கலைப் படைப்புகளும் இடைவெளிகளும்
கட்டுரை
கலைப் படைப்புகளும் இடைவெளிகளும்
மு. இராமனாதன்
காணும் பொங்கல் என்றால் அது கணுப் பொங்கல் என்பதிலிருந்து வந்தது என்கிறார்கள். முதல்நாள் பொங்கிய பொங்கலைக் காக்கைக் குருவிகளுக்குப் படையல் வைத்து ‘காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன்’ என்று சொல்லிக் குலவையிடுவது வழக்கம். ஆனால் இன்று காணும் பொங்கல் என்றால் கட்டுச் சோறு எடுத்துக்கொண்டு வெளியிடங்களுக்குச் செல்வது என்றாகிவிட்டது. இந்த ஆண்டு காணும் பொங்கலன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மாமல்லபுரத்திற்குப் போயிருக்கிறார்கள். இந்தக் கட்டுரை, காணும் பொங்கலைப் பற்றியதல்ல, மாமல்லபுரத்தைப் பற்றியது. பொங்கலுக்கு முந்தைய வாரம் இவ்வாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் மாமல்லபுரத்தைச் சீரமைக்க தமிழக அரசு சமர்ப்பித்திருக்கிற 563 கோடி ரூபாய் திட்டத்திற்கு மைய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரினார். இப்போதெல்லாம் மாமல்லபுரத்தின்மீது வெகுமக்களின் பார்வை அதிகமாயிருக்கிறது. எல்லாம் கடந்த அக்டோபரில் சீன அதிபர் மேற்கொண்ட விஜயத்திற்குப் பிறகுதான்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரச் சிற்பங்களைச் சிலாகித்த காட்சிகள் இன்னும் ஊடகங்களில் உலா வருகின்றன. அர்ஜூனன் தபசு சிற்பத்தின் முன்னால்தான் தலைவர்கள் முதலில் கைகுலுக்கிக்கொண்டார்கள். இது அபூர்வமான திறந்தவெளி புடைப்புச் சிற்பம். இமயமலையின் இயற்கைக் காட்சிகளையும் உயிரினங்களையும் தாவரங்களையும் சித்திரிக்கிறது. பல்லவ மன்னர்களால் ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிற்பத் தொகுதிக்கு முன்னால், பிரதமரின் கார் முதலில் வந்தது. சில நிமிடங்களில் சீன அதிபரின் காரும் வந்தது. இதன் காணொலிக் காட்சியைப் பார்த்த எனது சீன நண்பர் ஒருவர் கேட்டார்: “இவ்வளவு பாரம்பரியச் சிறப்பு மிக்கச் சிற்பத்திற்கு முன்னால் ஏன் பெட்ரோல் கார்களில் வருகிறார்கள்? பாட்டரி கார்களை பயன்படுத்தலாகாதா?” நான் சிரித்துமழுப்பிவிட்டேன். நண்பருக்குத் தெரியாது; அன்றைய தினம் தலைவர்களின் கார்கள் மட்டுமே வந்தன. சாதாரண நாட்களில் எல்லாப் பயணிகளின் கார்களும் வரும். பேருந்துகளும் வரும். ‘வழி வழி’ என்று அலறும் வாகனங்களுக்கு ஒதுங்கிக் கொடுத்தபடியேதான் நூறடி நீளமும் ஐம்பதடி உயரமும் கொண்ட இந்தக் கலைப்படைப்பைக் காண வேண்டும்.
இதற்கு அருகேதான் கிருஷ்ண மண்டபம் இருக்கிறது. கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் பெருமழையினின்றும் காத்த சிற்பத்தொகுதி இந்த மண்டபத்திற்குப் பின்னால்தான் இருக்கிறது. சிற்பத்தொகுதி பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்டதுதான். ஆனால் இந்த முன்மண்டபம் விஜயநகர காலத்தில் (பதினான்காம் நூற்றாண்டு) கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார் ஆய்வாளர் சா.பாலுசாமி. பின்னாளில் இங்கே சாலைகள் வரும், வாகனங்கள் சீறிச் செல்லும், இவற்றிலிருந்து கோவர்த்தன மலைச் சிற்பத்தைக் காணப்போகும் பார்வையாளர்களைக் காக்க வேண்டும் எனும் நோக்கில் விஜயநகர மன்னர்கள் மண்டபத்தைக் கட்டியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மண்டபத்திற்கு இப்படியான பயன்பாடு வந்து சேர்ந்திருக்கிறது. எனினும் மண்டபத்தால் பார்வையாளர்களை வாகனங்களின் இரைச்சலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை.
இந்த இரண்டு சிற்பத்தொகுதிகளுக்கும் பத்து நிமிட நடைதூரத்தில் இருக்கிறது மாமல்லைக் கடற்கரை. அங்கேதான் தலைவர்கள் இளநீர் அருந்தி இளைப்பாறிய கடற்கரைக் கோயில் இருக்கிறது. பல்லவர் காலத்தில் இந்த இடைப்பட்ட பகுதி முழுதும் திறந்தவெளியாக இருந்திருக்கும். இன்று உணவகங்களும் விடுதிகளும் கடைகளும் பேருந்து நிலையங்களும் வாகன நிறுத்தங்களும் இந்தப் பகுதியை நிறைத்திருக்கின்றன. இடநெருக்கடிக்கும் இரைச்சலுக்கும் மாசிற்கும் நடுவே மல்லைச் சிற்பங்கள் மூச்சுமுட்டிக்கொண்டிருக்கின்றன.
மாமல்லபுரத்தை யுனெஸ்கோ தனது உலகச் சிறப்புமிக்கப் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாக 1984இல் அறிவித்தது. அதற்கு இரண்டாண்டுகள் பின்னால்தான் ஸ்டோன்ஹெஞ்சை தனது பட்டியலில் சேர்த்துக்கொண்டது யுனெஸ்கோ. ஸ்டோன்ஹெஞ், லண்டனிலிருந்து இரண்டுமணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது. நம்மூர் சுமைதாங்கிக் கற்கள் சிலவற்றை வட்டவடிவமாக அடுக்கிவைத்தது போலிருக்கும்; எனில் இவற்றின் உயரம் அதிகம் (பதின்மூன்றடி). இதைப் பார்ப்பதற்கு உலகெங்கிலும் இருந்து சாரைசாரையாகப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். காரணம் இதன் பழைமை. 4500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கற்கள் அடுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இதைக் குறித்த ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தக் கற்கள் நடப்பட்டிருக்கும் பகுதி பெரும் புல்வெளியாய்ப் பாதுகாக்கப்படுகிறது. இதன் பரப்பு ஏறத்தாழ 6000 ஏக்கர். சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் வெட்ட வெளியில் நடந்துதான் இந்த ஏடறிந்த வரலாற்றுக் காலத்திற்கும் முந்தைய ஸ்டோன்ஹெஞ்சைக் காணமுடியும். நுழைவாயிலில் ஒரு ஹெட்போன் கொடுத்தார்கள். அதைக் காதில் மாட்டிக்கொண்டு குமிழை அழுத்தினால், ஜி.பி.எஸ் மூலம் தெரிந்துகொண்டு நாம் இருக்கும் இடத்திற்கேற்ற வர்ணனை காதோரம் கேட்கும்.
ஸ்டோன்ஹெஞ்சைப் பார்த்தபோது மாமல்லபுரம் போன்ற கலைப்படைப்புகள் மேலைநாடுகளில் இருந்திருந்தால் பஞ்சபாண்டவர் ரதம், கடற்கரைக் கோயில், கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு, கணேச ரதம், வெண்ணை உருண்டை உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஒரு பெரிய வளாகத்தினுள், எந்த இடையீடும் இல்லா வெட்ட வெளிக்குள் இருந்திருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த இடத்தில் ஒப்பிடத்தக்க இன்னொரு கலைப்படைப்பு அங்கோர்வாட். கம்போடியாவில் உள்ளது. உலகின் ஆகப்பெரிய வழிபாட்டுத்தலமாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மன் எனும் அரசனால் திருமாலின் ஆலயமாகக் கட்டப்பட்டது. அங்கோர்வாட் 1992-ல்தான் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்தது. இப்போது ஆண்டுதோறும் இருபது லட்சம் பயணிகளுக்கும் மேல் வருகிறார்கள். சுமார் நானூறு ஏக்கரில் பரந்துகிடக்கிறது அங்கோர்வாட் வளாகம். ஆலயத்தின் புற மதிலைச் சுற்றிலும் பெரும் அகழி. அகழியின் மீதொரு தரைப்பாலம் (மதுரை வைகைக் கீழ்ப்பாலத்தைப் போல்). பாலத்தின் நீளம் கிட்டத்தட்ட அறுநூறடி. மதிலைக் கடந்தால் தரைப்பாலத்தைவிட இரு மடங்கு நீண்ட முற்றம். நாற்றிசைக் கோபுரங்களையும் நடுவே உயர்ந்து நிற்கும் எழுநூறு அடிக் கோபுரத்தையும் பார்ப்பதற்குக் கணிசமான தூரம் வேண்டியிருக்கிறது. அதற்குக் கோவிலைச் சுற்றியுள்ள பரந்தவெளி முற்றமும் அகழியும் உதவுகின்றன.
இப்போது சுந்தர ராமசாமி நினைவுக்கு வருகிறார். அவரது ‘ஜே.ஜே:சில குறிப்புகள்’ நாவலில் வரும் ஓவியர் சொல்வார்: ‘ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி’. இந்த இடைவெளி அங்கோர்வாட்டில் கிடைக்கிறது. இந்த ஆலயம் கம்போடியாவின் தேசியக் கொடியில் பட்டொளி வீசிப் பறக்கிறது. அதுபோல தமிழக அரசின் இலச்சினையிலும் ஒரு கோபுரம் உயர்ந்து நிற்கிறது. அது ஆண்டாள் சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்திர சயனர் ஆலயத்தின் ராஜகோபுரம். இந்தக் கோபுரம் 196 அடி உயரமானது. கோபுரத்தையொட்டியே தெரு அமைந்திருக்கிறது. தெருவையொட்டி வீடுகளும் கடைகளும் தொடங்கிவிடும். தமிழகத்தின் முக்காலே மூணு வீசம் கோவில்களின் நிலை இதுதான். மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி வெகு அணுக்கமாக மட்டுமல்ல, கோவிலுக்குள்ளேயும் கடைகள். கோவிலுக்கு நேரெதிரே இருக்கிறது புதுமண்டபம். 25 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் கல் மண்டபம். 124 தூண்களால் ஆனது. தூணெல்லாம் எழில்மிகு சிற்பங்கள் கொண்டவை. எனில் இன்று புது மண்டபம் சிறு வணிகர்களின் அங்காடியாக மாறிவிட்டது. நமது ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாகப் போற்றப்படும் அளவிற்கு அதன் பண்பாட்டுப் பெருமைக்காகவும் பாரம்பரியச் சிறப்புக்காகவும் கொண்டாடப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். ஆகவே தமிழகத்தின் பல கலைப்படைப்புகளில் ‘இடைவெளிகள்’ இல்லாததைப் பலரும் பொருட்படுத்துவதில்லை.
இந்திய-சீனத் தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து மாமல்லபுரத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கிறது. அயல்நாட்டுப் பயணிகளின் விசாரிப்பும் அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள் பயண முகவர்கள். இதுதான் நேரம். நமது கலைப்படைப்புகளின் மேன்மையைப் பயணிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றைக் காண்பதற்கு கட்டடங்களும் இரைச்சலும் மாசும் இல்லாத ‘இடைவெளிக’ளையும் உருவாக்கித்தர வேண்டும்.
ஜே.ஜே. நாவலில் மேற்குறிப்பிட்ட ஓவியரின் படத்தைப் பார்க்க இரண்டுபேர் வருவார்கள். அந்தக் காட்சி வருணனையில் இப்படி ஒரு வரி வரும்: ‘இருவரும் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலுங்கூட, ஓவியம் அவர்களைப் பார்க்காததனால், அவர்கள் மனத்தில் ஒன்றும் பதியவில்லை.’ அதாவது, ஒரு கலைப்படைப்பை நாம் உள்ளுணர்ந்து பார்த்தால், போதிய இடைவெளியுடன் பார்த்தால், அந்தப் படைப்பு நம்மைப் பார்க்கும்; பேசவும் செய்யும்.
மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.
மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com