலிகமாக நகருக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர் ராம்பேர் நிலைப்பாடு முக்கியமானது. தொடக்கத்தில் நகருக்கும் தனக்குமான அந்நியத்தை வெளிப்படுத்துபவன் நாடு கடத்தப்பட்டது போன்ற சூழலுக்கும் அடிபணிய மறுக்கிறான். சூழல் குறித்தெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை. தனது இளம் மனைவியோடு சேர்ந்து வாழ்வது மட்டுமே இலக்கு என்கிற முனைப்புடன் நகரிலிருந்து வெளியேற விதிமுறைகளுக்கு எதிரான வழிகளிலெல்லாம் முயற்சி செய்கிறான். இறுதியில் மருத்துவர் ரியேவின் வாழ்வு அவன்மீது ஏற்படுத்தும் பாதிப்பும் தாக்கமும் அவனை ஒரு தன்னார்வத் தொண்டனாக உருமாற்றுகிறது.
நோய் தொற்றுக்கு இலக்கான ஓரான் நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் மக்கள் எல்லையைத் தாண்ட முடியாது. புதிதாக யாரும் நகருக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. வழக்கம்போல் நகரத்தில் இருக்கும் பள்ளிகளும் விளையாட்டு மைதானங்களும் தற்காலிக முகாம்களாக மாற்றப்படுகின்றன. மருத்துவத் துறையின் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்குத் தன்னார்வலர் குழுக்கள் உதவிக்கு வருகின்றன.
பிறந்தது முதல் இறந்துபோகும்வரை அடையாளமாகத் தொடரும் கலாச்சாரத்தின் சடங்கு, சம்பிரதாயங்கள் பெருந்தொற்றுக் காலத்தில் அர்த்தம் இழந்துவிடுகின்றன. அக்காலத்திற்கான அடிப்படை நிர்வாக நடைமுறைகள் எல்லா காலத்திற்கும் பொதுவானவை. இதுபோல் பல சம்பவங்கள் சமீபத்திய கோவிட் அனுபவத்தின் ஒப்பிடலுடன் நாம் உறுதிசெய்துகொள்கிறோம்.
பாதிரியார் பனெலு நோய்த் தொற்றின் தொடக்கக் காலகட்டத்தில் உரையாற்றும் முதல் சமயச் சொற்பொழிவில், “பாவத்தின் சம்பளம் மரணம்; இறையச்சமும் இறைமீதான விசுவாசமுமே தப்புவதற்கான கவசம்” என்கிறார். சிறுவனின் மரணத்திற்குச் சாட்சியாக அமர்ந்திருக்கும் இரவில் அவனது கடுமையான வலிக்கும் முடிவற்ற வேதனைக்கும் தன்னால் சாந்தியும் நிவாரணமும் அளிக்க முடியாது என்கிற கையாலாகாத் தன்மையின் நெருக்கடி பாதிரியாருக்குள் விளைவிக்கும் மாற்றம் அவரது இரண்டாவது சமயச் சொற்பொழிவில் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. அவரது முதல் உரையோடு பொருத்திப் பார்க்கும்போது பிளேக் நோயால் மரணமடையும் பாதிரியாரும் புனிதரல்லர்.
சாணத்தின் மீதமர்ந்து சிறகசைக்கும் வண்ணத்துப் பூச்சியிலும் பலியிட இழுத்துச் செல்லப்படும் கிடாரியிலும் கஞ்சா செடியின் கூர்மையான இலை விளிம்புகளிலும் அளவற்ற தெய்வீக ரகசியம் மின்னுவதைக் கண்டுணர முடியும். நிர்ப்பந்திக்கப்பட்ட குற்றவுணர்ச்சி, அறவுணர்ச்சி கிடையாது. இறையடியார்களும் சரி, மறுப்பாளர்களும் சரி, மிகவும் அரிதான தருணங்களில் தங்களுக்குள் பிரகாசிக்கும் தெய்வீகத்தைத் தவறவிட்டுவிட்டு முரட்டுத்தனமான பற்றுதலில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பெருந்தொற்று நம்மை நாமே துன்புறுத்தும்படி வைத்து அதன் மூலம் நம் வலியை நாம் ஏற்றுக்கொள்ளும்படியான சூழலை ஏற்படுத்துவதுடன் நம் கவனத்தைத் திசை திருப்பவும் பிரச்சினையை மேலும் குழப்பவும் செய்கிறது.
எப்பொழுது முடியும் என்கிற எதிர்பார்ப்புகள் யாவும் நிர்மூலமான பிறகு தன்விருப்பத்தின் பேரில் பெருந்தொற்று ஒருநாள் விடைபெறுகிறது. நிர்வாக விதிமுறைகள் இயல்புக்குத் திரும்புகின்றன. கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு இரயில் வண்டி நகருக்குள் நுழைந்ததும் அடக்கிவைக்கப்பட்ட துக்கத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன. ஒவ்வொரு பெருமூச்சும் வெவ்வேறு விதமான லயமும் சுருதியும் கொண்டவை. மகிழ்ச்சியான சாயலுக்கு உள்ளேயும் விவரிக்க முடியாத இழப்புகள். வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் வரவேற்க யாருமற்ற மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் நேசத்துக்குரியவர்களின் இழப்பால் விளையும் துக்கத்திற்கு யாதொரு சாயலும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. வெற்றியடைந்த படையில் வீர மரணமடைந்தவன் போரின் வெற்றியை ருசிப்பதில்லை என்பதே யதார்த்தம்.
நோய் கையாளும் வழிகளை ஆசிரியர் மானுடப் பண்புகள் கிளர்த்தும் மாறுபட்ட அணுகு முறைகள் வழியாகக் காட்சிப்படுத்துகிறார். யதார்த்தவாதத்திற்கு எதிரான நிலையை அபத்தவாதம் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
வாழ்க்கையின் அர்த்தமின்மையை, அதன் நிலையற்றத் தன்மையை, சாதாரண வாழ்விலிருந்து மாறுபடும் சிந்தனையை... அதாவது நமது அன்றாட வாழ்வின் சூழ்நிலையில் உள்ள அபத்தத்தைச் சுட்டுவதன் வழியாக வாழ்வின் மீதான சாராம்சம் நோக்கிய திசைதிருப்பலுக்கு வாசகர்களை உந்துகிறார். இதனை ஒருவகையில் அதீத யதார்த்த வாதம் எனலாம். சில நேரங்களில் கண்ணுக்கு எதிரே நிகழும் உண்மையை உணர்த்துவதற்குப் பதிலாக அதனை மறைக்கும் புகைமூட்டமாகவும் இது மாறிவிடும்.
அல்பெர் கமுய் (1913-1960) சூழலைப் பிரதிபலித்த எழுத்தாளராகவே தனது படைப்புகள் மூலம் அறியப்படுகிறார். இளமைக் காலத்தில் இவர் சந்தித்த வறுமை, உடல் உபாதைகள், உலகப்போரின் தாக்கங்கள் யாவும் இவரது தத்துவ விசாரணைக்கு அடித்தளம் இட்டன. அதன் விளைவாக இவரது சிந்தனை அபத்தநிலைக் கோட்பாட்டின் அடர்நிழலில் தஞ்சமடைந்திருக்கிறது. அக்கோட்பாட்டின் அடிப்படையில் இவர் படைத்துள்ள புதினமே இந்நாவல்.
மின்னஞ்சல்: manjunath.author@gmail.com