இரண்டாம் வரலாறு
இலங்கையின் இன்றைய சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகள் இலங்கை மக்களை என்றுமில்லாதவாறு அனைத்துத் தளங்களிலும் மிக மோசமாகப் பாதித்திருக்கின்றன. பொருளாதார அடிப்படைச் சிக்கல்கள் அரசியல் பிரச்சினைகளாகப் பரிமாணம் கொண்டு அரசாங்கத்தின் அடிப்படைக் கட்டுமானத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்துள்ளன. ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கும், அதன் நடைமுறைகளுக்கும் எதிராக இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நிலைமைகளின் உக்கிரத்தையும் மக்களின் உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.
இலங்கை பொருளாதார ரீதியாகத் திவாலடைந்த, தோல்வியுற்ற நாடாகத் தன்னை அறிவித்திருக்கிறது. இது அதன் வீழ்ச்சியையும், காலத்திற்குக் காலம் அதிகாரத்தில் இருந்துவந்த இலங்கையின் அரசியல் தலைமைகளின் தோல்வியையும் பறைசாற்றுகிறது. இந்த நிலைக்கான பொறுப்பினை அதிகாரத்தில் இருக்கும் அல்லது இருந்த எந்த அரசியல் தலைமையும் ஏற்கத் தயாராக இல்லை. மக்களே அனைத்துச் சுமைகளையும் அன்றாடத் துயரங்களையும் சுமக்க வேண்டியவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் அனைத்து மக்கள் பிரிவினரதும் தாங்க முடியாச் சுமையின் விளைவு இன, மதப் பேதமற்ற வகையில் மக்களில் பெரும்பகுதியினரை ஒரு பொதுத்தளத்திற்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள மக்களே தாங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தினையும் அதன் தலைமைகளையும் நிராகரித்து, பொறுப்பில் இருந்து நீங்கிச் செல்லுமாறு பகிரங்கமாகவே கோரியும் போராடியும் வருகிறார்கள். இந்த எதிர்ப்பு இன்றைய இலங்கை அரசாங்கத்திற்குப் பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் சவாலாகவும் முன் எழுந்திருக்கிறது. இப்படியான எதிர்ப்புணர்வு நிலையை இலங்கை ஆட்சியாளர்கள் இதற்குமுன் எதிர்கொண்டதுமில்லை.
காலத்திற்குக் காலம் ஏனைய மக்களின் நியாயமான அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்று புறம்தள்ளி, மக்களைத் திசைதிருப்பும் அரசியலைத்தான் சிங்கள ஆட்சியாளர்கள் செய்துவந்தனர். இன்று தோன்றியுள்ள நிலையில், வழக்கமான இனவாத இறுதி அஸ்திரத்தை அவர்கள் பிரயோகிக்க முடியாத புள்ளிதான், இலங்கைச் சூழலின் அரசியல் பண்பு மாற்றத்தின் முக்கியமான புள்ளியாக மேலெழுந்து வந்துள்ளது. இலங்கைக்குள் நடந்துவரும் மக்கள் போராட்டங்களின் அரசியல், சமூகத் தன்மைகள் ஆழ கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.
உலகளவில் பல்வேறு நாடுகளும் மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா பேரிடரும் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஆனால் இந்த நிலைமைகள் மட்டுமே இலங்கையின் இன்றைய இந்தப் பொருளாதாரத் திவால் நிலைமைக்கான காரணங்கள் அல்ல. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நிலவிவந்த உள்நாட்டுப் போரும், ராணுவச் செலவீனத்திற்கான அதன் முழு ஒதுக்கீடும் இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படை. தொடர்ச்சியாகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவந்த நிலையில் சர்வதேச நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்களின் தயவில்தான் இலங்கை, காலத்தை ஓட்டிவந்தது. தன்னைப் பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்திக்கொண்டு முன் செல்வதற்கான ஆக்கப்பூர்வமான செயற்திட்டங்கள் எதுவும் ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போர் முடிவுக்குவந்த கையுடன், போரின் வெற்றியை இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் தமக்கான அரசியல் மூலதனமாக்கிக் கொண்டனர். நாட்டை மேலும் இனவாத, சிங்கள இனத் தேசியவாத அரசியலுக்குள் தள்ளினர். இதன் வழியாகப் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு நாட்டின் தேசிய செல்வத்தைப் பெருமளவில் சூறையாடினர். ராஜபக்ச குடும்பத்தினரே இலங்கையின் எழுபது சதவீதப் பொருளாதார, அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருந்தனர். ஊழல்களில் இருந்தும், பெரும் கொள்ளையில் இருந்தும் பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திசைதிருப்ப, போலித் தேசப்பற்றைக் கையில் எடுத்து அரசியல் செய்தனர். இலங்கையைப் பல்லின, பல்கலாச்சார நாடு என ஏற்க மறுத்தனர். அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்றனர். முக்கியமான பதவிகளில் அந்தந்தத் துறைசார்ந்தவர்களை நியமிக்காது, இலங்கையின் பொதுத்துறையை ராணுவமயமாக்கினர். ஒருதலைப்பட்சமான, ஜனநாயக விரோத முன்னெடுப்புகளால் முழுநாட்டையும் அதல பாதாளத்திற்குள் தள்ளியதில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்குப் பெரும் பங்குள்ளது.
இப்போது நடந்துவரும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பம் அல்ல; ஏற்கெனவே பல போராட்டங்கள் பல வருடங்களாக நடந்துதான் வருகின்றன. யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிப்போராட்டம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பள உயர்வுக்கான போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என நடந்து வந்துள்ளன. இப்போராட்டங்களை ஆட்சியாளர்களும் கவனத்தில் கொள்ளத் தவறினர். அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை அடுத்து எழுந்த மின்சாரம், எரிவாயு, அடிப்படைப் பொருட்களுக்கான தட்டுப்பாடும், அதிகரித்த விலையேற்றமும் நாட்டு மக்களைப் பாதிக்கத் தொடங்கியவுடன்தான் இப்போது தோன்றியுள்ள பரவலான மக்கள் எதிர்ப்பானது முன்னரங்குக்கு வந்தது.
இந்த மக்கள் போராட்டத்தின் விளைவுகள் பல்வேறு பரிமாணங்களையும் சமூக அசைவையும் தோற்றுவித்துள்ளன. ‘ஜனாதிபதி கோத்தபாய வீட்டுக்குப் போ’ எனப் பல தினங்களுக்கும் முன் எழுந்த மக்கள் முழக்கம், பின்னர் கோத்தபாய, மகிந்த, பசில் என இலங்கையின் அதிகாரத்தினையும் செல்வத்தினையும் கையகப்படுத்தி வைத்திருக்கும் மொத்தக் குடும்பத்தினரையும் வீட்டுக்குப் போ எனவும், இவர்கள் வீட்டுக்குப் போனால் மட்டும் போதாது ஜெயிலுக்கும் போக வேண்டும் எனவும், பின்னர் ஜெயிலுக்குப் போவது மட்டுமல்ல ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தின் வழி சுருட்டிய நாட்டின் செல்வத்தைத் திருப்பித் தா’ எனவும் விரிவடைந்திருக்கிறது. இத்தகைய சூழலில், இலங்கையின் முழு அமைச்சரவையும் வறிதாகி, புதிய அமைச்சரவை பெயரளவில் பதவியேற்றுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் யோசனையைத் தான் கருத்திற்கொள்வதாக இலங்கை ஜனாதிபதி சொல்லத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டுவரும் செயலில் இறங்கியுள்ளனர். ஆனால் ஆளும் தரப்பு தனது அதிகாரத்தை இலகுவில் கைவிட்டுச் செல்லும் என நம்புவது, ஆட்சி அதிகாரத் தரப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும்.
அரசியலமைப்பு வழங்கியுள்ள உச்சபட்ச அதிகாரம் கோத்தபாய வசம் உள்ளது. ஜனநாயக விழுமியங்களை மதிக்காத தன்னிச்சையான எதேச்சாதிகாரப் போக்கும், துணைக்கு ராணுவ பலமும் ராணுவத்தின் மீதான நம்பிக்கையும் இலங்கையின் ஜனாதிபதிக்கு உள்ளன. தனது பாய்ச்சலைத் தொடங்கக் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, தனக்கான வியூகங்களை இலங்கை அரசுத் தலைமை வகுக்கிறது என்கின்றனர் அங்குள்ள சில அரசியல் செயற்பாட்டாளர்கள்.
எதிர்காலத்தில் இரண்டு நேரெதிர் சக்திகளும் களத்தில் சந்திப்பது தவிர்க்க முடியாதது! ஒன்று அரச அதிகார சக்தி, இரண்டு சுயாதீன மக்கள் சக்தி. இந்த மக்கள் சக்தி வழியாக இன்று முன்னுக்கு வருகின்ற எதிர்ப்புணர்வும், அதன் உள்ளடக்கம் சார்ந்து வெளிப்படுகின்ற பல்லினங்கள், பல்மொழி, பல்கலாச்சாரங்கள் சார்ந்த பண்புகளும் இனவாதத்திற்கும் ஊழலுக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கும் எதிரான குரல்களும் துணிச்சலான முன்னெடுப்புகளும்தான் இலங்கை மக்களின் முழு நம்பிக்கை. 1986 இல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்க்கேஸூக்கு நிகழ்ந்த அதிகாரத்திலிருந்து அகற்றல், இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நிகழுமா என்று காலம்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் எந்த மக்கள் தம்மை இரட்சகர்களாகக் கொண்டாடுகிறார்களோ, எந்தச் சிங்கள மக்களின் நலன்களுக்காகவே இருக்கிறோம் எனச் சொல்லி அதிகாரத்துக்கு வந்தார்களோ, அந்த மக்களே அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். குப்பைக்கூடைக்குள் வீசியெறியத் துணிந்துவிட்டனர். இலங்கையின் சமூக, அரசியல் வரலாற்றில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த எந்தத் தலைவரும் இப்படி விமர்சிக்கப்பட்டிருக்கவில்லை, இப்படியான மக்கள் எதிர்ப்பினைச் சந்தித்திருக்கவில்லை என்கின்றனர் நோக்கர்கள். ராஜபக் ஷக்களின் வரலாறு முதல் தடவை பெருமிதமாக அரங்கேறியது; இரண்டாவது தடவை அவலமாகவும் கேவலமாகவும் அரங்கேறிவருகிறது.