ஒரு மாலையும் இரண்டு நூல்களும்
படம்: அய்யப்ப மாதவன்
இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஆங்கிலத்தில் எழுதி வெளியான இரு நூல்கள் - சதர்ன் மியூசிக்: எ கர்னாடிக் ஸ்டோரி (2013), செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்: எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் மிருதங்கம் மேக்கர்ஸ் (2020). வெளிவந்த வேளையில் கர்னாடக இசையுலகிலும் வெளியிலும் இந்த நூல்கள் உரத்த விவாதத்தை எழுப்பின. இவற்றின் தமிழாக்கத்தைக் காலச்சுவடு பதிப்பகம் அண்மையில் வெளியிட்டிருக்கிறது. முதலாவதாகக் குறிப்பிட்ட நூல் ‘கர்னாடக இசையின் கதை’ என்றும், இரண்டாவது நூல் ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்ற தலைப்பிலும் அரவிந்தன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளன.
மேற்சொன்ன நூல்களின் வெளியீட்டு விழா சென்னை, மயிலாப்பூர் ராக சுதா அரங்கில் ஏப்ரல் 3 அன்று மாலை நடைபெற்றது. திரளான பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கிய நிகழ்வுகளோ நூல் வெளியீடுகளோ இசைக் கச்சேரிகளோ நேரடியாக நடைபெறாமலிருந்த சூழலுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்ததால் பார்வையாளர்களின் முகத்தில் மகிழ்வும் பங்கேற்பில் உற்சாகமும் தென்பட்டன. பதிப்பாளரும் காலச்சுவடு பதிப்பகத்தின் மேலாண்மை இயக்குநருமான கண்ணன் பொருத்தமாகவே வரவேற்புரை நிகழ்த்தினார். ‘பெருந்தொற்றுக் காலம் இழப்புகளை அளித்தது. இது எதிர்பாராததும் முன்னர் எதிர்கொள்ளாததும் ஆகும். அதிலிருந்து மானிட இனம் மெல்ல மீண்டு வந்திருக்கிறது. வாழ்க்கையை இன்னும் எச்சரிக்கையுடனும் இணக்கத்துடனும் எதிர்கொள்ள இந்த அனுபவம் நமக்கு உதவும்’ என்று குறிப்பிட்டார். பெருந்தொற்றில் நாம் இழந்த அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நூல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் நிகழ்ச்சி அவ்வாறு மட்டுமே நடைபெறவில்லை. நூல் வெளியீடு, வாசிப்பு, உரை, இசை விருந்து என விமரிசையாக நடந்தது. இரண்டு நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அரவிந்தன் வாசித்தார்.
‘கர்னாடக இசையின் கதை’ நூலை சுகுமாரன் வெளியிட நடனக் கலைஞர், கலைமாமணி நர்த்தகி நடராஜ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய சுகுமாரன், ‘கிருஷ்ணா எழுதிய நூல்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று, அவை கலையின் மறு உருவாக்கத்தைப் பற்றி விவாதிப்பவை,’ என்று குறிப்பிட்டார். இந்த இரண்டு நூல்களும் கர்னாடக இசையின் வரலாற்றையும் மிருதங்கம் வடிப்பவர்களின் வரலாற்றையும் மறு உருவாக்கம் செய்பவை என்றார்.
‘கர்னாடக இசை ஒரு கலை வடிவம். இது அனைவருக்குமானது. அனைவராலும் கேட்கப்பட வேண்டியது. அதைச் சொந்தம் கொண்டாட விரும்புபவர்களுக்கு அல்லது அரியதொரு கலைப் பொருளாக வரலாற்றில் பதிவு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும் என்னும் நிலை இருக்கக் கூடாது. இசையைக் கற்பதும் ரசிப்பதும் எளிதல்லதான். ஆனால் அது மேட்டுக்குடித்தனமானதும் அல்ல. நாம் அதை அப்படி ஆக்கிவிட்டோம். மேட்டுக்குடித்தனம் இசையில் இல்லை. சமுதாயத்தில் அது புழங்கும் விதத்திருக்கிறது’ என்ற கிருஷ்ணாவின் கூற்றை மேற்கோளாக எடுத்துச் சொன்ன சுகுமாரன் தொடர்ந்து பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.
இசையுலகிலும் பொதுவாகப் பண்பாட்டு உலகிலும் நிலவும் நடைமுறைகளை கிருஷ்ணா இந்த நூலில் கேள்விக்குட்படுத்துகிறார். அவற்றுக்கான உடனடி பதில்கள் கிடைப்பது அரிது. மிகவும் இறுக்கமான ஓர் அமைப்பு அவ்வளவு சீக்கிரம் நெகிழ்ந்துவிடுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை. தாமதம் ஆகும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உரக்கச் சொல்லப்படும் நாளில் ஒருவேளை அவற்றை எழுப்பியவர் இல்லாமலும் போகலாம். ஆனால் அந்தக் கேள்விகளின் நாயகர் என்ற பெருமையை வரலாறு அவருக்கு அளிக்கும். கிருஷ்ணாவின் இந்த நூல் அந்தப் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் டி.எம்.கிருஷ்ணா என்று சாட்சி சொல்கிறது’’ என்று தன் உரையை முடித்தார் சுகுமாரன்.
“கிருஷ்ணாவின் நூலிலுள்ள பல கருத்துகளும் நான் பல காலமாகச் சிந்தித்து வருபவை. எனவே நூலைப் பலமுறை வாசித்தேன். நான் சொல்ல விரும்பிய கருத்துக்களை கிருஷ்ணா முன்வைத்திருக்கிறார். அந்த வகையில் இது எங்களுடைய நூலும்கூட” என்ற முன்னுரையுடன் பேச்சைத் தொடங்கினார் பரதக் கலைஞர் நர்த்தகி நடராஜ்.
“கலைஞர்களுக்கு வித்வத்தின் அடிப்படையில் தகுதிச் சான்று வழங்கப்படுகிறது. அதை யார், என்ன நிலையில் வழங்குகிறார்கள் என்ற கேள்வியை இந்தப் புத்தகம் எழுப்புகிறது. திருநங்கையான நான் மிகவும் துயரப்பட்டுத்தான் கலைஞர் என்ற தகுதியை அடைந்திருக்கிறேன். ஒரு கலைஞராக நான் என்னை கிருஷ்ணாவின் பிரதிபிம்பமாக முன்னிறுத்தும்போது கேள்விகள் எழுகின்றன. திருநங்கை என்ற அடையாளத்தை ஒரு துருப்புச் சீட்டாக எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்று கொள்கைப் பிடிப்புடன் இருந்திருக்கிறேன். இப்போது பரவலான அறிமுக வெளிச்சத்தில் நிற்கும்போது அதைப் பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியிருக்கிறது. ஆனால் அது சுய மரியாதைக்கு இழுக்காக இருந்ததால் அப்படிச் செய்யவில்லை. திருநங்கையர் மத்தியில் கலைஞர் என்பதால் தவிர்க்கப்பட்டிருக்கிறேன். கலைஞர்கள் நடுவே திருநங்கை என்பதால் விலக்கப்பட்டிருக்கிறேன். கிருஷ்ணா தன்னுடைய நூலில் கலைஞர்களைக் கலைஞர்களாகவே முன்னிறுத்துகிறார்.
தஞ்சை நால்வர் வழி வந்தவரும் நாட்டியப் பேரரசாகக் கருதப்பட்டவருமான என்னுடைய ஆசிரியர் தன்னுடைய இடத்தில் தயக்கத்துடனேயே இருந்தார். அதற்காக அவர் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கிருஷ்ணா அந்த சமரசங்களைத் தாண்டி வந்திருக்கிறார். கிருஷ்ணா உடைத்த பிம்பத்துக்கு உள்ளிருந்து என்னால் இன்னும் வெளிவர முடியவில்லை. ஆனால் அண்மையில் ஆண்டிப்பட்டியில் நான் ஆடிய நிகழ்ச்சியைப் பார்த்து எல்லாரும் உருகிக் கரைந்தார்கள். அதுதான் கலை என்று நினைத்தேன். ஆனால் அதில் நான் மயங்கிவிடவில்லை. செவ்வியல், நாட்டார் வழக்காறு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. மரபு என்று சொல்லப்படுகிறது. இந்த மரபு கலைக்குச் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகிறது. சமூகக் கட்டமைப்பு அதைச் செய்கிறது. அதைத் தூக்கிச் சுமக்கிறோம். நன்றாகப் பார்த்தால் அதற்குள் எல்லாம் பொய். அந்தப் பொய்களை கிருஷ்ணாவின் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. அந்த முரண்களைச் சமூகம் புரிந்துகொண்டால் ஆன்மாவிலிருந்து கலையை வெளிப்படுத்தும் கலைஞனும் கிடைப்பான். ஆன்மாவிலிருந்து கலையை ரசிக்கும் ரசிகனும் கிடைப்பான்” என்று விரிவாக உரையாற்றினார் நர்த்தகி நடராஜ். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்தும் கலையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சார்ந்தும் நிகழ்த்திய உரை நீண்ட கரவொலிக்கிடையில் நிறைவு பெற்றது.
‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ நூலை வரலாற்றறிஞர் ஆ. இரா. வேங்கடாசலபதி வெளியிட இதழியலாளர் பி. கோலப்பன் பெற்றுக்கொண்டார். முன்னர் இந்த நூலைக் கேரளத்தின் தலித் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான சன்னி கப்பிக்காடு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் பங்கேற்க இயலாத நிலையில் வரலாற்றறிஞர் நூலை வெளியிட முன்வந்தார்.
உருப்பெற்றதிலிருந்து, ஆங்கில நூலாக வெளிவந்து இன்றைக்குத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த ஆறேழு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த நூலின் வளர்ச்சியைப் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த நூலின் உருவாக்கம் அசாதாரணமானது. இசை தெரியாத எனக்கு இந்த நூலை எடுத்துப் படிக்கும்போது அதிர்ச்சி கிடைத்தது. மிருதங்கம் ஏதோ ஒரு பொருள். ஒரு ரேடியோ வாங்குவது போல், ஸ்கூட்டர் வாங்குவதுபோல் ஏதோ ஒரு பொருள். ஒருமுறை வாங்கிவந்து வைத்துவிட்டால் ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ பழுது பார்ப்பதைப் போல் அவ்வப்போது செப்பனிட்டு வைத்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நூலைப் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் மிருதங்கம் ஒரு குழந்தை, குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும், திடீரென்று அழும், மருந்து கொடுக்க வேண்டும், சிறுநீர், மலம் கழித்தால் சுத்தப்படுத்த வேண்டும். அதைப் போன்ற மிக மிக மிக நுட்பமான இசைக்கருவி என்பதை முதன் முறையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இந்த நூல் மூலம் நான் தெரிந்துகொண்டது இதுதான்.
இந்த நூல் ஒரு வரலாற்று நூல். நான் வரலாற்று மாணவன். வரலாற்றைப் பயில்பவன், பயிற்றுவிப்பவன் என்கிற வகையில் இதை ஒரு வரலாற்று நூலாகப் பார்க்க முடியும். இது விசித்திரமான வரலாறு. விந்தையான வரலாறு. எழுத்து ஆவணங்களே இல்லாமல் எழுதப்பட்ட வரலாற்று நூல் இது. இதில் எழுத்து ஆவணம் ஒன்றுகூடப் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இந்தியாவில் நவீன காலத்தில் இசை உலகமும் கலை உலகமும் தம்மைப் பற்றி முன்வைக்கக்கூடிய கதையாடல் என்னவென்றால் தங்களுடைய கலையும் தங்களுடைய இசையும் அநாதியானவை. தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை; இந்தப் பிரபஞ்சம் உருவாகும்போதே, உடுக்கு அடிக்கும்போதே துடி அடிக்கும்போதே இசை பிறந்துவிட்டது என்கின்றன. அவ்வாறு சொல்லும்போது அதனுடைய உட்கிடை என்னவென்றால் இது வரலாற்றுக்கு அப்பாற்பட்டது; ஆகவே, இதை வரலாற்றுமயப்படுத்தக் கூடாது. அப்படி என்றால் என்ன பொருள்? இதைக் கேள்வி கேட்கக் கூடாது, இது தெய்வத்தன்மை படைத்தது என்பதுதான். ஆகவே இந்தியாவில் கலை வரலாறும் இசை வரலாறும் வெறும் சாதனைப் பட்டியலாக இருப்பதைத்தான் பார்க்கிறோம். கலைக்குப் பங்களித்தவர்களைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். உண்மையிலேயே பூசைசெய்து தெய்வமாக வழிபடும் நிலையையும் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி என்ன வகையான விமர்சனத்தை முன்வைக்க முடியும்?
தோலைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அதைப் பதப்படுத்துவதிலிருந்து அதற்கு அடுத்த நிலையில் கடைசியில் நுட்பமான ஓசையை அந்த மிருதங்கத்தில் வரவைப்பதற்காக ஆகப்பெரும் கலைஞர்கள் என்றும் மேதைகள் என்றும் சொல்லப்படுகின்ற பாலக்காடு மணி ஐயர் ஆகட்டும் பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகட்டும் அவர்கள் முற்று முழுவதும் எவ்வாறு மிருதங்கக் கலைஞர்களைச் சார்ந்திருக்கிறார்கள், அவர்கள் இல்லாமல் இந்த மாபெரும் மேதைகள் இல்லையென்று கிருஷ்ணா எடுத்துக் காட்டுகிறார்.
கடைசி அத்தியாயத்தில் பர்லாந்துவை இவர்களுக்கு ஏறத்தாழச் சமமாக வைத்து நூலை முடிக்கிறார். நூலைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். அனைவரும் வாங்கிப் படித்துப் பாருங்கள். இந்த நூலை விலை அடக்கப் பதிப்பாக மிகக் குறைந்த விலையில் கண்ணன் பதிப்பித்திருக்கிறார். கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டிய நூல்.
கடைசியில் ஒரு வார்த்தை மொழிபெயர்ப்பாளர் பற்றியும் சொல்ல வேண்டும். அரவிந்தன் மிகமிக முக்கியமான பணியைச் செய்திருக்கிறார். ஏற்கெனவே எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி கேரவனில் வந்த கட்டுரையை மொழிபெயர்த்திருந்தபோது அதன் மொழிபெயர்ப்பு வடிவத்தை அச்சாவதற்கு முன் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகமிகக் கவனமாக, நுட்பங்களோடு கிருஷ்ணா எழுதுவதை அப்படியே தமிழில் சிக்கெனப் பிடிக்கும் திறமையை அதில் பார்த்தேன். அதைவிட மிக அதிகமான சவால் இந்த நூலின் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. தமிழ்நாட்டு மேன்மையை, தமிழ்நாட்டு யதார்த்தத்தை ஆங்கிலத்தில் எழுதி மீண்டும் தமிழுக்குக் கொண்டுவரும்போது இருக்கக்கூடிய மிகப்பெரும் சவால், ஆங்கில மொழிக்கு விசுவாசமாக இருப்பதா அல்லது ஆங்கில மொழி சித்தரிக்கும் அந்த யதார்த்தத்தைப் பிடிப்பதா என்பதுதான். இந்தச் சவாலை மிகத் திறமையாக அரவிந்தன் கையாண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பு சரளமாயிருந்தால் அது சிறந்த பண்பு கிடையாது. ஆனால், இந்த நூலிலே சரளம் இருக்க வேண்டும். மிருதங்கத்தைப் பற்றி இசை அறிவே இல்லாத ஒருவர் படித்தாலும் அணுக்கமாக இருக்க வேண்டும். ஏதோ வேறொரு நாட்டு இசைக் கருவியைப் பற்றிப் படிப்பதைப் போன்று இருக்கக் கூடாது. நூலை மொழி பெயர்த்தபோது அரவிந்தனின் ’டங்குவார் அறுந்து போயிருக்கும்’ என்று நினைக்கிறேன். மிகச் சிறப்பாக அரவிந்தன் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று உரையை நிறைவுசெய்தார் சலபதி.
“மிருதங்கம் செய்பவர்களைப் பற்றி இதழ்களில் ஓரிரு கட்டுரைகள் எழுதினேன். அவை பரவலான கவனத்துக்கு வந்தன. பத்திரிகையாளன் என்ற நிலையில் அத்துடன் என் வேலை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் டி.எம். கிருஷ்ணா, அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் விரிவாக ஆய்வு செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார். இசை மேல் தட்டுக்குரியது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அப்படி அல்ல என்று இந்தப் புத்தகம் திரும்பத்திரும்பச் சொல்கிறது’’ என்று தொடங்கியது இதழாளர் கோலப்பனின் உரை.
இசை பிராமணர்களால் மட்டும் வளரவில்லை. பல்வேறு சாதியினரும் இசையில் ஈடுபட்டிருந்தார்கள். அது ஓரிடத்தில் பரவலாக இருக்கிறது, இன்னோரிடத்தில் பரவலாக இல்லை. அதுதான் வித்தியாசம் என்று தொடர்ந்த கோலப்பன், “கலையைச் சாதி அடிப்படையில் பார்ப்பது உகந்ததல்ல. அதையும் கடந்த ஒன்று அது என்று கிருஷ்ணா தனது புத்தகத்தில் ஆதாரங்களுடன் காட்டுகிறார். ஒவ்வொரு அடுக்காகப் பிரச்சினைகளை ஆராய்கிறார். இந்தப் புத்தகம் தமிழ்ச் சமூகத்துக்குக் கிருஷ்ணா செய்திருக்கும் சேவை’’ என்று முத்தாய்ப்பு வைத்தார்.
நூலாசிரியர் கிருஷ்ணா தனது நன்றியுரைக்கு முன்பாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மிருதங்கச் சிற்பிகளுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்வில் வியாசர்பாடி ஜி. கோதண்ட ராமனும் மாம்பலம் எஸ். சிவகுமாரும் நாதஸ்வர இசை வழங்க வேலியம்பாக்கம் வி.எம்.பழனிவேல் தவில் வாசித்தார். தில்லி ஸ்ரீராம், பிரவீண் ஸ்பர்ஷ், சுமேஷ் நாராயணன் மூவரும் மிருதங்க வாசிப்பில் லய மழை பொழிந்தார்கள்.
நூல் வெளியீடாகத் தொடங்கிய நிகழ்ச்சி இலக்கிய விழாவாகவும் இசை விழாவாகவும் நிறைவடைந்தது.