பெண்ணின் பெருங்கதை
உரை
பெண்ணின் பெருங்கதை
வே. வசந்தி தேவி
பெருமாள் முருகனின் அம்மா. முருகன் அம்மாவில் உருவானவர்; அம்மாவால் உருவாக்கப்பட்டவர். அவர் வார்த்தைகளில் சொன்னால், “அம்மாவின் சொற்களில் பேசுகிறேன்; அம்மாவின் கைகளால் வேலை செய்கிறேன்; அம்மாவின் மூளையால் சிந்திக்கிறேன்; அம்மாவின் இதயத்தால் சுவாசிக்கிறேன்.” மறைந்த பின்னும் அவர் வாழ்வில் தோன்றாத் துணையாய்த் தொடர்பவர். இப்புத்தகம் தாய்க்கு மகனின் காணிக்கை.
இந்நூல் அவரது அம்மாவைப் பற்றியது மட்டுமல்ல; மறைந்துவிட்ட, மறைந்து வரும், மறையாமல் தொடர்ந்தும் வரும் ஓர் உலகைத் தத்ரூபமாக, மிகைப்படுத்தல் இன்றி, நம் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தின், அதன் விவசாய சமுதாயத்தை, அந்த உலகின் அழகை, எளிமையை, நுகர் கலாச்சாரம் இன்னும் ஆக்கிரமிக்காத எளிமையை, மிகைக்கற்பனை ஆக்காமலும் கருத்துவாக்காமலும் விவரிக்கிறார். இளமைப் பருவத்தை, அம்மாவின் அரவணைப்பிலேயே அவர் முந்தானையில் முகத்தைப் புதைத்துக் கொண்டே, வளர்ந்த நாட்களின் சுகத்தை ஏக்கத்துடன் நினைவுகூர்கிறார்.
பெருமாள் முருகனை ஆட்கொண்டிருக்கும் அந்தத் தாய் தன் குடும்பத்தை ஆலமரமாய் அணைத்து வளர்த்துக் காத்தவள். ‘பெண்’க்கு இந்திய சமுதாயம், இந்திய மரபு கொடுத்திருக்கும் அனைத்து இலக்கணங்களையும் மீறியவர். எந்தப் பேழையிலும் அடைக்க முடியாத பிரபஞ்சம் அவர். பெண்ணடிமை / ஆணாதிக்கம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் அளக்கும் சில குறுகிய பெண்ணிய சித்தாந்தங்களும் உடைபடும் பெருங்கதை இவரது.
பெண்ணிய இயக்கம் உருவாக்கிய வாக்கியம், “We hold up half the sky. வானத்தின் பாதியை நாங்கள் தாங்குகிறோம்.” வானத்தின் பாதியை அல்ல, முழுவதையும் தாங்கி நிற்கும் பெரும் பெண் ஆளுமை அவர்.
இன்று ஒற்றைக் கலாச்சாரமாகச் சித்திரிக்கப்படும் இந்தியாவில், பெருமளவுக்கு அவ்வாறே மாறிவிட்ட சமுதாயத்தில், சமீபகாலம்வரை பெண்ணின் நிலை, அவளது உரிமைகள், அவளுக்குக் கிடைத்த வெளி, ஒவ்வொன்றிலும் பெரும் வேறுபாடுகள் இருந்தன. சென்ற நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகள்வரையும் கூட நீடித்திருந்த ஒரு உலகமும் இருந்தது. அந்த உலகத்தின் மகத்தான ஆளுமை அவர்.
புத்தகம் மானாவாரி விவசாயப் பூமியின் வாழ்வைச் சொல்லுகிறது. வானம் பார்த்த பூமியின் ஓய்வற்ற உழைப்பு, அள்ளித் தருகின்ற இயற்கை அல்ல; மனித உழைப்பைப் பிழிந்து கறக்கும் மண். அதில் ஓயாத உழைப்பே தன் வாழ்வின் ஒரே தர்மமாக ஏற்றவர் இந்தத் தாய். இயக்கமே வாழ்க்கை. அவர் தூங்கியே யாரும் பார்த்ததில்லை. ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தனதாக்கிக் கொண்டவர். ஏற்றம் இறைத்தல், ஏர் உழுதல், வண்டி ஓட்டுதல் அனைத்தும் அவருக்குத் தெரியும். இறுதி நாட்களில் பார்கின்சன் நோயில் கிடந்தபோதும், கையில் கிடைத்ததை வைத்துச் சுவர்களைச் சுரண்டிச் சுத்தப்படுத்துகிறார்.
மானாவாரி விவசாய உலகில் ஆடுமாடுகள்தான் பெருஞ் சொத்து; பிரியாத் துணை. அவற்றுடன் பின்னிப் பிணைத்த வாழ்வை முருகன் அழகாக விவரிக்கிறார். ஆடு மாடு என்றால், அவற்றை விட்டுவிட்டு ஒரு நாள்கூட வெளியில் தங்க முடியாது. அம்மா எங்கு போனாலும் இரவு ஓடோடி வந்துவிடுவார். இரவில் அவற்றின் கொட்டிலிலிருந்து வரும் சிறு சத்தத்திற்கும் செவிசாய்த்தவண்ணமே எப்படி அம்மா தூங்குவார் என்பதைச் சொல்கிறார். “ஆடு இல்லாமல் அம்மாவால் இருக்க முடியாது.”
சிறு வயதிலிருந்து அடுக்கடுக்காக வந்த துயரங்கள், சோதனைகள், பெரும் இழப்புகள், தாயைச் சிறு வயதில் இழந்தது, முதல் மகனின் தற்கொலை அனைத்தையும் இதயத்தின் அடியில் புதைத்துவிட்டு, உழைப்பிலேயே அடைக்கலம் கொண்டு வாழ்ந்து காட்டுகிறார். அசையாத தன்னம்பிக்கை, இரும்புபோன்ற மன வலிமை. அவரது கடைசிக் காலத்தில் தன் பேத்தியிடம் சொல்கிறார், “எப்போதும் தைரியமாக இருக்கணும்.”
அம்மாவிடம் இருக்கும் ஆச்சரியமான பண்பு. தன் மண்ணில், அதன் மரபில் வேர்கொண்டிருந்தவர். ஆனால் தன் சூழலை மீறிய சில வியத்தகு பரிமாணங்கள் அவரிடம் இருந்தன. அவரது மருமகளின் - முருகனின் மனைவியின் முன்னுரையிலும், மற்ற கட்டுரைகளிலும் அவை காணக் கிடைக்கின்றன. சில மூட நம்பிக்கைகளை விடுத்தவர்; ஒரு சில, விவசாய வாழ்க்கை முறையிலேயே இல்லாமல் போனவை. தீட்டு பற்றிய மூட நம்பிக்கைகள், பல புனிதப்படுத்தல்கள் இல்லாத வாழ்க்கை, கடவுள் நம்பிக்கையும் ஆட்டிப் படைக்காமல், குறைந்தபட்சமாகவே இருந்தது. மதம், சம்பிரதாயம், சடங்குகள் என்ற கட்டுத் திட்டங்கள் விதிக்காத இந்த மாமியார், மருமகளும் மெச்சியவராக வாழ்ந்தவர்.
கடுமையான உழைப்பினால், சிறுகச் சிறுகச் சேர்த்துக் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறார்; ஆனால் தேவைக்கு மேல் எதையும் அனுமதிக்காத கண்டிப்பு; சாப்பாட்டிலிருந்து அனைத்திலும் அந்தக் கண்டிப்பு. “அளவா இருந்தாத்தான் ருசி கூடும். அதும் பத்தாமப் போச்சுன்னா இன்னும் ருசி.” நான்கு புடைவைகளில் தன் தேவைகளைச் சுருக்கிக்கொள்கிறார்.
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை ‘உழுதவன் கணக்கு’. விவசாயத்தில் எது வரவு, எது செலவு என்று தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் விவாதம். இன்று விவசாயம் வாழ்வளிப்பதா, ஆதாயமளிப்பதா என்ற பெரும் விவாதம் இந்தியப் பொருளாதாரத்தின் முதல் பிரச்சினையாகி இருக்கும்போது, விவசாயத்தின் ஆன்மாவைத் தொட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. அம்மா சொல்கிறார், “உழுதவன் கணக்குப் பாத்தா உழுக்கோல்கூட மிஞ்சாது . . . எள்ளுப் பூ பூத்திருந்தப்பக் காடே வெள்ள வெளேர்னு மலர்ந்து கிடந்துதே . . . அதப் பாத்ததுக்குக் காசு போடு பாப்பம்.”
ஒவ்வொரு கதையும் ருசிகரமாக, பல சமயங்களில் மனத்தை உருக்குவதாக அமைந்திருக்கிறது. கணவன் இறந்தவுடன், அம்மா விதவைக் கோலத்திற்கான வெள்ளைச் சேலை உடுத்தியதின் சோகத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர்ந்து, அதைத் தடுக்கவில்லையே என்று மனம் வருந்தும் முருகன். இப்படிப் பல.
குடிகாரக் கணவன் அவளை உருட்டி மிரட்டியும், ஆழ்ந்த அன்பு செலுத்தியும் வாழ்ந்த கதை.
முதல் கவிதை பிறந்த கதை, உழுதவன் கணக்கு, இரும்புக் கைவிலங்கு என்று பல என்னை நெகிழ வைத்த, என் வாழ்வின் பழம் நினைவுகளுக்கும் இழுத்துச் சென்ற புத்தகம்.
மொழிபெயர்ப்பு
ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்திருக்கும் தோழியர் நந்தினி முரளி, கவிதா முரளீதரன் இருவருக்கும் என் பாராட்டுகள். மூலத்தின் எளிய அழகை, செறிவு மிக்க அழகைப் பெருமளவுக்குச் சிதையாமல் அளித்திருக்கின்றனர். இது எளிதே அல்ல. மொழிபெயர்ப்பாளர் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது. ஒரு மொழி அதன் கலாச்சாரத்தின் பிரதிபிம்பம். அதிலும் இப்புத்தகம் ஒரு பிராந்தியத்தின் கிராமிய வாழ்வைப் பேசுவது. அதை மற்றொரு மொழிக்கு மாற்றுவது பெரும் சவால். ஒரு சில இடங்களில் கொஞ்சம் நெருடுகிறது. சில சொற்களைத் தமிழிலேயே சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
பெருமாள்முருகனின் ‘தோன்றாத் துணை’ (காலச்சுவடு வெளியீடு) நூல் ஆங்கிலத்தில் வெஸ்லேண்ட் பப்ளிகேஷன்ஸால் ‘Amma’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு விழா 15, பெப்ரவரி 2020 அன்று சென்னை ஒடிசி புத்தக மையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நூலை வெளியிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி ஆற்றிய உரை.
மின்னஞ்சல்: vasanthideviv@gmail.com