பாப்பாண்டவர்கள்: பரிசுத்த அசௌகரியங்கள்
முதலில் பாப்பரசர்கள்பற்றி நிலவும் கட்டுக்கதைகளைப் பற்றிச் சில திருத்தங்கள். இக்கதைகளில் பெரும்பாலானவை கற்பனையான புனைவுகளே. இந்தப் புனையப்பட்ட மரபுகளே பாப்பாண்டவர் பதவிக்கு ஒருவிதப் பூடகத்தன்மையையும் தவறான தகவல்களையும் ஒருசேர வழங்குகின்றன. கத்தோலிக்கத் திருச்சபை பரப்புரை செய்த தொன்மங்களில் ஒன்று: இயேசுவின் சீடர் பேதுருவை ‘முதல் பாப்பரசர்’ என்று கொண்டாடுவது. ஆனால் கிறிஸ்தவத் திருமறையைச் சீராகப் படிப்பவர்களுக்கும் வரலாற்றை ஊன்றி ஆராய்வோருக்கும், இது உண்மையல்ல என்பது தெளிவாகத் தெரியும்.
கிறிஸ்தவத் திருமறையில் பேதுரு தன்னை இயேசுவின் மற்ற சீடர்களைவிட மேலாகக் கருதவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் இரண்டு நிருபங்களிலும், திருச்சபையை வழிநடத்தும் சிறப்பு அதிகாரம் தனக்குள்ளது என்று எங்கேயும் சொல்லவில்லை.
அதேபோல், புதிய ஏற்பாட்டில் எந்தத் திருத்தூதரு