சின்மயி ஏன் பாடக் கூடாது?
பாடகி, பின்னணிக் குரல் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் சின்மயி ஸ்ரீபாதா. அவர் மே 24 அன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் தன்பக்கம் ஈர்த்தார். அந்த நிகழ்வில் திரைப்படத்தில் பாடகி தீ பாடிய ‘முத்தமழை’ எனும் பாடலை சின்மயி மேடையில் பாடியபோது ரசிகர்கள் அவரது குரலைக் கேட்டுச் சிலிர்த்தார்கள், ஆர்ப்பரித்தார்கள். அவரது குரல் வளமும் பாடும் திறனும் சிலாகிப்புக்குள்ளானது. சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு அதுவே முக்கியப் பேசுபொருள் ஆனது. அவர் அறியப்பட்ட பிரபலப் பாடகிதான். என்றாலும் அவர் ஏன் இந்தப் பாட்டைத் திரைப்படத்தில் பாடவில்லை, ஏன் சின்மயி சினிமாக்களில் பாடுவதில்லை, ஏன் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பதில்லை என்னும் கேள்விகள் அந்த நிகழ்வுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பல்வேறு தரப்பினராலும் எழுப்பட்டன.
இக்கேள்விகளுக்கான பதில்கள் மிக வெளிப்படையானவை. சின்மயி 2018, அக்டோபர் 09ஆம் தேதி பாடலாசிரியர் வைரமுத்துமீது ‘மீடூ’ பாலியல் புகாரைத் தனது ட்விட்டர் தளத்தில் எங்கே, எப்போது, எப்படி என்ற தகவல்களுடன் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், எதிர்ப்புகள் மிகக் கடுமையானவை. பிறகு அவர் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராதாரவி சின்மயிக்கு தடை விதித்தார். சின்மயி த்ரிஷா, சமந்தா போன்ற பல பிரபல நடிகைகளுக்குக் குரல் கொடுத்தவர். 2011, 2014ஆம் ஆண்டுகளில் சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதும் பெற்றவர். ஆனாலும் இக்காரணத்தை முன்னிட்டு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடைக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. பாடல்களைப் பாடுவதற்கு அதிகாரபூர்வமான தடை எதுவும் இல்லை என்றாலும் சின்மயிக்குப் பாடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. பின்னணிப் பாடகர்களில் உச்சத்தில் இருந்த ஒருவர் மிடூ புகாரளித்ததும் இப்படிப் புறக்கணிக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல.
சின்மயி புகார் கொடுத்ததும் தமிழ்த் திரைப்படத்துறை, தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஊடகங்கள் ஆகிய பல தரப்புகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மீடூ புகார்களின் அடிப்படையையே புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத ஆணாதிக்கக் குரல்கள் சின்மயியைக் கொச்சைப்படுத்திப் பேசின. சின்மயி பாதிக்கப்பட்ட பெண்ணாக அன்றி ஒரு பிராமணராகவும் வைரமுத்து ஆணாதிக்கம் செலுத்தியவராக அன்றிப் பிராமணர் அல்லாதோரின் திருவுருவாகவும் பார்க்கப்பட்டு எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டன. இதனால்தான் வழக்கமாகப் பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கும் பெண்ணியவாதிகள் பலரும் சின்மயி பிரச்சினையில் மௌனம் பயின்றார்கள். இருப்பினும் சின்மயி பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனுக்கு எதிராக ஒரு பெண் முன்வைத்த குற்றச்சாட்டைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்; நாராயணனால் ‘அய்யங்கார் ---யா’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டார். ஊடகவியலாளர்களுடனான அவருடைய சந்திப்பில் ஊடகர்கள் மிக மோசமான முறையில் அவரை எதிர்கொண்டார்கள். சின்மயி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, விஜய் தொலைக்காட்சி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் கலந்துகொண்ட சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் (https://www.youtube.com/watch?v=LeLDM_WhKWg) ஊடகர்கள் சின்மயியின் மீது விழுந்து பிடுங்காத குறையாக நடந்துகொண்டார்கள். “பத்திரிகையாளராக இருப்பதில் எப்போதும் பெருமிதம் கொள்ளும் நான், இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்று இதழாளர் அ. குமரேசன் (தீக்கதிர்) தன் முகநூல் பக்கத்தில் எழுதினார்.
சின்மயியின் ‘மீடூ’ குரல் பலரது குரல்கள் வெளிவருவதற்கான முதல் கண்ணியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இசை, இலக்கியச் சூழல்களில் நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் பலவும் வெளிப்படத் தொடங்கின. வைரமுத்துமீது ஏறத்தாழ 17 பெண்கள் ‘மீடூ’ புகார் கூறியிருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரிஹானா இந்தப் புகாரை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உறுதிப்படுத்தினார். ஏறத்தாழ ஆறு வருடக் காலம் சின்மயி தமிழ் சினிமாவில் பங்களிக்க முடியாதவராகவே – லியோ திரைப்படம் தவிர்த்து - இருந்துவந்திருக்கிறார். வைரமுத்துமீதான அவரது புகார் அவரைச் செயலற்றவராக்கியிருந்தது. புகாருக்குப் பின் ஒரு பெண்ணாகவும் கலைஞராகவும் எதிர்கொண்ட அவமானங்கள், மிரட்டல்கள் ஒவ்வொன்றையும் இந்த ‘முத்த மழை’ கலைத்திருக்கிறது. அதன் பெருக்கில் அவர்மீதான வெறுப்பரசியல் கரைந்திருக்கிறது. பொதுச் சமூகத்தின் மௌனமும் இதன்மூலம் கலைக்கப்பட்டிருக்கிறது. ஆறு ஆண்டுக்காலச் சட்டப் போராட்டம், தார்மிகப் போராட்டங்களுக்குப் பிறகு தன் கலையின் மூலமாகவே தனக்குரிய கவனத்தையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
ஒருவர் பாலியல் புகாரை முன்வைக்கும்போது அவர் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார் என்கிற கேள்வியையும் சேர்த்தே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வைரமுத்து அதிகார பீடங்களோடு தொடர்பில் இருப்பவர். பல அரசியல் கட்சிகளின் தலைமைக்கு நெருக்கமானவர். அவர்மீதான பாலியல் புகாரை சினிமாவின் ஆண்மையவாதச் சமூகம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர் எவ்விதக் குற்றவுணர்வும் இன்றிப் பகட்டாகத் தொடர்ந்து சினிமாவில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். சின்மயிமீதான தடை சினிமாத் துறையில் நிகழும் சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள் குறித்து யாரும் வாய் திறந்துவிடக் கூடாது என்கிற பதற்றத்திலும் ஆண்மையவாதத் தடித்தனத்திலிருந்தும் கிளம்பியது. புகார் அளிப்பவர்களின் வாழ்க்கை கேள்விக்கு உள்ளாகும்; அவர்களின் தொழில் வாழ்க்கை சிதைக்கப்படும் என்ற மிரட்டலை அந்தத் தடை உணர்த்தியது.
சின்மயியின் புகாருக்குப் பின் தமிழ்ச் சமூகத்தில் நடந்தது தலைகீழானது, வெட்கக்கேடானது. சின்மயியும் பிற பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டார்கள், அவர்களின் கலை வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது, அவர்களின் நடத்தைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. ராதாரவி என்ற தடித்த நாக்கு கொண்ட ஆணாதிக்கவாதி சின்மயியின் பெண்மையைக் களங்கப்படுத்தினார். துறையின் மற்ற ஆண்கள் நமட்டுச் சிரிப்புடன் அதை வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் தற்போது காட்சிகள் மாறியிருக்கின்றன. சின்மயி தனது போராட்டத்தின் மற்றொரு கண்ணியைக் கண்டைந்திருக்கிறார். அந்தக் கண்ணியின் திரி கலையின் மூலம் பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கலை வெளிச்சம் எங்கும் பரவி, பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயத்தையும் மரியாதையையும் அவர்களுக்கான இடத்தையும் மீட்டுக்கொடுக்கட்டும்.