உரிமை மறுக்கும் கீதம்
இலங்கையின் இரண்டாவது சுதந்திர தினம் 1949 பிப்ரவரி 4ஆம் நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அதற்குப் பின்னான காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டு வந்தது. ரணில் - மைத்திரி ‘நல்லாட்சி அரசு’ 2016ஆம் ஆண்டிலிருந்து இரு தேசிய மொழிகளிலும் கீதம் பாடப்படுமென அறிவித்தது. இது தமிழர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும்; இதன்மூலம் இணக்கம், ஐக்கியத்திற்கான முன்னெடுப்புகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சே குழுமம் இனி தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. 72வது தேசியதினத்தில் அதை நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை சிறுபான்மை மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கை அரசியல் அமைப்பின் மேல் அச்சத்தையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது; கடந்தகால அரசுகள் சிறுபான்மையினர் நலன்களை முன்னிறுத்தியதில்லை என்பதே வரலாறு. இப்போது ஏட்டளவிலானவற்றையும் அழிப்பதில் அரசு இறங்கியிருக்கிறது. இதன்மூலம் சிங்கள, பௌத்த ஆதாயங்களை முதன்மைப்படுத்தி ஒற்றை இன, மொழி, மத நலன்களே முன்னெடுக்கப்படும் என்பது வெளிப்படை. இந்தச் செயல்பாடுகள் மூலம் பெரும்பான்மை இன, மதமே தனக்குப் பிரதானமான தென்று அரசு எண்ணுகிறது. சிறுபான்மையினர் மைய விவகாரங்களிலோ தேசிய அரசியலிலோ உரிமைகோர முடியாது எனும் நிலைப்பாட்டை அரசு கைக்கொண்டுள்ளமை அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.
தமிழில் தேசியகீதம் பாடப்படுவதால் தமிழர்களுக்கோ, தமிழ் முஸ்லிம்களுக்கோ, இதர சிறுபான்மை மக்களுக்கோ உடனடி லாபங்கள் ஏற்படப்போவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால அரசியல் முரண்கள், பிடிவாதங்கள், மத இன மேலாதிக்கக் கட்டுமானங்களை விட்டு இறங்கிச் சிறுபான்மை மக்களுடன் உரையாடலைத் தோற்றுவிப்பதான பாவனையை ‘நல்லாட்சி அரசு’ உருவாக்கியது. ஆனால் தற்போதைய அறிவிப்பும் செயல்பாடும் அரசு எந்தவிதத்திலும் சிறுபான்மையினருடன் இணக்கம் கொள்ளத் தயாராக இல்லையென்பதையே காட்டுகிறது.
1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசால் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டங்கள், கலவரங்கள், கொலைகள், காணாமல்போதல்கள், அச்சுறுத்தல்கள் என்று மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு அழிமதிகள் ஏற்பட்டன. சிங்களவர்-தமிழர் இடையே ஏற்பட்ட முதல் சட்ட முரண் இது. தனிச் சிங்களச் சட்டத்துக்கெதிராக எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு கல்வி, போட்டித் தேர்வுகள், அலுவலக மொழி, வடக்கு-கிழக்கில் அரச நடவடிக்கைகளுக்குத் தமிழ்ப் பயன்பாடு எனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1978ஆம் ஆண்டு 13ஆம், 16ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் அரசமொழிகள் பற்றிய அடிப்படைச் சட்டத்தில் சிங்களம், தமிழ் இரண்டு தேசிய அலுவலக மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் ‘நல்லாட்சி அரசு’ தமிழில் தேசியகீதம் என்ற இணக்க நடவடிக்கையை முன்னெடுத்தது.
நாட்டில் பிறந்த அனைவருக்கும் மொழியுரிமை அடிப்படையானது. தமிழில் தேசியகீத மறுப்பு அடிப்படை உரிமை மீறலாகவே கருதப்படும். ஒரு மொழியைப் பிரதானப்படுத்திப் பல்லின, மத மக்கள் வாழும் தீவைத் துண்டாட நினைப்பது இலங்கை அரசு எழுபது வருட வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
கோத்தபய அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாப்புப் பரப்புரைக்காகத் தெருவோரச் சுவர்களில் வரைந்த ஓவியங்கள் இனவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும்படியும் சிறுபான்மைச் சமூக மக்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சிங்கள அரசர்கள், அவர்களின் பெருமிதங்கள், வாள்வீச்சுகள், வெற்றிக்கூச்சல்கள் ஆகியவற்றையே இவை சித்தரிக்கின்றன. அதேபோல் தமிழ்ப் பெண்கள் கடவுச்சீட்டுக்கு பொட்டு வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற அதிகாரபூர்வமற்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இவையெல்லாம் சிறுபான்மை தேசிய மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதற்கான தாக்குதல்களே. சர்வதேச அளவில் இன்றைக்கு நிகழக்கூடிய பெரும்பாலான போராட்டங்கள் ஒற்றைமையத்துக்கு எதிரானவையாய் இருப்பதை இலங்கை அரசு உணரவே இல்லை.
பெரும்பான்மை மக்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் தேர்தல் நலன்களை முன்னிருத்தி சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துவது ராஜபக்சேக்களின் அரசியல் தந்திரத்தின் செயல் வடிவமாகும். இவர்களின் அரசு நவீன ஜனநாயகத் தத்துவத்தை மதிக்கவும் இல்லை, அதன் முக்கியத்துவத்தை உணரவும் இல்லை. அவர்கள் மன்னராட்சி முறைக்குத் திரும்ப நினைக்கிறார்கள். இப்போக்கு ஜனநாயக முறைக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். சிறுபான்மையினர் தனியாக இல்லை. அவர்களும் சிங்கள மக்களோடு இணைந்தே இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்கள்மீது அரசு மேற்கொள்ளும் வல்லாதிக்கப்போக்குகளைக் காலப்போக்கில் சிங்கள வாக்காளர்களுமே விரும்பமாட்டார்கள். இனவாத நலன்களையும் அதிகாரத்தையும் கைக்கொண்டு நிலைத்த மன்னர் ஆட்சிக்கு அடிகோலும் காலம் இதுவல்ல.
இலங்கை அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ச 2020 பிப்ரவரி 7ஆம் தேதி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பு, தமிழர்களுடனான இணக்கத்தை ஏற்படுத்துதல், மீனவர்கள் பிரச்சினைகள் போன்றவை குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. “ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும். அமைதியாக வாழ்வதுடன், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றுமென்று நம்புகிறேன்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து நேர்காணல் அளித்த மஹிந்த “இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு. இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தி, பாதுகாப்பு குறித்துப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், தங்கள் நாட்டுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் நலன்பற்றிய மோடியின் கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதை இந்தக் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
இதற்கு முன்பு ஜனாதிபதிப் பொறுப்பேற்றவுடன் இந்தியா வந்த கோத்தபய ராஜபக்சேவிடமும் இதேபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கை அரசு அதற்கும் எவ்வித முக்கியத்துவமும் அளித்ததாகத் தெரியவில்லை.
பிராந்தியத்தில் பலமான அரசாக இருக்கும் சீனாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணும் குடும்பத்தினராக ராஜபக்சேக்கள் இருந்தார்கள். இலங்கையின் அறுபது வீதமான கடன்தொகையைச் சீன அரசிடமிருந்து இலங்கை அரசு பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கான இலங்கைப் பிரதமர் வருகைகூடக் கடனுக்கான கெடுவை நீட்டிப்பதற்கே என்று பிபிசி தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்திய அரசும் தன் அதிகார நலன்களை முன்னிருத்தி இந்த அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறதே ஒழிய சிறுபான்மையினரின் நலன்களைப் பேணுவதற்காக அல்ல என்பது வெளிப்படை.
முழுமையான சிங்களப் பௌத்த மேலாதிக்க அரசை நிறுவி அரசியல், அதிகார ஆதாயங்களைத் தேடிக்கொள்வதில் மிக நேரடியான நிலைப்பாட்டை கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. முந்தைய அரசுகளின் வழிமுறையிலேயே தொடரும் இந்த விலக்கிவைப்பு சிறுபான்மையினரிடம் அரசுமீதான அவநம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்.
பூகோளரீதியான பொருளாதார அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு நிலப்பகுதியில் அன்றாட இனக்குழப்பங்களும் முரண்களும் சிறுபான்மைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மிகக் கடுமையான பாதுகாப்பற்ற சமூகமாகவே உணரச் செய்யும். இதை நிரூபிக்கும்வகையில் அமைச்சர்களின் தொடர்பேச்சுகளிலும் பரப்புரைகளிலும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புகளும் வெளிப்பட்டவாறே இருக்கின்றன. இந்தச் சமநிலையற்ற நிலை மத, இனவாதத் தரப்புகளுக்கு உரம் அளிக்கும். இந்த அடிப்படைவாதத் தரப்புகளின் எதேச்சதிகார நடவடிக்கைகள் நாட்டின் அமைதிமீது நிகழ்த்தப்பட்ட உளவியல் போர் என்றே கருதவேண்டியிருக்கிறது. தொடர்ந்து நடத்தப்படும் இந்த உளவியல் தாக்குதல் புலம்பெயர்ந்த சமூகத்தினரிடமும் என்றைக்குமே திரும்பமுடியாது என்ற அந்நியப்படுத்தப்பட்ட நிலையை உருவாக்கும்.
இலங்கை அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கைக் கண்டிப்பதும் அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வைப்பதும் இந்தியாவினதும் சீனாவினதும் அவசியமான பணிகள். ஆனால் இன்றைய இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் நிகழ்ந்திருக்கும் அரசியல் திருப்பமும் இந்துத்துவ அரசியலும் இதற்கான முன்னெடுப்பைச் செய்யுமென்று நம்ப முடியாது. இறுக்கமான ஒற்றை நெறியைப் பரப்புவதிலும் வரலாற்றைத் திரிப்பதிலும் இந்திய - இலங்கை அரசுகளுக்குள் அதிக வேறுபாடுகள் இல்லை.
75 விழுக்காடு சிங்கள மக்கள் வாழும் நாட்டில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசில் 92 வீதமானோர் சிங்களம் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்கள். கோத்தபய அரசு தன்னை அறுதிப்பெரும்பான்மைச் சிங்களமக்களின் அரசு என வெளிப்படையாகவே பிரகடனப்படுத்திச் செயல்பட்டு வருகிறது. சிங்கள பௌத்த வாக்காளர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவராக பதவியேற்பு விழாவிலே அறிவித்த கோத்தபய அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?