மரண ருசி
ஓவியம்: மணிவண்ணன்
பெரியாண்டவன் திருவிழா நெருங்க நெருங்க ஆண்டி குப்பனுக்கும் மல்லிகாவுக்கும் தொண்டைக்குள் சோறு இறங்கவில்லை. இன்னும் மூன்றே நாள்கள்தான். ஞாயிறு பொழுதிறங்கிவிட்டால் இந்த ஜீவன் இங்கே இருக்கப்போவதில்லை. அதை நினைத்தபடியே, மண்தொட்டியில் நிறைந்திருந்த கூழையும், அதில் ஊறிக் கொழகொழத்த கடலைப் பிண்ணாக்கு களையும் தவிட்டையும் கையால் துழாவிக் கொண்டிருந்த குப்பனின் மனமும் அந்தத் தொட்டியைப் போலவே நுரையும் குமிழியுமாய்த் தளும்பிக்கொண்டிருந்தது.
அவர்களது வீட்டின் மூன்றாவது உயிராக உலவிக்கொண்டிருந்த சாமிப்பன்றி அவுஞ்சிச் செடியின் கீழே விழுந்திருந்த வேட்டியளவு நிழலில் சுரத்தில்லாமல் படுத்துக் கிடந்தது. முன் கால்களை நீட்டி அதன்மீது தலையை வைத்து குப்பனையே பார்த்துக்கொண்டிருந்தது. தோரணம் கட்ட மடிக்கப்பட்ட மாவிலைகளைப் போல அத