சைவதூஷண பரிகாரம்: யூதர்கள் சைவர்களான கதை
கட்டுரை
சைவதூஷண பரிகாரம்: யூதர்கள் சைவர்களான கதை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஜனவரி, ஆண்டு 1856. காலனிய யாழ்ப்பாணத்தில் ஊழியம் செய்த மெதடிஸ்த பாதிரியார் ஒருவருக்கும் காலனியாக்கப்பட்ட குழப்படிக்காரர் ஒருவருக்கும் கடுப்பான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. உடனடித் தூண்டுதலான காரணம் இந்த குழப்படிக்காரர் பதிப்பித்த சிறு நூல். இறையியல் எறிகுண்டான இந்தப் பிரசுரம் பாதிரியாரின் மதப்பரப்பலுக்குத் தடையாகவிருந்தது; அதுமட்டுமல்ல கிறிஸ்தவத்தின் அடிப்படைச் சித்தாந்தக்கூறுகளை விசாரித்தது. பாதிரிகளின் இரட்டைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஆண்டைகளுக்கு வரும் ஆணவத்துடனும் ஆத்திரத்துடனும் எழுதிய கடிதம், மேலோர் கீழோரிடத்தினருக்குக் காட்டும் பொய்யான பா