மந்தையிலிருந்து ஒரு குரல்
புதுவருடம் தொடங்கும்போதே அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கும் திட்டமிடும் பதிப்பாளர்களில் ஒருவனாகவும், புத்தகங்கள் வாசகர்களைச் சேர்வதற்குப் புத்தகக் காட்சி தவிர வேறு உபாயங்கள் ஒத்துவராத அல்லது நூலக ஆணை என்ற ஒன்றைக் கனவாய் மட்டும் வைத்துத் தொழில் நடத்திவந்த மந்தைகளில் ஒருவனாகவும்தான் என்னைப் பாவித்திருந்தேன். கோவிட் ஊரடங்கிலிருந்து காட்சி மாற ஆரம்பித்தது என்றாலும், சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி வரும்வரை இதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கிடைத்திருக்கவில்லை; நல்வழி காட்டுவதற்குத் தயங்காத சக பதிப்பாளர்கள் இப்போது உடனிருப்பது பெரும் ஆறுதல்.
பதிப்புத்துறை புதிய யுகத்தில் எத்தனை நவீனமடைந்துள்ளது, புதிய வாசகர்கள் யார் யார் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளத் தமிழகத்திற்கு வெளியேதான் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் ‘காமிக்கான் – கேமிங் தொழில்நுட்ப அறிமுக விழா’ போன்ற புதிய முயற்சிகளையாவது பார்க்க வேண்டும்.
முன்தேதியிட்ட அனுகூலம்
பதிப்பாளர்கள் சென்னைப் புத்தகக் காட்சி 2025ஐ முன்கூட்டியே சிந்தித்து நடத்தியிருந்தாலும் அது வணிகரீதியாக வெற்றியடையவில்லை. ஆனாலும் பதிப்பாளர்கள் வேறு மாதிரியான சில அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்தியாவின் முக்கியக் கலை விழாக்களான ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கேரள இலக்கிய விழா ஆகியவற்றில் கலந்துகொள்ளும் அனுகூலம் அது.
இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் கேரளா, ராஜஸ்தான், டில்லி (Delhi bookfair / rights table), மும்பை (gateway LitFest), கொல்கத்தா, கோவா, பெங்களூரு ஆகிய இடங்களில் விழாக்கள் நடைபெறும். சென்னையிலும் சர்வதேசப் புத்தகக் காட்சி, காமிக் கான்(சென்னை & பெங்களூரு) போன்ற நிகழ்வுகள் உண்டு.
இந்த ஆண்டு அப்படியான சில புத்தக விழாக்களில் கலந்துகொள்வதற்காகச் சக பதிப்பாளர்களோடு சேர்ந்துசெல்லும் திட்டத்தைச் சென்னை புத்தகக் காட்சியில் ஆலோசித்து வந்தோம். காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் தந்த அறிமுகத்தின் பேரில் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவின் ஓர் அங்கமான ஜெய்ப்பூர் புக்மார்கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தேன். இந்திய மொழிப் பதிப்பாளர்கள் பங்கேற்கும் அந்தக் கருத்தரங்கில் எனக்கும் இடம் கிடைத்தது.
அதற்கு முன்னரே சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்ட நண்பர்களோடு இணைந்து அடுத்தடுத்துவரும் கேரளா, ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களிலும் கலந்துகொள்ள உத்தேசித்தோம். கேரள கோழிக்கோடு விழாவில் நானும் வானவில் புத்தகாலயம் – கார்த்திகேயன் புகழேந்தி, டிஸ்கவரி புக் பேலஸ் – வேடியப்பன், எதிர் வெளியீடு – அனுஷ், காலச்சுவடு கண்ணன் ஆகியோரும் பங்கேற்றோம். சர்வதேசப் புத்தகக் காட்சிக்குப் போகும்வரையில் பெரும்பாலான பதிப்பாளர்களுக்குப் புத்தக விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுப் புத்தக உரிமங்களுக்கான வர்த்தகம், இதைவிட இத்துறையில் வேறு என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இருந்ததில்லை.
கேரளப் புத்தகத் திருவிழா
கடற்கரையொன்றில் அரசே இடம் ஒதுக்கிப் புத்தக விழா கொண்டாடுவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்குகிறது. கடற்கரை மணலில் ஆங்காங்கே கூடாரங்களில் பலநூறு வாசகர்களுக்கு மத்தியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கின்ற, வெவ்வேறு தலைப்புகளிலான நிகழ்வுகள் ஐந்து நாட்கள் நடைபெற்றன. புத்தகச் சந்தையும் குளிரூட்டப்பட்ட கடற்கரையும் ஊடுதிரையால் மூடப்பட்டிருந்தன. அது ஒருபுறமிருக்க நகரின் ஒரு நட்சத்திர விடுதியில் பதிப்பாளர்களுக்கான வர்த்தகச் சந்திப்பு நடைபெற்றது. ஃப்ரெஞ்ச் கலாச்சார மையத்தின் முன்னெடுப்பில் சில முக்கியப் பதிப்பாளர்களும் பிரசித்திபெற்ற பிரெஞ்சுப் பதிப்பாளர்கள் சிலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்த விழாவின் ஏற்பாட்டாளர் ரவி, புத்தகங்களுக்கான சந்தை பதிப்புச் சூழலை அடிப்படையாகக் கொண்டே வளர முடியும் என்றார். அரசு, அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லோருமே இவ்வகையான விழாக்களைத் தமது பெருமையாகக் கருதும் பண்பாடு கொண்ட மாநிலத்தில் இது இயல்பானதென்றாலும் நம்மால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?
‘ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா - உலகின் தலைசிறந்த இலக்கிய நிகழ்வு (the greatest literary show on earth)’
நானும் வானவில் புத்தகாலயம் கார்த்திகேயன் புகழேந்தியும் கோழிக்கோட்டிலிருந்து திரும்பிய இரண்டு நாட்களில் ராஜஸ்தானில் நடைபெறும் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்குச் சென்றோம். உலகளாவிய கவனம் பெற்ற இந்த இலக்கிய விழாவின் பேசுபொருள் ‘Fractured World’ – போர், மோதல்,புவிசார் அரசியல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் உலகெங்கும் இருந்து 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும் பங்கேற்ற விழாவாக அமைந்து, வியக்கவைத்தது.
19 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் பல உரைகள் இவ்விழாவில் பதிவாகியுள்ளன. 2025இல் வெங்கி ராமகிருஷ்ணனின் உரை, ரிஷி சுனக்கின் பங்கேற்பு, எம்.கே. ரெய்னாவின் வெளிநடப்பு எனத் தினசரி பல நிகழ்வுகள் முக்கியச் செய்திகளில் இடம்பெற்றுவந்தன. நாங்களும் இவற்றில் பெரும்பாலானவற்றை ஊடகங்களின் மூலம்தான் கண்டறிந்தோம்.
ஜெய்ப்பூர் புக் மார்க்
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிகழ்ச்சிகளுக்கு இணையாக ஜெய்ப்பூர் புக்மார்க் எனும் பெயரில் பதிப்பாளர்கள் பங்கேற்கும் ‘B2B’ சந்திப்புகளும் கருத்தரங்கங்களும் நடைபெற்று வந்ததால் எங்களது முழுமையான பங்கேற்பு இந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பிரதானமாக இருந்தது.
உலகளாவிய அளவில் பதிப்பாளர்கள், பதிப்பாசிரியர்கள், வடிவமைப்பாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனத் துறைசார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெற்றன. அத்தோடு இந்திய அளவிலான 58 பதிப்பாளர்களின் படைப்புகள் பற்றிய குறிப்புகள்கொண்ட ஒரு ‘பெரும் பட்டியல்’ புக்மார்க் அமைப்பால் வெளியிடப்பட்டது. பதிப்புலகின் சவால்கள், பிரச்சினைகள், எதிர்காலம் குறித்த பார்வைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. புத்தகங்களின் வெவ்வேறு வடிவங்கள் குறித்த விவாதங்கள் பேசப்பட்டன. நிச்சயமாக இது என்னைப் போன்ற ஒரு பதிப்பாளருக்குப் பெரும் ஊக்கம் தரும் விழா.
போர்ட் கேம்ஸ் முறையில் நவீன இலக்கியங்கள் எப்படி உருமாறியுள்ளன என்று ‘Shashn’ விளையாட்டில் பங்கேற்றோர்களின் நிகழ்ச்சி ஓர் உதாரணமாக இருந்தது. சந்தை எத்தனையெத்தனை மாற்றங்களைத்தான் கண்டடைந்திருக்கிறது என்பது திகைக்கச் செய்தது.
மேற்சொன்ன உதாரணம்போலத் துறைசார்ந்த பல விஷயங்களில் விற்பன்னர்களின் கருத்துகள் ஆக்கம்தரும் நிறைய சிந்தனைகளைக் கடத்தின. ஒவ்வொரு நாள் மாலையும் நடைபெற்ற வட்ட மேசை நிகழ்வுகள் தவறவிடக் கூடாதவை என வந்தவுடன் குறித்துக்கொண்டோம். சர்வதேசப் பதிப்பாளர்களுக்கு முதலாவது நாள் மாலை, எடிட்டர்களுக்கான வட்ட மேசை அடுத்த நாள் மாலை, இந்தியப் பதிப்பாளர்களுக்கு அதற்கடுத்த நாள், புத்தக விற்பனையாளர்களுக்கு அதற்கும் அடுத்த நாள் என 100% பங்கேற்பைக் கோரிய நிகழ்வுகள் அவை. அது தவிர இலக்கிய முகவர்களின் கலந்துரையாடல், காலச்சுவடு பதிப்பகத்தின் 30வது ஆண்டுக் கொண்டாட்டம், வாடிவாசல் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு, தமிழ்ப் பதிப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வு என்கிற வரிசையோடு பிரித்தானிய, நார்வே, ஃபிரெஞ்சு இலக்கியச் சூழல்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் தமிழ்ப் பதிப்பாளர்கள்
நார்வே நாட்டின் கலாச்சாரத் தூதுவர் அளித்த விருந்தில் கலந்துகொண்டபோது காலச்சுவடு கண்ணன் தமிழ்ப் பதிப்பாளர்களை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இயக்குநர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஏழு தமிழ்ப் பதிப்பாளர்கள் ஜெய்ப்பூர் புக்மார்கில் பங்கேற்பது இதுவே முதன்முறை என்று மகிழ்வுடன் சொன்னார்.
பத்தாவது முறையாக ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்கும் காலச்சுவடின் 30 ஆண்டுப் பயணத்தை ஜெய்ப்பூர் புக்மார்க் ஒரு நிகழ்வாகவே அமைத்திருந்தது. பதிப்பாளர் கண்ணன், இயக்குநர் மைதிலி, ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு மிகச் சுவாரசியமானதாக அமைந்தது.
காலச்சுவடு இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்த கணிப்பொறியிலிருந்து தனது அனுபவத்தைப் பகிர ஆரம்பித்த மைதிலியின் உரை வெகுவாகக் கவர்ந்தது. இந்தத் தலைமுறையினர் அறிந்திராத பிளாப்பி டிஸ்கில் சேகரமான காலச்சுவடு இதழின் ஆரம்ப நாட்களிலிருந்து அனுபவத்தைப் பகிர, பேராசிரியரும் சாகித்திய அகாதமி பரிசுபெற்றவருமான வேங்கடாசலபதி காலச்சுவடு பதிப்பகத்துடனான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக, கண்ணனின் பயண அனுபவம், சந்தையின் சவால்கள், கருத்துரிமைசார்ந்த போராட்டங்கள், காப்புரிமை வணிக அனுபவங்கள் குறித்த அவர் பகிர்வு பார்வையாளர்களை (சக பதிப்பாளர்கள்) கவர்ந்தது.
‘வாடிவாசல்’ கிராஃபிக் நாவல் ஒரு காமிக்ஸ் ஆர்வலனாக என்னை உற்சாகமூட்டியது. தமிழ்ப் பதிப்பு வெளிவந்த 45ஆவது நாளில் அதன் ஆங்கிலப் பதிப்பை ஒரு முன்னணி ஆங்கிலப் பதிப்பகம் வெளியிடும் சாத்தியத்தை இந்த நாவலின் சிறப்பென்றும் இவ்வகைமையின் சிறப்பென்றும் ஒருங்கே கூறலாம். மற்றுமொரு சிறப்பு நிகழ்வெனக் காலச்சுவடு வழங்கிய ‘தமிழ் பதிப்புச் சூழலின் புதிய காற்று’ எனும் தலைப்பில் - ஜீரோ டிகிரி பதிப்பகம் (காயத்ரி. ஆர்), ஹெர் ஸ்டோரீஸ் (நிவேதிதா லூயிஸ்), நம் பதிப்பகம் (இவள் பாரதி) ஆகியோர் பங்கேற்ற அனுபவப் பங்கேற்பும் சிறப்புற அமைந்தது. குறிப்பாக நிவேதிதா லூயிஸின் ஆளுமைமிக்க உரையினால் ஒரு சிறு ரசிகப் பட்டாளம் உருவானதை உணர்ந்தேன். சொல்லப்போனால், ‘இரயில்வேயில் நீலப் புடவை அணிந்து துப்புரவுப் பணி செய்துவந்த நான் இவ்விடத்திற்கு வந்துள்ளேன்’ என்று சொல்லும்போது பெருமிதம் துளிர்த்த உணர்வு அங்கிருந்த பல பெண்களுக்கும் சக தமிழ்ப் பதிப்பாளனாய் எனக்கும் இருந்தது. இந்த நிகழ்வினைக் காலச்சுவடு கண்ணன் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பங்கேற்ற மூவரும் தமிழகத்தின் வெவ்வேறு மூலைகளிலிருக்கும்கிராமங்களில் இருந்து பதிப்பாளர்களாக உருவெடுத்திருந்தது ஒரு சிறப்பு.
இந்த நிகழ்விலிருந்து பெறுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. இலக்கியம், வியாபாரம், புதிய கலையனுபவங்கள், பயண அனுபவங்கள் எனக் கணிசமாக இருந்தன. கருத்துரிமைக்கு எதிராகவும், கலைச் சுதந்திரத்திற்கு எதிராகவும் நிறையவே விமர்சிக்கப்படும், விமர்சிக்கத்தக்கப் பல விஷயங்களைக் கொள்கையாகவே கொண்டிருக்கும் பாஜக ஆளும் மாநிலமாக இருந்தாலும், திருவிழா நடைபெறும் இடத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் அரசியல் தலைவர்கள் முகம்பொறித்த எந்தப் பதாகையும் இல்லாமல் இருந்ததுதான் எல்லாவற்றையும்விட வியப்பான விசயமாகும். எந்த அரங்கிலும் சுவாரஸ்யத்திற்காகக் கிளுகிளுப்பை மூட்டும் பிரபலங்கள் இல்லாத மேடைகள். ஆனால் பாலஸ்தீன ஊடகவியலாளருக்கான ஊடக நேர்காணலை ரத்து செய்தது போன்ற சர்ச்சைகள் இருந்தாலும் இவ்விதமான ஒரு விழா எழுத்துத் துறையில் இருக்கும் யாதொருவருக்கும் ஒரு கனவு நிலம்தான். அதுபோலத் தமிழ் நிலத்தில் இப்படியொரு இலக்கிய விழா நடக்குமா என்கிற ஏக்கமும் ஒரு கனவாகத் துளிர்த்தது. இந்த மந்தையிலிருந்த ஆட்டை வழிநடத்திய நல்மேய்ப்பருக்கு நன்றி சொன்னபடி நெல்லைப் புத்தகக் காட்சிக் கணக்கு வழக்குகளை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்தேன்.
மின்னஞ்சல்: kaalidossan@gmail.com