மண் விடுதலை வேண்டும்
பதிவு
மண் விடுதலை வேண்டும்
மு. ராஜ்மல்
திருவள்ளூர் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியான பழவேற்காட்டில் பிப்.16 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:30 மணிமுதல் 7:30 மணிவரை மீன் ஏலக் கூடம் அருகில் சென்னை கலைத் தெரு விழா நிகழ்த்தப்பட்டது.கலைகளுக்குச் சாதியில்லை மதமில்லை எனச் சமத்துவம் பேணும் வகையில் டி.எம். கிருஷ்ணா முன்னெடுத்த முயற்சி இது.
‘கோஸ்டல் ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்பு கடற்கரைக் கிராமங்களின் பிரச்சினைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நித்யானந்த் ஜெயராமனும் குழுவினரும் அப்பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆய்வுசெய்து அங்குள்ள குழந்தைகளையும் பள்ளி மாணவர்களையும் இணைத்துக் கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் பழவேற்காடு பஜாரில் விண்ணைத்தொடும் அளவிற்கு ஒலித்த பறைஇசையோடு நிகழ்வு தொடங்கியது. உழைக்கும் கரங்கள் எம்ஜிஆர் சிலம்பு பட்டறைக் கழகத்தால் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. பிறகு பழவேற்காடு பகுதி செம்பாசிப்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அந்தப் பகுதியின் பெருமைகளையும் வரலாறுகளையும் அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளால் வரப்போகின்ற ஆபத்துகளையும் மழலைக் குரல்களால் மக்களுக்கு எடுத்துரைத்தது. அவர்களின் நையாண்டிகள் பார்வையாளர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
அதானி எனும் கார்ப்பரேட் முதலாளியால் வரப்போகும் ஆபத்தை உணர்ந்த பழவேற்காடு பள்ளி மாணவர்கள் நாடக வடிவில் நடனம் ஒன்றை உருவாக்கிப் பாடல் இயற்றி இசையமைத்துப் பாடி ஆடினார்கள்.
“அதானி கொஞ்சம் நிதானி..
அதானி கொஞ்சம் நிதானி.. பழவேற்காடு மக்கள் என்ன
அவ்வளவு இளப்பமா..
அதானி கொஞ்சம் நிதானி”
எனப் பாடிய பாடல் பழவேற்காடு மக்களின் உணர்வாய்ப் பிரதிபலித்தது.
2010ஆம் ஆண்டு பழவேற்காட்டையடுத்த காட்டுப்பள்ளி குப்பத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம் லி&ஜி. சுமார் 434 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்தும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த மக்களை வேறுபகுதிக்கு இடம்மாற்றியும் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதானி என்ற தனிநபரின் பெரும் லாபத்திற்காகவும் பேராசைக்காகவும் 6111 ஏக்கருக்கு நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காகப் பூர்வீகப் பழவேற்காட்டு மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
சுற்றுப்புறக் கிராமத்தினர் அதானியின் லி&ஜி கப்பல் கட்டும் தளத்தில், ஒப்பந்ததாரர் அடிப்படையில் கூலி வேலை பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் செய்துவந்த பாரம்பரியமான மீன்பிடித் தொழில் கொஞ்சம்கொஞ்சமாக அழிகின்றது.
அதானியின் இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளின்படி தொள்ளாயிரம் பேருக்கு முதல் கட்டமாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்; மாதச் சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாயாகும். அந்த வாக்குறுதிகள் காகித்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வெறும் 253 பேருக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டுப் பிறகு அது 163 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கூறிய சம்பளமும் கொடுக்கப்படவில்லை. 3800 ரூபாயில் தொடங்கியது அவர்களின் மாதச் சம்பளம்.
வறுமை தாளாமல் சம்பள உயர்வுக்காகப் போராடிச் சிறை சென்றதுதான் மிச்சம். ஏமாற்றங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அம்மக்கள் பழவேற்காடு மண்ணைவிட்டு இடம்பெயரத் தயாராக இல்லை. இவற்றை மனத்தில்கொண்டு மாணவர்கள் இந்நிகழ்ச்சியை உருவாக்கியிருந்தனர். திரைக்கலைஞர்களாய் இருக்கும் காஸ்ட்லஸ் கலெக்டிவ் குழுவைச் சேர்ந்த பாலசந்தர், முத்து, கலைவாணி ஆகியவர்களால் பாடப்பட்ட கானா பாடல்கள் சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, மாட்டிறைச்சிப் படுகொலை எதிர்ப்பு என அமைந்தன. அம்பேத்கர் புகழைப் பாடும்போது அனைத்துச் சமூகத்தைச் சார்ந்த பார்வையாளர்களும் உற்சாகத்தையும் கைத்தட்டலையும் வெளிப்படுத்தினர். பறை இசையில் தொடங்கி சிலம்பம், வில்லுப்பாட்டு, கானாப் பாடல், கும்மி, ஸ்ரீதேவி நேத்ராலயா நடத்திய பரத நாட்டியம் எனப் பல்வேறு சமூகக் கலைகளும் ஒரே மேடையில் அரங்கேறின.
கூடித் தேர் இழுக்கும் வகையில் லைட் ஹவுஸ், கோட்டைக் குப்பம், பழவேற்காடு, தாங்கல் என நான்கு பஞ்சாயத்துகளின் கிராம நிர்வாகிகளும் இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்த புரட்சிகரமான நிகழ்வாய் இது அமைந்தது.