கடிதங்கள்
நூலகத் துறை பதிப்பாளர்களை அழைத்து வெளிப்படையான நூலகக் கொள்முதலுக்கு வழி வகுத்தது வரவேற்கத்தக்கது; ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற கண்ணனின் கண்ணோட்டம், மாறுதலுக்கான முன்னோட்டம்.
50 ஆண்டுகளாகத் தொடர்ந்து நூலகத்தைப் பயன்படுத்தும் எனக்குப் பிடித்தமான புத்தகம் கிடைப்பது அரிதான புதையல் போலத்தான். நூலக ஆணைக்கெனவே தயாராகும் போலிப் புத்தகங்கள்தான் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆண்டுக்கொரு முறை புத்தகங்களை மாற்றி அடுக்கும் நடைமுறையோ, விரும்பும் புத்தகத்தை உடனே கொடுக்கும் வசதியோ கிடையவே கிடையாது. பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிடும்போதே நூலகத் துறைக்கு அனுப்ப, அதை (சென்சார் போர்டு போல) பரிசளித்துத் தகுதியானவற்றை உடனுக்குடன் வாங்கி நூலகங்களுக்கு அனுப்ப, தினமும் செயல்படும் ஒரு திட்டத்தை அரசு வகுத்தால் வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகும். பரிசீலிப்பார்களா?
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை
‘கனன்றுகொண்டிருக்கும் எரிமலை’ பல உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. பிஜேபியின் அரசியல் பார்வையும் வெளியுலகப் பிம்பமும் சரியாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கண்ணோட்டம்: நூலகங் களுக்கு நூல் கொள்முதல் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். ஆம், இதுவரை நடந்தது கடந்துபோய்விட்டது. இனிப் பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றட்டும் நூலகத் துறை. அருந்ததிராயின் கூற்று “நவீன உலகின் நஞ்சூட்டப்பட்ட அமுத கலசம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.” “குறுகிய தேசியவாதக் கோட்பாடு”, திணிப்பு பாலஸ்தீனமும் காஷ்மீரும் நவீன உலகிற்கு ஏகாதிபத்திய பிரிட்டன் தந்த “சீழ் வடியும் ரத்தம் தோய்ந்த அன்பளிப்புகள்” என்பதை மிக மிகச் சரியாகவே கூறியுள்ளார். 15.12.2023இல் ஆற்றிய உரையைத் தாமதமாகப் படிக்க நேரிட்டாலும் சிறப்பாக இருந்தது.
‘ஒரு தடவை பெண்ணாகி வா கடவுளே’ வலியின் வார்த்தைகள். தாய்மொழிப் பள்ளிக் கல்வியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார் சாரா அருளரசி. ‘மயானக் கொள்ளை’, ’தாழொடு துறப்ப’, ‘வெள்ளைச் சீலை’ ஆகிய கதைகள் அருமை. காலச்சுவடு 30-300 கண்ணனின் பதிவு மூன்று இடங்களில் பேசியதன் முத்தான பதிவு. அனைவருக்கும் கிடைக்குமா கல்வி? ‘புனைவில் இசைக்கப்படும் விடுதலை’ படித்தேன், சுவைத்தேன். மகிழ்ச்சி.
சீனி. மணி
பூந்தோட்டம்
மே மாத காலச்சுவடு இதழ் முகப்பு அட்டை மிக அருமையாக அமைந்திருந்தது. வடிவமைத்தவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.
பி. சௌந்தரராஜன்
கோபிசெட்டிபாளையம்
இரும்புக் கை மாயாவி யாரை எதிர்த்தார்?
காலச்சுவடு மே, 2025 இதழில் (இதழ் எண் 305) எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் காமிக்ஸ் நாயகன்’ கட்டுரையில் தகவல் பிழை உள்ளதாக இதழ் 306இல் பி. சம்பத் என்னும் வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அதில் அழிவு கொள்ளை தீமைக் கழகம் (அ.கொ.தீ.க) என்னும் அமைப்புக்கு எதிராகப் போராடியது மாயாவி அல்ல என்றும் லாரன்ஸ் – டேவிட் என்னும் இரட்டைக் கதாநாயகர்கள்தாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு (க.கொ.க.கூ.) என்னும் அமைப்பை எதிர்த்து மாயாவி போராடியதாக மாயாவியை நாயகனாகக் கொண்ட சில காமிக்ஸ்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், க.கொ.க.கூ. என்றும் அ.கொ.தீ.க. என்றும் குறிப்பிடப்பட்ட அமைப்பு ஒன்றுதான் என்று ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். Federation of Extortion, Assassination and Rebellion என்னும் அமைப்புதான் முதலில் க.கொ.க.கூ. என்றும் பின்னாளில் அ.கொ.தீ.க. என்றும் முத்து காமிக்ஸ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் மாயாவி அ.கொ.தீ.க.வை எதிர்த்துப் போராடினார் என்று சொல்வதில் தகவல் பிழை இல்லை என்று ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆசிரியர் குழு