திராவிடர் நல்லுறவைக் குலைக்கும் மொழி மேட்டிமைவாதம்
எளிதில் தீப்பற்றக்கூடிய சில கருத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், மொழி ஆகியவை அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவை. அத்தகைய பொருண்மைகளில் ஒன்றைப் போகிறபோக்கில் குறிப்பிட்ட கமல் ஹாசன் அதன்மூலம் பெரும் சர்ச்சைகளையும் இரு மக்களிடையே பதற்றங்களையும் நோக்கமின்றித் தூண்டிவிட்டார். “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்னும் கருத்தை இரு மொழிகளுக்கிடையிலான இணக்கத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அவர் சொன்னாலும் கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்னும் கருத்து தங்கள் மொழியைத் தரமிறக்கிக் காட்டுவதாகக் கன்னடர்கள் நியாயமாகவே நினைத்ததால் பெரும் சர்ச்சைகளையும் ஆவேசமான எதிர்ப்பையும் கிளப்பியது. பிறிதொரு மொழியிலிருந்து தமிழ் பிறந்தது என்று சொல்லப்படும்போது தமிழர்கள் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை இங்கு கருதிப்பார்க்கலாம்.
இந்தச் சர்ச்சையால் தன்னுடைய திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாக முடியாது என்னும் நேரடிப் பாதிப்புக்கு உள்ளான கமல் ஹாசன், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்னும் கன்னடர்களின் வற்புறுத்தலுக்குப் பணிய மறுத்தார். கருத்துச் சொல்வதற்கு அவருக்கு இருக்கும் உரிமையைப் போலவே அதை ஏற்காதவர்களுக்கும் அதனால் பாதிப்புக்குள்ளானதாக உணர்பவர்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கவும் கண்டனம் தெரிவிக்கவும் உரிமை உள்ளது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்னும் கோரிக்கைக்கு விவாத அரங்கில் இடமில்லை. இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசிய கர்நாடக உயர் நீதிமன்றம் மொழித் தீவிரவாதிகளின் குரலையே பிரதிபலித்ததும் உச்ச நீதிமன்றம் அதைக் கண்டித்ததும் இந்தச் சர்ச்சையின் முக்கியமான பரிமாணங்கள்.
கமல் ஹாசனின் கருத்துரிமையை முழுமையாக ஆதரிக்கும் அதே நேரத்தில் இந்தக் கருத்தின் வேர்களையும் விளைவுகளையும் அலச வேண்டியிருக்கிறது. கமல் ஹாஸன் பல மொழிப் படங்களில் நடிப்பவர். தமிழ்ப் பெருமிதத்துடன் தேசிய உணர்வும் கொண்டவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். எந்த மொழியையும் எந்தப் பிரிவினரையும் குறைத்துப் பேசிப் புண்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் அவருக்கு இருக்கிறது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. சொல்லப்போனால் பல்வேறு மொழி பேசுபவர்களிடையே பாலமாகச் செயல்படக்கூடிய சிலரில் ஒருவர். எனவே அவருக்கு எதிரான ஆவேசமான கூக்குரல்களுக்கு எந்த அவசியமும் இல்லை. கமலின் கருத்தை ஆதாரபூர்வமாக மறுப்பது, கமலிடம் அவர் கருத்துக்கு ஆதாரம் கேட்பது ஆகியவையே நேர்கொண்ட எதிர்வினைகள்.
கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் இந்தப் பிரச்சினைக்கு எதிர்வினையாற்றிய பலரும் உணர்ச்சிவசப்பட்டு அணுகினார்களே தவிர, அறிவியல்பூர்வமான, ஆய்வுபூர்வமான தகவல்கள் சார்ந்து இப்பிரச்சினையை அணுகவில்லை. கமலின் கருத்து மொழிசார் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது தெளிவு. (இதுகுறித்து மொழியியல் அறிஞர்கள் பேராசிரியர் சு. இராசாராம், இ. அண்ணாமலை ஆகியோர் எழுதிய இரு கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெறுகின்றன.) ஒரு மொழி இன்னொரு மொழியிலிருந்து பிறப்பது என்னும் வாதமே மொழியியல் நோக்கில் பிழையானது என்றே மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். திராவிட மொழிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமையைக் குறிப்பிடும் அறிஞர்கள் இவற்றை ஒரே மொழிக்குடும்பமாகக் கருதுகிறார்கள் என்றாலும் இந்த மொழிகளுக்கிடையில் தாய்-சேய் உறவு இருப்பதாக அவர்கள் கூறுவதில்லை.
எனில், கமல் ஹாசன் எங்கிருந்து இந்தக் கருத்தைப் பெற்றார்? பல மொழிகள் அறிந்தவர், மொழிகளின்பால் ஆர்வம் கொண்டவர் என்றாலும் அவர் மொழியியல் அறிஞர் அல்ல. அது அவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவர் இப்படிப்பட்ட கருத்தை ஏன் கூறினார்? தமிழே திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் கருத்து தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்னும் பெருமிதச் சொல்லாடல் தமிழர்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்து. போலித் தமிழ்ப் பெருமிதத்தை வன்மையாகக் கண்டித்துவந்த பெரியாரின் திராவிடக் கழக மேடைகளிலேயே அபத்தமான தமிழ்ப் பெருமிதங்கள் உரைக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு இக்கருத்துகள் இன்று தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற நிரம்பியுள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமான உண்மை என்று நம்பி, தமிழர்களே உலகின் ஆதி மனிதர்கள் என்று நம்பும் தமிழர்களும் இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தமிழை உலகின் முதல் மொழி என்று நம்பும் தமிழர்களும் இருக்கிறார்கள். இதற்கும் சமஸ்கிருதம் உலகின் ஆதிமொழி என்றும் குறைந்தபட்சம் இந்திய மொழிகளின் தாய் என்றும் சிலர் நம்புவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டுமே மொழி ஆதிக்கவாதத்தின் முகங்கள்.
தமிழ்ப் பெருமிதத்தின் இன்னொரு முகம் தூய்மைவாதம். சாதி, இன, மதப் பெருமிதங்களின் அடிப்படையும் இதேதான். அதாவது தமிழ் எள்ளளவும் பிற மொழிகளின் பாதிப்புக்கு உள்ளாகாத மொழி என்ற பெருமிதம். தமிழகம்போல இந்தியாவின் / தெற்காசியாவின் பல பகுதிகளுக்குப் படையெடுத்த, படையெடுப்புகளுக்கு உள்ளான, உலகெங்கும் வணிகம் செய்த, உலக வணிகர்களை வரவேற்ற நாட்டில், பல மொழி பேசுவோர் குடியிருந்து கண்ணியமாக வாழ்ந்த நாட்டில் பிற மொழிகளுடன் பண்பாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் கண்டிப்பாக இருந்திருக்கும். தமிழ் அணங்கு யார் கையும் படாத புனிதவல்லி என்ற கற்பனையின் மறுபக்கம் வடமொழியின் வலுவான தாக்கத்திற்கு உள்ளான பிற திராவிட மொழிகளின்மீது வெளிப்படும் ஆதிக்க உணர்வும் உள்ளார்ந்த கண்டனமும்.
பிறமொழிச் சொற்களை உள்வாங்காமல் கூடியவரை தனக்கான சொற்களை உருவாக்குவது தமிழின் இயல்பு. பிரெஞ்சும் இத்தகைய மொழிதான். அவ்வாறு உள்வாங்குவது ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளின் இயல்பு. இதில் உயர்வு தாழ்வு இல்லை.
மொழிசார் பெருமிதம் மிகையான கூற்றுகளையும் உரிமைகோரல்களையும் கொண்டிருப்பது இயல்பானதுதான். ஆனால் ஆய்வுலகில் உணர்வின் பாற்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியியல் அளவுகோல்களின்படி மொழிகளுக்கிடையே தாய்-சேய் உறவு, ஆதிமொழி என்னும் கருத்தாக்கம் ஆகியவற்றுக்குப் பெறுமானம் இல்லை. மொழிகள் தோன்றியதும் உருமாறியதும் பல்வேறு சிக்கலான செயல்முறைகளைக் கொண்டவை. திராவிட மொழிகள் தொல்திராவிட மொழி ஒன்றிலிருந்து கிளை பிரிந்தவை என்னும் கருத்தை மொழியியல் அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பெருமிதத்தை முன்வைக்கும் பலர் அந்தத் தொல்திராவிட மொழிதான் தமிழ் என்னும் கருத்தைக் கூறிவருகிறார்கள். இது விசுவாசம் சார்ந்த கருத்துதானே தவிர ஆய்வுபூர்வமானதல்ல. மாறாக, தொல் திராவிடத்திலிருந்து முதலில் பிரிந்த வடதிராவிட மொழிகளில் ஒன்றுதான் இன்று பாகிஸ்தானில் வாழும் திராவிட இன மக்களால் பேசப்படும் பிராகுயி என்பதே மொழியியலாளர் கருத்து. மனோன்மணியம் சுந்தரனார் தன்னுடைய ‘நீராருங்கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலில் “கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்” என்று எழுதுகிறார். “உதரத்தே உதித்த” என்னும் சொற்கள் தாயாகத் தமிழையும் அவள் வயிற்றில் பிறந்த சேய்களாகப் பிற மொழிகளையும் குறிப்பிடுகிறது. கவிதைக்கே உரிய உயர்வு நவிற்சியாக இதை எடுத்துக்கொண்டு ரசிக்கலாம் என்றாலும் இதை அப்படியே உண்மை என்று நம்பிப் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
கமல் உள்ளிட்ட தமிழ் மொழி ஆர்வலர்கள் பலரையும் இப்படிப் பேசவைப்பது தமிழைத் திராவிட மொழிகளின் தாய் என்று திரும்பத் திரும்பச் சொல்லிவரும் சான்றோரின் திருப்பணிதான். இதை வெறும் அரசியல் என்று புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் இந்தக் கருத்து ஏழாம் வகுப்புக்கான தமிழ்ப் பாடத்திலும் இடம்பெற்றிருக்கிறது. “கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் ஆகும்” என்று இருக்கிறது. அறிவியலுக்குப் புறம்பான, ஆய்வு அடிப்படைகள் இல்லாத இந்தக் கருத்தைப் பாடத்திட்டத்தில் - இந்துத்துவவாதிகள், குழந்தைகள் மனதில் இந்துப் பெருமிதத்தைக் கட்டமைப்பதற்காகப் பாடத்திட்டத்தில் செய்து வரும் மாற்றங்களை எதிர்ப்பவர்கள் - சேர்ப்பது தகுமோ?
தமிழ்ப் பெருமிதத்தை வளர்க்க எவ்வளவோ நியாயமான வழிகள் உள்ளன. இப்படிப்பட்ட மொழி மேட்டிமைவாதத்தை முன்னெடுப்பது மொழி சார்ந்த அறிவியல்பூர்வமான ஆய்வு களையோ மொழிகளுக்கிடையே நல்லுறவையோ வளர்க்காது. பண்டைய காலம் பற்றிய கற்பனைகளும் பெருமிதங்களும் நமது செயலூக்கத்தில் பெரும் பகுதியை உள்வாங்கிக்கொள்கின்றன. இதனால் சமகாலத் தமிழ் வளர்ச்சிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மட்டுப்பட்டுவிடுகிறது.
தென்னக மொழிகளுக்கான பொது அபாயமாக இருக்கும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான தென் மாநிலங்களின் நிலைப்பாட்டுக்கு இந்த மாநிலங்களிடையே நல்லுறவு – குறிப்பாக மொழி விஷயத்தில் – அவசியம். இதுபோன்ற கருத்துக்களோ அதனால் எழும் கசப்புகளோ இந்த ஒற்றுமையையும் நல்லுறவையும் சீர்குலைத்துவிடும்.