கடிதங்கள்
பிப்ரவரி இதழில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து ஜே.ஆர்.வி. எட்வர்ட் எழுதிய ‘வசவும் வடுவும்’ நல்ல கட்டுரை. ஆனால், அதில் முக்கியமான காலப் பிழைகள் மூன்று இடங்களில் நேர்ந்திருக்கின்றன. பக்கம் 17 இல் “2014 இல் பிரதமர் ஆவதற்கான திறப்பாகவும்” என்று வந்திருப்பது தவறு. அது “2004” என்று வந்திருக்க வேண்டும். அதே 17 ஆம் பக்கத்தில் “அறிவுத் தளத்திலிருந்து வந்த மன்மோகன் பிரதமர் நாற்காலியில் அமர்த்தப்பட்டது 2014” என்று அடைப்புக்குறிக்குள் அச்சாகி இருக்கிறது. அதுவும் “2004” என்று அச்சாகியிருக்க வேண்டும். அடுத்து 18 ஆம் பக்கத்தில் “2024 இல் பிரதமர் நாற்காலியில் மன்மோகன் அமர்ந்தது” என்று வருகிறது. மிகத் தவறு. 2024 இல் மோடி பிரதமர்.
காலப் பிழைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
சுரேஷ் காத்தான்,
மின்னஞ்சல்.
பிப்ரவரி இதழில், ஆ.இரா. வேங்கடாசலபதியின் வானொலிப் பேட்டி குறித்த எனது விமர்சனக் கடிதமும், அதற்கு ஆ.இரா.வே.வின் பதிலும் வெளிவந்துள்ளன. அதற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரும், ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’, ‘காந்தியும் வ.உ.சி.யும்’ போன்ற சிறந்த ஆய்வுநூல்களைத் தந்தவருமான ஆ.இரா.வே. அவர்களின் #பொறுப்பாசிரியருக்கு, நான் குறிப்பிட்டது சிபிஎஸ்இக்கான என்சிஈஆர்டி பாடப்புத்தகம்# என்ற ஒற்றை வரிப் பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்தத் தகவல், அவரது பேட்டியிலேயே உள்ளது போன்ற மயக்கத் தோற்றத்தை உண்டாக்கியது. ஒருவேளை அவர் பேட்டியில் கூறியதை எழுத்தாக்கம் செய்தவர்கள் விட்டுவிட்டார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியது.
அவ்வாறு விடுபட்டிருந்தால், நிச்சயம் அதனைச் சுட்டிக்காட்டி இருப்பார். சுட்டிக் காட்டாததனால் பேட்டியில் இந்தத் தகவலைச் சொல்லவில்லையென்று புரிந்துகொண்டேன்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாடத்திட்டங்கள் நடைமுறையிலுள்ள நிலையில், நாம் எந்தப் பாடத்திட்டத்தில் படித்தோம் என்ற விவரத்தை, இதுபோன்ற குறைகளைக் கூறும் இடத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்த வானொலிப் பேட்டியைக் கேட்ட, காலச்சுவடு இதழில் அதன் எழுத்தாக்கத்தைப் படித்த அனைவரும் ஆ.இரா.வே. எந்தப் பாடத்திட்டத்தில் படித்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் அல்லவா?
சீ. இளங்கோவன்,
சேலம் .
ஜெ. சுடர்விழியின் ‘இத்திசைதான் எல்லை இலது,’ கட்டுரை மூலம் காலச்சுவடு இதழின் பயணத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பாரதி பற்றிய பல்வேறு கட்டுரைகள், விவாதங்கள், மதிப்புரைகள், ஆய்வுரைகள் பாரதி தொடர்பான பிற பதிவுகள் என எண்ணற்ற தகவல்களைக் கட்டுரை அறியத் தந்தது.
‘மோசடி வணிகமாகும் முனைவர் பட்ட ஆய்வுகள்’ பற்றிய செய்திகள் மிகவும் கவலை கொள்ளச் செய்வதாக உள்ளன. முனைவர் பட்ட ஆய்வுகள் அதற்குரிய தரத்தோடு இல்லாமல் வெறுமனே யாரோ எழுதிக் கொடுக்கும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறுகின்ற நிலை மிகவும் மோசமானது. முனைவர் பட்ட மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டால் தரம் மிக்கதாக இருக்கும். நெறியாளர்கள் அறநெறியுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து நிலைகளிலும் கல்வி வணிகமாக மாறிவிட்டபோக்கு எதிர்காலச் சமுதாயத்திற்கு நல்லதல்ல. முனைவர் பட்ட ஆய்வுகள் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டியது அவசியம்.
கூத்தப்பாடி மா. பழனி,
தருமபுரி.