ரசனையில் கரையும் மாயம்
சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்பிரமணியனின் தன்வரலாற்று நூல் ‘ஆன் தட் நோட்’ (On that Note) குறித்த அறிமுகத்திற்கும், அவர் குறித்துப் பேசுவதற்கும் முன் கம்போஸரும் பியானோக் கலைஞருமான யானியை இரண்டு காரணங்களுக்காக மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது. ஒன்று, மேடையில் இசைக்கும்போது தன் சக இசைக் கலைஞர்களோடு நிகழும் உரையாடல்கள்.
மேற்கத்திய இசைக் கலையின் கறாரான இலக்கிய வடிவத்திற்குப் பின்னே ஓர் ஒழுக்கம் இருக்கும், அந்த இறுக்கம் வாசிப்பவர்களிடத்திலும் வெளிப்படும். யானியின் சக இசைக்கலைஞர்கள் அத்தகைய பட்டறையிலிருந்து வெளிவந்தவர்களாயினும், பெரும்பாலும் வெகுஜன ரசிகர்களிடமிருந்து அந்நியப்படாதவர்கள்.
இரண்டு; செவ்வியல் இசை வடிவத்திலிருந்து சற்றே விலகிய இசையை யானி போன்றோர் நம்மைக் கேட்கவைக்கும்போது, அதன் தாக்கம் அங்கேயே நின்றுவிடுவதில்லை. அதற்குப் பின் அதுவரை நமக்கு ஒட்டாமலிருந்த இசை வடிவமும் சற்றுப் புலப்படத் தொடங்கும் மாயமும் இயல்பாக நிகழும். அழகியல் குன்றாமல் நவீன மாற்றத்திற்கு உட்பட்டு நிகழ்த்திக் காட்டிச் சாதித்த, எல்லாக் கலைஞர