நின்று வதைக்கும் கலை
உயிரிகள் எல்லாவற்றிற்கும் வாழ்க்கையின் முதன்மைச் செயல் உயிர்த்திருத்தல். மனித வாழ்வின் எல்லா நடவடிக்கைகளும் உயிர்த்திருத்தலை ஒட்டியே நடக்கிறது. அதுவே பசிக்கும்போது உணவருந்தவும், உடல் நோவுற்றால் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் போராடுகிறது. உயிர்த்திருத்தலின் தொடர்ச்சி தன் இனத் தொடர்ச்சியைப் பேணுதல். இனப்பெருக்கம் ஆதி மனிதர்களிடையே உடல் சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டுமே இருந்திருக்கக்கூடும். அதுவே பரிணாம வளர்ச்சி பெற்றுக் காதலென்ற உணர்வாக மாறியிருக்கக் கூடும். எல்லாக் காதல்களும் காதலர்கள் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வதற்கு விதிக்கப்படவில்லை. பெரும்பாலான காதல்கள் முதிரும் முன்னரே சிதைவுறுகின்றன. அதற்குச் சமூக அழுத்தம், ஆண் பெண் உறவின் சிக்கல்கள், நண்பர்களின் துரோகம் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான முதல் காதல் அனுபவங்கள் புறச் சிக்கலின் பொருட்டு முறிந்துபோனால் அது தீராத காதல்களாக ஆகின்றன. அவை முற்றுப் பெறாத காரணத்தாலேயே காதலர்கள் மனத்தில் நித்தியத்துவம் பெற்று வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றன. அது சம்பந்தப்பட்ட இருவரை மட்டுமல்லாது உடன் இருக்கும் அனைவரையும