அந்தப் புள்ளி
ஓவியம்: ஜைய்மினி ராய்
அந்தப் புள்ளி
புள்ளியிலிருந்துதான்
எல்லாம் வந்திருக்கிறது
பூச்சிகளும் பறவைகளும்
மரங்களும் விலங்குகளும்
மனிதர்களும் கடவுளரும்
ஆமாம்களும் இல்லைகளும்
உன்களும் என்களும்
சிலக்களும் பலக்களும்
உள்களும் வெளிகளும்
நாங்களும் நீங்களும்
அவள்களும் அவன்களும்
அவைகளும் இவைகளும்
புல்வெளியெங்கும்
பிரபஞ்ச நடனம்
புள்ளிவெளியில்
புறப்படும் கானம்
சீறிப் பாயும் செங்கதிர்வீச்சில்
காமக் கடலில் கரைபுரண்டோடி
உன்னதம் கண்டு
உயிர்திரண்டெழுந்து
உள்ளொளி அடைந்து உண்மை அறிந்து
உள்ளதனைத்தும் புள்ளியில் நுழைந்து
காணாமல் போகும்
கதை இங்கு நடக்கிறது
நெஞ்சம் நிறைந்து நெக்குருகிப்போய்
புள்ளியில் ஈரம் பெருக்கெடுத்தோடி
புள்ளிப் பெருங்குளம் புவனமாய் விரிய
ஊற்றுநீர் பெருகி உள்வெளி நிறைய
வற்றாது தொடர்ந்து
ஊற்றிலிருந்து நீர்
வந்துகொண்டே இருக்கிறது
யாரும் கேட்காத கானம்
பாலை எல்லாம்
சோலையாகும் கணத்திற்காக
பூக்கள் காத்திருக்கின்றன
மீதமுள்ள நேரம் கழிவதைக்
கடிகாரம் காலம் தவறாமல்
கணக்கு வைக்கிறது
மூங்கில் காடுகளில்
காற்று புகுந்து
குழல் இசைக்கிறது
பசும்புல்லும் பனிவெளியும்
தத்தம் கணங்களில்
ஆழ்ந்து சுவாசிக்கின்றன
போகும் வேகத்தில்
ஆறு மோதிக்
கடலைப் பின் தள்ளுகிறது
கிளிஞ்சல்களுக்குள் நண்டுகள்
யாருக்கும் தெரியாமல்
ரகசியங்களை மறைத்து வைக்கின்றன
காலையும் மாலையும்
கண்வழிச் சாலையில்
காத்துக்கிடக்கின்றன
மாறிவரும் காட்சிகளின் பின்
மாறாமல் விரியும் மனவெளியில்
யாரும் கேட்காத கானம்
எங்கெங்கும் நிறைகிறது
திரிபுரப் பயணம்
திரிபுரத்தின் பின்வாசல் வழியாக
உள்ளே நுழைந்ததும்
மின்னணுக்கள் தம்மை மறந்து
கோலம் வரைந்துகொண்டிருந்த
நேரம் பார்த்து
இரவறியாமல் பகல் பிறந்தது
முன்னிரவு செய்தது
பின்னிரவு விளைந்தது
என்பதை அறியாமல்
பகல் கடந்தது
மரங்கள் அடர்ந்த
மாபெரும் கானகத்தில்
மனவெளியாய் விரிந்தது
மணற்படுகை
கரைகள் காணாமல் போனபோது
காற்றுப் புக முடியாத
கணத்தினுள்
நுழைந்தன கண்கள்
அவிழத்தொடங்கியது ஆலமரம்
இலைகள் கிளைகள் விழுதுகள்
தண்டு வேர்கள்
காற்றோடு கழன்றுபோயின
மரம் இருந்த இடம்
திசைகள் இடம் மாறிக்
காலக்கோடுகள் சந்திக்கும்
கருவெளியாய் விரிந்தது
காடு திருத்தி வீடு கட்டி
முடித்தாகிவிட்டது
மேயப்போன ஆடுமாடுகள்
வீடு திரும்பிக்
கொட்டிலில் அடைந்தன
மீதம் இருக்கும் கதிர்களெல்லாம்
வருவது நோக்கி வழிபார்த்திருந்து
மீண்டும் மீண்டும் மீளவும் அறியாமல்
வந்துபோகும் வழிமறந்திட
வேண்டும் வரங்கள்
வேண்டியபடியே
கிடைத்திட வேண்டி
அலைந்து தவமிருந்தபின்
பாதைகள்மறையும்
பக்குவம் அடைந்து
கண்விழி திறந்து
காட்சி விரிந்து
புன்னகை தவழும்
புதுமதி முகத்தில்
உள்ளொளி பரவி
பள்ளங்கள் மேடுகள்
பால்வெளி ஓடைகள்
உள்ளம் நிறைக்கும்
உன்னத ஊற்றுகள்
காற்றின் கானம்
காதம் கடந்து
புற்கள் மரங்கள்
மேகங்கள் வானம்
பார் கடந்து நிற்கும்
பாழ்வெளி எங்கும்
பயின்ற பாடல்கள்
பலப்பல கேட்டு
உள்ளே உள்ளே
உள்ளுக்குள் உள்ளே
உன்னத வெளியில்
ஊடுருவி நிலைக்கும்.
நானின் கதை
நான் கீழே தரையில் கிடக்கிறது
நான் தெருவோரமாக நடக்கிறாள்
நான் அவசரமாக எங்கோ ஓடுகிறான்
நான் மிகவும் சோகமாக இருக்கிறாய்
நான் எப்போதும்
ஏதோ ஒரு வேலையாக இருக்கிறேன்
நானும் நீயும்
அவனும் அவளும்
அதுவும் இதுவும்
உடையாத ஒற்றைப்படலமாய்
இருந்துகொண்டிருக்கிறேன்.
மின்னஞ்சல்: anandh51ad@gmail.com