மே 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வெந்து தணியாத நிலம்
      கோத்தபாயவுடன் ஜனாதிபதி முறையும் ‘Go Home'
      கல்வி, வேலைவாய்ப்பு: பெருந்தொற்றின் பெருந்தாக்கம்
      இமயமலைச் சாரலில் காலநிலை மாற்றமும் நில அரசியலும்
      கணினித் தலைமுறையின் இலக்கியப் பங்களிப்பு
    • கதை
      கிழிவு
      இணை
    • பாரதியியல்
      “ஈனப் பறையர்க ளேனும்...” பாரதி பாடல் சர்ச்சை
    • நாடகம்
      ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘கதையல்ல வாழ்க்கை’ மேடை நிகழ்த்தும் மாயம்
    • அஞ்சலி: ஷேன் வார்ன் (1969-2022)
      பந்தை ஏந்திய மந்திரவாதி
    • பதிவு
      ஒரு மாலையும் இரண்டு நூல்களும்
    • திரை
      மீட்பர் மனநிலையற்ற ஜெய் பீமும் இன்னபிற திரைப்படங்களும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      இரண்டாம் வரலாறு
    • நேர்காணல்: டி.எம். கிருஷ்ணா
      அவர்களைப் பொறுத்தவரை நான் துரோகி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2022 நாடகம் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘கதையல்ல வாழ்க்கை’ மேடை நிகழ்த்தும் மாயம்

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘கதையல்ல வாழ்க்கை’ மேடை நிகழ்த்தும் மாயம்

நாடகம்
அரவிந்தன்

சமகால யதார்த்தங்களைக் கலாபூர்வமாகப் படைப்பில் வெளிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவர் இமையம். சாதியச் சூழல், பொதுச் சமூகச் சூழல், அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்கள், நவீன வாழ்வின் தாக்கங்கள் என இவருடைய கதைக்களம் விரிந்து பரந்தது. இமையத்தின் எழுத்தைக் குறிப்பிட்டதொரு சமூகப் பின்புலத்தை வைத்து அடையாளப்படுத்துவது அவருடைய கதையுலகின் பன்முகத்தன்மையை அறியாத அல்லது அங்கீகரிக்க விரும்பாதவர்களின் வழக்கம். இந்நிலையில் சமகாலத்தின் முக்கியமான நாடக ஆளுமைகளில் ஒருவரான ப்ரஸன்னா ராமஸ்வாமி அண்மையில் மேடையில் நிகழ்த்திய ‘கதையல்ல வாழ்க்கை’ என்னும் நாடக வடிவம் இமையத்தின் படைப்புலகின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இமையத்தின் துல்லியமான சித்தரிப்புக்கள் காட்சி ஊடகக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டக்கூடியவை. மன ஓட்டம் சார்ந்த அவருடைய பதிவுகள் காட்சிப்படுத்தலுக்கான தீவிரமான சவால்களை முன்வைக்கக் கூடியது. இமையத்தின் எழுத்து, குறிப்பாக உரையாடல்கள், காட்சி ஊடகத்திற்குத் தரும் சாதகங்களைப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ப்ரஸன்னா மன ஓட்டங்களும் மவுனங்களும் முன்வைக்கும் சவால்களைத் தனக்கே உரிய விதத்தில் எதிர்கொள்கிறார்.

ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்திற்குச் செல்லும் எந்தப் பிரதியும் மாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. நாடகம் அல்லது திரைவடிவத்திற்காகவென்றே எழுதப்படும் பனுவல்களும் நாடக, திரை வடிவங்களில் வெளிப்படும்போது இயக்குநரின் ஆளுமை, அரசியல், கலை நோக்கு ஆகியவை சார்ந்த சில மாற்றங்களுக்கு உள்ளாவதைக் காண முடியும். காட்சிக் கலைகளில் இயக்குநரின் படைப்பாளுமை சார்ந்த மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, காட்சிப்படுத்தல்கள் தரும் அனுபவம் பிரதிக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்ப்பதுடன் நடிகர்களின் பங்களிப்பும் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகிறது. ப்ரஸன்னாவின் நாடகமாக்கலில் இவை அனைத்தையும் காண முடிகிறது.

பணத்தை வாரியிறைத்து மேடையை உருமாற்றிப் பார்வையாளர்களைப் பிரமிக்கவைப்பதில் நம்பிக்கையற்றவர் ப்ரஸன்னா. எளிமையான சில உத்திகளின் மூலம் பின்புலக் காட்சிகளைப் பார்வையாளர்களிடம் உணரவைத்துவிடுவதில் தேர்ந்தவர். பின்னணிக் குரல்கள் மூலம் காட்சி மாற்றங்களை விவரிக்கும் உத்தியைத் தவிர்த்துவிட்டு நாடகப் பாத்திரங்களின் வாயிலாகவே அவற்றைச் சொல்லிவிட்டுப் பனுவலுக்குள் பார்வையாளர்களைக் கூட்டிச்செல்வதில் கவனம் செலுத்துகிறார். மேடையில் பார்வையாளர்களைப் பிரமிக்கவைக்கும் காட்சி உருவாக்கங்கள் சில சமயம் சிறந்த காட்சி அனுபவத்தைத் தரக்கூடும். காட்சி ஊடகத்திற்குத் தேவையானதொரு கூறு இது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் நாடகம் தரும் ஒட்டுமொத்தக் கலையனுபவத்தை எடுத்துக்கொண்டால் காட்சிச் சித்தரிப்புகளின் அடிப்படையில் பனுவலின் கதைக்களம் சார்ந்த நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை. காட்சிப்படுத்தல் தரும் பிரமிப்புகளும் அனுபவங்களும் நாடகத்தின் தாக்கத்தைக் கூட்ட உதவலாம். ஆனால் கதை என்னும் அளவிலும் கலை நோக்கிலும் வலுவற்ற பனுவலைக் கலையாக மாற்ற இத்தகைய சித்தரிப்புகள் பெரிதாக உதவுவதில்லை. கலாபூர்வமான வலுவைக் கொண்டிருக்கும் பனுவல், பின்புலச் சித்தரிப்பின் நம்பகத்தன்மை சார்ந்த சவாலை மாறுபட்ட முறையில் எதிர்கொள்ளும், ப்ரஸன்னாவின் நாடகத்தைப் போல.

வீட்டின் உட்புறம், கிராமச் சாலை, குளம், கோயில், பள்ளிக்கூடம், மாடுகளை வைத்து நடக்கும் பந்தயம் ஆகிய காட்சிப் பின்புலங்களைச் சித்தரிக்க ப்ரஸன்னாவின் மேடை எந்த மெனெக்கெடலையும் எடுத்துக்கொள்ளவில்லை. பனுவல் ஏற்படுத்த விரும்பும் தாக்கம் இத்தகைய மெனெக்கெடல்களைக் கோரவில்லை என்று சொல்லலாம்; அல்லது, இத்தகைய மெனெக்கெடல்கள் இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையாகவும் இதைப் பார்க்கலாம். எப்படிப் பார்த்தாலும், ‘செட்’ என்று சொல்லப்படும் செயற்கை உருவாக்கங்களின் துணையில்லாமலேயே கதைக்களத்தின் உணர்வை நாடகப் பிரதியும் நடிப்பும் ஏற்படுத்திவிடுகின்றன. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் பெண் சலனமற்ற முகத்துடன், “டிசி வேணும் சார்” என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போது அவளுக்குப் பக்கத்தில் குழந்தைகள் இல்லை என்னும் எண்ணமே ஏற்படுவதில்லை. கதைக்குள் வரும் மெலடி டார்க்கஸ்

கோயிலையும் குளத்தையும் நடிகர்களின் குரல், நடிப்பு ஆகியவை மூலமாகவே ‘பார்க்க’ முடிகிறது. வீட்டிலிருக்கும் ஒரு பெண், தன் வீட்டுக்கு நீண்ட காலம் கழித்து வரும் தோழியுடன் அமர்ந்து பேசும்போது அந்தக் காட்சியின் உணர்ச்சி சார்ந்த கனம் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தையே வீடாகக் கருத வைத்துவிடுகிறது. காட்சிச் சித்தரிப்புகளுக்கான தேவை அதிகம் உள்ள மணலூரின் கதை, நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய இரு பகுதிகளும் அந்தச் சித்தரிப்புகள் இல்லாமலேயே எழுத்தின் மூலமாகவும் நடிப்பின் மூலமாகவும் அந்தக் காட்சிகள் தரக்கூடிய உணர்வுகளை ஏற்படுத்திவிடுகின்றன.

நாடகமாக்கலின் இத்தகைய சாத்தியப்பாடுகள் மேலும் பல சிறந்த கதைகளைக் குறைந்த செலவில் மேடையில் நிகழ்த்தக்கூடிய சாத்தியங்களை உருவாக்குகின்றன. காட்சிச் சித்தரிப்புகள் கோரும் பெரும் செலவையும் கால அவகாசத்தையும் தவிர்க்க முடிந்தால் பல அருமையான கதைகளை நாடகங்களாக மாற்றலாம்.

இமையம் எழுதிய ‘ஆஃபர்’, ‘மணலூரின் கதை’, ‘வீடும் கதவும்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ ஆகிய நான்கு கதைகளையும் ‘கதையல்ல வாழ்க்கை’ என்னும் தலைப்பில் இயக்கியிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் ஏப்ரல் முதல் வாரக் கடைசியில் இந்த நாடகம் அரங்கேறியது.

‘ஆஃபர்’, ‘மணலூரின் கதை’ ஆகிய இரு கதைகளும் நவீன வாழ்வின் அபத்தங்களைச் சொல்லும் கதை. ‘ஆஃபர்’, நுகர்வுக் கலாச்சாரத்தின் இலவசங்கள் என்னும் தூண்டில் கல்வித் துறையையும் விட்டுவைக்காததைச் சித்தரிக்கிறது. ‘மணலூரின் கதை’, பார்வையாளர்களை இழுப்பதற்கான பரபரப்பை உருவாக்க ஊடகங்கள் ‘உண்மை’க் கதைகளை உருவாக்கும் போக்கையும் ஊடகங்களின்பால் மக்களுக்கு இருக்கும் மயக்கத்தையும் சொல்கிறது. இந்த இரண்டு கதைகளுமே வெளிப்படையான விமர்சனக் குரலைக் கொண்டவை. யதார்த்தத்தை மிகைப்படுத்திப் பகடி செய்வதன் மூலம் அதை விமர்சனத்திற்கு உள்ளாக்குபவை. வாசிப்பதற்குச் சுவாரசியமானவை. இமையத்தின் கலைத்திறனின் வலிமை கணிசமாகக் கூடிய படைப்புகள் அல்ல இவை. இந்தப் பலவீனம் நாடகப் பிரதியிலும் பிரதிபலிக்கிறது. உரையாடல்களின் செறிவு பிரதிக்கு நம்பகத்தன்மை சேர்க்க உதவினாலும் சித்தரிப்பின் அடிப்படையில் உள்ள மிகைத்தன்மை இந்தப் பிரதிகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் குறைத்துவிடுகிறது. எனினும் பிரசன்னா ராம்குமாரின் நடிப்பும் உரையாடல்களும் இந்த நாடகங்களைக் காப்பாற்றி விடுகின்றன.

 

 

 

 

 

 

         இமையம்,  ப்ரஸன்னா ராமஸ்வாமி

‘வீடும் கதவும்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ ஆகிய இரண்டு நாடகங்களும் கலாபூர்வமான வலிமை கூடியவை. குறிப்பாக, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானது. இமையத்தின் கதையில் உள்ள மவுனங்களும் பிரதியின் உட்கூறுகளும் நாடகத்திற்கே உரிய விதத்தில் அற்புதமாக வெளிப்படுகின்றன. ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கும் அந்தப் பெண் பள்ளிக்கூடத்தில் தன் குழந்தைகளுக்கான இடமாற்றுச் சான்றிதழைப் பெறுவதற்காக வந்து நிற்கும் காட்சி சொற்களால் சாத்தியப்படாத உணர்ச்சிகளைக் கடத்துகிறது. தன்னுடைய கோரிக்கை சாத்தியமற்றது என்ற நிலையிலும் அதைத் தொடர்ந்து வற்புறுத்தும் அந்தப் பெண் அதற்கான காரணத்தைக் கேட்கும்போது உடைந்துபோகிறாள். தனக்கு நேர்ந்த கதியை அவள் சொல்வது கேட்பவர்களின் மனச்சாட்சியை உலுக்குகிறது. அவள் குடும்பத்தைச் சீரழித்த சாதிய யதார்த்தத்தின் குரூரம் உறையவைக்கிறது. இமையத்தின் எழுத்தில் வலுவாக வெளிப்படும் இந்தப் பகுதியைத் தன் நாடகமாக்கத்தின் மூலம் அதிரவைக்கும் அனுபவமாக மாற்றுகிறார் ப்ரஸன்னா. கடந்தகாலக் காட்சிகளை நினைவுகூர வேண்டிய தருணத்தில் நாடகப் பாத்திரங்களே உருமாறிக் காட்சிகளைச் சித்தரித்துப் பின் இயல்பு நிலை மீளும் உத்தி, பிரதிக்குள் நிகழ்த்தப்படும் தனிக்காட்சிகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

ஜல்லிக்கட்டு போன்ற மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்குப் பின்னால் இருக்கும் சாதியப் பரிமாணங்களை அம்பலப்படுத்தும் பிரதி இது. பண்பாட்டுக் கூறுகளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களும் போராட்டங்களும் இது யாருக்கான பண்பாடு என்கிற உண்மையை மூடிமறைத்துவிடுகின்றன. இந்த மரபுகளுக்குப் பின்னால் இருக்கும் சாதிய வன்மத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகின்றன. பொது நீரோட்டத்தின் உற்சாக வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பு ஒடுக்கப்பட்டோரின் குரலை ஒரேயடியாக அமுக்கிவிடுகிறது. ஒதுக்கப்படுதல், ‘மீற’லுக்காகத் தண்டிக்கப்படுதல் ஆகியவை தாண்டி, தங்கள் மீதான வன்முறையைப் பற்றிக் குரலெழுப்பவும் முடியாத வகையில் ஒடுக்குமுறை தன்னை முழுமையாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இத்தகைய சூழல் நிலவுகிறது என்னும் எளிய உண்மைகூடப் பெருவாரியானவர்களுக்குத் தெரியாத நிலையில் அந்த உண்மையைத் திரை விலக்கிக் காட்டும் இமையத்தின் படைப்பு எழுப்பும் அதிர்வுகள் வலுவானவை.

இந்தக் கதை எழுப்பும் சவாலை எதிர்கொண்டு ப்ரஸன்னாவின் நாடகப் பிரதி செறிவாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுகிறது. கணவனை இழந்த பெண் உடைந்து அழும் காட்சியும் தன் கணவன் இறந்த விதத்தைக் கூறும் விதமும் பஞ்சாயத்தில் கூடியிருப்பவர்களைப் பார்த்து எழுப்பும் கேள்விகளும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. ப்ரஸன்னாவின் பிரதியும் மெலடி டார்க்கஸின் நடிப்பும் இணைந்து செய்யும் மாயம் நாடகத்தை அதன் உச்சபட்ச சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறது.

 

கல்வி, நவீனத்துவச் சிந்தனை, பரவலாகிவரும் வாய்ப்பு வசதிகள், அரசியல் தளத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஆகியவை பாலினச் சமத்துவத்தை ஓரளவேனும் சாத்தியமாக்கியிருக்கின்றன. மாற்றங்களின் அடையாளங்கள் பொதுவெளியின் சகல கூறுகளிலும் பளிச்சென்று தெரிகின்றன. கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளில் அவர்களுடைய இருப்பு, அதிகார அரசியலில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பங்கு எனப் பல விதங்களிலும் இதை நாம் காண முடிகிறது. ஆனால் இந்தப் போர்வையைச் சற்றே விலக்கிவிட்டுப் பார்த்தால் உண்மையான மாற்றம் இன்னமும் பல இடங்களில், பல தளங்களில் பெரிதாகச் சாத்தியப்பட்டுவிடவில்லை என்னும் யதார்த்தம் தெரிகிறது. இந்த உண்மையை அதிராத மொழியில் வலுவாகப் பேசும் கதை ‘வீடும் கதவும்’. கை நிறையச் சம்பளம் வாங்கும் வேலையில் பெண்கள் இருக்கலாம். அரசியல் பதவிகள் அவர்களுக்குக் கிடைக்கலாம். ஆனால் உண்மையான அதிகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் இல்லையென்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட இரு தோழிகளை வைத்துச் சொல்கிறது இமையத்தின் கதை. மிகுதியும் உரையாடலின் வழி நகரும் இந்தக் கதை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் பல செய்திகளைக் கூறிச் செல்கிறது. நாடகப் பிரதி இந்தக் கதையின் தாக்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. நடிப்பும் உரையாடல்களிடையே நிலவும் மவுனங்களும் இதைச் சாத்தியப்படுத்துகின்றன.

கதையின் ஆதாரமான செய்தி இவர்கள் இருவரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. வாசிப்பின் மூலம் எளிதாக வாசகர்களைச் சென்றடையும் இந்தச் செய்தி நாடகமாக்கலில் மேலும் வலிமையோடு சென்றடைகிறது. இந்த இரு பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள், அவர்களுடைய ஒப்பனைகளிலும் உடல்மொழிகளிலும் உள்ள மாறுபாடுகள், ஆற்றாமைகளும் நிராசைகளும் யதார்த்தத்தின் வெம்மையும் இவர்களுடைய குரல்களிலும் முக பாவங்களிலும் வெளிப்படும் விதம் ஆகியவை பார்வையாளர்களின் மனங்களைக் கசியச் செய்யக்கூடியவை. இருவருக்கிடையே சொற்களாலும் சொற்களைத் தாண்டியும் பகிர்ந்துகொள்ளப்படும் தோழமையின் இதம் நெகிழ்வூட்டுகிறது. ஜானகி சுரேஷ், ஸ்மிருதி ஆகியோரின் நடிப்பு கதைக்குக் கூடுதல் பரிமாணம் சேர்க்கிறது.

நவீன நாடகம் என வகைப்படுத்தப்பட்டாலும் ப்ரஸன்னாவின் நாடகங்கள் பின்நவீனத்துவத் தன்மை கொண்டவை. ஒற்றைப் பிரதியை மறுத்துப் பல்வேறு பிரதிகளை ஊடாடவிடுவதில் மட்டுமின்றிப் பல்லூடகங்களின் சங்கமமாகவும் பேசுபொருள் சார்ந்த பல்வேறு கூறுகளைக் கொண்டதாகவும் தன் நாடகங்களை அவர் வடிவமைக்கிறார். கதைக்கரு, கதையின் மையம் என்னும் மரபார்ந்த கருத்துக்களின் வரையறையை மாற்றும் அவருடைய பனுவல்களும் நிகழ்த்துமுறைகளும் பின்நவீனத்துவத் தன்மையுடன் பல குரல்களில் பேசுகின்றன. அவருடைய நாடகங்களின் இந்தப் பொதுப்போக்கிலிருந்து விலகி நிற்கிறது ‘கதையல்ல வாழ்க்கை’. வடிவம் சார்ந்தோ கூறுமுறைகள் சார்ந்தோ பெரிதாகப் பரிசோதனைகளில் ஈடுபடாத இமையத்தின் கதைகள் கதையம்சத்தின் வலுவிலும் கையாளும் யதார்த்தங்களின் வீரியத்திலும் நிற்பவை. சித்தரிப்பின் துல்லியத்திலும் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்ல வேண்டாம் என்னும் தேர்விலும் கதையைத் தானாக நிகழவிடுவதிலும் இமையத்தின் கலைத்திறன் இருக்கிறது. நாடகமாக்கலில் இத்தகைய பிரதி கோரும் வடிவத்தைக் கைக்கொண்டுள்ள ப்ரஸன்னா, தனது கலைத்திறனின் வேறொரு பரிமாணத்தை இங்கே வெளிப்படுத்துகிறார். பல்வேறு பிரதிகள் ஊடாடும் நாடகப் பனுவல்களுக்கும் ஒற்றைப் பிரதியைச் சார்ந்த நாடகப் பனுவலுக்குமான வேறுபாட்டை இதன் மூலம் துலக்கமாக வெளிப்படுத்துகிறார்.

கதைகளை வாசிப்பதில் கிடைக்கும் அனுபவத்தைக் காட்டிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்போது மட்டுமே கதைகளின் நாடக, திரை வடிவங்கள் தமக்கான நியாயத்தைக் கொண்டிருக்கும். மூலத்திற்கான மதிப்பைச் சிறிதும் குறைக்காமல் தனக்கான நியாயத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் ப்ரஸன்னாவின் இந்த நாடகம் மேலும் பல இலக்கியப் பிரதிகள் செறிவான நாடகங்களாக மாறுவதற்கான பாதையை வகுத்திருக்கிறது.

                       மின்னஞ்சல்: aravindanmail@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.