இஸ்ரேலின் யுத்த வெறியும் மேற்குலகின் பதற்றமும்
போப் பிரான்சிஸ் 2023 அக்டோபர் 18 அன்று வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வாசகங்கள் காணக்கிடைக்கின்றன: போர் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது; வெறுப்பை வளர்க்கிறது; பழிவாங்கலைப் பெருக்குகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கான எதிரொலியாக போப்பின் வார்த்தைகள் இருக்கின்றன. அந்தத் தாக்குதலை இஸ்ரேலும் மொசாத்தும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். ஹமாஸின் தாக்குதல் வழக்கமான தாக்குதல் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தரைவழியாக மட்டுமில்லாமல், வான் வழியாகவும் அது நடைபெற்றது. ஹமாஸ் அமைப்பினர் கிளைடர்களில் பறந்து இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். பொதுமக்களின்மீது தாக்குதலை நடத்தி அழித்ததுடன் பல இராணுவ வீரர்களையும் பிணைக் கைதிகளாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்; கொண்டுவரப்பட்டவர்களில் இஸ்ரேலிய ராணுவக் கமாண்டர் ஒருவரு