சவால்களை விஞ்சும் கல்வித்துறை
சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தக் கண்டனக் கணைகளால் படுகாயமுற்றிருந்தது தமிழக அரசு. செயல்படும் எண்ணமில்லாத அமைச்சர்கள் இருந்தது ஒரு கட்டம்; அவர்கள் செயல்படவும் ஆலோசனை கூறுவதற்குமான உரிமைகள் அற்றிருந்தது இன்னொரு கட்டம்.
திடீரென்று தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் ஊடகங்களும் பரவசமெய்திய நிலையில், தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனையும் கல்வித்துறையின் செயலாளர் உதயசந்திரனையும் பாராட்டிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த ஆண்டின் +2 பரீட்சை முடிவுகள் வெளிவரத் தயாராகவிருந்த சமயத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஓர் அவிப்பை வெளியிட்டுப் புதிய பாதையைத் திறந்தார். தேர்வு முடிவுகளில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது என்றார். இது மிகவும் சாதாரணமான முடிவு; ஆனால், தமிழக அரசியலின் பின்னணியில் கல்விப்புலம் செயல்பட்ட விதத்தில் கோபமும் வேதனையும் கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் அது தேன்பாய்ந்த சொற்களாலானதாகும்; கல்வி வணிகர்களுக்கு விழுந்த முதல் பேரிடி. பெரும் சுரண்டல் திட்டங்களோடு கல்வியாண்டின் வணிகத்தை எதிர்பார்த்திருந்த நிறுவனங்கள் இத்தாக்குதலால் தடுமாறின.
மேலும் பல அதிரடிகளுக்குக் கல்வித்துறை தயாராக இருந்ததை அச்சமயத்தில் பலராலும் அறிய முடியவில்லை. அடுத்தடுத்துப் பல புதிய அறிவிப்புகள் கல்வித்துறையை மெருகேற்ற முனைந்தன. இந்த இணையர்கள் பெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டிவிடுவார்கள் என்ற நன்னம்பிக்கை எல்லோருக்கும் வந்திருக்கின்றது. அதற்கேற்ப சுமார் முப்பத்தேழு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
இவர்கள் நேர்மையாகச் செயல்படப் போகிறார்கள் என்பதற்கான முத்தாய்ப்பு ஓர் அறிவிப்பில் வெளிப்பட்டுள்ளது. கருணாநிதியின் தலைமையில் 2006இல் அமைந்த அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் கோட்டூர்புரத்தில் மிகப்பெரிய அளவில் நிறுவியது. வழக்கமான நூலகமாக அன்றி, அதனோடு மாணவர்களையும் இளைஞர்களையும் வாசிப்புப் பழக்கத்துக்குக் கொணரும் புதுமையான அம்சங்கள் அதில் புகுத்தப்பட்டன. எண்ணிய எண்ணம் ஈடேறும்படி இளைய தலைமுறை அந்நூலகத்தை ஆர்வமுடன் பயன்படுத்தத் தொடங்கியது.
2011இல் ஜெயலலிதாவின் தலைமையில் புதிய அரசு அமைந்ததும் அவரின் முதல் தாக்குதல் இலக்காக ஆனது அண்ணா நூற்றாண்டு நூலகம். நூலகத்தைக் கேளிக்கைகளின் அரங்கமாக மாற்றி அதனுடைய ஜீவசக்தியை உறிஞ்சும் வகையில் காழ்ப்புணர்வோடு செயல்பட்டார் அவர். தன்மீது கடும் விமர்சனங்கள் எழுவதை அவர் பொருட்படுத்தவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவரின் விருப்பப்படி முடக்க முடியாமல் உயர்நீதி மன்றமே தடுத்தது. அதன்பின்னரும் சிறப்புக்கவனம் பெற்றதாகச் சொல்ல வழியில்லை. ஆனால், இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான புதிய நூல்களை வாங்க ஐந்துகோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றது. இதன் வழியாக தமிழக அரசியல் களத்திலும் புதிய பண்பாட்டு உணர்வுகள் மேலோங்க வழிபிறக்கும்; சில தலைமுறைகளாக நம் அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் தம்மை அரசியலாளராகக் கருதாமல், சொந்த எதிரிகளைப்போல பிறரைப் பாவித்து வந்தமையால் தமிழகம் பொதுவெளியில் தலைகுனிந்து நின்றிருந்தது. இனி இத்தகைய அவலங்கள் இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் களையப்படும் என்று நம்பலாம். அமைச்சர் செங்கோட்டையனும் செயலாளர் உதயசந்திரனும் அறிவித்த இதர திட்டங்கள் சீரிய செயல்பாட்டுக்கு வழிவகுப்பனவாகும்.
புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள். பணி நீட்டிப்பு அவசியமாயுள்ள 17,000 பணியிடங்கள் நிரப்பப்படும்; குறைவான ஆசிரியர்களும் வகுப்பு நிரம்பிய மாணவர்களுமாக நம் பள்ளிக்கூடங்கள் இயங்கிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. கல்வித்துறையின் வீழ்ச்சிக்கு இது முக்கிய காரணமாக இருந்தது. இப்போது நியமனமாகப் போகிற ஆசிரியர்களின் எண்ணிக்கைகூடக் குறைவானதே. ஆனாலும் அந்த இழிநிலை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதால் இனி மீட்சி பெறும் வாய்ப்பு நெருங்கிவந்துள்ளது.
சில செய்திகளை நாம் நம் உடலைக் கிள்ளிப்பார்த்துதான் நம்ப வேண்டியதாய் உள்ளன. உலகமயச் சிந்தனைகள் நம் தலையில் ஏற்றப்பட்டபின் நாம் கனவிலும் கருதமுடியாதவையாக புதிய அறிவிப்புகளில் முதலிடம் பெறுகின்றது முப்பது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதான செய்தி. நம் தேவையும் அவசரமும் என்னவோ அவற்றை அடைய நாம் நம்மீது திணிக்கப்பட்டுள்ள எத்தகைய விலங்குகளையும் நொறுக்கிவிடலாம் எனும் செய்தியை உலகத்துக்கு எடுத்துச் சொல்லுகின்றது இந்த முதல் அறிவிப்பு.
இன்னும் நம் குழந்தைகளின் முதுகெலும்புகளை முறிக்கும் பாடப்புத்தகங்கள், அவர்களின் குழந்தைமைக்கு எதிரான கெடுபிடிகள், கடும் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தப்படுவதால் பாதிக்கப்படும் உடல்நலம், போதிய கழிப்பறைகளும் உடற்பயிற்சி மைதானங்களும் இல்லாதிருத்தல், தாய்மொழியைக் குழந்தைகளின் கைகளிலிருந்தும் கண்களிலிருந்தும் வாய்களிலிருந்தும் அகற்றுதல் போன்ற சகித்துக்கொள்ள முடியாத கல்விப் பயங்கரவாதத் தளைகள் உள்ளன. இவற்றோடு நம் துக்கத்தைப் பெருக்குகின்ற விஷயங்களில் முக்கியமானது, நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கேற்ற ஆரோக்கியமான புத்தகப் பண்பாடு இங்கு இல்லை என்பது. வாழ்க்கை வளம்பெற இலக்கியம் பங்காற்றுவதில்லை என்ற எண்ணம் நிலவுகின்றது; கல்வி தாண்டிய வாசிப்புப் பழக்கத்தைக் கைவிட்டதால், கதைப்புத்தகங்கள் வாசித்தாலும் அது நேரத்தை வீணடிக்கும் எனும் கருத்துக்கு ஆசிரியர் சமூகமும் பலியாகியிருக்கிறது. எனவே, நம் செலவினங்களில் புத்தகம் வாங்குதல் அடங்கவில்லை. வருந்தத்தக்க விதத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நூல் விற்பனை நிலையங்களே இல்லை என்ற உண்மையை நாம் காண முடியும். இதுபோன்ற அவலங்களை நீக்க நூலக இயக்கம் பயன்படும். மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த அமைச்சகம் எடுத்த முடிவு வாசிப்பற்ற தலைமுறையை வாசிப்பை நோக்கி ஈர்க்கும். தமிழ்ச் சமூகம் தன்னை விரிவாக்கிக்கொள்ள, இவற்றின் மீது கல்வித்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக அரச நிர்வாகத்தின் பலாபலன்களை எதிர்பாராமல் எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள் தம் சொந்தப் பொறுப்பில் ஏராளமான நூலகங்களை நடத்துகிறார்கள். நம் மாணவர்களின் ஆய்வுலகை விரிவுபடுத்த அரசின் பங்களிப்பையும் விட அவர்களே பேரளவில் உதவி வருபவர்கள். அநேகமாக, தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அவர்களின்மீது அரசு கவனம் செலுத்தப் போகின்றது. அவர்கள் தம் நூலகங்களைப் பராமரிப்பதற்கான செலவினங்களை அரசு கையேற்கப் போகின்றது. அதன் தொடர்பில் இன்னுமொரு நல்லசெய்தி யாதெனில், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க ஐந்துகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகும்.
கல்வித்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் தமிழகத்தை இந்திய அளவில் தரமுயர்த்திச் செல்லக் கூடியவை. தமிழக மாணவர்கள் உயர்கல்வித் தரத்தை எட்ட முடியாமல் பின் தங்கியிருந்ததின் மூலம் பல இடர்களைத் தமிழகம் எதிர்கொண்டு திணறியது. நம் கல்விச் சீர்திருத்தங்கள் இதுவரையிலும் கவர்ச்சிகரமான தன்மைக்குள் செருகப்பட்டிருந்தனவே அன்றி, ஆக்கப்பூர்வமான தழைப்புக்கு அவை உதவவில்லை. பல கல்வி நிறுவனங்கள் சுயாட்சி கொண்டிருந்ததின் காரணமாக அவை மாணவர்களை உருவாக்காமல் மாணவ எந்திரங்களை உருவாக்கி வந்தன. தனியார் நிறுவன ஆசிரியர்கள் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் அவலம் இத்துடன் இணைந்துள்ளது. தனியார் கல்விக் கூடங்கள் ஒருவித எதேச்சாதிகாரத் தன்மையுடன் குட்டி அரசுகளை நடத்திவந்துள்ளன. கல்வியின் அடிவைப்பு எதை நோக்கியதாக இருக்க வேண்டுமோ, அதற்கு நேர்மாறான செயல்பாடுகளில் ஈடுபட்டன. மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்த தமிழகக் கல்வியைத் தலைநிமிர்த்த இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்து கல்வி அமைச்சகம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. நாம்தான் பல வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்கிற அவசியமில்லாமல், அதுவே தன் முனைப்பைச் செலுத்தியுள்ளது.
அமைச்சர்களை அடக்கியாளும் தலைமைகள் மறையும்போது, சுயச் சிந்தனை கொண்ட அமைச்சரும் அவர்தம் அதிகாரிகளும் நினைத்தால் பல புலிப்பாய்ச்சல்களை நிகழ்த்திச் செல்ல முடிகிற சூழல்கள் உருவாகும். இவர்கள் கல்வித்துறைக்கு மட்டுமல்லாமல், சோம்பித்திரியும் மந்த குணம் படைத்த ஓர் அரசைத் துள்ளியெழச் செய்ய முடியும் உத்வேகத்தை அளித்துள்ளனர். இதர அமைச்சர்களும் இச்சந்தர்ப்பத்தைத் தக்கவிதத்தில் பயன்படுத்தினால் இது பொன் விளையும் பூமியாகலாம்.