சகிப்புத்தன்மை என்னும் போராட்ட முறை
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரம் அப்பாவி ஈழத் தமிழர்கள், போராளிகளை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வு தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. போரின் விளைவாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூர்வது ஒருவகையில் போருக்குப் பிந்திய அரசியல் நடவடிக்கை. இலங்கை ராணுவத்தின் மீதான போர்க்குற்றம் சார்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் விசாரணைகள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், அவர்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், புலம் பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழர்கள் இலங்கைக்குத் திரும்பி அச்சமின்றி வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குதல், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுதல், சர்வதேசச் சமுதாயத்தின் ஆதரவைப் பெறுதல், ஐநா முதலான சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தல், இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், ஜனநாயக நடைமுறைகளில் பங்கெடுத்தல் எனத் தமிழ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம்.
இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாள்வதில் தொடக்கம் முதலே இந்திய அரசு தந்திரமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கிறது. இவை தமிழர்கள் இந்திய அரசின் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பதற்கான காரணங்களாக இருந்திருக்கின்றன. 1983 ஜூலைக் கலவரம் தொடங்கி, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் காட்டிய பாரபட்சங்கள், அமைதிப்படையின் அத்துமீறல்கள், உடன்படிக்கைகளைப் போராளிக் குழுக்களின்மீது திணித்தல் என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழ் தேசியக் கருத்தியல்களை மூர்க்கமாக ஒடுக்கிய இந்திய அரசு இலங்கையின் இனவாத அரசியலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோனது. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான இறுதிப் போரில் ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவளித்தது.
தமிழ் அடையாளம், இன உரிமைகள் சார்ந்து உருவான திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் இதே அளவுக்குத் தந்திரமானவை. காங்கிரசோடும் பிஜேபியோடும் கொண்டுள்ள அரசியல் உடன்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையே அவை பின்பற்றி வந்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் உலகத் தமிழர்களின் நம்பிக்கையை முற்றாக இழந்ததன் விளைவாகவே தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. இந்திய, தமிழக அரசைச் சாராமல் ஈழத்தை வென்றெடுக்கும் நோக்கத்துடன் தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைக்க முற்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய அமைப்புகளில் பெரும்பாலானவை இந்திய அரசுமீது தீராத வெறுப்புக் கொண்டவை, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கையற்றவை. இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைச்சாலையாகக் கருதுபவை. இந்திய அரசின் கீழ் தமிழ்ச் சமூகம் பாதுகாப்பற்றதாகவும் அழிந்துகொண்டிருப்பதாகவும் கருதும் கருத்தியலை முன்வைக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் அது இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற்றுத் தனிநாடாக உருவாவதிலேயே அடங்கியிருப்பதாகக் கருதுபவை. எல்லாவகையான அரசியல், சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளையும் தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தக் கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றன.
கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு பதற்றமடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டை முன்வைத்துத் தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் அதை விரிந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். தமிழ் அடையாளத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுப்பதற்கான போராட்டமாகவும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிரான தாகவும் விரிவடைந்த போராட்டக் களத்தில் ஈழ ஆதரவு, தனித்தமிழ்நாடு சார்ந்த முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
தை எழுச்சி என அழைக்கப்பட்ட அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களில் பலர் தமிழ்த் தேசிய அரசியல் சார்பு கொண்டவர்கள் எனக் கருதிய அரசு ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கான சட்ட ரீதியான நடைமுறைகளுக்குப் பிறகு போராட்டக்காரர்களைக் கடுமையாக ஒடுக்கியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்த் தேசிய இயக்கங்களின் அரசியலுக்கு வலுவூட்டக்கூடும் என அஞ்சிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, நினைவேந்தல் நிகழ்வை ஒருங்கிணைத்த திருமுருகன் காந்தியையும் அவரது ஆதரவாளர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததன் மூலம் தனது சகிப்பின்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. எந்தவொரு தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கும் ஆதரவாகக் கருத்துகளை முன்வைப்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்யவில்லை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
ஜனநாயகவாதிகளின் கோரிக்கையை ஏற்றுத் திருமுருகன் காந்தியையும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களையும் உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான குண்டர் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளுக்கான களமாக விளங்கிவந்திருக்கும் மெரினாவில் போராட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். சகிப்பின்மை ஓர் அதிகார வடிவமல்ல, அது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு நோய்.
மே 17 போன்ற தமிழ்த் தேசிய இயக்கங்களும் சகிப்புத் தன்மையை வளர்த்தெடுப்பதில் பங்கு வகிக்க வேண்டியது அவசியம். இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் சர்வதேசச் சமூகத்திடம் நீதி கோருவதற்கும் நாம் ஜனநாயகத்தின் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகரமான, பழி தீர்க்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டியது வரலாற்றுத் தேவை. விடுதலைப் புலிகளின் கடந்தகால அரசியல், போர்த்தந்திர நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகத்தின் விமர்சனங்களுக்குள்ளாகியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை விமர்சனரீதியாக எதிர்கொள்வதும் தம்மைச் சுயபரிசோதனைக்குள்ளாக்கிக்கொள்வதும் ஜனநாயகவாதிகளின் கடமை. தமிழக இயக்கங்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட முடியும்; இங்கு யாரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக முடியாது. ஈழத் தமிழர்க்கு அறிவுரைகள் வழங்கும் தலைமையைப் பலரும் இங்கு வரித்துக்கொள்வது படு அபத்தம்.
கடந்த காலங்களில் ஈழப்பிரச்சினை சார்ந்து காலச்சுவடு ஆற்றிய இதழியல் கடமைகள் சகிப்பின்மையின் கொடிய தாக்குதல்களுக்குள்ளாகியிருக்கின்றன. மே 17 இயக்கம் சார்ந்து காலச்சுவடின் நேரடியான சில அனுபவங்களைச் சுட்டிக்காட்ட முடியும். 2009 இறுதிப்போருக்குப் பிறகு இனப்பிரச்சினை சார்ந்த பல விஷயங்களை விவாதிப்பதற்குக் காலச்சுவடு களம் அமைத்துக்கொடுத்தது. போரில் நேரடியாகப் பங்குபெற்ற தோழர்கள் சிலரது பார்வையைப் பகிர்ந்துகொள்வதற்கும் விமர்சனங்களை முன்வைப்பதற்கும் இடமளித்ததைப் போலவே சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களை, அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவதற்கும் இடமளித்தது. அப்போது தீவிரமாக இருந்த தமிழ் மீனவர் பிரச்சினை பற்றியும் விரிவான விவாதங்களை முன்னெடுத்தது. கடல்சார் அறிஞர்களில் ஒருவரான சூரிய நாராயணனின் நேர்காணல் ஒன்றை அந்த வகையில் பிரசுரித்தது. அதையொட்டி மே 17 இயக்கம் காலச்சுவடு மீது நடத்திய தாக்குதல்கள் ஜனநாயக விரோதமானவை.
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காலச்சுவடால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டமொன்று மே 17 இயக்கத்தின் அவதூறுகளால் கைவிடப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியல் பார்வை கொண்டிருந்தவர்கள். பால் நியூமன், பா. செயப்பிரகாசம், ராஜேந்திர சோழன், வி. சூரிய நாராயணன், ச. பாலமுருகன், ப்ரியா தம்பி உள்ளிட்ட ஆதரவுச் செயல்பாட்டாளர்களை கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டாமெனக் கோரிய மே 17 இயக்கம், கடிதங்கள், அறிக்கைகள் வாயிலாக நேரடியாகவே அச்சுறுத்தியது.
ஈழத் தமிழர்களின் துயர அனுபவங்களைப் பதிவுசெய்த இங்கிலாந்துப் பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசனின் ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ நூலை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த இயக்கம் 2012 ஜனவரியில் சென்னையில் அருந்ததிராய் நூலொன்றின் வெளியீட்டு நிகழ்வில் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தது. அந்த இயக்கத்தின் இவை போன்ற செயல்பாடுகளுக்கு என்ன வகையான கோட்பாட்டு நியாயம் இருக்க முடியும் எனத் தெரியவில்லை.
குறைகளுக்கப்பால் நமது மதச்சார்பற்ற சோஷலிச ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டியது. சகிப்பின்மையை வீரத்தின் அடையாளமாகக் கற்பிதம் செய்துகொள்வது ஆபத்தானது.உலகின் அறம்சார் போராட்டங்கள் ஜனநாயக அமைப்பு வழங்கிய சுதந்திரத்தின் எல்லைகளைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டுள்ளன. வன்முறையற்ற களப் போராட்டங்களும் சகிப்புத்தன்மையும் உரையாடலுமே நமது போராட்ட முறையாக இருக்க வேண்டும்; சகிப்பின்மையும் வன்முறையும் அவதூறுகளும் அல்ல.