‘புத்தம் வீடு’: சமகாலச் செவ்வியல் பிரதி
ஹெப்ஸிபா ஜேசுதாசனின் நூற்றாண்டு இது (1925-2025). ஹெப்ஸிபாவின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். ‘புத்தம் வீடு’ (1964), ‘டாக்டர் செல்லப்பா’(1967), ‘அனாதை’(1977), ‘மா-னீ’ (1982) என்று நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். இவை தவிர, தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வு நூல்கள், சிறார் இலக்கியம், கவிதைகள், மொழிபெயர்ப்பு என நவீன இலக்கியத்திற்குக் கணிசமான பணிகளைச் செய்திருக்கிறார். ஹெப்ஸிபாவின் கணவரான ஜேசுதாசன் தமிழ்ப் பேராசிரியர், ஹெப்ஸிபா ஆங்கிலப் பேராசிரியர். இருவரும் இணைந்து தம் வாழ்நாளின் இறுதிவரை தமிழ் இலக்கியத்திற்குத் தங்களால் இயன்ற பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஹெப்ஸிபா ஜேசுதாசனின் இலக்கிய முகவரி ‘புத்தம் வீடு’ நாவல்தான்.
‘புத்தம் வீடு’ ஹெப்ஸிபா ஜேசுதாசனின் முதல் நாவல். பதினைந்தே நாளில் இந்நாவலை எழுதியதாகக் கூறியிருக்கிறார். இந்நாவல் எழுதப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அறுபதுகளில் அகிலன், தி.ஜா., கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன் உள்ளிட்ட படைப்பாளிகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். இவர் களுடைய எழுத்தில் பிராமணர்களின் மொழியும் வாழ்க்கையும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றன. ஜேசுதாசன் தொடர்ச்சியாக இதனைக் கவனித்து வந்தார். ஒருநாள் ஹெப்ஸிபாவிடம், “தமிழ்நாட்டில் பிராமணர்கள் அல்லாதவர்கள் இல்லவே இல்லையா? வேறு ஒரு மனுஷர்களையும் நாவலில் காணவே காணோமே?” என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில்தான் நாடார் சாதியைச் சார்ந்த பனையேறிகளின் வாழ்க்கையைக் கதைப்பொருளாக கொண்டு ‘புத்தம் வீடு’ நாவலை எழுதியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த கதைமாந்தர்கள், அவருக்குப் பரிச்சயமான நிலம் எனத் தன் வரலாற்றுத் தன்மையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஜேசுதாசனின் குடும்பத்தினர் பனையேறும் தொழிலைச் செய்தவர்கள். ஹெப்ஸிபா தமிழகத்தில் பிறந்தவர்; சில காலம் தந்தையுடன் பர்மாவில் இருந்தவர். திருவனந்தபுரத்தில் படித்தவர். இவரது புழங்கு எல்லைக்குட்பட்டே இந்நாவலின் கதையை அமைத்துக்கொண்டிருக்கிறார். இந்நாவலில் பர்மா வாழ்க்கை இடம்பெறவில்லை. ‘மா - னீ’ என்ற நாவல்தான் பர்மா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. மீதி இரண்டு நாவல்களும் ‘புத்தம் வீடு’ நாவலின் தொடர்ச்சியாகவே வாசிக்கப்படுகிறது.
‘புத்தம் வீடு’ ஹெப்ஸிபாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நாவல். கதையின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்துடன்தான் நாவலை முடித்திருக்கிறார். “லிஸிக்கு, நல்லது செய்துவிட்ட திருப்தியோடு கதையை முடித்தேன்” (‘படைப்பிலக்கியம் - அனுபவம் - கலைத்திறன்’, பக்.3) என்று அவரே கூறுகிறார். இந்நாவலின் கையெழுத்துப் பிரதியை ஜேசுதாசனின் நண்பரான சுந்தர ராமசாமி வாசித்திருக்கிறார். அவர்தான் இந்நாவலைத் ‘தமிழ்ப் புத்தகாலய’த்துக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் இலக்கியப் பரிந்துரை எப்போதும் கறாரானது. இவர், தமிழில் எழுதப்பட்ட முதன்மையான நாவல்களிலொன்றாகப் ‘புத்தம் வீ’ட்டைக் குறிப்பிட்டிருக்கிறார். வழமையான பெண் எழுத்திலிருந்து ஹெப்ஸிபாவின் எழுத்து அவருக்குத் தனித்துத் தெரிந்திருக்கிறது.
ஒரு படைப்பிலக்கியவாதியாகப் ‘புத்தம் வீடு’ நாவலைக் கொண்டே ஹெப்ஸிபாவை மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்நாவலை எழுதுவதற்கு முன்பு ஹெப்ஸிபா ஆங்கிலத்தில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். தமிழில் நவீன இலக்கியம் குறித்த வாசிப்பு இவருக்குப் பெரிய அளவில் இல்லை. ஆனால் சு.ரா.வின் எழுத்துகளை வாசித்திருக்கிறார். “எங்க சாரும் சுந்தர ராமசாமியும் நல்ல நண்பருங்க. சுந்தர ராமசாமி நிறைய தடவை எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரு எழுதின கதையில சிலது படிச்சிருக்கேன்” என்று தீராநதி (2008) நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். சுந்தர ராமசாமியின் எழுத்தின் தாக்கம் ‘புத்தம் வீடு’ நாவலில் தெரிகிறது. சு.ரா.வின் எழுத்தில் அரசியலுடன் கூடிய ஓர் அங்கதத் தன்மை ஆங்காங்கே வெளிப்படும். ஹெப்ஸிபாவின் எழுத்தில் அக்காலச் சமூகம் குறித்த தன் பார்வையை அங்கதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். “இப்போது பொன் இல்லையே தவிர காதுகள் இரண்டும் பெரிய துளையோடு நன்றாக ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன” (பக்.17) என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். பெண்களின் எழுத்தில் இதுபோன்ற பகடி வெளிப்படுவது அபூர்வம்.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த சாணார்களின் வாழ்க்கையை இந்நாவல் முதன்முதலாகப் பதிவு செய்திருக்கிறது. அடுத்து, சங்க அகமரபுக்கு இணையான ஒரு காதல் கதையையும் ஹெப்ஸிபா புனைவில் சொல்லியிருக்கிறார். இவ்விரு தன்மைகளுக்காகப் ‘புத்தம் வீடு’ நாவலை முக்கியமானதாகக் கருதலாம்.
இச்சாதியைச் சார்ந்த பெண்கள் மேலாடை அணிந்துகொள்வதற்குக் கடுமையான போராட்டங்களை அக்காலத்தில் முன்னெடுத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் செல்வதற்கான உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகப் பெரும் கலவரங்களும் காலனிய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. கடும் உழைப்பினூடாகப் பனையேறிகளான சாணார்கள், தங்களுக்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் நாடார்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படவில்லை. நாடார்கள் கிறித்தவ மதத்தைத் தழுவி தங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொண்டார்கள். சாணார்களும் கிறித்தவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். ஆனாலும் இவ்விரு சாதிகளுக்குள் சாதிரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருகின்றன. இந்தப் பிரச்சினையைத்தான் ஹெப்ஸிபா இந்நாவலில் கதைப்பொருளாக எடுத்துக்கொண்டுள்ளார். “நாடார்களுக்கும் சாணார்களுக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இருப்பதாகவும் கூறுவதற்கில்லை” என்று 1898இல் நடைபெற்ற வழக்கு தொடர்பான தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் கிறித்தவ சாணார்களைக் கிறித்தவ நாடார்கள் சமமாகக் கருதுவதில்லை என்பதை இந்நாவலின் இடம்பெற்றுள்ள இரு குடும்பங்களினூடாக அறிந்துகொள்ளலாம்.
பனையேறிகளின் அடுத்த தலைமுறை இந்தச் சாதியக் கட்டுமானத்தின்மீது சிறு உடைப்பை ஏற்படுத்த நினைப்பதையும் நாவல் சுட்டிக் காட்டியிருக்கிறது. நாவலின் கதை நிகழும் காலம், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இப்படியொரு அசைவை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தங்கராஜ், தன் முதலாளி வீட்டுப் பெண்ணான லிஸியை விரும்புகிறான். லிஸிக்கும் தங்கராஜ்மீது விருப்பம் இருக்கிறது. ஆனால் சாதி அடிப்படையில் தங்கராஜ் தன்னைவிடத் தாழ்ந்தவன் என்று கருதுகிறாள். இது தனது திருமணத்திற்குத் தடையாக இருக்கும் என்ற எண்ணம் அவளிடம் உருவாகிறது. இந்த முரண் விவசாயத்தைக் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகளில் வேறு வகைகளில் பதிவானது. முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தின்மீது நிகழ்த்தப்பட்ட உழைப்புச் சுரண்டலுக்கு அத்தகைய புனைவுகள் முக்கியத்துவம் கொடுத்தன. ‘புத்தம் வீடு’ உழைப்புச் சுரண்டல்குறித்துப் பேசவில்லை. மாறாக, ஒரே சாதிய அமைப்பிற்குள் நிகழும் மேல் கீழ் என்ற பாகுபாட்டிற்குக் கவனம் கொடுத்திருக்கிறது. ஆனால் முதலாளிகள் அதிகாரம் மிக்கவர்களாகவும் தொழிலாளர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி பனைவிளையிலும் இருக்கிறது. புத்தம் வீட்டின் முதலாளி கண்ணப்பச்சி. அவர் வீட்டுப் பனையில் பதநீர் இறக்குபவர் தங்கையன். ஒரு பனங்கிழங்கு விஷயத்தில் இருவருக்கும் இடையில் மோதல் நிகழ்கிறது. முதலாளியின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறுவதே இங்கே எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பனையேறும் தொழிலிலிருந்து கண்ணப்பச்சியால் தங்கையன் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
கண்ணப்பச்சியின் ‘புத்தம் வீடு’ ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருந்திருக்கிறது. இன்று வீழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம். பழைய பெருமையின் மிச்சம் கொஞ்சமாக இருக்கிறது. கண்ணப்பச்சியின் இரு மகன்களில் மூத்தவன் கள்ளுக்கடையே கதியென்று கிடப்பவன். இளைய மகன் திருவனந்தபுரத்தில் வியாபாரம் செய்கிறான். அவனது வியாபாரமும் நஷ்டமடைந்து பெரும் கடனில் மூழ்குகிறான். மூத்தவனின் மகள்தான் லிஸி. தங்கையனுக்குப் பிறகு புத்தம் வீட்டிற்குப் பனையேறியாக வந்த அன்பையன் மகன்தான் தங்கராஜ். அன்பையன் கடுமையான உழைப்பினூடாகப் பொருளாதாரத்தில் உயர்கிறான். ஆனாலும் கண்ணப்பச்சியின் குடும்பம் அன்பையன் குடும்பத்தைச் சமமானவர்களாக ஏற்க மறுக்கிறது. இங்கே சாதி என்பது செய்யும் தொழிலை அடிப்படையாகக்கொண்டு இயங்குவதை உணரலாம்.
நாவலின் இரண்டாம் பகுதியாக லிஸிக்கும் தங்கராஜிக்கும் இடையிலான காதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருநாள் தங்கராஜ் எதிர்பாராத தருணத்தில் லிஸியைச் சந்திக்கிறான். தங்கராஜ் லிஸியைப் பார்க்கும்போது அவள்மீது ஓர் ஈர்ப்பு உருவாகிறது. அந்த இடத்திலேயே நாவல் திருப்பத்தையும் சந்திக்கிறது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதை லிஸியின் தந்தையும் பார்க்கிறார். “எவங்கிட்டே பல்லே இளிச்செ சண்டாளி? இனி இப்படிச் செய். தலையெச் சீவிப் போடுவெஞ் சீவி!” என்கிறான். பெண்களுக்கு அந்த வீட்டில் எத்தகைய இடம் அளிக்கப்படுகிறது என்பதைத் தந்தையின் வசையிலிருந்து லிஸி புரிந்துகொள்கிறாள். லிஸிக்குத் தன் இருப்பு குறித்துச் சந்தேகம் எழுகிறது. ‘இற்செறிப்பு’ என்ற சொல்லை ஹெப்ஸிபா பயன்படுத்தியிருக்கிறார். இச்சொல்லைப் பற்றிய அறிவு புத்தம் வீட்டு ஆண்களுக்கு இல்லை என்றாலும் அவர்களது நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.
பெண்களுக்கான சுதந்திரம் குறித்த பார்வையை ஹெப்ஸிபா இப்புனைவில் தீவிரமாக முன்வைத்திருக்கிறார். கண்ணப்பச்சி இருக்கும் கூடத்தின் பக்கம் செல்வதற்கே அந்த வீட்டுப் பெண்கள் அஞ்சுகிறார்கள். அப்படியே செல்ல நேர்ந்தாலும் குனிந்த தலை நிமிராது அந்த இடத்தைக் கடக்க வேண்டும் என்பது புத்தம் வீட்டின் எழுதப்படாத விதி. இந்த விதியை அப்படியே அடுத்தடுத்த தலைமுறையினரும் பின்பற்றுகிறார்கள். லிஸி மட்டும் இதில் விதிவிலக்கு. கிறித்தவ மதம் குறித்த பொதுப்பார்வைக்கு எதிரானதாகவே புத்தம் வீட்டு ஆண்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன என்பதையும் நாவல் கவனப்படுத்துகிறது.
தங்கராஜ் லிஸிக்குள் மகிழ்வான உணர்வுகளைக் கிளர்த்துபவனாக இருக்கிறான். ஆனால் சாதிய இறுக்கமும் வீட்டின் பெருமிதமும் அவளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்துகிறது. அக இலக்கியத்தில் தலைவி அடையும் அவஸ்தைகளை லிஸியும் எதிர்கொள்கிறாள். ஹெப்ஸிபாவுக்கு இந்நாவலின் கதை ஏற்கெனவே பழக்கப்பட்டதுதான். தங்கராஜ் கதாபாத்திரம் ஜேசுதாசனின் உண்மை வார்ப்பு. பனையேறி குடும்பத்திலிருந்து படித்து வந்தவர் ஜேசுதாசன். இவரை விருப்பத்துடன் ஹெப்ஸிபா திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவற்றைப் பல இடங்களில் அவர் பதிவு செய்திருக்கிறார். ஹெப்ஸிபாவின் சொந்த ஊர் புலிப்புனம். இந்த ஊரைத்தான் புனைவிற்காகப் பனைவிளை கிராமமாகப் மாற்றியிருக்கிறார். “நிலவுடைமைச் சமூக அதிகாரம் சிதைந்து, முதலாளித்துவச் சமூகம் முளைத்தெழும் காலகட்டம் இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது” (‘படைப்பிலக்கியம் - அனுபவம் - கலைத்திறன்’) என்று வேதசகாயகுமார் இந்நாவலை மதிப்பிட்டிருக்கிறார். கண்ணப்பச்சி குடும்பம் வீழ்ச்சியடைகிறது. அன்பையன் குடும்பம் பொருளாதாரத்தில் மீண்டெழுகிறது. இந்தப் புள்ளியைத்தான் நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியென்று எம். வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.
சாதியத்தின் இறுக்கம் நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியில் சிதையத் தொடங்குகிறது. அடுத்து, நிலவுடைமைச் சமூகம் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தது. இதற்குப் ‘புத்தம் வீடு’ மருமகள்களே சான்று. இதனை லிஸிதான் உடைக்க முயல்கிறாள். புனைவின் இறுதிப் பகுதியில் நிகழும் லிஸியின் சித்தப்பா கொலையும் லிஸியின் அப்பா இறப்பும் (சி.சு. செல்லப்பா இதனைத் தற்கொலை என்கிறார்) நாடகத்தனமாக இருக்கிறது. ஹெப்ஸிபா புனைவை வேகமாக முடித்திருக்கும் அவசரம் தெரிகிறது. புனைவின் முதல் பாதியில் இருந்த நிதானம் இறுதிப் பகுதியில் இல்லை. தங்கராஜுக்கும் லிஸிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற படைப்பாளியின் விருப்பம் புனைவில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் பகுதியைத்தான் சி.சு. செல்லப்பா விமர்சனம் செய்திருக்கிறார். இந்நாவலை வெறும் காதல் கதையாகச் சுருக்கிவிடுகிறார். அதேநேரத்தில், “இன்றைய பல நாவல்களை நான் உதறிவிடுவதுபோல் என்னால் புறக்கணிக்க முடியாதபடி அது என் கவனத்தை நீடிக்கச் செய்துகொண்டிருக்கிறது” (‘தமிழ் நாவல்கள்’) என்றும் குறிப்பிடுகிறார். நாவல் குறித்த கட்டுரையில் சி.சு. செல்லப்பா சில விமர்சனங்களை முன்வைத்தாலும் பாராட்டுரைகளே அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம். ஆனால் ‘புத்தம் வீடு’ நாவலைச் சுமாரான நாவல் என்ற வகைமைக்குள் அவர் அடக்குகிறார்.
இந்நாவலின் மொழிநடை மிகச் செறிவாக அமைந்திருக்கிறது. ஆர். ஷண்முக சுந்தரம் கொங்கு வட்டாரம் சார்ந்தும் தி.ஜா. தஞ்சை வட்டாரம் சார்ந்தும் எழுதிக்கொண்டிருந்த சூழலில், ‘புத்தம் வீடு’ அக்காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் படைப்புகளுடன் இந்நாவலும் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டு வருகிறது. இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் நம்பகத்தன்மையான கதைதான் இதற்குக் காரணம். ஹெப்ஸிபாவுக்குப் பனையேறிகள் குறித்து ஒரு அகன்ற பார்வை இருக்கிறது. அவர்களது உழைப்பை இந்நாவல் அங்கீகரித்திருக்கிறது. அவ்வகையில் அறுபது வருடங்களைக் கடந்தும் ‘புத்தம் வீடு’ நாவல் வாசிப்பில் புதியதாகவே இருக்கிறது. இதுவொரு செவ்வியல் நாவல் என்பதற்கு இதுவே போதுமானதாகும்.
மின்னஞ்சல்: ramesh5480@gmail.com