இமயமலைச் சாரலில் காலநிலை மாற்றமும் நில அரசியலும்
உத்தராகண்டில் நிலம் என்பது அரசியல் போர்க்களம். மாநிலச் சட்டமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய 2018 சட்டம் வெளியாட்கள் இமயமலைப் பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் நிலம் வாங்க அனுமதிக்கிறது. 2018இல், இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தபோது, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர் பீமிடம் கேட்டேன். பஞ்சாயத்து ஒன்றிய மேம்பாட்டு அலுவலகம் சூரிய ஆற்றல் குறித்து நடத்திய பயிலரங்கில் நாங்கள் அமர்ந்திருந்தோம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின் ஆற்றலை உற்பத்திசெய்துகொள்வதற்கு அரசு மானியத்துடன் கூடிய சூரிய மின்னாற்றல் உற்பத்தி பேனல்களை நிறுவுமாறு இந்தப் பயிலரங்கம் விவசாயிகளைக் கோரியது.
நாங்கள் மலைச்சரிவில் அமைந்திருந்த வயல்களில் நடந்துகொண்டிருந்தோம். பீம், “என்னிடம் ஏன் நிலம் கேட்கிறார்கள்? ஜல்-ஜங்கல்-ஜமீன் (நீர்-காடு-நிலம்) எல்லாம் தாக்குர்களுக்குச் (உயர் சாதி) சொந்தமாயிற்றே. ஜல்-வாயு பரிவர்தன் (காலநிலை மாற்றம்) இருப்பதாகவும், அதைச் சமாளிக்க இது எங்களுக்கு உதவும் என்றும் அதிகாரி சொல்கிறார். ஆனால் உண்மையான ஜல்-வாயுவில் என்ன மாற்றம் இருக்கிறது? ஏதாவது இருக்கிறதா? நாங்கள் இன்னும் தாக்குர்களின் விருப்புவெறுப்புகளுக்கேற்ப வாழ்கிறோம். வெளியில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது என் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. இப்போது நான் உணவுக்குப் பதிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? அது எனக்கு வேண்டாம்” என்றார் பீம்.
பீமின் கவலைகள் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) அறிக்கைகளில் இடம்பெறவில்லை. இமயமலை பெருமளவில் காலநிலை மாற்றத்திற்கு உள்ளாவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாதிப்பு மதிப்பீடுகளும் பீமின் கவலைகள் குறித்துப் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை. தெற்காசியா முழுவதும் உள்ள கிராமப்புறக் குடும்பங்கள் சாதி, பாலினம், வர்க்கம், மதம் என வரலாற்று ரீதியான நடைமுறைகள் பலவும் இடைவெட்டும் புள்ளிகளில் வாழ்கின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள், அதிகாரத்தின் நீடித்த ஏற்றத்தாழ்வுகளை எதிரொலிக்கும் உறவுகளின் சிக்கலான வலையிலிருந்து வெளிப்படுகின்றன.
காலநிலை மாற்றமும் சமூக உறவுகளும்
பீமின் குடும்பம் அமைந்துள்ள உத்தராகண்டின் கிராமப்புறம் ஒரு கொதிகலனைப் போன்றது. சமூக-அரசியல் போதாமை மனிதர்களையும் மனிதர்கள் அல்லாதவற்றையும் ஒரே மாதிரியாகப் பாதிக்கிறது. இதன் வரலாற்றுரீதியான வேதனையைக் காண வேண்டிய நிர்ப்பந்தத்தை மாறிவரும் காலநிலை-சமூக உறவுகளுக்கான தொழில்நுட்ப-நிர்வாகத் தீர்வுகள் ஏற்படுத்துகின்றன.
உத்தராகண்ட் 2000ஆம் ஆண்டு உருவானது. சமவெளி மக்களால் சுரண்டப்படுவது பற்றிய கவலைகளிலிருந்து உத்தராகண்ட் தனி மாநிலத்திற்கான இயக்கம் உருவானது. இத்தகைய அணிதிரட்டல்கள் 1990களில் வன்முறை சார்ந்த போராட்டங்களால் வலுப்பெற்றன. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுச் சட்டங்களைக் குறித்து மேல்தட்டில் இருக்கும் சாதியினருக்கு இருந்த கவலைகளால் இவை தூண்டப்பட்டன. இருப்பினும், போராட்டத்தின் மூன்று பிரச்சினைகளான வாழ்வாதாரம், நிலம், வளர்ச்சி ஆகியவை இன்னமும்கூடப் பெரும்பாலான குடும்பங்களுக்கு மிகவும் கவலையளிப்பவையாகவே உள்ளன. இமயமலைப் பகுதியில் உள்ள உத்தராகண்டில் உள்ள நிலம் பல்வேறு கற்பனைகளின் விளைபொருள்.
கற்பிதங்களின் களமான மாநிலம்
உத்தராகண்ட் மாநிலமானது ‘ஆபத்துக்கான வாய்ப்புகள் நிரம்பிய நிலம்’ என்னும் கற்பிதம் நிலவுகிறது. இணக்கமற்ற காலனித்துவச் சூழல் குறித்த தேய்ப்படிமங்களை இமயமலைச் சீரழிவுக் கோட்பாட்டின் சுற்றுச்சூழல் சார்ந்த பதற்றங்களுடன் இணைத்துப் - ‘பலவீனம்’, ‘ஆபத்து’ - ஆகிய கருத்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிராந்திய ரீதியிலான விதிவிலக்கான தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இமயமலைப் பகுதியின் சூழலியல் மாற்றத்தின் சமகாலக் கணக்குகள் பேரழிவு சார்ந்த தீர்க்கதரிசனங்களை அறிவிக்கின்றன.
‘ஒழுங்கற்ற எல்லைப்பகுதி’ என்னும் படிமம் அந்நியர்களுக்கு எதிரான அரண் என்னும் இமயமலையின் வரலாற்றுப் பாத்திரம், நவீன அரசின் அண்மைக்காலப் புவிசார் அரசியல் நடுக்கங்கள் என இரண்டையும் எதிரொலிக்கிறது. பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் ராணுவமயமாக்கல், மனிதர்கள்மீதும் மனிதர்கள் அல்லாதவை மீதுமான கண்காணிப்பு ஆகியவை மாநிலம் முழுவதும் நிலப் பயன்பாட்டை வகைப்படுத்துகின்றன.
‘பிரிக்கும் எல்லைப் பகுதி’ என்னும் கருத்து, மலைகளுக்கும் சமவெளிகளுக்கும் இடையிலான சுரண்டல் உறவுகளைப் பிரதிபலிக்கிறது. காலனியக் காலத்தில், இது மரத்தையும் மனித உழைப்பையும் கொண்டிருந்தது. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிந்திய இந்தியாவில் சுரங்கம், அணைகள், வணிகத் தோட்டக் கலை ஆகியவை தோன்றியுள்ளன. சமவெளிகளின் தொழில்துறை இயந்திரங்களின் பசிக்குத் தீனிபோடப் பரந்த நிலப்பரப்புகளைத் ‘தியாக மண்டலங்களாக’ மாற்றியது.
இறுதியாக, ‘இந்துக்களின் புனித பூமி’ என்னும் உருவகம், பல புனித யாத்திரைத் தலங்களின் புராணங்களையும் அங்குள்ள பொருள்களையும் பயன்படுத்தி இந்தப் பகுதி இந்துக்களின் தாயகம் என்னும் உணர்வை எழுப்புகிறது. இந்தப் பார்வையில் தேசிய இறையாண்மைக்கு, எல்லைக்கு அப்பாலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த எண்ணங்கள் பெரும்பான்மை அரசியலுடன் தொடர்புகொண்டவையாக உள்ளன. இது மாநிலத்தின் பெரும்பாலான உயர்சாதி இந்துக்களின் கவலைகளுக்கான பதிலாக அமைகிறது.
மாறிவரும் யதார்த்தங்கள்
நிலம்சார்ந்த இந்த மாறுபட்ட கற்பனைகள் மாறிவரும் காலநிலை யதார்த்தங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கின்றன? தீவிர மழைப்பொழிவு அதிகரித்தல், பயிர்களுக்கு உரமிடும் நேரம் மாறுதல், குளிர்காலப் பனியின் பத்தாண்டுக் கால அளவு குறைதல், பருவமழையின்போது பாதரச மழை பொழிதல் ஆகியவை இந்த யதார்த்தங்களில் அடங்கும். நிலம்சார்ந்த கற்பனைகளுக்கும் இந்த யதார்த்தங்களுக்கும் இடையிலான தொடர்புகள் கிராமப்புறச் சமூகங்களுக்குள் வரலாற்றுரீதியான ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன அல்லது மீண்டும் உருவாக்குகின்றன?
முதலாவதாக, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வேறிடத்திற்கு ஓட்டிச்செல்வது, மனிதர்களின் இடப்பெயர்வாக மாற்றம் பெற்றிருக்கிறது. பருவ காலங்களில் பெரும்பாலும் பல்வேறு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச்செல்வது கணிசமாகக் குறைந்துவருகிறது. எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் புல்வெளிகளில் நிகழ்ந்துவரும் ராணுவமயமாக்கல், மாறிவரும் வாழ்வாதார வேட்கைகள், மேலிருந்து கீழே அமல்படுத்தப்படும் இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கைகள்/திட்டங்கள், வளர்ந்துவரும் சுற்றுலாத் தொழில் ஆகிய அனைத்தும் குளிர்கால மழைப்பொழிவு குறைதல், வெப்பமயமாதல் அதிகரித்தல் ஆகியவை தாவரங்கள்மீது ஏற்படுத்தும் தாக்கங்களுடன் குறுக்கிடுகின்றன. இதனால் குடியிருப்புகள் தொடர்பான கவனம் மலைப்பகுதிகளிலிருந்து சமவெளியின்மீது திரும்புகிறது.
ஹரித்வார், ஹல்த்வானி ஆகிய பரபரப்பான நகரங்களுக்கு அருகிலுள்ள தொழில் பூங்காக்களில் காணப்படும் புதிய கல்வி, தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு ஆகிய வற்றைப் பயன்படுத்திப் புலம்பெயர்ந்த இளைஞர்கள் மூலதனம், தொழிலாளர் ஆகியவை சார்ந்த வலையின் ஒருபகுதியாக உள்ளனர். கிராமப்புறக் குடும்பங்கள் இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தித் தங்கள் மூதாதையரின் நிலத்தை விற்றுப் பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு அருகில் குடியேறுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் புலம்பெயர்ந்து இங்கு வருவோருடன் சேர்ந்து வசிப்பிடத்திற்கான தேடலில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
மாறிவரும் காலநிலையைப் போலவே குடும்பங்களின் வாழ்வியல் தன்மையும் இப்போது மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது. குடும்பங்களின் நிலை, சாதாரண வேலைகள், ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் கிடைக்கும் பணம், தொழில்துறைத் தரகர்களின் விருப்பங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அது இருக்கிறது. மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் ‘கைவிடப்பட்டுள்ளன.’ புதிதாகக் குடியேறும் குடும்பங்களின் வேட்கைகளால் இங்குள்ளவர்களின் எதிர்காலம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
மாநில இந்துத்துவம்
இரண்டாவதாக, மையத்தில் நிலவும் இந்துத்துவ அரசியலின் எழுச்சிக்கு ஏற்ப, மாநில அளவிலும் இந்துப் பெரும்பான்மைவாதம் உருவாகிவருகிறது. மாநிலத்தில் கணிசமாக இருக்கும் மேலடுக்கிலுள்ள சாதியினரின் மக்கள்தொகை, இங்குள்ள பல்வேறு புனிதத் தலங்கள், உத்தரப் பிரதேசத்திலிருந்து காதல் ஜிகாத், நில ஜிகாத் ஆகிய பெயர்களில் வெளிப்படும் கொடூரமான இஸ்லாமிய வெறுப்புடனான தொடர்பாடல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்துப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்படுகிறது. மாநில அளவிலான இந்துத்துவம் சாதி, மதப் பிளவுகளை ஆழப்படுத்துகிறது. இது பரபரப்பான நிலச் சந்தையையும் உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் உயர்சாதி இளைஞர்கள் தரகர்களாகச் செயல்பட்டு, சமவெளியைச் சேர்ந்த பணக்கார உயர்சாதிக் குடும்பங்களுக்குப் பெருமளவிலான நிலங்களை விற்றுவருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சியையும் கருத்தியல் அம்சங்களையும் உள்ளே கொண்டுவருவதன் மூலம் இம்மாநிலத்தின் சூழ்நிலையை மேம்படுத்துவதே இவர்களுடைய குறிக்கோள். ஆன்மிகம், தேசியவாதம், முதலாளித்துவம் ஆகியவற்றின் போதையூட்டும் கலவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாபா ராம்தேவ் போன்ற நபர்களே இவர்களின் ஆதர்சமான ஆளுமைகள். இந்த உயர்சாதி இளைஞர்கள் நவதாராளவாத இந்து தேசத்தைக் கட்டமைத்துவரும் பதஞ்சலி போன்ற ‘சுதேசி’ நிறுவனங்களுக்குத் தேவையான சுண்ணாம்பு, மூலிகைகள், மணல் ஆகிய மூலப்பொருள்களை வழங்குகிறார்கள்.
இந்தப் பிரதேசத்தில் வான் குஜ்ஜர்கள் போன்ற முஸ்லிம் சமூகத்தினர் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வெளியாட்களாகப் பார்க்கப்படுகின்றனர். அதே சமயம், பட்டியல் சாதியினர் நில மேலாண்மை சார்ந்த முடிவுகளிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலைக்குத் தங்களுடைய சொற்ப சொத்துக்களை விற்க அல்லது வாடகைக்கு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நில உடைமையிலும் பயன்பாட்டிலும் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், நில அரிப்பை அதிகரித்தல், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய நிலங்களில் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், பாரம்பரிய வேளாண்மையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுதல் ஆகியவற்றின் மூலம் குடும்பங்களும் சமூகமும் காலநிலை மாறுபாடுகளின் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையை உருவாக்க வழிசெய்கின்றன. அது மட்டுமின்றி, இது ஏற்கெனவே பின்தங்கிய நிலையில் உள்ளவர்களிடமிருந்து அவர்களுடைய அடிப்படைச் சொத்தை நீக்குகிறது; கடவுளர் உறையும் இந்த நிலத்தின் மீதான அவர்களின் சட்டப்பூர்வமான பொருள்சார்ந்த உரிமைகோரல்களையும் அகற்றுகிறது.
சூழலியல் சார்ந்த அரசியல்
மூன்றாவதாக, ‘சூழலியல் ரீதியாகப் பலவீனமாக’ உள்ள இமயமலையைக் காலநிலை மாற்றத்தின் முக்கிய இடமாகக் கவனத்தில்கொள்ளும் நிலையில், சூழலுக்கேற்பத் தகவமைத்தல் குறித்த சொல்லாடல்கள், கொள்கைகள், அமலாக்கங்கள் ஆகியவை தகவமைப்புக்கான முரண்பட்ட தன்மைகளை உருவாக்குகின்றன. இங்குள்ள குடும்பங்கள் மாறிவரும் காலநிலை-சமூக உறவுகளுக்கான எதிர்வினையாகப் பல மாற்றங்களைச் செய்துள்ளன. குளிர்காலக் கோதுமைபோன்ற பனிக்காலப் பயிர்களைக் குறைத்தல், காய்கறிகளை வளர்ப்பதற்கான உஷ்ண நிலையைத் தரும் பாலித்தீன் கூடங்களைப் பயன்படுத்துதல், பல்வேறு பயிர்களின் நடவுத் தேதிகளை மாற்றுதல், அதிகரித்துவரும் புயல்களைச் சமாளிக்கக் கூரைத் தொழில்நுட்பத்தை மாற்றுதல், உணவில் புதிய தாவரங்களையும் விலங்கினங்களையும் இணைத்துக் கொள்ளுதல் ஆகியவையே அந்த மாற்றங்கள். காலநிலை மாற்றத்தை முக்கிய முன்னுரிமையாகக் கருதிச் செயல்படத் தவறியதற்காக இந்த நடவடிக்கைகளை நிபுணர்கள் கண்டிக்கிறார்கள். பெருகிவரும் வசந்தகால ஆலங்கட்டி மழையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகப் பழச் சாகுபடிக்குப் பதில் காய்கறிகளைப் பயிரிடுவது போன்ற நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்கிறார்கள். சந்தையின் தேவைகள், மாநில, தேசிய அளவிலான கொள்கைகள், சமூக, மத முரண்பாடுகள், குடிமைச் சமூகத்தினரின் விருப்பங்கள் போன்றவற்றுக்கும் இவை தீர்வாக அமைகின்றன.
கிராமப்புறங்களில் நடைபெறும் இத்தகைய தகவமைப்பு நடவடிக்கைகள் தொழில்நுட்ப-நிர்வாகக் கட்டமைப்பிற்குள் கடுமையான தகவமைப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற விரும்பாத ‘கட்டுப்பாடற்ற / ஒழுங்கற்ற’ செயல்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் மாநில அளவில் சிந்திக்கும்போது வெளிப்படும் யதார்த்தங்கள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. புனல் மின்சாரம், காடு வளர்ப்பு தொடர்பான சூழலுக்கு இசைவான வளர்ச்சித் திட்டங்கள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டங்கள் கரிமக் கழிவு மேலாண்மை தொடர்பான சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்ய இந்தியாவுக்கு உதவுகின்றன. அதே நேரத்தில் கொந்தளிப்பான இந்த எல்லைப் பகுதியின் மீதான கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் பலப்படுத்துகின்றன.
காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக அறிவியல் வழிமுறைகளும் சந்தைக் கருவிகளும் உத்தராகண்ட் மாநிலத்தின் தகவமைப்புத் திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய கரிமக் கழிவு மேலாண்மை, நவதாராளவாத அரசைக் கட்டியெழுப்புவது ஆகியவற்றின் தேவைகளை முன்னிறுத்துவதன் மூலம் அரசு கிராமப்புற மக்கள் மேற்கொள்ளும் தகவமைப்புச் செயல்பாடுகளைப் பெரும்பாலும் (வேண்டுமென்றே) குறைத்து மதிப்பிடுகிறது.
உத்தராகண்டில் மாறிவரும் காலநிலை-சமூக உறவுகள், நிலப் பயன்பாடு, நில உரிமை ஆகியவற்றின் பொருள், கலாச்சார யதார்த்தங்களை நிர்ணயிக்கும் அதிகாரத்தின் வரலாற்றுரீதியான அமைப்புகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. உத்தராகண்டில் நிலம் என்பது பல்வேறு கற்பனைகளின் விளைபொருள். இந்தக் கற்பனைகள் மாறிவரும் காலநிலை-சமூக உறவுகள், வளர்ந்துவரும் மத, அரசியல் முதலாளித்துவச் செயல்முறைகள் ஆகியவற்றுடன் இணைந்து மாநில அளவில் குறிப்பிட்ட சில யதார்த்தங்களைத் தோற்றுவிக்கும்.
இப்பகுதியில் சூழலியல் சிக்கல்கள் உருவாகும் விதத்தையும் பீம் குடும்பத்தைப் போன்ற மிகவும் பின்தங்கியவர்களின் பாதுகாப்பை நாம் உறுதிசெய்யும்விதத்தையும் புரிந்துகொள்வதற்கு, சுற்றுச்சூழல் அளவீடுகளை மாற்றுவதில் கவனம் செலுத்துவதற்கு அப்பால் விரிவடையும் இத்தகைய யதார்த்தங்கள் குறித்த தீவிரமான விசாரணை தேவைப்படும்.
ரிதோதி சக்ரவர்த்தி: நியூஸிலாந்து அவுடே அரோவாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கான்டெர்பரியில் மானுடப் புவியியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.
https://casi.sas.upenn.edu/sites/default/files/uploads/%28Tamil%29%20Moving%20Mountains_Weathering%20Climate%20Change%20and%20Land%20Politics%20in%20the%20Indian%20Himalaya%20-%20Ritodhi%20Chakraborty.pdf
தமிழில்: அரவிந்தன்