பந்தை ஏந்திய மந்திரவாதி
ஷேன் வார்ன் என்னும் சுழல்வீச்சு மேதை
ஷேன்வார்ன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? “டான், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முதன்மையான நட்சத்திரம் யார் என்ற கேள்வி இன்னும் கூட உயிர்ப்புடன்தான் இருக்கிறது பார்த்தீர்களா,’’ என பிராட்மேனைப் பார்த்து ஓர் அடர்த்தியான புன்னகையை வீசிக்கொண்டிருக்கலாம். அல்லது நட்சத்திரக் கூட்டங்களின் மத்தியில் பாகிஸ்தான் சுழல் பாதுஷா அப்துல் காதிருடன் சாவகாசமாக உட்கார்ந்து சமகால லெக் ஸ்பின் கலையைப் பற்றித் தீவிரமான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கலாம் அல்லது Flipper–ஐத் தன்னால் தொடர்ந்து வீச முடியாமல் போனதற்கான காரணத்தை எடுத்துச்சொல்லி அதன் பிதாமகன் கிளாரி கிரிம்மெட்டிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கலாம் அல்லது ‘இல்லாத மாறுபட்ட வீச்சுகளை இருப்பதாகச் சொல்லி மட்டையாளர்களைக் குழப்பும் வித்தையை எனக்கும் கொஞ்சம் கற்றுக் கொடு மகனே’ என வாஞ்சையுடன் கட்டியணைக்கும் ஆர்தர் மெய்லியின் முன் கன்னம் சிவந்தபடி நின்றுகொண்டிருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். எப்போதும்போல சாதாரணமானவற்றை அசாதாரணமான வகையில் செய்து தனது அசாத்தி யத்தைப் பறைசாற்றியபடியேதான் அங்கும் வார்ன் உலாவிக்கொண்டிருப்பார். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து முடித்தவர் ஷேன் வார்ன். அவருடைய தளர்வான லெக் ஸ்பின் Gripஐப் போல!
ஷேன் வார்ன் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?
ஒழுங்கின்மையின் களத்தில் நின்றபடி அதற்குள்ளும் ஓர் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென நம்பியவர்.அடங்காத மனத்தை அதன்போக்கில் அலையவிட்டு அதன் உச்சபட்சக் கற்பனையைத் தான் (மட்டுமே) நெருங்கிவிட்டதாகப் பிறரை நம்பச் செய்தவர்.இல்லாத ஒன்றை இருப்பதாகப் புனைந்து எது உண்மை, எது மாயை என்ற புதிர்ச்சுழலில் எதிராளிகளின் இருப்பைத் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தியவர்.
இயற்கைக்குச் சவால்விடும் வகையில் காற்றில் பந்தை அதீதமாகச் சுழற்றும் அவருடைய திறன், மட்டையாளர்களுக்கு அவர் வைக்கும் பொறிமுறைகள், பந்தை இட வலமாகக் கைகளில் தூக்கிப் போட்டபடி ஒய்யாரமாக நடந்துவரும் லாவகம், அடுத்து நிகழப் போவதை முன்கூட்டியே கணிக்கும் அவருடைய உள்ளுணர்வுத் திறன் என வார்னைக் கொண்டாட ஒவ்வொருவருக்கும் பல்வேறு மனப்பதிவுகள் உண்டு. ஆனால் இவையெல்லாவற்றையும்விட மூன்று முக்கியமான அம்சங்கள் அவர் வாழ்க்கையைக் கொண்டாட்டத்திற்கும் மேலாகப் போற்றுதலுக்குரியதாக மாற்றுகின்றன.
முதலாவதாக அவர் வாழ்க்கையையும் அதனூடாக கிரிக்கெட்டையும் அணுகிய விதம். தன்னுடைய முதனிலை விருப்பத் தேர்வாக இல்லாத ஒரு விளையாட்டில் உச்சபட்ச சாதனையைப் புரிந்த ஒரே விளையாட்டு வீரர் வார்ன் ஆகத்தான் இருக்க முடியும். ஆனால் அதேநேரம் நான் யார் என்று காட்டுகிறேன் என்ற கோதாவில் தன்னுடைய இயல்பான ஆட்ட ரசனையையும் அவர் இழந்துவிடவில்லை. அடுத்ததாக ஒரு மேதை என்பவன் அசாத்தியமான ஒன்றைத் தோற்றுவித்தவனாக, மரபை மீறியவனாகத்தான் இருக்க வேண்டும் என்ற இறுக்கமான வரையறையை அவர் உடைத்த விதம். தான் ஒரு சுயம்பு என்ற கர்வம் அவரிடம் என்றைக்குமே இருந்ததில்லை; அதற்குத் தனது கலை ஆசான்களிடம் அவர் கொண்டிருந்த மரியாதையே சாட்சி. ஒரு பெரும் வரலாற்றின் போக்கில், தான் ஒரு வழிப்போக்கன் மட்டுமே என்ற அடக்கமும் பொறுப்பும் இருந்ததால்தான் தன் அணியின் மீதான அபிமானத்தையும் கடந்து தனது flipper–ஐ முஷ்டாக் அகமதின் கண்களில் அவரால் காட்ட முடிந்தது. மூன்றாவதாக, லெக் ஸ்பின் என்ற கலை ரன்களை வாரியிறைக்கும் ஊதாரிகளுக்கானது என்ற பொதுப் பார்வையை வார்ன் உடைத்த விதம். லெக் ஸ்பின்னைப் பொறுத்தவரையில் வார்ன் கனவான்தான்; ஆனால் அதற்காகக் குழந்தையின் கையில் இருக்கும் ரொட்டியைப் பிடுங்கித் தன் பெருமைக்காக ஊருக்குத் தானம் செய்பவர் அல்ல.
ஷேன் வார்ன்: கலை மீட்பர்
லெக் ஸ்பின் கலை தேக்க நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஷேன் வார்ன் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்தார். ஆர்தர் மெய்லி, கிளாரி கிரிம்மெட், பில் ஓ ரெய்லி என லெக் ஸ்பின் பந்துவீச்சில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஆஸ்திரேலியாவும்கூட ரிச்சி பெனாடுக்குப் பிறகு முழுமையான லெக் ஸ்பின்னர் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. எப்படி வார்னுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்ப முடியாமல் இப்போது அந்த அணி தடுமாறுகிறதோ அதேபோல. ஆசியக் கண்டத்தில் அனில் கும்ப்ளே, அப்துல் காதிர், முஷ்டாக் அகமது எனச் சிலரைக் குறிப்பிட முடியுமென்றாலும் அவர்களில் ஒருவரையும் முழுமையான லெக் ஸ்பின்னர் என வரையறுத்துவிட முடியாது. கும்ப்ளே அடிப்படையில் ஒரு கூக்ளி ஸ்பின்னர். அப்துல் காதிரும் அவருடைய இளைய சகா முஷ்டாக் அகமதுவும் லெக் ஸ்பின்னுக்கு அவசியம் எனச் சொல்லப்பட்ட சைட் ஆன் ஆக் ஷனை வரித்துக்கொண்டவர்கள் அல்லர். மேலும் அனைத்து விதமான களங்களிலும் தாக்குப் பிடித்து நின்று, எதிரில் நிற்கும் மட்டையாளருக்கு மயக்கத்தை உண்டுபண்ணும் Flight, Dip, Drift மாதிரியான காற்றில் நிகழ்த்தும் நுட்பங்களையோ, மட்டையாளனை நம்பவைத்து ஏமாற்றும் வகையில் Slider, Top Spinner, Googly மாதிரியான மாற்றுப் பந்துகளையோ முழுமையான வகையில் கைவரப் பெற்றவர்களாகவும் இவர்கள் இல்லை.
லெக் ஸ்பின் மீதான பொதுவான போதாமைக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பிரதானப்படுத்திய அணிச் சேர்க்கையைப் பிற அணிகளும் அப்படியே பிரதியெடுக்கத் தலைப்பட்டதும் ஒரு காரணம் என்கிறார் ‘Magic of Spin’ புத்தகத்தை எழுதிய ஆஸ்லி மாலெட். வேகம்தான் பிரதானம் என்று ஆன பிறகு கட்டுக்குள் அடங்காமல் திரியும் லெக் ஸ்பின்னர்களைவிடக் கைக்கு அடக்கமான ஆஃப் ஸ்பின்னர்கள் எவ்வளவோ தேவலாம் என்ற முடிவுக்கு அன்றைக்கு எல்லா அணிகளுமே வந்திருந்தன. வார்னைக் கொண்டாடுவதற்கென்றே ‘On Warne’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதிய கிடியான் ஹை, ஏன் ஆஃப் ஸ்பின்னர்களை ‘இருப்பதிலேயே மிகவும் மோசமான பந்துவீச்சு வகைமை’ என வசைபாடுகிறார் என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட தளைகளிலிருந்து லெக் ஸ்பின் கலையை மீட்டு அதற்கு மறு உயிர் கொடுத்தவர் ஷேன் வார்ன்.
சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் நுழையும்போதே வார்ன் ஒரு முழுமையான மேதை. Leg Spin, Top Spinner, Wrong’un, Flipper, Slider, Zooter என ஒரு லெக் ஸ்பின்னருக்குத் தேவையான எல்லா வஸ்துக்களும் அவர் வசமிருந்தன. ஆனால் உண்மையில் மேதைமை முடிவு செய்யப்படுவது ‘நீ எதையெல்லாம் கொண்டிருக்கிறாய் என்பதைக் கொண்டு அல்ல. அதை எப்படி, எப்போது நீ பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்தது’ என்று அவருக்கு வாழ்க்கைப் பாடத்தோடு சேர்த்துச் சுழற்பந்து வீச்சுப் பாடமும் எடுத்தவர் ஸ்பின் டாக்டர் டெர்ரி ஜென்னர். அவர் ஒரு வாழ்ந்தகெட்ட மேதை. சூதாட்டத்தின்மீது கொண்ட மோகத்தாலும் பொறுமையின் அவசியத்தை உணராததாலும் கிரிக்கெட்டைத் தொலைத்தவர். வார்னுக்குக் கிடைத்ததைப் போல அவருக்கு ஒரு ஸ்பின் டாக்டர் குருவாக வாய்த்திருந்தால் அவரும் வார்னுக்கு நிகராக வந்திருப்பார்.
ஷேன் வார்ன்: சுழல் தத்துவம்
வார்னின் சுழல் தத்துவத்தை ஒருவிதத்தில் கிளாரி கிரிம்மெட்டுக்கும் ஆர்தர் மெய்லிக்கும் இடைப்பட்ட அணுகுமுறை என வரையறுக்கலாம். கிளாரி கிரிம்மெட் பெரிய அளவில் பந்தை இடவலமாகத் திருப்புவதை (Brake) காட்டிலும் மட்டையாளனின் பார்வைக் கோட்டிற்கு (eye line) மேல் பந்தைப் பறக்கச் செய்யும் கடினமான சுழலுக்கு (Hard Spin) முக்கியத்துவம் கொடுத்தவர் ; Wrong’un இவருடைய பலம் கிடையாது. Flipper பந்து வீச்சின் பிதாமகன். சிக்கனமாக வீசுவதில் வல்லவர் என்பதால் ஆடும் காலத்தில் கஞ்சன் எனப் பொருள்படும் வகையில் ‘The Miser’ என அழைக்கப்பட்டவர். ஆட்டத்தைத் தீவிரமாக அணுகியவர்.
கிரிம்மெட்டிற்கு அப்படியே நேரெதிரான அணுகுமுறையைக் கொண்டவர் அவருக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவரான ஆர்தர் மெய்லி. பந்தை இடவலமாகத் திருப்புவதில் அலாதியான ஆர்வம் கொண்டவர். ரன்களை விட்டுக் கொடுப்பதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் என்பதால் வள்ளல் எனப் பொருள்படும் வகையில் ‘The Millionaire’ எனக் கிண்டலுக்கு உள்ளானவர். லெக் ஸ்டம்ப் கோட்டில் பந்தை வீசி ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியைப் பதம் பார்க்கும் பந்துகள் இவருடைய பலம். ஆட்டத்தைக் கொண்டாட்டமாக அணுகியவர். கிரிம்மெட்டின் சிக்கனமான Hard Spin உடன் ஆர்தரின் கொண்டாட்டத்துடன் கூடிய இடவலமான சுழலை இணைத்த மாயாஜாலமே வார்னைத் தனித்துவப்படுத்துகிறது. இதனுடன் ரிச்சி பெனாடின் கண்டுபிடிப்பான Around the Wicket பாணியையும் அவர் வெற்றிகரமாகத் தன்வயப்படுத்திக்கொண்டார்.
குட்டி யானையின் குதூகலம்
மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த மாயப் பந்தைத் தொடர்ந்து ஷிவ்நாராயண் சந்தர்பால் பந்து (1996, சிட்னி டெஸ்ட்), ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் பந்து (2005, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்) மாதிரியான அவருடைய இடவலமாகத் திரும்பும் (Side Spin) பந்துகள்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. ஆனால் முதல் ஸ்லிப்பைப் பார்த்தவாறு தையலைப் பிடித்தபடி வார்ன் வீசிய Over Spinஇல்தான் அவருடைய முழுமையான ஆகிருதியை நம்மால் காண முடியும். கல்லி பகுதியைப் பார்த்தபடி தையலைப் பிடித்து அவர் வீசும் பந்து (Side Spin) அதீதமாகத் திரும்பிப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும். ஆனால் அதில் Flight, Dip, Drift என காற்றில் வார்ன் நிகழ்த்தும் ஜாலங்களை அவ்வளவு விரிவாகத் தரிசிக்கப் போதிய நேரமிருக்காது. அதுவே அவருடைய Over Spin பந்தில் Flight, Dip, Drift ஆகியவற்றுடன் சேர்ந்து துள்ளிக்கொண்டு ஓடிவரும் குட்டி யானையைப் போன்ற அவருடைய அலாதியான பவுன்சையும் நம்மால் கண்டுகளிக்க முடியும்.
பந்தைக் கடினமாகச் சுழற்றும்போது அது U வடிவப் பரவளையத்தைக் காற்றில் ஏற்படுத்தும். அதாவது மட்டையாளனின் பார்வைக் கோட்டிற்கும் மேலாகச் சென்று பந்து கீழே இறங்குவதற்குப் பெயர் Flight. அந்தப் பந்து வந்திறங்கும் இடத்தைக் (Length) கணிப்பதில் மட்டையாளர் மனத்தில் ஒரு குழப்பம் விதைக்கப்படும். மட்டையாளர் எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே பந்து திடுதிப்பென வந்திறங்குவதுதான் Dip. பந்தைக் கடினமாகச் சுழற்றும்போது (Hard Spin). அது சுழலின் எதிர்த்திசையில் போவதாகப் போக்குக் காட்டி மீண்டும் சரியான திசையில் செல்வதற்குப் பெயர் Drift. பொதுவாக இது லெக் ஸ்பின்னருக்கு லெக் சைடிலும் ஆஃப் ஸ்பின்னருக்கு ஆஃப் சைடிலும் இருக்கும்.
இவையெல்லாம் வார்னுக்கு என்றே விதிக்கப்பட்டிருக்கின்றனவா, வார்னால் முடியும்போது ஏன் வேறொருவரால் முடியாது என ஒருவர் கேட்கலாம். இங்குதான் நடைமுறைகளின்மீது வார்னுக்கு இருக்கும் விடாப்பிடியான நம்பிக்கையும் அவருடைய உடல்தகுதியும் துலக்கமாக வெளிப்படுகின்றன.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். தரையில் பந்தைத் திருப்புகிறவர்களெல்லாம் நல்ல சுழலர்கள் ஆகிவிட முடியாது. காற்றில் பந்தைக் கொண்டு ஜாலங்கள் நிகழ்த்துவதற்குக் கை விரல்களில் மட்டுமில்லாமல் தோள்பகுதி, முன்கை (Non Bowling Arm), இடுப்பு, முன்னங்கால் (Braced Front Leg) என அத்தியாவசியமான அவயவங்கள் அனைத்தும் வலுவுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகப்படியான சக்தியைத் திரட்டிப் பந்துக்குச் சுழற்சியைக் (Revolution) கொடுக்க முடியும். மேலும் ஒரு லெக் ஸ்பின்னரின் ஓட்டம் (Run Up) ரிதத்தைக் குறைக்காத வகையிலும் ஆக் ஷன் Side On ஆகவும் இருத்தல் அவசியம். இவற்றில் பெரும் பாலானவை வார்னுக்கு இயல்பாகவே கூடிவந்திருந்தன. இல்லாதவற்றைத் தனது ஆசான்களின் துணையோடும் கடும் பயிற்சியின் மூலமாகவும் அவர் ஈட்டிக்கொண்டார்.
கலைஞனும் மேதையும்
பொதுவாக நவீன லெக் ஸ்பின்னர்களின் லைன் என்பது middle அல்லது middle and off ஆகத்தான் பெரும்பாலும் இருக்கும். இந்தப் பாணிக்கு நல்லதொரு உதாரணம் வார்னின் லெக் ஸ்பின் சகா ஸ்டூவர்ட் மெக்கில். வார்னைக் காட்டிலும் அதிகப்படியாகப் பந்தைத் திருப்பும் திறனைக் கொண்டவர் மெக்கில். ஆனால் ரன்களை வாரியிறைப்பதில் அவர் ஆர்தர் மெய்லியின் வாரிசாக இருந்தார். மேலும் அவருடைய அபாயப் பகுதியும் (The Area of Dangerous) மிகவும் சன்னமானது. கொஞ்சம் இடம் கொடுத்தால் மட்டையாளர் ஸ்கொயர் திசையில் பந்தை வெட்டியோ கவர் திசையில் பந்தை டிரைவ் செய்தோ ரன் குவித்துவிடுவார். ‘மெக்கில் ஒரு கலைஞன்; வார்ன் ஒரு மேதை’ என்கிறார் ராமச்சந்திர குஹா.
இங்கு மெக்கிலின் இடத்தில் எல்லா லெக் ஸ்பின் கலைஞர்களையும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். வார்னின் இயல்பான லைன் middle அல்லது middle and leg. கொஞ்சம் சாதகமான களம் வாய்த்தால் outside the leg stump லைனில் வீசுவதை வழக்கமாக வைத்திருந்தார். மட்டையாளரைச் சுழலுக்கு எதிராக ஆடவைப்பதில் அவர் வல்லவர்; அதாவது எல்லாப் பந்துகளையும் ஆடியே தீர வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தை அவர் மட்டையாளருக்கு ஏற்படுத்திவிடுவார். இந்த லைனில் Side Spin, Over Spin என மாறிமாறி வீசும்போது Caught Behind, Close in Catches, LBW, Bowled என எல்லாவிதமான விக்கெட்டுகளையும் வார்னால் ஈட்ட முடியும்.
வழக்கமாக லெக் ஸ்பின்னர்கள் கவர் திசையைக் காலியாக விட்டு மட்டையாளரைக் கவர் டிரைவ் அடிக்க வைக்கத் தூண்டில் போடுவார்கள். இது சில நேரங்களில் ரன்களை வாரி இறைப்பதற்கு வழிவகுத்துவிடும். ஆனால் வார்ன் மிட் விக்கெட்டைக் காலியாக விட்டுவிட்டுத் தான் விரும்புகின்ற திசையில் மட்டையாளனை ஆடவைக்கும் சூட்சுமம் தெரிந்தவர். பொதுவாக எந்தவொரு சுழற்பந்து வீச்சு வகைமையாக இருந்தாலும் லெக் சைட் லைன் என்றால் அது ரன்களைக் கட்டுப்படுத்துவதற்கு வீசும் தற்காப்புப் பாணியாகத்தான் பார்க்கப்படும். ஆனால் வார்ன் போன்ற ஒரு மேதையால் மட்டும்தான் தற்காப்பு லைனை வரித்துக்கொண்டே தன் தாள லயத்திற்கேற்ப மட்டையாளரை ஆடவைக்கவும் முடிந்தது. ‘வார்ன் ஒரு சாதாரணச் சுழலர் அல்ல, மிதவேகப் பந்து வீச்சாளருக் கான துல்லியமும் ஒரு அதிவேகப்பந்து வீச்சாளருக்கான ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றவர்’ என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழலர் ஆஸ்லி மாலெட்.
எண்ணிலடங்கா மாற்றுப் பந்துகள் வாய்க்கப் பெற்றவராக இருந்தாலும் லெக் ஸ்பின் வீசுவதில்தான் வார்ன் மோகம் கொண்டிருந்தார். மரபின் மீறல் எனக் கருதப்பட்ட Wrong’un ஐ அவர் ஏனோ அதிகம் விரும்பவில்லை. தன்னுடைய ஆட்ட வாழ்வின் அந்திமக் காலத்தில் தனது அபாயகரமான Flipper–ஐ அவர் இழந்தபோதும்கூட அவருடைய ஆட்டம் சிறிதும் தொய்வடையவில்லை. ‘வார்னின் பந்துவீச்சு தூய்மைவாதிகளின் உச்சபட்சக் கொண்டாட்டம்’ என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் அமோல் ராஜன்.
ஷேன் வார்னை வெறுமனே ஒரு லெக் ஸ்பின்னர் என்ற அளவில் மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அவர் ஒரு தரமான கீழ் மத்தியதர மட்டையாளர்; பிரமாதமான ஸ்லிப் காட்சர். காலத்தை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்குக் கூர்மையான உள்ளுணர்வு வாய்க்கப் பெற்றவர். 1996 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நடந்த அணிக் கூட்டத்தில் ஹர்ஷல் கிப்ஸ் பீல்டிங் குறித்து முன்வைத்த பார்வை 2011 உலகக் கோப்பையில் இந்திய–இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் சமனில் முடியுமென முன்னதாகவே கணித்து ட்வீட் போட்டது என அவருடைய துல்லியமான கணிப்புகள் ஏராளம்.
கிரிக்கெட்டைக் கடந்து கால்பந்து, டென்னிஸ், கோல்ஃப் எனப் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டியவர் வார்ன். பிடித்தமான உணவை உண்பதிலும், விதவிதமான மதுவகைகளை ரசித்துப் பருகுவதிலும் அவர் மகா ரசிகர். இப்படி வாழ்க்கையை அவர் அனுபவித்து வாழப் பழகியதற்கு இளம் வயதில் அவர் எதிர்கொண்ட ஏமாற்றமும் தோல்வியும்தான் முக்கியக் காரணம் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் அமோல் ராஜன். கிரிக்கெட் மைதானம் வார்னுக்கு வெறும் விளையாட்டுக் களம் மட்டுமல்ல; தன்னுடைய தீராத கற்பனை வளத்திற்குத் தீனி போடக் கிடைத்த கொட்டகை. கிரிக்கெட்டுக்கு என்றைக்குமே அவர் வெளியாள்தான். உண்மையான தீவிரம், ரசனையைப் பலிகொடுத்து அடைவது அல்ல என்று வார்ன் வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்நேரம் கிளாரி கிரிம்மெட், ஆர்தர் மெய்லி, பில் ஓ ரைலி என ஆஸ்திரேலியாவின் சுழல் சக்ரவர்த்திகள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து நட்சத்திரங்கள் புடைசூழ வார்ன் முன்னால் வெள்ளைக் கொடி காட்டியிருப்பார்கள். முன்பொருமுறை கெவின் பீட்டர்சனின் மேதமைக்கு மதிப்பளிக்கும் விதமாக வார்ன் காட்டியதைப்போல. மீண்டும் ஒருமுறை பெருமிதத்துடன் ரிச்சி பெனாட் உரக்கச் சொல்கிறார், He’s done it!
ஷேன் வார்ன், சச்சின், லாரா மேதைகளின் மோதல்
ஒரு பந்து வீச்சாளர் எப்படிப்பட்டவர், வரலாற்றில் அவருடைய இடம் என்ன, அவருடைய மேதமை எத்தகையது என்பவை அவர் தன்னுடைய போட்டியாளராக யாரை அடையாளப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் மார்க் நிக்கோலஸ். கிரஹாம் கூச், வி.வி.எஸ். லக்ஷ்மண், கெவின் பீட்டர்சன், மார்க் வா எனப் பலர் வார்னின் மரியாதைக்குரிய மட்டை வீரர்களாக இருந்தாலும் வார்ன் தன்னுடைய முழுச் சக்தியையும் வெளிக்கொண்டுவரும்விதமாக அவரைக் கடுமையான சவாலுக்கு உட்படுத்திக் களத்தில் அவருக்கு மகத்தான தோல்வியைப் பரிசளித்தவர்கள் என இருவரையே சொல்ல முடியும். ஒருவர் வார்னைப் போலவே நடைமுறைகளை முற்றிலும் மீற விரும்பாதவரும் அதே நேரம் வெளிப்பாட்டில் தனது கற்பனா சுதந்திரத்தைப் பூசி நடைமுறைகளின் மீதான இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியவருமான சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் வார்னைப் போலவே போட்டியைத் தனியொரு ஆளாக வென்று கொடுக்கும் திராணியும் போட்டிக்குள் இன்னொரு போட்டியை உண்டாக்கும் வசீகரமும் கொண்டவருமான பிரையன் லாரா.
‘என்னுடைய கதையாடலில் நீ (மட்டையாளன்) ஒரு சிறு பகுதி. அவ்வளவுதான். உனக்குப் பெரிய முக்கியத்துவம் எல்லாம் இல்லை’ என்பதுதான் மட்டையாளர்களுக்கு எதிரான வார்னின் அணுகுமுறை. ஆனால் ஒவ்வொருமுறை தான் களத்தில் சந்திக்கும்போதும் தாங்கள் சொல்வதற்கென்று சச்சினும் லாராவும் ஒரு கதையை வைத்திருந்தனர் என்கிறார் வார்ன்.
துல்லியமான வியூகம்
ஷேன் வார்னின் கிரிக்கெட் வாழ்க்கையில் 1998 இந்தியத் தொடர் மிகவும் முக்கியமானது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான தொடர் என்பது மறைந்து சச்சினுக்கும் வார்னுக்கும் இடையிலான சமராக அது ரசிகர்களாலும் ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டது. இரு மேதைகளும் தத்தமது ஆட்ட வாழ்வில் உச்சத்தில் இருந்த காலமது. சுழலுக்குச் சாதகமான இந்திய மண்ணில் ஷேன் வார்ன் போன்ற ஒரு மாயாவியை எதிர்கொள்வது அத்தனை லேசுப்பட்ட காரியமல்ல என்று சச்சினும் உணர்ந்தே இருந்தார். தொடர் ஆரம்பிப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக முன்னாள் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தலைமையில் லெக் ஸ்பின்னர்கள் சிலரை அழைத்து வார்னை எதிர்கொள்ளும் விதமாக அவர் வலைப்பயிற்சி எடுத்துக்கொண்டார்.
சச்சின் எடுத்துக்கொண்ட பயிற்சிமுறை ரொம்பவும் சுவாரசியமானது. வழக்கமாக வார்ன் குறிவைக்கும் Outside the Leg Stump லைனில் சிறிது குழி (Rough) ஏற்படுத்தி ரவுண்ட் த விக்கெட் பாணியில் அதன்மீது சுழலர்களைப் பந்து வீசப் பணித்துப் பயிற்சி எடுப்பது அது. அந்தக் களங்களும்கூட முழுமையாகத் தயார் செய்யப் படாத, தாறுமாறாகப் பந்தைத் திரும்பச் செய்யும் களங்கள் (Dusty). பின்னாளில் சச்சின் ஒரு பேட்டியில் அந்தத் தொடரை இப்படி நினைவுகூர்கிறார்: “ஷேன் வார்னுக்கு எதிராகத் தயாராவதென்றால் வெறுமனே வலைப் பயிற்சியுடன் முடிந்து போகிற காரியமல்ல. உண்ணும்போதும் உறங்கும்போதும் வார்னை எதிர்கொள்ளும்விதம்தான் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.”
அந்தத் தொடர் வார்னுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய தொடராக மாறியது. வார்ன் என்ன வீசுவார் என்று முன்கூட்டியே கணிக்கும் ஒரு மாயாவிபோல எல்லாவற்றுக்கும் சச்சின் தயாராக இருந்தார். அந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான சச்சினின் கால்பாடம் பெரிதாகப் பேசப்பட்டது. நீளம் கொஞ்சம் முன்னதாக விழுந்தால் இறங்கிவந்து சாத்துவது, கால் பக்கம் வீசும் பந்துகளை ஸ்வீப் செய்வது என வார்னை நிலைகுலைய வைத்தார். லெக் ஸ்டெம்புக்கு வெளியில் வீசும் பாணித் தாக்குதல் ஒன்றுக்கும் உதவாமல் போகவே, வழக்கத்திற்கு மாறாகத் தற்காப்பாக வீசும் நிலைக்கு வார்ன் தள்ளப்பட்டார். “சச்சின் அப்படி ஆடும்போது பெரிதாக ஒன்றையும் செய்ய முடியாது, கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுச் சரியான லைன் லெங்க்த் பிடித்துப் போடுவதைத் தவிர” என்றார் வார்ன்.
மாயாவியை வென்ற மந்திரவாதி
வார்னை எதிர்கொள்வதற்கு சச்சின் வலைப்பயிற்சி, முன் தயாரிப்புகளில் கவனம் செலுத்தினார் என்றால் லாரா அவருக்கு அப்படியே நேரெதிரான அணுகுமுறையைப் பின்பற்றினார். களத்தில் யார் முதல் தாக்குதலைத் தொடுப்பது, நேர்மறையான உடல்மொழி, பந்தின்மீது குவிக்கப்படும் கவனம் இதெல்லாம்தான் லாராவுக்கு முக்கியம். சச்சின் சிறந்த டெக்னீஷியன்; லாரா மந்திரவாதி. மட்டையாளர் என்ன ஷாட் ஆட வேண்டும், எப்படி ஆட்டம் இழக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டுமென விரும்புபவர் வார்ன். ஆனால் லாரா விஷயத்தில் அது அத்தனை எளிதாக அவருக்கு நிறைவேறவில்லை. தான் என்ன ஷாட் ஆட வேண்டும், எந்தத் திசையில் ஆட வேண்டும் என்பதை லாராவேதான் தீர்மானிப்பார். வார்ன், களத்தில் தனக்கு எங்கு பொறி வைத்துள்ளார் என்றெல்லாம் அவர் பெரிதாகக் கவனம் செலுத்த மாட்டார். களத்தில் ரன் குவிப்பதற்கான வாய்ப்பு எங்கு இருக்கிறதென மூளை சொல்லிவிட்டால் போதும் லாராவின் மட்டை அதற்கேற்றவாறு நாட்டியம் ஆடத் தொடங்கிவிடும். சில நேரங்களில் ரவுண்ட் த விக்கெட்டில் வார்ன் வீசும் பந்துகளையும் அவர் லாவகத்தோடு பின்காலுக்குச் சென்று வெட்டி ஆடி பவுண்டரி அடிப்பார். விக்கெட்டைக் காவு வாங்கும் வாய்ப்புள்ள பந்தாக அது இருந்தாலும் வார்னை உளவியல் ரீதியாக நிலைகுலைய செய்வதற்கு லாரா அதனைத் தொடர்ந்து மேற்கொள்வார்.
ஆஸ்திரேலியாவின் 1999 மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வார்னுக்குத் தனிப்பட்ட முறையில் சவாலான தொடராகவே அமைந்தது. ஆனால் லாராவின் மேதமையை மிக அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு அப்போது வார்னுக்கு கிட்டியது. அந்தத் தொடரில் பார்படாஸ் டெஸ்டில் லாரா அடித்த 153* ரன்கள்தான் இன்றளவும் அவருடைய தலைசிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. அந்தப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பு வார்னுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு வருவதற்கு அந்தப் போட்டி அவருக்கு வழிகாட்டியது. வார்னே இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்: “உலகின் தலைசிறந்த மட்டையாளர் என்றால் அது சச்சின்தான்; ஆனால் கடைசி நாளில் 400 ரன்கள் இலக்கை அடைய வேண்டுமென்றால் நான் லாராவையே நம்புவேன்.”
தன்னைக் களத்தில் வெற்றிகொண்ட சச்சினுக்கும் லாராவுக்கும் உச்சபட்ச மரியாதையைக் கொடுத்ததோடு
மட்டுமல்லாமல் அவர்களைத் தன் உற்ற நண்பர்களாகவும் மாற்றிக்கொண்டவர் ஷேன் வார்ன். எந்த மட்டையாளர் தனக்கெதிராக என்ன ஷாட் ஆட வேண்டும் என்பதில் மட்டுமல்ல, எந்த மட்டையாளர் தன்னை வெற்றிகொண்டவராக இருக்க வேண்டும் என்பதிலும் வார்ன் காட்டிய கவனம் ஆச்சரியப்படுத்துகிறது.
மின்னஞ்சல்:dhinesh.writer@gmail.com