ஆணவத்தீ
Courtesy: msn.com
அண்மையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் ஊருக்குள் புல்லட் பைக் ஓட்டிச் சென்றதற்காகத் தலித் இளைஞர்மீது மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தி இளைஞரின் கைகளை வெட்டியுள்ளனர். தலித் இளைஞர் கம்பீரமாகப் புல்லட் வண்டியை ஓட்டிவந்ததைக் கண்டு சகிக்க முடியாமல் நிகழ்ந்த தாக்குதல் இது என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தென்தமிழகக் கிராமத்தில் ஒரு வீட்டின் மதில் சுவரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தலித்துகளை அந்த ஊரின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர் வெட்டினார்கள். 2023இல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதிக்கச் சாதி மாணவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த தம் சக மாணவனையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்ய முயன்றார்கள். இதில் தாக்குதலுக்குட்பட்ட மாணவனின் தாத்தா அதிர்ச்சியில் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். ஆதிக்கச் சாதி மாணவர்கள் ஏவிய வேலைகளைப் பட்டியலின மாணவர்கள் செய்யாததும் அவர்கள்மீது பள்ளித் தலைமையிடம் புகார் அளித்ததும் இக்கொலை முயற்சிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் கடந்த சில வருடங்களில் அதிகரித்துவருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. சம்பவங்களைப் பட்டியலிட்டுப் பார்க்கும்போதே இது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பது வெளிப்படுகிறது. 2022முதல் இன்றுவரை 27 ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியிருக்கின்றன என்று எவிடென்ஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 2021-24 ஆம் ஆண்டுகளில் சாதியின் பேரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், ஆணவக் கொலைகள், தற்கொலைகள், மரணங்கள், கொலைகள், கொடூரத் தாக்குதல்கள், குடும்ப வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என 313 வழக்குகள் பதிவாகியுள்ளதாகப் எவிடென்ஸ் நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
சாதி, மத எல்லைகளைக் கடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் நடக்கும் இத்தகைய ஆணவக் கொலைகளைத் தவிர இதர வன்முறைகளும் பெருகிவருகின்றன. வேங்கைவயல், நாங்குநேரி, சிவகங்கை போன்ற சம்பவங்கள் அண்மையில் நடந்தவை. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் பொது இடங்களில்தான் நடந்துள்ளன. தலித்துகளுக்கெதிராக அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருக்கும் இந்தத் தாக்குதல்களும் அவை நடக்கும் விதமும் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இவற்றை நிகழ்த்தியவர்களின் சாதித் திமிரும் வெறுப்பும் இந்நிகழ்வுகளில் வெளிப்படையாகத் தெரிகின்றன. சாதியப் படிநிலையின் கீழடுக்கில் இருப்பவர்கள் எந்த வகையிலும் மேலெழுந்து வந்து தங்களுக்குச் சமமாகப் புழங்குவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத சூழலால் இந்தக் கொடூரமான வன்செயல்கள் நடக்கின்றன. இவற்றைப் பொதுவெளியில் பகிரங்கமாக நிகழ்த்துவதற்குத் துணிச்சல் மட்டும் போதாது; என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியம் மட்டுமின்றி, எதைச் செய்துவிட்டும் தப்பித்துவிடலாம் என்ற ஆணவமும் இதற்குப் பின்னால் இருக்கிறது. காவல்துறை உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளின்மீது குற்றவாளிகள் போதிய நம்பிக்கை கொள்ளும் நிலையே இத்தகைய துணிச்சலுக்குக் காரணமாக அமையும்.
பொதுவாகவே குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன என்றால் அங்கே காவல்துறையின் மீதும் நிர்வாக அமைப்பின் மீதும் இருக்கும் அச்சமின்மையும் அலட்சிமும் முக்கியக் காரணங்களாக இருக்கும். அதுவும் குறிப்பாக ஒரே மாதிரியான குற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன என்றால் துணிச்சலே காரணமாக இருக்க முடியும். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னாலும் இத்தகைய அலட்சியமும் துணிச்சலுமே காரணமாக இருக்கும் என்று ஐயப்பட இடம் இருக்கிறது. இதை நிரூபிப்பதுபோலவே எந்தப் பெரிய சம்பவத்திற்குப் பின்னரும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்குச் சாதிய ஆணவம் மட்டும் காரணம் அல்ல; அரசு நிர்வாக அமைப்பின் அலட்சியமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத செயலின்மையும் காரணங்களாக அமைகின்றன.
இத்தகைய சூழ்நிலை அரசுக்குக் கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியது. சட்டம் ஒழுங்கு கண்ணோட்டத்திலும் சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறுகிறது. ஏற்கெனவே எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராகவும் ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருக்கும் மக்களை இது மேலும் பலவீனர்கள் ஆக்கிவிடுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாகப் பிரகனப்படுத்தப்பட்ட ஆட்சியில் இத்தகைய சூழல் நிலவுவது வருந்தத்தக்கது.
தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அரசுக்கு இருக்கும் பொறுப்பையும் கடமைகளையும் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் இந்தக் குற்றங்களைப் பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். மதப்பிரச்சினைகள் முனைப்புக் கொள்ளும்போதெல்லாம் இது பெரியார் மண் என்று அறைகூவல் விடும் திராவிட இயக்கச் சார்பாளர்களும் மத நல்லிணக்க முழக்கம் எழுப்பும் நடுநிலையாளர்களும், சாதிய ஒடுக்குமுறை பிரச்சினைகளின்போது பெரும்பாலும் மௌனம் காக்கிறார்கள். வேங்கை வயல், நாங்குநேரி போன்ற அப்பட்டமான சாதிய நிகழ்வுகளின்போதும் இவர்கள் அவற்றைக் கண்டித்துக் குரல் கொடுக்கவில்லை. மதவாத எதிர்ப்பைவிடவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் பெரியார் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததைக் கருதுகையில் இந்த மௌனம் சந்தர்ப்பவா மௌனம் என்பது உறுதிப்படுகிறது. நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலை மௌனம் காப்பது அநீதியானது.
சனாதன தர்மம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பகுத்துப் பிரித்துப் பார்க்கும் ஒரு கோட்பாடு என்னும் விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதை எதிர்த்து ஆவேசமாகக் குரல்கொடுக்கும் இந்துத்துவவாதிகளும் இந்து மதத் தலைவர்களும் சமயப் பிரச்சாரகர்களும் சனாதன தர்மத்தில் உள்ள சமத்துவ நோக்கை விளக்கத் தலைப்படுவார்கள். ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கு எதிராக அப்பட்டமாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளின்போது அந்தச் சமத்துவ முழக்கத்தை இவர்கள் எழுப்புவதில்லை. சிறுபான்மையினரை முன்னிறுத்தி இந்து ஒற்றுமையை வலியுறுத்தும் இந்துத்துவ அமைப்புகள் இந்துக்களில் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை ஒடுக்கும்போது இந்து ஒற்றுமைக்காகவும் இந்துக்களிடையே சமத்துவம் நிலவ வேண்டுமென்றும் குரல் கொடுப்பதில்லை. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து எழும் எதிர்க்குரல்களைத் தவிர சில ஊடகங்களும் கட்சிசாராத வெகுசில அறிவாளர்களும் மட்டுமே இத்தகைய வன்செயல்களுக்கு எதிராகக் குரலெழுப்புகிறார்கள்.
அரசு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், கட்சிசார் அறிவுஜீவிகள் என அனைத்துத் தரப்பினரும் தலித்துகள்மீதான தாக்குதல்களின்போது பாராமுகம் காட்டுவது சாதிய ஆணவம் இயல்பாகிவிட்டதன் அறிகுறியாகும். இச்சூழலில் தமிழ்நாட்டில் சாதிய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்திச் சமத்துவத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளுவது பொருத்தமற்றது. அரசும் அரசியல் அமைப்புகளும் அறிவாளர்களும் கறாரான சுய விமர்சனத்தோடு அணுக வேண்டிய தீவிரமான பிரச்சினை இது.