நோபல் 2023: யூன் ஃபாசெயின் மறைமெய்ம்மை
நார்வே நாட்டு இலக்கியத்தில் இன்றுவரை மிகப் பெரும் ஆளுமையாகக் கருதப்படுபவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகாசிரியர் இப்சன். அவருடைய ‘பொம்மை வீடு’ நார்வேயில் மட்டுமன்றி மேலை நாடுகள் அனைத்துக்கும் யதார்த்த வாதத்தின் ஆதர்சப் படைப்பாகப் பேசப்பட்டது, பேசப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசு பெறும் எழுத்தாளர் யூன் ஃபாசெவை ‘நவீன இப்சன்’என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
இப்சனும் யூன் ஃபாசெவும் நார்வேயைச் சேர்ந்தவர்கள். இருவரும் நாடகங்கள் எழுதிப் புகழ்பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒப்பீடு அத்துடன் நின்றுவிடுகிறது. இருவருக்குள் வேறுபாடுகள் அதிகம். குடும்ப உறவுகளின் சிக்கல்களை இப்சன் யதார்த்தமாக எடுத்துரைக்கிறார். யூன் ஃபாசெ குடும்ப உறவுகளைப் பேசினாலும் அவ்வுறவுகளின் ஆழ்மன அவலங்களையும் ஆதங்கங்களையும் சர்ரியலிச பாணியில் அலசுகிறார்.
மேலும் இப்சனைப் போல் அவர் நாடகத்தில் மட்டும் கவனம் செலுத்த வில்லை. அவருடைய படைப்புகள் பலதரப்பட்டவை: 18 நாவல்கள், 30 நாடகங்கள், 8 கவிதைத் தொகுதிகள் என்று அவர் இலக்கியப் படைப்புகளின் எல்லைகள் விரிகின்றன.
யூன் ஃபாசெ