கடிதங்கள்
மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக 43 ஆண்டுகள் தொடர்ந்து புத்தகக் காட்சி சென்னையில் நடைபெறுவது மாபெரும் அறிவுப் புரட்சி ஆகும்.
இதுவரை ஏற்படாத பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் இந்த ஆண்டு ஏற்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. எல்லாவற்றிலும் குறுகிய மனப்பான்மையும் அரசியலும் வந்துவிடுவதால் என்ன நோக்கத்திற்காகப் புத்தகக் காட்சி நடைபெறுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் தடம் புரண்டு செல்வது வேதனை.
இருப்பினும் இந்த மாபெரும் புத்தகக் காட்சி உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தமிழர்களுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். இலக்கிய ஆளுமைகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் வாசகர்கள் என அத்தனைபேருடைய ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் மிகச்சரியாக இருக்கின்றபொழுதுதான் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி பெறும்.
மிகச்சரியான திட்டமிடலுடன் கூடிய நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட வேண்டும். விற்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கையும் வாசகர்களின் வரவேற்பும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. வாசகர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் விதமாக வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பறைசாற்றியிருக்கிறது.
மிக யதார்த்தமாக புத்தகக் காட்சி நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து தலையங்கம் தீட்டியுள்ளதில் காலச்சுவடின் நடுநிலை வெளிப்படுகிறது.
கூத்தப்பாடி பழனி
தர்மபுரி
என்போன்ற வாசகனுக்கு மனத்தில் தோன்றிய கருத்துகளின் பிரதிபலிப்பு. புத்தகக் காட்சி இன்று வாசகர் - எழுத்தாளர் கூடுதுறையாக, பண்பாட்டு நிகழ்வாக இருக்கிறது. ஆனால் அதை மேம்போக்காகக் கருதும் பபாசி, புத்தக அரங்குகளுக்கான இடங்களைச் சுருக்கித் தெரிந்தவர்க்கும் சரக்கு வியாபாரங்களுக்கும் அளிப்பது உண்மைதான்; இது பபாசி தேய்ந்துவருவதைக் காட்டுகிறது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ சுனில் கிருஷ்ணன் கட்டுரை காந்தியம் முற்றதிகாரத்திற்கு எதிரான ஆற்றல் வாய்ந்த எதிர்வினையாகிறது. ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’ கதை விருந்தோம்பலின் அகமன எழுச்சிகள்.
எம். சிவபாரதி
தென்காசி
சேரன், பெரு விஷ்ணுகுமார் ஆகியோரின் கவிதைகள் வாழ்வின் நுண்ணரசியல் பேசுபவை. அவரவர் ஆளுமைக்கேற்பச் சொற்களைக் கொண்டு பகடி செய்யும் பதிவு. சொற்சிக்கனத்தோடு கூடிய படிமம் அருமை. அவநம்பிக்கையை நம்பிக்கையாய் மாற்றித்தானே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.
செந்தில்வேல் நடராசன்
சங்கரன்கோவில்
தலையங்கப் பகுதியில் பபாசியின் நடைமுறையைக் குறிப்பிட்டு அதன் செயல்பாட்டில் வாசகர்களின் எதிர்பார்ப்பை வெளியிட்ட பாங்கு பாராட்டத்தக்கது.
வழக்கம்போலக் கவிதைகள் , கட்டுரைகள் மிக அருமை. குறிப்பாக சேரனின் கவிதைகளைச் சொல்லலாம். ‘முடியா முடிவு’ கவிதைதனில் வேட்கையும் அன்பும் மிகுந்தே இதனை எழுதுகிறேன். மொத்தத்தில் அரசியல் பண்பாட்டு இதழாக மலர்வது அறிந்து மட்டிலா மகிழ்ச்சி.
மீ. ஷாஜஹான்
திருவிதாங்கோடு
ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’ கதையில் இயல்பான சாதாரணங்கள்தான் உலகால் கொண்டாடப்படுகின்றன. சிறப்புவகை அல்லது அசாதாரணங்கள் அடையாளம் இன்றியும், அங்கீகாரங்களுக்கு விழைபவையாகவும் துயரார்ந்த நிலையில் நீடிக்கும்படி ஆகிவிடுகின்றன. நல்ல கதை, புதிய வாசிப்பனுபவம் தந்த மொழிபெயர்ப்பாளருக்கு நன்றிகள். காந்தி ஓவியத்தில் ஒருங்கே தென்பட்ட கனிவும் அருளும் வெகு சிறப்பு.
சரவணன்
மதுராந்தகம்
‘43ஆவது சென்னைப் புத்தகக் காட்சி’ தலையங்கத்தில் பபாசியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, அதன் சிறப்பான பணிகளைப் பாராட்டியிருந்தது நன்று. காலத்துக்கேற்ப வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் பல்துறை நூல்களைப் பதிப்பாளர்கள் நேர்த்தியுடன் அச்சிட்டு, படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருப்பதையும் அறிகிறோம். ஆனால், பபாசியின் பொறுப்புகளிலிருக்கும் சிலர் தங்கள் பதிப்பக நூல்களை எப்படியாவது அரசு நூலகங்களுக்கு வழங்கி, கையைக் கடிக்காமல் காசு பார்த்துவிடுகிறார்கள் என்றும், சிறிய பதிப்பாளர்கள்தாம் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்பதையும் அறிகிறபோது வருத்தம் தோன்றுகிறது. நலிந்த பதிப்பாளர்களின் நலன்களையும் கவனத்தில் வைத்து அவர்களையும் கைதூக்கிவிட வேண்டிய பொறுப்பு பபாசிக்கு இருக்கிறது.
நிற்க, நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் ‘மக்கள் செய்தி மையத்தின் அரங்கை பபாசி காலி செய்ய நிர்ப்பந்தித்தது, அதன் உரிமையாளர் அன்பழகனைக் கைது செய்யத் துணைபோனது நடுவணரசின் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைப் பற்றி ‘பேசியமைக்காக படைப்பாளர் கரு. ஆறுமுகத் தமிழனின் உரையைப் பாதியில் நிறுத்தியது, காட்சியரங்கில் அமையப்பெற்றிருந்த எழுத்தாளர் முற்றத்தில் பேச ஒப்புக்கொண்டிருந்த பலர் வெளியேறியது, மக்களவை உறுப்பினரும் படைப்பாளருமான சு. வெங்கடேசன் அரங்க மேடையிலேயே தனது சங்கடத்தைத் தெரிவித்தது போன்ற தகவல்கள் பபாசியின் நிர்வாகத்தைச் சந்தேகிக்க வைக்கும் செயல்களாகும்.
சென்னைப் புத்தகக் காட்சி இன்று முற்றிலும் வாசகர் - எழுத்தாளர் கூடுதுறையாக உருவாகியுள்ளதைப் பாராட்டியும், இதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமை பபாசிக்கு இருக்கிறதென்று பொட்டில் அறைந்ததுபோல ஆசிரியர் அறிவுறுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கன.
யுவன் சந்திரசேகரின் ‘ஒரு நாளும் இன்னொரு நாளும்’ கதை நம் பாட்டன் பூட்டன் காலக்கண்ணாடி. சோமுதாத்தா நட்டுவைத்த மூங்கில் கழிபோல அசைவேயில்லாமல் அமர்ந்திருந்தது. தஞ்சாவூர் ஓவியம், மணல் கடிகை உள்ளிட்ட அரிய கலைப்பொருள்களைச் சேகரித்து அழகு பார்த்த அப்பாவின் பழைய காலச் சேகரிப்புகளை விண்டுரைத்து விவரித்திருந்த விதம், சாமியார்களின் சகவாசத்தால் என்னவெல்லாம் விளையும் என்பதையும் கதையில் கொணர்ந்து கொண்டாட வைத்துவிட்டார் ஆசிரியர் அங்குசாமி, சிவகாமி போன்ற பாத்திரச் சித்தரிப்புகள் ஒரு வாலாற்று நாவலை ஆழ்ந்து படித்ததைப் போன்ற நிறைவையும் ஒருசேரத் தந்துவிட்டது.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘பிளாக் நம்பர் 11 அதிகாரத்தின் கொலைக்களம்’ என்ற கட்டுரை உரிய நேரத்தில் வெளியாகியுள்ளது.
அதன் இறுதிப் பகுதியில் “எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த படுகொலைகளைப் பற்றி நாம் ஏன் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாதவர்கள் அப்பாவிகள் அல்லர்” எனக் கூறப்பட்டிருப்பது அறிவிக்கப்படாத அவசர நிலையை முன்னிட்டே எனப் புரிகிறது.
நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அரசு நிறைவேற்றி வரும் சட்டங்கள் மேம்போக்காகப் பார்த்தால் ஜனநாயகம் சீராக நடைபெறுவதுபோன்று தோன்றும். ஆனால் நாட்டை அழிவுப் பாதையை நோக்கி நகர்த்தவே இந்தப் பெரும்பான்மை உதவுகிறது என்பதைச் சற்றே சிந்தித்தால் உணர முடியும்.
ராணுவத் தளபதியாக இருந்த விபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகத் தம் கருத்தைத் தெரிவித்தார். இது வெளிப்படையாக மரபு மீறிய செயலே. முப்படைகளுக்கும் தனித்தனியே தளபதிகள் இருந்துவரும் நிலையில் மூவருக்கும் மேலாகத் தலைமைத் தளபதி என்று புதிதாக ஒரு பதவி உருவாக்கப்பட்டதும் அப்பதவிக்கு விபின் ராவத் நியமிக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வுகள் அன்று. எஞ்சியுள்ள பதவிக் காலத்திற்குள் சர்வாதிகாரப் பாதையைச் சட்டபூர்வமாக்க நாடாளுமன்றப் பெரும்பான்மை உதவி செய்யும்; ராணுவம் தன் ஒத்துழைப்பை நல்கும்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரலில் 370, 35கி பிரிவுகளை நீக்குவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது, ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பன அடுத்தடுத்து விரைவாக நிகழ்ந்துள்ளன. முன்னர் குறிப்பிட்டுள்ள கட்டுரை வாக்கியங்களில் சில சொற்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக வேறு சொற்களைக் கொண்டு நிரப்பினால் நிகழ்காலம் புரிவதோடு எதிர்காலத்தையும் எளிதில் யூகிக்க முடியும். நமக்கு ஏற்கெனவே இந்திரா காந்தியின் அவசரகாலக் கொடுமைகள் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளன; அம்மையார்க்கும் கற்பதற்குப் பல விஷயங்களை அவை தந்தன என்பது வரலாறு.
ஆர்ப்பாட்டம், பேரணி, கையெழுத்து இயக்கம் எனப் பல்வேறு போராட்ட வடிவங்களைக் காணும் மக்களுக்கு மத்திய அரசின் மதவெறிச் செயல்பாடுகளும் மாநில அரசின் கையாலாகாத்தனமும் தெளிவாகவே புரிகின்றன.இஸ்லாமியர்களை உறவுமுறை சொல்லி அன்புடன் பழகும் தமிழர்களே இங்கு அதிகம்; வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் நாகூர் தர்ஹாவுக்கும் பயபக்தியோடு செல்லும் இந்துக்களான தமிழர்களே இங்குள்ளனர். எடப்பாடி கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்: “வாழ்க்கை வாழ்வதற்கே, பிழைப்பதற்கு அல்ல!”
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
சமீபத்திய பரபரப்பும் வரவேற்புமான தர்பார், பட்டாஸ் பற்றி “நம் சமூக அமைப்பு அறிவுத்தளத்தில் மக்கள் இணைவதை விரும்புவதில்லை. அதையே திரைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன” என்ற சிவராஜ் பாரதியின் மதிப்பீடு மெத்தச் சரியே. குடும்பம், சமூகம், அரசு போன்ற அமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தாமல் பண்படுத்தாமல் மீளுருவாக்கம் நிகழாது. தனிமனிதனால் சிந்தனை மாற்றத்தை மட்டுமே உண்டாக்க முடியும், மக்கள் ஒன்றிணைவதால்தான் சமூக மாற்றம் ஏற்படும் என்பதுதான் சரியான தீர்வாகும். இதில் இலக்கியம் மூலம் தனி மனிதர் சமூக முன்னேற்றத்திற்கு முயல்கிறார். அதன்படி மக்கள் இணைந்து இயக்கமாக மாற்ற வேண்டிய அரசியலும் ஆன்மீகமும் லாபம் பார்க்கும் தொழிலானதுதான் விபரீதமானது, என்றாலும் மாற்றம் பெற மக்களை எப்படி மாற்றலாம் என் யோசிக்க வேண்டிய நெருக்கடியான தருணத்தில் இலக்கியம் கடமைப்பட்டிருப்உணர்த்துவோம்.
யாழினி பர்வதம்
சென்னை - 78
றஷ்மி எழுதிய ‘வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள்’ என்ற சிறுகதையைப் படித்தேன். ஒன்றுமே புரியவில்லை. தமிழில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கே புரியாத கதைகளை ஏன் எழுதியிருக்கிறீர்கள். ‘ட’ என்றால் யார்? ‘கி’ என்றால் யார்?
இரா.ஏ. சுதாகர்
செங்கல்பட்டு