கண் கடைக்கண்
கடவுள் மனிதனுக்கு
முதலில் கண்களைப் படைத்தான்
பிறக்கப் பிறக்கவே
அகலத் திறந்துகொண்டன கண்கள்.
மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.
நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்.
“கடவுளே!
நீர் எமக்குக் கண்களை அருளியதன் வழியே
எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!”
கடவுள் ஒரு சிரி சிரித்துவிட்டு
பிறகு படைத்தான்
கடைக்கண்ணை.
விஷயம்
மிக மிக எளிது
ஒரு மனிதன்
இன்னொரு மனிதனை
ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்துவிட்டால் போதும்.
தம்பி!
இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்!
மேலும்
இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு!
பார்த்துப் பார்த்துப் பழசாக்கு!
பார்த்துப் பார்த்துப் பாழாக்கு!
காதலுக்குக் கண் இல்லை.
ஆனால்
கடைக்கண் உண்டு.
காதலர் கடைக்கண்ணிலிருந்து
கண்களுக்குத் திரும்புவதுதான்
“காதலின் ஆவியாதல்”
என்றழைக்கப்படுகிறது
கனக சுப்பு ரத்தினா!
காணாமல்
கண்டு கண்டு
கடுகை மலையாக்குவதில்
சமர்த்தன் உன் குமரன்.
அவனை நம்பி
நீ
“மாமலையைக் கடுகாக்குவேன்” என்று
சைக்கிள் செயினைச் சுற்றாதே!
கூற்றம்!
கூற்றம்!
கூற்றம்!
என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.
கூற்றம்!
கூற்றம்!
கூற்றம்!
என்ற படி
பார்த்துக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.
பார்வையைத் திருப்பிக் கொண்டால்
பாட்டிற்கு எங்கு போவான் பாவம்?
“கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்;
கண்ணே சகல நோய்க்கும் காரணம்”
என்கிற தட்டையான வரியைக்
கவிதை என்றான் சுகுமாரன்.
நான் இரண்டு கண்களாலும் வாசித்து
அவ்வரியை
கவிதைப் புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்து
கண் மருத்துவமனையின்
‘cash counter’ க்குப் பக்கத்தில் ஒட்டினேன்.
பிறகு
ஓரக்கண்ணால் வாசித்துவிட்டு
ஆயிரம் கண் வைத்து அழுதேன்.
“நீ விரும்பியது உன் உடல் முழுதும் ஆகுக!”
என்பதோடு கதை முடிந்து விட்டதா என்ன?
அதன் பின்
இந்திரன் அழுதான் என்பதற்கு
ஆதாரம் உண்டா ஏதும்?
குருடன் ஒருவன்
தடவித் தவறி
தவறித் தடவி
கைப்பற்றிவிட்டான் தடமுலையை.
விறைத்து நீண்ட காம்பை
நுனி நாவால் தீண்டுகையில்
அவன் குருடு நீங்கி ஒளி மின்னியது.
இதோ...
கண்ணுடைக் காதலன் எவனாலும்
காண முடியாக் காட்சி ஒன்று!
அருள் போலத் தோன்றுகிறது அந்தி
அதன் கையில்
எப்போதும் உண்டு
ஒரு களிம்புப் புட்டி.
எல்லா சிகிச்சைகளையும்
இடித்துத் தள்ளிக்கொண்டு
பிறகு வருகிறான்
ஒரு மூர்க்கன்
எவ்வளவு மின்னினேனோ
அவ்வளவு அணைகிறேன்
மின்னுவதெல்லாம் பொன் அல்ல
மின்னுவதெல்லாம் பொன் அல்ல
மின்னுவதெல்லாம் பொன் அல்ல
நெற்றிக்குள் உள்ளொடுங்கி
இமைகளைப் போர்த்திக்கொண்டு
நடுங்கும் நாய்க்குட்டிகள் போல்
என்ன ஒரு நடிப்பு!
என்ன ஒரு நடிப்பு?
“முதலில்
மெதுவாகக் கண்களை மூடுங்கள்!”
என்றார் குரு
ஒவ்வொரு கண்ணாய்
மூடி முடிப்பதற்குள்
மணி ஒலித்துவிட்டது
மின்னஞ்சல்: isaikarukkal@gmail.com