கழிப்பறை: தனிமனிதத் தன்மதிப்பு
பள்ளி என்பது வகுப்பறை மட்டுமன்று; கழிப்பறையும் சேர்த்ததுதான். கழிப்பறை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றால் பல்வேறு நோய்கள் வருமென்று அனைவருக்குமே தெரியும். பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லை அல்லது போதிய பராமரிப்பு இல்லை. சில பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் அவற்றைச் சுத்தம்செய்யத் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சுவர் இடிந்து விழுவது, தண்ணீர்க் கசிவு, தொற்றுநோய் பரவப் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற கழிப்பறைகள் மாணவர்களின் உடல்நலனைப் பாதிக்கும்தானே!
அரசுப் பள்ளிகளில் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகளே அதிகமும் படிக்கிறார்கள். அவர்களில் பலருக்கு வீட்டிலேயே முறையான கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு கிராமத்தில் பணியாற்றியபோது, அதன் அருகிலிருந்த சிறுநகரத்தில் வீடெடுத்துத் தங்கியிருந்தேன். காலையில் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வருவதற்குள், வழியிலுள்ள வீடுகளில் உள்ள குழந்தைகள் வாசலில் உட்கார்ந்து மலம் கழிப்பதைப் பார்ப்பேன். மிக வருத்தமாக இருக்கும்