ஆப்பிரிக்க அத்தியாயம்
நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை - இப்படிப் பல்வேறு துறைகளில், பல பரிமாணங்களுடன் ஆப்பிரிக்க இலக்கியத்தில் நீண்ட நாள் கோலோச்சி வந்த கோகே வா தியங்கோ கடந்த மே 28ஆம் தேதி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் புற்றுநோய் பாதிப்பினால் காலமானார். ஆப்பிரிக்க இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமையாகப் போற்றப்படும் இவர் கென்யாவின் தலை நகர் நைரோபியின் வடமேற்கு கிராமம் ஒன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். அப்போது கென்யா பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கோகே வாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள். இருபத்தெட்டு குழந்தைகள். இவர் தந்தையின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்தவர்.
தொடக்கக் காலக் கல்வியைத் தாய்மொழி யான கோகியூவில் தொடங்கினார். உயர் கல்வியை ஆங்கிலத்தில் உகாண்டாவிலும், பின்னர் இங்கிலாந்திலும் தொடர்ந்தார்.
தொடக்கக் காலத்தில் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் கோகியூ மொழியில் எழுதினார். கோகியூவில் எழுதிய சிலவற்றை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
மொழிக் கொள்கை
கோகே வா எழுதிய ‘மனதிலிருந்து காலனித்துவத்தை நீக்குதல்’ (Decolonizing the Mind, 1986 ) எனும் நான்கு பகுதிகள்கொண்ட கட்டுரை ஆப்பிரிக்காவில் மொழி குறித்த பிரச்சினைகளை அலசுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் அந்நியர்கள் ஆட்சி அகன்ற பின்னரும் அங்கு இலக்கியத்திலும், கல்வியிலும் மொழி வழியே காலனித்துவப் பாதிப்பு இருந்துவந்தது. ஒவ்வொரு மொழிக்கும் தனி விழுமியங்களும், உலகத்தைப் பற்றிய பார்வையும், அம்மொழி பேசும் மக்களின் பாரம்பரிய நினைவுகளும் உண்டு. இதனை ஆப்பிரிக்க மொழிகளிலும் காணலாம். ஆயினும், அந்நாடுகளில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுவரும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் ஒருவிதக் கலாச்சாரக் காலனியத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இரண்டு முக்கிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, ஆப்பிரிக்க மக்கள் மனதளவில் தங்களைத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறார்கள். இரண்டு, தங்கள் சொந்தக் கலாச்சாரத்தின் மீதுள்ள அவர்களது நம்பிக்கை தளர்வடைகிறது. நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றால் போதாது, மனமும் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஆகவே, ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதி அதனைச் சிறப்படையச் செய்ய வேண்டும் என்று அவர் பதிவு செய்கிறார்.
அவர் கட்டுரை தரும் செய்தி கென்யாவுக்கு மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்.
(இதே பிரச்சினை ஆப்பிரிக்க முன்னாள் பிரெஞ்சு காலனிகளிலும் எழுந்தது. செனெகல், ஐவரி கோஸ்ட், அல்ஜீரியா போன்ற நாடுகளின் படைப்பாளர்கள் தொடர்ந்து பிரெஞ்சில் எழுதி வந்தார்கள். “ஏகாதிபத்திய நாட்டின் யதேச்சதிகாரத்தால் விளைந்த தீமைகளை எடுத்துரைக்க அவர்கள் மொழியையே நாம் கருவியாகப் பயன்படுத்திப் பழிதீர்த்துக்கொள்ள வேண்டும்” என்பதே அப்படைப்பாளிகள் முன்வைத்த வாதம்.)
அரசியல் ஈடுபாடு: கெனியாட்டாவும், கோகேயும்
சென்ற நூற்றாண்டு மத்தியில் கென்யாவின் மிக முக்கிய அரசியல் தலைவராகத் திகழ்ந்தவர் கெனியாட்டா (1897-1978). அவர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, கென்யாவுக்குப் பிரித்தானிய வல்லரசிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். 1963ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதும், அவர் அந்நாட்டின் பிரதமரானார். கோகே வா தியங்கோ அவரைப் போற்றினார். அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். ஆனால் கெனியாட்டா நாளடைவில் கடுமையான அடக்குமுறையைக் கையாளத் தொடங்கினார். சோசலிசக் கொள்கை கொண்டிருந்தவர் முதலாளித்துவத்திற்குத் தாவினார். இதுவே கோகே வா தியங்கோ அவரிடமிருந்து விலகுவதற்குக் காரணமாக அமைந்தது.
பிரெஞ்சு எழுத்தாளர் சார்த்தர் போலவே கோகே வா தியங்கோ இலக்கியத்தை வெறும் கலையாக மட்டும் பார்க்கவில்லை. இலக்கியம் சமூகப் போர்களுக்கு ஆயுதமாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். 1967ஆம் ஆண்டு அவர் தன் பெயர் ஜேம்ஸ் கோகே வா தியங்கோ என்றிருந்ததை வெறும் கோகே வா தியங்கோ என்று மாற்றிக்கொண்டார். ஜேம்ஸ் என்பது காலனித்துவத்தை நினைவூட்டுகிறது என்பதால் அதை நீக்கிவிட்டார். கெனியாட்டாவின் ஆட்சி பழைய காலனித்துவ ஆட்சிபோல் மாறும் ஆபத்து இருந்ததால், அதுபற்றி நாடகம் எழுதி அரங்கேற்றினார். அதனால் 1977ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதுதான் ‘சிலுவையில் சாத்தான்’ (‘Devil on the Cross’ 1980) எனும் நாவலை கிக்கியு மொழியில் எழுதினார். காகிதம் கிடைக்காததால், தனக்கு விநியோகிக்கப்பட்ட கழிவறைக் காகிதத்தில் அந்நாவலை எழுதியதாகக் கூறுவார். இக்கதையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண் ஒருத்தி உயிரை மாய்த்துக்கொள்ள முனையும்போது ஏதோ ஓர் அசரீரி அவளை அம்முடிவிலிருந்து தடுத்து நிறுத்திப் போராடத் தூண்டுகிறது.
ஓராண்டுச் சிறை முடிவுற்றதும் கோகே விடுவிக்கப் பட்டார். அவர் உடனே கென்யாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில், ஆங்கிலப் பேராசிரியராகவும் ஒப்பிலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
படைப்புகளின் பின்னணி
கோகேயின் பெரும்பாலான படைப்புகள், கென்யாவின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டவை.
காலனி ஆட்சியிலிருந்தபோது கென்யாவில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்கள் ‘அழாதே குழந்தையே’ (Weep Not, Child, 1964) எனும் அவரது முதல் நாவலிலேயே இடம் பெறுகின்றன. ஆங்கிலத்தில் வெளியான இந்நாவலில் வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே இருந்த பதற்றம் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு பக்கம் கறுப்பினத்தவர் தொடங்கிய மாவ் மாவ் (Mau Mau uprising) இயக்கமும், மற்றொரு பக்கம் அதை எதிர்த்த பிரித்தானியர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையும் ஒரு சிறுவனின் பார்வையில் சித்திரிக்கப்படுகிறது.
‘இடையில் ஓடும் ஆறு’ (‘The River between’, 1965): இந்நாவலில் வையாகி எனும் இளைஞன் இரண்டு கிராமங்களுக்கிடையே பெண் விருத்தசேதனம் தொடர்பாக எழுந்த பிரச்சினையைத் தீர்த்துவைக்க முற்படுகிறான்.
வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், கூகியின் படைப்புகளில் கென்ய நாட்டு நம்பிக்கை களும் தொன்மங்களும் அந்நாட்டுக்கே உரிய அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன. ‘முகுமோ’ (Mugumo) எனும் ஒரு சிறுகதை: முகுமோ என்பது ஒரு மரம். அது நம் நாட்டு அரச மரம் போன்று குழந்தை பாக்கியம் அளிக்கும் என்பது அந்நாட்டு நம்பிக்கை. கதாநாயகி முகாமி, முத்தோகா எனும் போர்வீரனை மணந்திருந்தாள். அவனுக்கு ஏற்கெனவே மூன்று மனைவியர் இருக்கிறார்கள். அவர்களுக்குக் குழந்தைகளும் இருந்தன. குழந்தை இல்லாத முகாமி “நான் குழந்தைபேறு இல்லாதவள்! அவனுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை உறுதிசெய்யப் பிள்ளை ஒன்று இல்லையே! அன்பு காட்ட, அரவணைக்கக் குழந்தை ஒன்று இல்லையே! ஆன்றோர்களின் ஆன்மாவை அழைத்துப் பேச வாரிசு ஒன்று இல்லையே!” என்று தன் ஆதங்கத்தை முகுமோவிடம் கொட்டித் தீர்க்கிறாள். (‘Secret Lives and Other stories’, ப, 109). விசித்திரமான வகையில், அப்போது அவள் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்வதை உணர்கிறாள்.
‘மழையும் வந்தது’ (‘And the Rain Came down’) எனும் கதையிலும் குழந்தை இன்மை ஒரு சாபக்கேடாகச் சித்திரிக்கப்படுகிறது.
அவரது ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘ரத்த இதழ்கள்’ (‘Petals of Blood’, 1977) பின்காலனியச் சீர்கேடு பற்றி விவரிக்கிறது. ஐந்நூறு பக்கம் கொண்ட இது ஒரு கிராமம் நகரமாகும் கதை. இல்மோரோக் எனும் கிராமம் ஒரு வானம் பார்த்த பூமி. காலநிலையைப் பொறுத்துதான் மக்களின் வாழ்வாதாரம். பிரித்தானிய ஏகாதிபத்தியம்தான் பாலைவனமான அந்த இடத்தை ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒதுக்கி வைத்திருந்தது. சமவெளி வாழ் மக்களிடம், ஜவுளி முதலியவற்றைக் கொடுத்து அவர்களிடமிருந்து உணவுப் பொருட்களைப் பெறுவது வழக்கம். 1963இல் நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் ஏழைகள், விவசாயிகள் ஆகியோர் வாழ்க்கையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. பஞ்சம் ஏற்பட்டது. தலைநகர்வரை சென்று நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்துத் தங்கள் நிலைமையை விளக்குகிறார்கள். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்களும் தொழில் முனைவோரும் அவர்கள் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களை நகரமயமாக்கும் வேலையில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களது பாரம்பரியத் தொழில் தொய்வுற்று மறைகிறது. நகர்மயமாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது டிரான்ஸ்-ஆப்பிரிக்கா நெடுஞ்சாலை. இது இல்மோரோகையும், தலைநகர் நைரோபியையும் இணைக்கிறது. மிகப்பெரிய மாற்றங்களெல்லாம் இதன் மூலமாகத்தான் ஏற்படுகின்றன. (பாகம் 4. அத். 11)
முதலாளித்துவம்பற்றிய விவாதங்கள் இந்நாவலுக்கு வலு சேர்க்கின்றன. கென்யச் சமூகங்களில் முதலாளித்துவம் பேசுபொருளாகிவிட்டது. பெரு முதலாளிகள் மறைமுகமாகத் தொழிலாளிகளைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்கிறார்கள். அதனால் முதலாளித்துவம் மேலோங்குகிறது. தொழிற் சங்கங்களை வழிநடத்துவதே பெரு முதலாளிகள்தான் என்றாகிவிடுகிறது.
“நமது தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை முதலாளிகளால் வழி நடத்தப்படுகின்றன. முதலாளிகள் எப்படி அவர்களை எதிர்த்துப் போராடும் தொழிற் சங்கங்களை நடத்த முடியும்? மூலதனத்தையும் தொழிலையும் ஒரே சமயத்தில் அவர்களால் எப்படி நிர்வகிக்க முடியும்? இவ்விரண்டில் ஒன்று பாதிக்கப்படும். அது தொழிலாளிகளின் நலனாகத்தான் இருக்கும்.”(பாகம் 4.அத்.19)
மக்களிடம் விரக்தி தோன்றுகிறது. கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் தன் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். “நான் மொம்பாஸாவுக்குப் போய் விவசாயத் தொழிலாளர்களிடையே வேலை தேடினேன் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அடிமைகள்! எங்கு பார்த்தாலும் அடிமைகள்! மாதம் நூற்று ஐம்பது ஷில்லிங் கொடுக்கிறார்கள். அதற்கு முழுக் குடும்பமும் – அப்பா, அம்மா, குழந்தைகள் – ஒரே குடிசையில் வாழ்ந்துகொண்டு உழைக்க வேண்டும். பல தடவை நிதானமாகச் சிந்தித்துப்பார்த்தேன். நாங்கள் கென்யாவை உருவாக்கினோம் 1895க்கு முன் அரேபியர் வந்து எங்களை அடிமைப்படுத்தி எங்கள் விவசாயத்தை நாசமாக்கினார்கள். 1895க்குப் பின் ஐரோப்பியர் வந்தார்கள். முதலில் எங்கள் நிலங்களைப் பிடுங்கினார்கள். பின்னர் எங்கள் வேலையைத் திருடினார்கள். எங்கள் ஆடு மாடுகளைத் திருடினார்கள். எங்களிடமிருந்த சொத்தை வரி விதிப்பு மூலம் பறித்துக்கண்டார்கள் இப்படியெல்லாம் நாம் வியர்வை சிந்தி உருவாக்கிய கென்யாவிலிருந்து நமக்கு என்ன கிடைக்கிறது?” (பாகம் 4, அத் 11)
நாவலின் கடைசியில் பெரு முதலாளிகளை எதிர்த்து ஒரு போராட்டம் தொடங்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதுதான் சிறந்த வழி என்று பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். (பாகம் 4, அத்.13)
கேலியும் கிண்டலும்
அரசியல் அவலங்களை கோகே நேரடியாக விமர்சனம் செய்ததோடல்லாமல் நையாண்டிப் பாணியிலும் விமர்சனம் செய்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த அவருடைய ‘காக்கை ஜோஸ்யம்’ (Wizard of the Crow) ஆப்பிரிக்க அரசுகளை மட்டுமன்றி அனைத்துச் சர்வாதிகார அமைப்பு முறைகளையும் கடுமையாகச் சாடுகிறது. அபுரிரியா குடியரசு எனும் ஒரு கற்பனைக் குடியரசு. அதன் தலைவருக்குத் தான் எந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தோம் என்றுகூடத் தெரியாது. ஆனாலும் தன் ஆட்சியை வலுவானதாக வைத்துக்கொள்வதில் குறியாக இருக்கிறார். அவரை மகிழ்விக்கவும், அவரிடம் தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்கவும் சிலர் எந்தச் செயலிலும் ஈடுபடத் தயாராக இருந்தார்கள். அவரைப் பெருமைப்படுத்த ‘சொர்க்கத்தை நோக்கி’(Marching to Heaven) எனும் பெயரில் வேறெங்கும் காணாத அளவில் மிகவும் உயரமான ஒரு மாளிகை கட்டும் திட்டத்தை ஆரம்பிக்கிறார்கள். அரசுக்குத் துரோகம் இழைப்பவர்களைக் கண்டுபிடிக்க மச்சாகொலி என்பவன் தன் கண்களை அகலப்படுத்திக்கொள்கிறான். சிக்கியோக்கு என்பவன் பாரிஸுக்குப்போய் தன் காதுகளின் திறனை அதிகரிக்கச் செய்ய அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறான். அரசனின் ஆணைகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக பிக் பென் மாம்போ என்பவன் தன் நாக்கை அறுவைச் சிகிச்சை செய்து நீட்டித்துக்கொள்கிறான். இதுபோலெல்லாம் நடக்கும் அபுரிரியா நாட்டில் பிச்சைக்காரனாக இருந்த காமிட்டி என்பவன் சில தந்திர வித்தைகள்மூலம் குறி சொல்பவனாகி (wizard of Crow) பெரும் செல்வத்திற்கு அதிபதியாகிவிடுகிறான். இந்நாவலின் மூலம் இன்றும் இதுபோல் இயங்கும் சில அரசுகளைக் கேலி செய்கிறார் கோகே வா தியங்கோ.
மொத்தத்தில் கோகே வா தியங்கோவின் படைப்புகள் இருபதாம் நூற்றாண்டு இறுதியில் ஆபிரிக்க அரசு, இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துரைக்கின்றன.
நோபல் பரிசு கோகே வா தியங்கோவுக்குத்தான் கிடைக்கும் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் 2010 ஆம் ஆண்டு அவருக்குத்தான் நிச்சயமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். கிடைக்கவில்லை.“என்னைவிட அதிக ஏமாற்றம் அடைந்தவர்கள் என் வீட்டுக்கருகே கூடியிருந்த ஊடக நண்பர்கள்தான். நான்தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
கோகே வா தியங்கோ பல ஆண்டுகளாகப் புற்று நோயினால் அவதிப்பட்டவர். அவருக்குப் பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் அவற்றையெல்லாம் மனம் தளராமல் சமாளித்தார். கொரோனா காலத்தில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Dawn of Darkness’ எனும் கவிதை வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதில் எந்தத் துன்பத்திற்கும் ஒரு விடிவுகாலம் வருமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவரது “காலையில் அகலாத கனை இருள் எதுவுமில்லை” என்று பொருள் படும் வரிகள் உலகுக்கு அவர் விட்டுச் சென்ற முக்கியச் செய்தியாகும்.
மின்னஞ்சல்: srakichena@gmail.com