எதிர்காலம் என்னும் பயம்
தீரமிகு புது உலகம்
(நாவல்)
ஆல்டஸ் ஹக்ஸ்லி
தமிழில்: ஜி. குப்புசாமி
பக். 304
ரூ. 380
கோவை புத்தகக் காட்சியை முன்னிட்டு காலச்சுவடு வெளியீடாக வரவுள்ள ‘தீரமிகு புது உலகம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை.
ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ (BRAVE NEW WORLD) உலகின் மகத்தான நாவல்கள் வரிசையில் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. சமகால அயல் எழுத்துக்களையே மொழிபெயர்த்துவந்த நான் வேறெந்த கிளாஸிக்கைவிடவும் இன்றைய காலகட்டத்துக்கு இயைபுடையதாக இந்நாவல் இருப்பதாலும், தமிழுக்கு வந்தாக வேண்டிய நாவல் இது என்பதாலும் இம்மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன்.
அறிவியல் புனைவு என்று பொதுவான அடையாளப்படுத்தலில் இந்நாவலை அடக்கிவிட முடியாது என்பதே இதன் தனித்துவம். ‘துர்க்கற்பனை’ (Dys topian) நாவல் என்பதும் ஓரளவுக்கே சரியாக இருக்கும். அறிவியல் புனைவுகளும் துர்க்கற்பனை, நற்கற்பனை நாவல்களும் உலக இலக்கியங்களில் மட்டுமல்லாது தமிழிலும் பல்லாண்டுகளாக வந்துகொண்டிருப்பவைதான். ‘தீரமிகு புது உலகம்’ இவற்றிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பது, நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்த ஆட்சிமுறை சமூகத்திலும் மனித இயல்புகளிலும் வலுக்கட்டாயமாகப் புகுத்திய இயற்கைக்கு மாறான மாற்றங்களை நமக்கு எச்சரிக்கையாக விடுத்திருப்பதில்தான்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வெளிவந்த இரண்டு ஆங்கிலத் ‘துர்க்கற்பனை’ நாவல்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தை இரண்டு விதங்களில் உக்கிரமாக வெளிப்படுத்தின. ஜனரஞ்சகமாக எழுதப்பட்டது என்பதால் அதிகமாகப் பிரபலமடைந்தது ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’. அது வெளிவந்த சில வருடங்களிலேயே க.நா.சு.வின் மூலம் தமிழையும் வந்தடைந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன் வெளிவந்த ஆர்வெல்லின் நாவலில் எதிர்காலம் ஹிட்லர், முஸோலினி போன்ற சர்வாதிகாரிகளின் கைகளில்தான் சிக்கப்போகிறது என்ற அச்சம் சொல்லப்பட்டிருந்தது. சர்வ வல்லமை படைத்த, உருவமற்றிருந்தாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பெருந்தலைமை, மக்கள் கூட்டத்தை எல்லா அம்சங்களிலும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மக்களின் செயல்கள் மட்டுமல்ல, பேச்சும் எண்ணங்களும்கூடக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அரசு மக்களுக்குச் சொல்ல விரும்பும் செய்திகள்தான் ஊடகங்களில் வெளிவருகின்றன. உண்மை என்பது அர்த்தமிழந்து, அரசாங்கத்தின் ‘உண்மைக்கான அமைச்சரவை’ வெளியிடும் செய்திகளே சத்தியம் என்று மக்கள் உளப்பூர்வமாக நம்ப வேண்டியிருக்கிறது. அடுத்த நாட்டுடன் அவர்கள் தேசம் போரில் ஈடுபட்டிருக்கிறது என்று ‘அமைதி அமைச்சரவை’யிலிருந்து செய்தி வந்தால் மக்கள் அதைக் கேள்வி கேட்காமல் நம்பியாக வேண்டும். அரசாங்கம் வகுத்த பாதையில் நடக்காமல், நம்பாமல், பேசுவோர், சிந்திப்போர் எல்லோரையும் ‘அன்பின் அமைச்சரவை’ கவனித்துக்கொள்ளும்.
ஆனால் ஆர்வெல்லுக்கும் ஹக்ஸ்லிக்கும் இருந்த எதிர்காலக் கணிப்புகளும் அச்சங்களும் வேறுவேறு. ஆர்வெல் நாவலின் காலகட்டத்திலிருந்து ஹக்ஸ்லி ஐநூறு வருடங்கள் மேலும் முன்னோக்கிச் செல்கிறார். நாவலின் காலகட்டம் கி.பி. 2540. வெளியிலிருந்து செலுத்தப்படும் வன்முறையான அடக்குமுறை நம்மை ஆக்கிரமிக்கும் என்பதே ஆர்வெல்லின் கணிப்பாக இருக்கையில், ஹக்ஸ்லியின் கற்பனையில் மக்கள்மீது வன்முறை செலுத்தப்படாமலேயே அவர்கள் தமது சுயசிந்தனை, மனமுதிர்ச்சி அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். தமது அடக்குமுறையை அடக்கு முறையென்றே உணராமல் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிகள் தம் வாழ்வை நிர்ணயிப்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை குறித்தோ, பிறர் நலம் குறித்தோ எந்தக் கவலையும் இருப்பதில்லை; சுயநலம் என்பதே அனைவரின் பொதுக்குணமாக இருக்கிறது. அந்த வினோதம் சாத்தியப்படுவது உயிரியல் சிகிச்சை முறைகளால். அந்தச் சிகிச்சை நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையல்ல. கருவளர்ச்சியிலேயே செலுத்தப்படும் சிகிச்சை.
ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உல’கில் இயற்கையான முறையில் மனிதர்கள் பிறப்பதில்லை. உயிரணுச் சேகரிப்பு வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட அநாமதேய ஆண் விந்தணுவையும் பெண் முட்டையையும் இணைத்துக் கருவேற்றப்பட்ட ஒரு முட்டை கதிர்வீச்சின் மூலம் தொண்ணூற்றியாறு கருக்களாகப் பிரிக்கப்படுகிறது. இவை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அடைகாப்புக் கருவிகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. ஆனால் ஒரே மாதிரியாக வளர்க்கப்படுவதில்லை. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்ஸிலான் என்று ஐந்து படிநிலைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இக்கருக்கள் வெவ்வேறு விதமாக உணவு, ஆக்ஸிஜன் ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆல்ஃபாக்களுக்கு நிறைய ஆக்ஸிஜனும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் கருநிலையிலேயே ஊட்டப்படுகின்றன. அதாவது, ஆல்ஃபாக்கள் உயர் ‘சாதி’ மனிதர்களாக வளர்க்கப்படுபவர்கள். கடைசிப் படிநிலையில் இருக்கும் எப்ஸிலான்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகவே வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட துருவப் பிரதேச மிருகங்களுக்குத் தேவைப்படும் அளவிலேயே அக்கருக்களுக்கு ஆக்ஸிஜன் ஊட்டப்பட்டால் போதும். ஆனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துப் பொருட்கள் தாராளமாக இவர்களுக்குச் செலுத்தப்படும். எப்ஸிலான்களாக வளர்க்கப்படுபவர்கள் நல்ல உடற்கட்டோடு, எதிர்த்துக் கேள்வி கேட்கத் தெரியாத அளவுக்கு மந்தபுத்தியோடு இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் உள்ள மூன்று பிரிவினர்களுக்கும் அவரவர்களின் படிநிலைத் தகுதிக்கேற்ற, ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளுக்குத் தேவையான உடல், மன வளர்ச்சிக்கேற்ற சத்துணவுகள் ஊட்டப்படும். இதுமட்டுமின்றி இக்கருக்களுக்கு வளர்நிலையிலேயே அவர்களின் மனங்களைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான கட்டளைகள் கருவளர்ச்சி நிலையிலேயே மனவகுத்தமைப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு வளர்த்தெடுக்கப்படும் மனிதர்கள் வாழும் உலகில் வன்முறையைக் கையாண்டு அடக்குமுறையைச் செலுத்த வேண்டிய அவசியமே இல்லாமலாகிவிடுகிறது.
அமெரிக்காவின் பிரபல கார் உற்பத்தியாளரான ஹென்றி ஃபோர்ட் தனது தொழிற்சாலையில் அறிமுகப்படுத்திய புரட்சிகரமான ‘கோத்திணைப்பு’ (Assembly line) செயல்முறையை அடிப்படையாக வைத்தே ‘தீரமிகு புது உலகில்’ ‘மனித உற்பத்தி’ நடைபெறுகிறது. ‘தீரமிகு புது உல’கில் மதங்கள் கிடையாது. ஒரேயொரு கடவுள். அவரும் நாம் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும் விதத்தில் அல்ல. அவர்களுக்கு ஃபோர்டுதான் கடவுள். ஃபோர்டைத் துதித்துத்தான் தொழுகைக் கூட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் பின்பற்றும் வருடமே ஃபோர்டின் பிறந்த வருடத்தை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. ஃபோர்டுக்குப் பிறகான 632ஆவது வருடத்தில்தான் கதை நடக்கிறது. (632 ஃபோ.பி) எவ்வளவுதான் கருநிலையிலிருந்தே மனங்களைக் கட்டுப்படுத்தினாலும், அவ்வப்போது இம்மனிதர்களுக்கு இயல்பான மனச்சோர்வு, கவலை ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் ‘ஸோமா’ என்ற பக்கவிளைவுகளை உண்டாக்காத, ஒரு ‘போதை’ மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
ஹக்ஸ்லி கற்பனை செய்யும் இந்த ஏகாதிபத்திய ஆட்சிமுறை ஒருவிதத்தில் பரிபூரண உட்டோப்பிய அரசு என்றும் வாதம்செய்ய இடமிருக்கிறது, இயற்கையான மனிதத்தன்மைகள் அனைத்தையும் செயற்கை முறைகளினால் ஒழித்துவிட்டு, ‘எல்லோரும் எல்லோருக்கும் சொந்தம், விருப்பப்பட்ட நபரோடு யாரும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம், தாய் - தந்தை உட்பட எந்த உறவுமுறைகளும் யாருக்கும் கிடையாது’ என்பதுபோன்ற நெறியற்ற வாழ்க்கை முறைகள் மனிதத்தன்மைக்கு எதிரானவை என்பதை ஹக்ஸ்லி வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்யாமல் உட்கிடையாக உணர்த்துகிறார்.
இந்த நாவல் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தப்பாடுடையதாக இருப்பது, இதில் சொல்லப்படும் ‘சாதிய’ப் படிநிலையமைப்பில்தான். மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் தரம் வாரியாகப் பிரித்துவைப்பது ஹக்ஸ்லி இந்தியாவுக்கு 1920களில் வந்தபோது பெற்ற அனுபவங்களை வைத்து உருவாக்கிய கற்பனையாக இருக்கக்கூடும். ஹக்ஸ்லிக்கு இந்தியத் தொடர்பு உண்டு. இந்தியா முழுவதும் விரிவாகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இராமகிருஷ்ண பரமஹம்ஸர்மீது அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. இந்துயிசம், பௌத்தம் இரண்டிலும் ஆர்வம் கொண்டு நிறையவே எழுதியுமிருக்கிறார்.
காந்தி மறைந்தபோது ஹக்ஸ்லி எழுதிய அஞ்சலிக் கட்டுரையே அகிம்சையைப் போதித்தவரின் உடல் ராணுவ மரியாதையோடு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இந்திய அரசு இறுதி அஞ்சலி செலுத்தியதை எள்ளி நகையாடியபடிதான் தொடங்குகிறது. காந்தியின் உடலோடு அவர் முன்னிருத்திய அன்பும் சத்தியமும் சாம்பலாகிக்கொண்டிருக்கிறது என்றார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் அமெரிக்காவில் ஜே. கிருஷ்ணமூர்த்தியோடு நட்பு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் தமது சிந்தனைகளால் செழுமையுற்றிருக்கிறார்கள். இந்நாவலில் இடம்பெறுகின்ற நினைவழிப்புப் போதை மருந்தான ‘ஸோமா’ இந்திய முனிவர்கள் யோகநிலை அடையப் பயன்படுத்திய லாகிரி வஸ்துக்களின் இன்னொரு வடிவம். ஹக்ஸ்லிக்கே இத்தகைய லாகிரி மருந்துகள்மீது ஈடுபாடு இருந்திருக்கிறது.
ஹக்ஸ்லியின் குடும்பம் மிகவும் அறிவார்ந்த உறுப்பினர்களைக் கொண்டது. ஹக்ஸ்லியின் பாட்டனார் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி புகழ்பெற்ற பரிணாமக் கோட்பாட்டாளர். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டு ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டவரும், குரங்கின் மரபு வழியில்தான் மனித குலம் தோன்றியது என்ற கருத்தை முதலில் முன்வைத்தவரும் இவரே. ஆல்டஸ் ஹக்ஸ்லியின் தந்தை லியோனார்ட் ஹக்ஸ்லியும் ஓர் எழுத்தாளர். ஹக்ஸ்லியின் சகோதரர் சர் ஜூலியன் ஹக்ஸ்லி ‘Eugenics’ எனும் இனமேம்பாட்டியல் ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர். மற்றொரு
சகோதரர் சர் ஆண்ட்ரூ ஹக்ஸ்லி மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இலக்கியவாதிகளும் தத்துவவியலாளர்களும் தாய்வழிச் சொந்தங்களில் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே ஏராளமான நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர்கள். (சுந்தர ராமசாமியின் மகத்தான நாவலான ‘ஜே.ஜே. சில குறிப்பு’களில் ஹக்ஸ்லியின் குடும்பச் சிறப்பு கோடிகாட்டப்படுகிறது! திருவனந்தபுரம் நூலகத்துக்குச் செல்லும் ஜே.ஜே. நூலகரிடம் “ஹக்ஸ்லி எழுதிய நூல்கள் எவையெல்லாம் இந்த நூலகத்தில் இருக்கின்றன?” என்று கேட்கும்போது, அந்த நூலகர், “எந்த ஹக்ஸ்லியின் நூல்களைக் கேட்கிறீர்கள்?” என்கிறார்.)
இத்தகைய பின்னணி கொண்ட ஹக்ஸ்லிக்கு அறிவியல் நாட்டம் இயல்பாகவே இருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவருடைய தத்துவப் பின்புலமும், தனிமனிதச் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் மீதிருந்த பற்றுதலும் அறிவியலின் கட்டுக்கடங்காத வளர்ச்சி மானுட மேன்மைக்கு எதிரானது என்ற தெளிவை அவருக்கு ஏற்படுத்தியிருந்தன. இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் நடைமுறைக்கு வந்திருந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஹக்ஸ்லி தனது கற்பனையின் மூலம் அதீத நிலைகளுக்குக் கொண்டுசெல்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுக்கடங்காத நுகர்வுக் கலாச்சாரத்தில் சென்று முடியும் என்பது இந்நாவலில் அவர் சுட்டிக்காட்டும் முக்கியக் கருத்து. புலனுணர்வுகளைத் திருப்தி செய்ய விதவிதமான, விபரீதமான சாதனங்களைக் கற்பனைசெய்து அறிமுகப்படுத்துகிறார். இன்றைய ‘தொடுதிரை’ தொழில்நுட்பம் அவருடைய தீர்க்கதரிசனத்தில் தொடுவுணர்வுத் திரைகள் - ‘ஃபீலி’ - திரைப்படங்களாக விரிவுகொள்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகள் தொழில்நுட்ப உதவிகொண்டு இயந்திரங்களோடு மனிதர்கள் போட்டியிடும் விளையாட்டுகளாகிவிடுகின்றன.
ஹக்ஸ்லி மருந்துகள் மூலம் யோக நிலையை அடைவதற்குக் கடைசிவரை முயன்றுகொண்டே இருந்தார். அவரைப் போதைக்கு அடிமையானவராகக் கருத இடமில்லை. அவரைப் பரிசோதனையாளர் என்றே சொல்லலாம். அவர் குருவாக ஏற்றுக்கொண்டிருந்த இராமகிருஷ்ண மடத்தின் பிரபவானந்தரிடம் ‘சைக்கடெலிக்’ மருந்துகளின் மூலம் உயர்நிலை தியானம், ஆன்மீக விழிப்பு போன்ற நிலைகளை அடைவது குறித்து விவாதித்திருக்கிறார். (பிரபவானந்தர் ஹக்ஸ்லியின் கருத்தைக் கடுமையாக எதிர்த்து நிராகரித்தார்.) மனதின்மீது தாக்கம் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் குறித்த தனது அனுபவங்களை THE DOORS OF PERCEPTION என்ற நூலில் ஹக்ஸ்லி விரிவாக எழுதியிருக்கிறார். அவரது கடைசி நாவலான ISLANDஇலும் தீவு ‘மோட்சா’ என்ற பெயரில் ஒரு சைக்கடெலிக் மருந்து இடம்பெறுகிறது. இந்த நாவலில் ஹக்ஸ்லியின் மீது இந்தியா செலுத்தியிருக்கும் தாக்கம் தெளிவாகவே தெரிகிறது. சுமத்ராவுக்கும் அந்தமானுக்கும் இடையில் உள்ள ஒரு கற்பனைத் தீவில் நடக்கும் இக்கதையில் இடம்பெறுகின்ற பாத்திரங்களின் பெயர்கள் சுவையானவை: முருகன் மயிலேந்திரன், சுசீலா, ராணி, லக்ஷ்மி.
‘தீரமிகு புது உலகம்’ முதலில் 1932ஆம் வருடம் ஆங்கிலத்தில் வெளியானது. பத்தாண்டுகளுக்குப் பிறகே இந்நாவல் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இந்நாவலின் முக்கியத்துவம் போரினால் சீரழிந்துபோயிருந்த உலகத்தாரிடையே உறைக்கத் தொடங்கியது. சில நாடுகளில் இந்நாவலின் மையக்கருத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதம், ஒழுக்கம் சார்ந்த காரணங்களைக் காட்டித் தடை செய்யப்பட்டது. இந்நாவலின் 1946ஆம் வருடப் பதிப்புக்கு ஹக்ஸ்லி எழுதியிருந்த முன்னுரை எதிர்க்குரலாளர்களுக்குப் பதில் அளிப்பதாக இருந்தது. ‘சைக்கடெலிக்’ மருந்துகளைப் பயன்படுத்துவதை ஆதரித்தோ அதற்குச் சமாதானம் எதையும் சொல்லியோ எழுதவில்லையென்றாலும், இது அறிவியல் முன்னேற்றத்தைச் சிலாகிக்கும் நூல் அல்ல என்று எழுதினார். அறிவியல் வளர்ச்சி தனிமனிதர்களை எப்படிப் பாதிக்கிறது, ஆதாரமான மனித இயல்புகளை எப்படி மழுங்கடிக்கிறது என்பதை உணர்த்தவே இந்நாவலைப் படைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நாவலை எழுதி முடித்த பிறகு, போருக்குப் பிந்தைய உலகத்தின் பெருமாற்றங்களைக் கவனித்து வந்தவருக்குக் கவலைகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. ஜனநாயகம் வெகு விரைவில் அழியப்போகிறது என்ற எண்ணம் அவருக்கு வலுப்பட்டுக்கொண்டே இருந்தது. இக்காலகட்டங்களில் அவருடைய எழுத்தில் அவநம்பிக்கை கூடிக்கொண்டே வருவதைப் பார்க்க முடியும். ஹக்ஸ்லி உருவாக்கிய புத்துலகுக்கு ‘வெளியிலிருந்து’ ஒருவன் பிரவேசிக்கும்போது நாவல் அடுத்த கட்டத்துக்கு நகர்கையில் இதை நம்மால் உணர முடிகிறது. அந்த அந்நியன் பழைய உலக மரபுகளின்படி வாழ்கின்ற ‘காட்டுமிராண்டி’ நாட்டைச் சேர்ந்தவன். அவனுக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்கள். அவனுக்கு அறக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவனுக்குக் காதலும் துரோகமும் தெரிந்திருக்கின்றன. கலைநயங்கள் தெரிந்திருக்கின்றன. அவன் ஷேக்ஸ்பியரைப் படித்திருக்கிறான். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஷேக்ஸ்பியரின் வரிகள் அவனுடன் வந்துகொண்டேயிருக்கின்றன. இந்தக் காரணங்களினால் புத்துலகவாசிகளுக்கு அவன் ‘அநாகரிகன்’ என்றே தெரிகிறான். நாவலின் இறுதி ஹக்ஸ்லி நமக்கு விடுக்கும் எச்சரிக்கையின் உச்சம்.
‘தீரமிகு புது உலகம்’ இருபத்தியாறாம் நூற்றாண்டில் நடப்பதாக எழுதியிருந்தாலும், அந்த நிலையை உலகம் அதற்கு முன்பாகவே அடைந்துவிடும் என்று தனக்குத் தோன்றுவதாக 1959ஆம் வருடம் BRAVE NEW WORLD RE-VISITED என்ற நூலில் எழுதினார். இந்நூல் முதல் நூலுக்கான தொடர்ச்சியல்ல. பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில், மக்கட்தொகைப் பெருக்கம் இயற்கை வளங்களின்மீது செலுத்தும் பாதிப்பு, ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக மாறுவதற்கான சாத்தியங்கள், மக்களை எளிதில் உணர்ச்சிவயப்படுத்தி மூளைச்சலவை செய்வதற்கு அரசுகள் கையில் எடுக்கப்போகும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் என்று மிகவும் இருண்மையான வருங்காலத்தையே கணிக்கிறார். ஆனால் இந்த மோசமான மாற்றங்களை ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையைக் கையில் எடுக்காமல் செய்து முடிக்கும்; மனித உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியே ஆட்சியாளர்கள் தமது வல்லாட்சியை நடத்துவார்கள் என்கிறார். தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை வரும் தலைமுறையினருக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைக் காரணகாரியங்களுடன் ஹக்ஸ்லி விளக்கும்போது அந்த அச்சம் நம்மையும் பிடித்துக்கொள்கிறது. ஆனால் இதற்கான தீர்வுகள் எதையும் ஹக்ஸ்லி தெளிவாகச் சொல்வதில்லை.
அவரது மகத்தான படைப்பான ‘தீவு’ நாவலில் இடம் பெறுகின்ற கற்பனைத் தீவான பாலாவின் கலாச்சாரம் மகாயான பௌத்த மதத்தைப் பின்பற்றுவதாக இருக்கிறது. மனிதர்கள் மிகவும் மனிதத்தன்மை கொண்டவர்களாக, விரோத மனப்பான்மை சற்றும் இல்லாதவர்களாக, அமைதியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். அண்டை நாடு அவர்கள்மீது போர் தொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்த பிறகும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவர்களை எதிர்கொண்டு நல்வழிப்படுத்திவிட முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் அண்டை நாட்டவன் ஆயுதங்களுடன் வந்து ஆக்கிர மிப்பதோடு நாவல் நிறைவடைகிறது.
ஹக்ஸ்லியின் எழுத்துக்களை ஒருசேரவைத்துப் பார்க்கும்போது ‘தீரமிகு புது உலகம்’ நாவலும் ஏன் அவநம்பிக்கையோடு முடிகிறது என்பது விளங்கும். இந்த அவநம்பிக்கை உத்தி ஹக்ஸ்லி பயன்படுத்தும் ஒரு வலுவான ஆயுதம். வெற்று நன்னம்பிக்கைகள் எதிர்வரும் ஆபத்தின் தீவிரத்தை நமக்குக் கடத்தாமல் மங்கலாக்கிவிடுகின்றன.
அவநம்பிக்கை நல்லது என்கிறார் ஹக்ஸ்லி.
நல்லதுதானா?
மின்னஞ்சல்: gkuppuswamy62@yahoo.com