நூலகக் கொள்முதல் கொள்கை: வரவேற்கத்தக்க முன்னெடுப்பு
தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை 2024ஐ அண்மையில் வெளியிட்டுள்ளது. நூலக நிர்வாக நடைமுறைகள், நிதி ஒதுக்கீடு சார்ந்தவையும் நூல் கொள்முதல், நூல்களின் தரம் இவை சார்ந்தவையுமான வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. இதுபோன்ற ஒரு விரிவான கொள்கை அறிக்கையை நூலக இயக்கம் வெளியிடுவது இதுதான் முதல்முறை. பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு இயக்ககம் உள்ளாகியிருப்பதை இந்த அறிக்கை அடியோட்டமாக உணர்த்தினாலும், நூலகத்திற்கு நூல்களைக் கொள்முதல் செய்வதிலுள்ள பெரும் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறை இதில் துலக்கமாகத் தெரிகிறது.
கல்வி வளர்ச்சியோடும் பரவலாக்கத்தோடும் பின்னிப் பிணைந்தது நூலகத் துறையின் வளர்ச்சியும் பரவலும். தமிழகத்தில் இவ்விரண்டு துறைகளுக்குமிடையே சீரான உறவு ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் இருந்துவந்தது. புத்தக விற்பனை நிலையங்கள் குறைந்த அளவே இருந்த, வாசிக்கும் பழக்கமுள்ள அதிகமானோருக்கும் தனிப்பட்ட முறையில் புத்தகங்களை வாங்கும் வசதி வாய்க்கப் பெறாத காலகட்டத்தில் பொது நூலகங்களே அவர்களின் வாசிப்புத் தாகத்தைத் தணித்தன; இன்னொரு விதத்தில் தாகத்தை அதிகப்படுத்தவும் செய்தன. குறிப்பாகச் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த நூலகங்கள். நூலகங்கள் வாசிப்போரின் பிரிக்க முடியாத அங்கமாக அன்று இருந்தன. பெயர்பெற்ற புத்தக வெளியீட்டாளர்களே அன்று புத்தகங்களை நூலகங்களுக்கு விற்பனை செய்தனர். நூலகங்களுக்கு மட்டுமே புத்தகங்களைத் ‘தயாரித்து’ விற்கும் வெளியீட்டாளர் என்ற இனம் அப்போது தோன்றியிருக்கவில்லை. வாசிப்புப் பழக்கம் பெருகப் பெருக, நூலகங்களும் பெருகின. புத்தகங்களுக்கான தேவையும் அதிகரித்தது. புத்தக வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை இருந்தது. நூலகங்களுக்கான புத்தகங்கள் என்றாலும் அச்சாக்கத்திலும் வடிவமைப்பிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்டப் புத்தாயிரத்திற்குப் பின், தமிழக நூலகத் துறையில் வீழ்ச்சி தொடங்கியது. குறிப்பாக, அறிஞர்கள்/எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டம் பரவலான பின்னர், நூலகம் அறிவு வளர்ச்சிக்கான களம் என்ற தன் முகத்தை இழந்து, புத்தக வெளியீடு சார்ந்து குறைந்தபட்ச விழுமியங்கள்கூட இல்லாத பதிப்பகங்களின் வேட்டைக்காடாக மாறியது. புத்தகங்களின் தேர்வு, அச்சிடுவதில் கவனம், வடிவமைப்பில் தரம் இவையெல்லாம் காற்றில் பறந்தன. நூலகங்களில் புத்தகங்கள் வாங்குவதற்கான நிதி மட்டுமே கருத்தாகவும் உறுத்தாகவும் இருந்தது. நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர்கள் /அறிஞர்களின் நூல்கள் எந்த நெறியும் இல்லாமல் மனம்போலப் பதிப்பிக்கப்பட்டன. கல்கி, நா. பார்த்தசாரதி, திரு.வி.க., அ.ச. ஞானசம்பந்தம் போன்றோரின் முக்கியமான நூல்கள் இந்தப் புத்தகத் தயாரிப்பாளர்களால் தலைப்பு மாற்றப்பட்டு நூலக அடுக்குகளில் சேர்ந்தன. இந்த எழுத்தாளர்கள் கொடுத்த தலைப்புகளிலான நூல்கள் ஒருபுறமும், தலைப்புகள் மாற்றப்பட்ட அதே நூல்கள் இன்னொருபுறமும் நூலகங்களை நிரப்பின.
எடுத்துக்காட்டாக, நா. பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ நாவலும் இருக்கும். அதே நூலை இன்னொரு வெளியீட்டாளர் அல்லது அதே வெளியீட்டாளர் வேறொரு தலைப்பில் மாறுபட்ட நூல்போலப் பிரசுரித்திருப்பார்; அதுவும் இருக்கும். இவையெல்லாம் ஒரு படைப்பாளியின் அற உரிமையை (Moral Right) மீறுபவை. பதிப்புரிமையைத்தான் நாட்டுடைமையாக்க முடியும்; அற உரிமையை அல்ல. இதுபோக பதிப்புரிமை இல்லாத, அல்லது பதிப்புரிமை கோருவதற்கு உரியவர்கள் இல்லாத புத்தகங்களும் வெளியிடப்பட்டன. இவற்றில் பலவும் மீள்வெளியீடு தேவைப்படாத காலாவதியான நூல்கள். வாசகரின் தேவை கருதியோ, நூலகம் அறிவுச் சேகரத்திற்கான பொது அமைப்பு என்ற கருத்தைக் கருதியோ இந்த வெளியீட்டாளர்கள் புத்தகங்களை வெளியிடவில்லை. வருமானத்திற்கான வாய்ப்பையும் நூலகத் துறையில் காணப்படும் அறிவுச் சுணக்கத்தையும் பயன்படுத்திப் பொருளீட்டுவது மட்டுமே இவர்களின் இலக்காக இருந்தது; இருக்கிறது.
ஒரே புத்தகத்தின் பல பதிப்புகள், ஒரே புத்தகங்களின் பல வடிவங்கள், விஷயரீதியாகக் காலாவதியான புத்தகங்கள் இவற்றின் வரவால், நூலகங்கள் கிட்டத்தட்ட மூச்சுத் திணறும் நிலைக்கு வந்துவிட்டன. இடநெருக்கடியும் புத்தக அலமாரிகளுக்கான நெருக்கடியும் ஏற்பட்டன. சிறந்த அறிஞர்களது நூல்களின் பாதுகாக்க வேண்டிய அற்புதமான பதிப்புகள் இந்த இட நெருக்கடி காரணமாக நூலகங்களிலிருந்து விடைபெற்றுவிட்டன. தமிழறிஞர்களது நூல்களின் ஆதாரப்பூர்வமான பதிப்புகளை இன்று பொது நூலகங்களில் தேடுவது பதரில் நெல் பொறுக்கும் பணி. சிறந்த அச்சுக்கூடங்களாகத் திகழ்ந்த கபீர் அச்சுக்கூடம், மெட்ராஸ் லே ஜர்னல் அச்சுக்கூடம், சாது அச்சுக்கூடம் இவற்றின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அச்சாக்கத்தைக் காணும் பேறு இனி வரும் தலைமுறைகளுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் பொது நூலகங்கள் அறிவுத் தேட்டத்திற்கான மையம் என்ற நிலையை மட்டுமல்ல, சிறந்த நூல்களுக்கான ஆவணக்கூடம் என்ற நிலையையும் இன்று இழந்து நிற்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் இப்போது இந்தக் கொள்கை அறிக்கை வெளிவந்துள்ளது. மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளை அறிக்கையின் பகுதி 23 (முறையற்ற செயல்கள்), பகுதி 24 (பழைய நூல்களை நீக்கம் செய்தல்) ஆகியவை சுட்டிக்காட்டி, வழிகாட்டுதல்களை முன்வைக்கின்றன. இந்த வழிகாட்டுதல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை வைத்து நடந்துவந்த மிதமிஞ்சிய மோசடிகளைப் பெருமளவில் குறைக்கக் கூடியதாக உள்ளன. நூல்களைக் கொள்முதல் செய்யும்போது நூல்களின் தரம், பதிப்புகளின் நம்பகத்தன்மை, முறையாகக் காப்புரிமை வழங்குதல் முதலான பல்வேறு அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் இந்தக் கொள்கை அறிக்கை தெளிவாகச் சுட்டுகிறது. இதுவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகளின் ஊற்றுக்கண் நாட்டுடைமையாக்கம் என்னும் செயல்பாட்டிலேயே உள்ளது. அரசின் கொள்கை அறிக்கை இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பது தெரிகிறது. கொள்கை அறிக்கையின் 21ஆவது பகுதி இவ்வாறு கூறுகிறது:
i) நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் புத்தகங்கள் பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்படுகின்றன. ஒரே புத்தகத்திற்கு வெவ்வேறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த நூல்களைக் கொள்முதல் செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன. இவற்றைச் சரி செய்யும் வகையில் கொள்முதல் நடைமுறைகள் அமைய வேண்டும்.
ii) நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருந்தால் அரசு நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். இரு அரசு நிறுவனங்கள் ஒரே நூலின் பதிப்பினை வெவ்வேறு விலைகளில் வெளியிட்டிருந்தால் குறைவான விலையில் வெளியிட்டிருக்கும் அரசு நிறுவனத்தின் நூல்கள் கொள்முதல் செய்யப்படுதல் வேண்டும்.
iii) அரசு நிறுவனங்கள் வெளியிடாத நாட்டுடைமை யாக்கப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களைத் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருந்தால் அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரே நூலுக்கு வெவ்வேறு விலைகளில் பதிப்புகள் வெளியிடப்பட்டிருந்தால் நூல்களின் தாள், தரம், விலைக் குறியீட்டு எண் அடிப்படைகளில் நூல் கொள்முதல் பேச்சுவார்த்தையின்பொழுது கொள்முதலைப் பரிசீலிக்கலாம்.
“நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருந்தால் அரசு நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்” என்னும் முடிவு இந்நூல்களைக் கொள்முதல் செய்வதில் ந்டைபெறும் முறைகேடுகளையும் ஊழல்களையும் தடுக்கப் பெருமளவு துணைபுரியும் என்பதால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. அதே சமயம், “அரசு நிறுவனங்கள் வெளியிடாத நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களைத் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருந்தால் அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்” என்னும் அறிவிப்பு இந்தத் துறையில் பழம் தின்று கொட்டைபோட்ட பேராசை பிடித்த நிறுவனங்கள் சில முறைகேடாகப் பெறும் பலனுக்கு உதவுவதாக அமைந்துவிடும். எனவே இந்த விதிவிலக்கை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும். அரசு நிறுவனங்கள் வெளியிடாத நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் வெளியிடுமாறு கோரி அந்த நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யலாம். இதன் மூலம் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை வைத்து நடக்கும் கொள்ளையையும் நூலகக் கொள்முதலின் நோக்கத்தையே இழிவுபடுத்தும் முறைகேடுகளையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியும்.
ஓர் எழுத்தாளரின் நூல்களின் மொத்தப் பதிப்புரிமையை அரசாங்கமே குறிப்பிட்ட தொகையை அவருக்கோ அவரது மரபுரிமையருக்கோ செலுத்திப் பெற்றுக்கொள்ளும் முறையே அரசுடமையாக்கம் அல்லது நாட்டுடைமையாக்கம். அந்த எழுத்தாளரின் நூல்களை எவர் வேண்டுமானாலும் பதிப்பித்து விற்றுக்கொள்ளலாம் என்பது இதன் விளைவு. முக்கியமான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் ஆக்கங்களைப் பதிப்பிக்கும் செயல், உரிமை அல்லது மரபுரிமை என்ற பெயரில் எவர் ஒருவரிடமும் ஒடுங்கி முடங்கிவிடக் கூடாது என்பதே நாட்டுடைமையாக்கத்தின் நோக்கம். காலப்போக்கில் வறுமையில் உழலும் எழுத்தாளர்களையும் அல்லது அவர்களது வாரிசுகளையும் கை தூக்கிவிடும் உதவும் நோக்கம் கருணை மனம் கொண்டு இதில் புகுந்தது.
நூலகக் கொள்முதல் செயல்பாடு வெளிப்படைத்தன்மையைப் பெறும் விதத்தில் தற்போது அதற்கான கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே நாட்டுடைமையாக்கத்தில் வெளிப்படைத்தன்மைக்கான கொள்கையும் வகுக்கப்பட வேண்டும். முக்கியமான படைப்பாளிகள், சிந்தனையாளர்களின் நூல்களைப் பரவலாகக் கொண்டு செல்லும் உயரிய நோக்கத்துடன் உருவான நாட்டுடைமையாக்கம் இன்று பல்வேறு சீர்கேடுகளுக்கும் மோசடிகளுக்கும் காரணமாகியிருக்கிறது. யாருக்கும் ஒரு நயா பைசாகூடக் காப்புரிமை தர வேண்டிய அவசியமில்லை என்பதால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து நூலக ஆணை பெற்றுப் பல பதிப்பகங்கள் செயல்படுகின்றன. நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் ஆக்கங்கள் பல்வேறு பதிப்புகளாக நூலகங்களுக்குள் குவிக்கப்படுகின்றன. ஒரே நூலின் பல்வேறு பதிப்புகள் (எடு: பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்) மட்டுமின்றி ஒரே நூலின் வெவ்வேறு (மோசடி) வடிவங்களும் (எடு: குறிஞ்சி மலர் நாவல் வேறு பெயரிலும் உள்ளது) நூலகங்ளில் குவிந்துள்ளன. இத்தகைய பதிப்பாளர்களின் லாபத்திற்காகவே நாட்டுடைமையாக்கம் மிகுதியும் பயன்படுகிறது. சக்தி வை. கோவிந்தன், தி.ஜ.ர. போன்றோரின் ஆக்கங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டாலும் அவற்றைப் பதிப்பிக்க ஆளில்லை.
இந்நிலையில் நாட்டுடைமையாக்கத்தின் ஆதாரமான நோக்கத்தை - முக்கியமான படைப்பாளிகளின் ஆக்கங்கள் தொடர்ந்தும் பரவலாகவும் கிடைக்கச் செய்தல் - அடிப்படையாகக் கொண்டு இதற்கான கொள்கையை மறுவரையறை செய்தாக வேண்டும். தொடர்ந்து பதிப்பிக்கப்படும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை நாட்டுடைமையாக்கம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அல்லாத முக்கியமான படைப்பாளிகளின் ஆக்கங்களை மட்டுமே நாட்டுடைமையாக்க வேண்டும். ஏற்கெனவே பொதுவெளிக்கு வந்துவிட்ட நூல்களையும் நாட்டுடைமையாக்க வேண்டியதில்லை. எந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் எதற்காக நாட்டுடைமையாக்கப்படுகின்றன என்பதைப் பொதுவெளியில் வைக்க வேண்டும். நாட்டுடைமையாக்கச் செயல்பாடு வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதும் நாட்டுடைமையாக்கக் கொள்கையின் தவிர்க்க இயலாத பகுதியாக இருக்க வேண்டும். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தொடர்பான முறைகேடுகளைக் களைய இது இன்றியமையாதது.
பன்னெடுங்காலமாக நடந்துவரும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய கொள்கையை வகுக்கும்போது இதுவரை தவறான முறையில் பலன் பெற்றவர்களிடமிருந்தும் பொதுவாக மாற்றத்தை விரும்பாதவர்களிடமிருந்தும் எதிர்ப்பு வருவது இயல்புதான். அந்த எதிர்ப்பு பல்வேறு மாறுவேடங்களில் வருவதும் எதிர்பார்க்கக்கூடியதுதான். பதிப்பகங்களின் ஜிஎஸ்டி எண், நூல்களின் ஐஎஸ்பிஎன் எண்கள் முதலான சிலவற்றை நூலகக் கொள்முதலுக்கான முன் நிபந்தனைகளாக இந்தக் கொள்கை அறிக்கை முன்வைக்கிறது. திரைப்படத் துறையின் சொல்லாடலைக் கடன் வாங்கிச் சொல்வதானால் ‘உப்புமா கம்பெனி’களைத் தவிர்க்கும் நோக்கிலான நிபந்தனைகள் இவை. ஆண்டுக்கு ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான வர்த்தகம் கொண்ட பதிப்பகங்கள் ஜிஎஸ்டி எண் வாங்க வேண்டியதில்லை. சிறு பதிப்பகங்கள் இந்த வகைமையில் அடங்கும்.
மேற்படி நிபந்தனை சிறு பதிப்பகங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில பதிப்பகத்தினர் குரல் கொடுக்கிறார்கள். சட்டரீதியான கணக்குவழக்குகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வர்த்தகத்தைக் குறைத்துக் காட்டும் பெரிய நிறுவனங்களும் சிறு பதிப்பகங்களுக்கான பாதிப்பு என நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஜிஎஸ்டி எண் கட்டாயம் என்றால் தங்கள் கச்சேரிக்குப் பாதிப்பு வந்துவிடுமே என்னும் கவலையைச் சிறு பதிப்பகங்களை முன்வைத்து இவை வெளிப்படுத்துகின்றன. ஆண்டுக்குச் சில நூல்களை மட்டுமே வெளியிடும் உண்மையான சிறு பதிப்பகங்களின் பாதிப்பைத் தவிர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும். அதே சமயம், சிறு பதிப்பகங்களின் வேடத்தில் உலாவும் பெரிய நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தங்கள் ஆட்டத்தைத் தொடர அனுமதிக்கக் கூடாது.
சிறு பதிப்பகங்களை ‘அரவணைக்கும்’ நோக்கத்துடன் எழும் கரிசனையான குரல்களைக் கேட்க இனிமையாக இருக்கிறது. இந்த அனுசரணையை அரசிடம் எதிர்பார்ப்பவர்கள் பதிப்பாளர்களுக்கென்றே நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் இந்த அனுசரணையைச் சிறு பதிப்பகங்கள்மீது காட்டுவதில்லை; பபாசியில் இவர்கள் உறுப்பினர்கள் ஆக்கப்படுவதில்லை. சிறுபதிப்பாளர்களைப் பபாசி சங்கத்தில் சேர்த்துக்கொள்வதற்கு முன்வைக்கும் நிபந்தனைகளைப் பார்த்தாலே இந்தக் கரிசனையின் போலித்தனம் அம்பலமாகிவிடும். ஒரு பதிப்பகம் தொடர்ந்து இயங்கிவருவதை நிரூபிப்பதற்காகத் தனது ஐந்தாண்டுக்கால வங்கிக் கணக்கு விவரங்கள், சிறுகுறு நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதுடன் சேர்க்கைக் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும். இத்தகைய நிபந்தனைகள் சிறுபதிப்பகங்களை அரவணைப்பவை அல்ல.
உறுப்பினர்களைச் சேர்க்கப் பல கட்டுப்பாடுகளை விதித்துப் பல ஆண்டுகள் பரிசீலிக்கும் பபாசியைக் கேள்வி கேட்காதவர்கள் அனைத்திற்கும் அரசை மட்டும் விமர்சிப்பது முரணானது. தங்கள் வரம்புக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்ட செயல்பாடுகளில் சிறு பதிப்பகங் களின் நலனுக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதே அவர்களுக்காக வாதாடும் பதிப்பகங்களும் பதிப்பகங்கள், விற்பனையாளர்களுக்கான அமைப்பான பபாசியும் செய்யக்கூடிய நேர்மையான செயல்பாடாக இருக்கும்.
ஐஎஸ்பிஎன் எண்களை வாங்குவது எந்த நிறுவனத்திற்கும் சாத்தியமானது என்பதால் அது சிறிய பதிப்பகங்களைப் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே சிறு பதிப்பகங்களுக்குப் பாதிப்பு இருந்தால் அதற்கான வழியைக் காட்டித் தீர்வு வழங்க வேண்டியது பதிப்பகங்களுக்கான அமைப்பாக இயங்கிவரும் பபாசிதானே தவிர அது மாநில அரசின் பொறுப்பல்ல.
நூல் வெளியீடு என்பது கலை, இலக்கிய அறிவுத் துறைகளைச் செழுமைப்படுத்தும் செயல்பாடாயிருப்பதால் ஒரு மொழியின் பண்பாட்டுச் சூழலில் அதற்கு மிக முக்கியமான இடமும் பங்கும் இருக்கிறது. இந்தச் செயல்பாட்டின் பலன் பரவலாகச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் நூலகங்களின் தலையாயப் பணி. பொது நூலகங்களுக்காக நூல்களை அரசு கொள்முதல் செய்வது இந்தப் பணிக்கான ஆதார வலு. இத்தகைய பணியைச் சிலர் தங்கள் சுயநலனுக்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வது இந்தப் பணியையும் அதற்குப் பின்னாலுள்ள நோக்கத்தையும் சிதைக்கும் செயல்பாடு. இதற்கு முடிவுகட்டுவதற்கான முன்னெடுப்பைத் தமிழக அரசு சரியான விதத்தில் மேற்கொண்டுள்ளது. இதிலுள்ள சில இடைவெளிகளை நிரப்பிச் சீரிய முறையில் இதை அமல்படுத்தி நூலகங்களின் செயல்பாட்டை வலுப்படுத்தித் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.