மதுரைக்கு வந்த உ.வே.சா.
பதிப்புச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னுமாக உ.வே. சாமிநாதையர் (1855-1942) பலமுறை மதுரைக்கு வந்துள்ளார். பெரிய காறுபாறாக இருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் 1877ஆம் ஆண்டு ஒரு பெரிய மடம் கட்டினார். அம்மடத்திற்கு அப்போது திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரின் பெயரினைச் சூட்டினார். ‘சுப்பிரமணிய தேசிகர் விலாசம்’ என்று பெயரிட்ட அம்மடத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று சுப்பிரமணிய தேசிகரை அழைத்தார். அதற்கு இசைவு தெரிவித்து அவ்வூருக்குத் தேசிகர் சென்றார். அதே ஆண்டில் தை மாதம் மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் ஆலயத்துக்கு அமராவதி புதூர் வயிநாகரம் குடும்பத்தினர் மகா கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கும் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு தேசிகரைக் கேட்டுக்கொண்டனர். தம்பிரான்களும் தனவைசியர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசிகருக்கு யாத்திரை ஏற்பாடு செய்தனர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இறந்ததற்குப் பிறகு தேசிகரின் ஆதரவில்