எழுத்தின் இனவரைவு
மதிப்புரை
எழுத்தின் இனவரைவு
தேவமைந்தன்
கிராவின் கரிசல் பயணம்
(கட்டுரைகள்)
பக்தவத்சல பாரதி
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. ரோடு, நாகர்கோவில் 1
பக். 256, ரூ. 275
‘கிராவின் கரிசல் பயணம்’ என்கிற இந்தப் புத்தகம், வாசிக்க வாசிக்க இனவரைவியல் அறிவை உருப்பெருக்கித் தந்தது. பக்தவத்சல பாரதி உருவாக்கிய - ‘பண்பாட்டு மானிடவியல்’ பற்றியும்; ‘தமிழர் மானிடவியல்’ குறித்தும் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ குறித்தும் வலைத்தளங்களில் எழுதியிருக்கிறேன். ஆனால் பக்தவத்சல பாரதியின் சிற்சில நூல்களைப் பார்க்கிற வாய்ப்புக்கூட எனக்கு இல்லாமல் போயிற்று. ‘இலங்கை இந்திய மானிடவியல்’ ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற இரண்டு நூல்கள் அச்சிலவற்றுள் அடங்கும். இவரிடத்தில் பேசிவழிப் பேசிய பொழுதில்தான், ‘சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்’ என்ற இவருடைய முகமையான புத்தகத்தையும் தெரியவந்தது.
‘கி.ரா.வின் கரிசல் பயணம்’ புத்தகத்தை நண்பர் நாயகர் புத்தகக் காட்சியில் வாங்கிவந்து விருப்பமுடன் தந்தார். இரண்டு சால் ஓட்டியும் நிறைவடையாமல் பொழுதுபோன பின்னாலும் வாசிப்புழவு செய்தவண்ணம் இருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் வெளியீடு, இதன் எழுத்துப் பிரம்மனின் எழுத்துகளுடன் தோளோடு தோள் சேர்த்துச் செல்வதையும் உணர்கிறேன். 253ஆம் பக்கத்திலே பக்தவத்சலபாரதி தன்னுடைய பின்னுரையை, அதாவது நூலுக்குள்ளான ஒட்டுமொத்தமான தன்னுடைய முடிப்புரையை நிறைவுசெய்யும்போது, எனக்கொரு விளக்கமுடியாத பெருஞ்சோர்வு உண்டானது. இந்தச் சோர்வு சிறிதே முரணும் வியப்புக்கும் இடம் தருவது. சில புத்தகங்களைப் படிக்கும்பொழுது, “முடியாதா, இந்தப் புத்தகம் சட்டுப்புட்டென முடியாதா,” என்ற சோர்வு போல்வதன்று இது. பகரமாக, “ஐயோ, இந்தப் புத்தகம் முடிந்துவிட்டதே,” என்ற வெறுமையால் விளையும் சோர்வு. பொது வாசிப்புக்கான புத்தகமா இது என்றால்... நம்முடைய பாரதி எழுதியபடி பார்க்கும்போது - இந்தத் துறையிலுள்ள இளைஞர்கள், குறிப்பாக மற்றவர்களை விடவும் இனவரைவியல் துறையில் ஈடுபடக் கூடியவர்களே இதைப் படிக்க வேண்டும். முழுமையாக ஆழம் கண்டு வாசிக்கக்கூடிய அனைவருக்குமே இது சொத்து. நுனிப்புல் மேயும் வழக்கம், இன்றைய சமூக வலைதளங்களால் - இளைஞர்களுக்குள் மிகவும் ஆழமாக வேரூன்றிவிட்டது. ‘எழுத்துகளாலான இரண்டுவரிகளுக்கு மேல் ஈடுபாட்டுடன் படிக்கமாட்டேன்,’ என்று அடித்துச் சொல்லுகிற தலைமுறை உருவாகிவிட்டது. ‘நீயே சுருக்கமாகச் சொல்... எங்களுக்கு வேறு வேலை இல்லையா,’ என்று கேட்கும், இலேசானவற்றை மட்டுமே விழையும் மொபைல் மூளைகள் மிகுந்துவிட்ட தலைமுறை நிகழ்கிறது. ஆனால் இந்தப் புத்தகம், வேலையற்றுப் பொழுதைப்போக்க விரும்புபவர்கள் தொட முடியாததுதான். மிக ஆழமான ஒரு தரிசனம், அளவற்ற அகலமுடைய காட்சியைத் தேடும் வாசகருக்கு உரியது. கனபரிமாணமற்ற இயற்கை அனுபவம் நிரம்பியதொரு படைப்பாளியின் விசுவாசத்தைக் குறித்த வினாக்குறி வியப்புக் குறியாகவே மாறிப் போகும் அதிசயம் இந்தப் புத்தகத்தில் நிகழ்ந்துள்ளது. பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்லாமல், வரையறுக்க முடியாத படைப்பாளியின் நோக்கினை/கோட்பாட்டை சுதேசி இனவரைவியல் அடிப்படையில் ஆவணப்படுத்துவது இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
கி.ரா.வின் மொழியிலும் எழுத்துகளிலும் நம்முடைய தமிழ் நிலமும் நீரும் நிலைத்திணை வகைகளும் விலங்கினங்களும் மக்களும் சாதிகளும் வரலாறும் கிராமங்களும் (இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்) பொலிவதை ஆய்ந்து விளங்கப்படுத்தும் நூலிது. குறிப்பாக, மஞ்சள்நீர்ச் சடங்கு பற்றிய எனக்கிருந்த பெரும் குழப்பம், பக்தவத்சல பாரதியின் இந்தப் புத்தகத்தில் வரும் ‘பூப்பும் பதின்பருவமும்’ என்ற இயலால் துப்புரவாகத் தீர்ந்தது. சாதி வேறுபாடு இல்லாமல்~ வெள்ளாளர், மற்ற சாதிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மாமன் மச்சான் உறவு கொண்டாடும் அதிசயம் இதிலே விளக்கமாகிறது. பால், பாலியல், பாலுறவு தொடர்பான செய்திகளைப் பேசவே கூச்சப்பட்டு வாழ்க்கையைத் தொடுதிரைமேல் தொலைத்துப் போகவிடுகின்ற இந்தத் தலைமுறைக்கும் ஆசானாக கி.ரா. விளங்குவதைக்கூட இனவரைவியல் அடிப்படையிலேயே பக்தவத்சலபாரதி வெளிப்படுத்துவதுடன் ஆவணப்படுத்தியுமிருக்கிறார். விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்த காலம் மாறி இன்றைக்கு விவசாயிகளே வாழ்வாதாரம் தேடுகிற நிலை உருவாகிவிட்டதையும் கி.ரா. வழிநின்று பதிகிறார். ‘குடியானவர்’ என்று நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய மெய் நிலையை அறியாமல் தடுமாறி, திரிபுக் கலாச்சாரத் திகைப்பூண்டை மிதித்து நிற்கிற நம்மை, உண்மையில் நாம் யார் என்று கி.ரா. வழிவிலகாமல் அடையாளப்படுத்துகிறார்.
கி.ரா.வின் இசை ஞானத்தை மிக ஆழமாக, வரைவுக் கோட்பாடுகளை மீறாமலும் வெறும் முகத்துதியாக மொழியாமலும் இசைஞானம் வந்ததை ஆய்வுரீதியாக நின்று பக்தவத்சல பாரதி விளக்கும் இயல் பேரற்புதமானது. எனக்கு இதுவரை தெரியாத பல செய்திகளை அதில் நான் கண்டுகொண்டறிந்தேன். சுரங்கத்துக்குப் பக்கத்தில் இருந்துவிடுவதாலேயே அந்தச் சுரங்கத்தை அளவீடு செய்துகொள்ள முடியுமா என்ன? அதை ஒரு சுரங்கவியல் நுட்பமறிந்தவர் விவரிக்கும் பொழுதுதானே அறிந்துகொள்ள முடியும்.
அதுபோலவே இன்னொன்று, தான் பயன்படுத்திய, இன்றும் கரிசல் மக்கள் புழங்குகிற கரிசல் நிலச் சொற்களை அகராதிப்படுத்தி, மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து ‘வட்டார வழக்கு அகராதி’ உருவாக்கியதன் மூலம் சிறந்த அகராதித் தொகுப்பாளராகவும் கி.ரா. திகழ்வதை ஆய்வியல் அடிப்படையில் பாரதி இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். அண்ணல் காந்தியினுடைய கனவிலிருந்து கி.ரா.வின் நனவுவரை சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் சீரழிந்து கிடக்கும் எளிய கிராம மக்களை இனவரைவியல் ரீதியாக வகைப்படுத்தவும் தவறவில்லை. புதியதொரு புத்தகமெழுதியல் முறை வகுத்துக்கொண்டு, ஒவ்வோர் இயலுக்குமானதொரு பின்னுரை வகுத்து, அவ்வவ்வியலின் கருத்துகளைச் சுருங்கத் தொகுத்து நமக்கு நல்கிவிடுகிறார் பாரதி. அப்படியும் நிறைவடையாமல், நூல் இறுவாயில் நூலின் புறநடையாக, பாரியதொரு பின்னுரையை உருவாக்கி வைத்திருப்பதிலும் பக்தவச்சல பாரதி உயர்ந்து நிற்கிறார். பள்ளிக்கூடம் தொடர்பான கி.ரா.வின் கல்விநிலை மெய்ம்மை, சிறிய வயதிலேயே உறவுகள் ரீதியாகவும் உடம்பு ரீதியாகவும் உற்ற கொடுமை, வெள்ளெழுத்துப் பார்க்கிற வயதில் புதிதாய் இலக்கிய உலகில் விழுந்து எழுதத் தொடங்கிய படைப்புத் தொடக்கமும் தொடர்தலும், இயற்கைத் தாயிடம் பெற்றுக்கொண்ட தவஞானம், ரசிகமணிபால் கொண்ட ஈர்ப்பு நிலைநிற்றல், கி.ரா.மறுவாசிப்பில் நண்பர் பஞ்சாங்கம் எட்டிய நிலை மேலும்கூடிப் பெருக்கெடுத்தோட வேண்டிய பேரகத்தியம், தொகுப்புகளில் பேரா.சிலம்பு நா.செல்வராசுவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு, கி.ரா.முறையியல், கி.ரா.வின் மொழிச் செயல்பாடு, கடிதமெழுதுவதிலும் கி.ரா.வின் தனிப்பாடுகள்; கைநமைச்சல் தீர அவர் எழுதிக் குவித்த கடிதங்கள் குறித்த தீப. நடராஜனின் ஆவணம், தன் மண்ணிலிருந்து உயிர்த்தெழுந்துகொண்டேயிருக்கும் கி.ரா.வின் வாய்மொழி மரபு, ‘கிராமமற்ற கி.ரா.’ என்ற கருதுகோளின் முழுமையான இன்மை கிராமவியல் கலாச்சாரத்தினூடு கி.ரா.வின் தொடர் தன்னிருப்பு எல்லாவற்றையும் பக்தவத்சல பாரதி பேய்வலிமையுடன் இப்புத்தகத்தில் அழுந்தப் பதித்துள்ளார்.
இரத்தினச் சுருக்கமாக மொழிந்தால் கி.ரா.வின் கரிசல் இருப்பெனும் உன்னதத்தை, இனவரைவியல் நோக்கில், ‘முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந்தாங்கு,’ கி.ரா.வை வாசிக்கும் விசுவாச வாசகர்களின் ஆழ்மனத்துள் அடுக்குக் கல்வெட்டுகளாய்ச் செதுக்கிவிட்டார் முனைவர் பக்தவத்சல பாரதி.
மின்னஞ்சல்: karuppannan.pasupathy@gmail.com