ஒரு இலையை எப்படி வர்ணிப்பது?
ஒரு இலையை எப்படி வர்ணிப்பது?
பச்சை
அல்லது இளமை மஞ்சள்
அல்லது
களிமண் நிறச்சருகு
அல்லது எறும்புக்கூடு வனைந்த இலை
அல்லது பனித்துளிர்
அல்லது பசுமை
அல்லது காற்றை உயிர்ப்பிப்பது
அல்லது வெறும் இலை
அல்லது
கொய்வதற்கு முன்பிருந்த
உதிர்வதற்கு முன்பிருந்த
ஒன்றென முயன்றேன்
பிரமாதமாயிருந்தது.
ஒன்றுமில்லைக்குள் நிரம்பியவை:
சிறுமியின்
கைகளில்
பபுள்ஸ் விடும் சாதனமிருந்தது
சும்மா ஒரு ஆசைக்கு
நானதை வாங்கி ஊதிவிட்டேன்
மொத்தம் ஏழு பபுள்ஸ் பிறந்தன
முதலிரண்டை
அச்சிறுமி எம்பிக் குதித்து உடைத்தாள்
மூன்றாவதில்
என் கவலையையும்
நான்காவதில்
எதிர்காலத்தையும் ஏற்றினேன்
ஐந்தாவது குமிழ்
மிகச் சிறியதென்பதால்
ஆறாவதில் கடன்சுமையை
மெதுவாகத் தூக்கிவைத்தேன்
(ஐந்தாவதில்
சூரிய நிறமாலை தோன்றியதால்
அதில் பழைய காதலி ஏறிக்கொண்டாள்)
உடைக்க முடியாத
உயரத்தில் பறந்த
கடைசி மற்றும் ஏழாவது குமிழில் என் பாவங்களைத்
தயக்கத்தோடு ஏற்றினேன்
அதுவாகவே உடைவதுதான் நல்லதென
உடைகிற நேரம் தலையை மட்டும் திருப்பிக் கொண்டேன்.
மின்னஞ்சல்: nsivanesan1988@gmail.com