விடைகொடு ஆப்பிரிக்கா
ஓவியம்: ரவி பேலட்
வள் சமையலறையில் காப்பி தயாரித்துக்கொண்டிருந்தாள். பணியாளர்கள் இருக்கும் போதுகூட, பகல் நேரத்திலும் காப்பி தயாரிப்பதில் அவளுக்கு ஒருவித அலாதிப் பிரியம். அசல் காப்பியின் மணம் அவளை ஆசுவாசப்படுத்தியது. தவிர, அந்தச் சமையலறைதான் அவளுடைய தனி உலகம். அங்கே கணவர் எட்டிப் பார்த்ததுகூட இல்லை.
அவர் இப்போது வரவேற்பறையில் அமர்ந்திருந்தார், சமையலறையில் பாத்திரங்கள் எழுப்பும் ஓசை அவருக்கு வேறு ஏதோ ஒரு அந்நிய தேசத்தி லிருந்து ஒலிப்பது போலிருந்தது. கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். சோபாவில் அமர்ந்துகொண்டு, அப்படியும் இப்படியுமாகப் புத்தகத்தின் சில பக்கங்களைத் திறந்து பார்த்தார், ஆனால் எதையும் வாசிக்கவில்லை. அதைத் தன்னருகில் நழுவவிட்டார்.
மரத்தட்டை இரு கைகளாலும் ஏந்தியபடி அவ