கடிதங்கள்
‘அத்தனை எளிதில் கிட்டுமா ஜிஸ்மானியத்தான மிஃறாஜ்’ கட்டுரை சமீபத்தில் படித்த ஆழமான, அற்புதமான கட்டுரைகளில் ஒன்று’
மாயயதார்த்தப் புனைவுக்குக் குதிரைவால் அற்புதமான தொடக்கப்பள்ளி. அதைத் தனது அரசியல் சமூகவியல் புரிதல்களைப் பரப்பும் யதார்த்தவாதப்படமாக மாற்றி அதையும் சரியாக எடுக்காமல் தோல்வியுற்றது வருந்தத்தக்க ஒன்று. இத்தோல்வி, இத்தகைய நல்ல முயற்சிகள் இன்னும் சில ஆண்டுகள் நடக்காமல் செய்து விடும். அவ்வகையில் அப்படத்தின் குறைகளைப் புரிந்து கொள்வது இனி இத்தவறுகள் நடக்காதிருக்க உதவும்.
படம் முழுக்கவும் எம்ஜிஆரைச் சீண்டியுள்ளது. புனிதப்பிம்பங்களைக் கேள்விகளுக்கு உட்படுத்துவது அவசியமான ஒன்றுதான். இலக்கிய உலகில் இவை நடக்கின்றன. வலுவான ஒருவரைக் கேள்விக் கேட்டுப் பிரச்சினைகளைச் சந்திக்கும் இலக்கியவாதிகள் உண்டு. நாடு, கடத்தல், சிறை என வெளிநாடுகளிலும் இலக்கியம் இதைச் சந்திக்கிறது.
எந்தத் தலைவரைத் தொட்டால் பிரச்சினை வராது என நன்றாக யோசித்து, புனிதத்தை உடைப்பது படைப்புலகம் கண்டிராத ஒன்று. சர்வாதிகாரிகள் ஆளும் தேசங்களில் முந்தைய தலைவர்களை, எதிரி நாட்டுத்தலைவர்களை இழிவுபடுத்தி ஆட்சியாளர்களைக் குளிர்விக்கும் நூல்கள் / படங்களைப் பார்த்திருக்கிறோம்.
(சர்வாதிகாரம் நீங்கியதும் ஆட்சியாளர்களால் இழிவுக்கு உள்ளான தலைவர்கள் புத்துயிர் பெறுவதையும் பார்த்துள்ளோம்)
நம்நட்டிலும் இத்தகைய போக்கு ஆரம்பித்து இருப்பது ஆபத்தானது. இலக்கு வேறு பயணம் வேறு அல்ல. உயர் நோக்கங்களை நோக்கிய பயணமும்கூட உயரிய விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுரையின் பார்வை படைப்பாளிகள் அனைவருக்குமான அவசியத் தேவை.
பிச்சை
சென்னை
‘காங்கிரஸ் கட்சியின் தார்மீகத் தோல்விகள்’ தலையங்கத்தை மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் வாசித்தேன். என் மனத்தில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்னென்ன எண்ண ஓட்டங்கள் இருந்ததோ அவை அனைத்தும் தலையங்கத்தில் இருப்பதைப் படிக்கப் படிக்க எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நூறாண்டுகள் கடந்த பாரம்பரியம்மிக்க ஒரு கட்சியின் செயலற்ற தன்மையானது ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் கவலைகொள்ளச் செய்கிறது. ஆளுங்கட்சிக்குச் சரியான எதிர்க்கட்சி அமையவில்லை என்று சொன்னால் ஆளுங்கட்சி, தான் நினைப்பதெல்லாம் செய்யத் துடிக்கும். மக்களை மூளைச் சலவை செய்து வாக்குகளாக மாற்றும் அரசியல் கட்சிகளின் தந்திரம் ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களைவிடத் தலைவர்களே அதிகம். இவர்கள் கிராம அளவில் கட்சியை வளர்ப்பதற்காகவும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கட்சியின் பலத்தைக் கூட்டுவதற்காகவும் எந்தவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரியவில்லை. மக்கள் காங்கிரஸ் கட்சியின்மீது இன்றளவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் செயல்பாடுகள் அக்கட்சியிடம் இருக்கிறதா என்றால் ஒன்றுமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாகச் சட்டமன்றத் தேர்தல்களில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருப்பதைக் காங்கிரஸ் கட்சி ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். மக்களுக்கான கட்சியாக மக்களோடு மக்களாகத் தொண்டர்களைத் திரட்டும் கட்சியாகவும் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் கட்சியாகவும் காங்கிரஸ் கட்சி மாறினால்தான் எதிர்காலத்தில் மக்களின் ஆதரவைப் பெற முடியும். ஆளுங்கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகச் சரிப்படுத்திக்கொண்டால் ஜனநாயகம் வலுப்படும்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ள உக்ரைன் பற்றி வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட கட்டுரைகளில் விஜய் பிரசாத்தின் பேட்டி முக்கியமானது. உக்ரைன் போருக்கான அடிப்படைக் காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருக்கும் காரணங்கள் நுட்பமானவை, உக்ரைன் போருக்கான அடிப்படை அவைதான். அபூர்வமான பேட்டி அது.
சக்கரியாவின் சிறுகதை நன்றாக இருந்தது. ஏதாவதொரு மலையாளச் சிறுகதை அல்லது பிறமொழிச் சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன். பெருமாள் முருகனின் கட்டுரையும் நன்றாக இருந்தது.
வண்ணநிலவன்
சென்னை