முரணும் இணையும்
உறவுகள்
(நாவல்)
நீல. பத்மநாபன்
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. ரோடு,
நாகர்கோவில் - 1
பக். 400
ரூ. 490
ஒரு முற்காலப் படைப்பு கண்களில் நீரை வரவழைக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமானால் அது காலத்தைத் தாண்டி வாழ்கிறது என்று அர்த்தம். நீல பத்மநாபன் எழுதிய ‘உறவுகள்’ நாவல் எனக்கு இதைத்தான் செய்தது. நாவலில் வரும் பிரதான பாத்திரமான ராஜகோபாலுக்கு ஒரு தலைமுறை இளையவளாக இருக்கிற போதிலும் எனது வாழ்க்கையில் எனக்கும் எனது அப்பாவுக்கும் இடையில் இருந்த நல்ல உறவை எண்ண வைக்கும் பாத்திரமாக, அப்பாவின் இறுதி மூன்று வாரங்களிலும் வீட்டுக்கும்-மருத்துவமனைக்கும், இங்கிலாந்துக்கும்-இலங்கைக்குமாக அலைந்து அனுபவித்த மன சஞ்சலத்தையும் நிம்மதியின்மையையும் மீட்டுக்கொண்டுவருவதாக, அவரது திடீர் மரணத்தின் மூலமாக எனக்கு ஏற்பட்ட ஆழ்மன உணர்வுகளைக் கிளறி வெளிக்கொண்டுவருவதாக இருந்தது, இந்த நாவல்.
எழுதும் விதமும் வாசிக்கும் விதமும் மாற்றமடைந்துள்ள இந்தக் காலத்தில் காலத்தைத் தாண்டிய படைப்பாக எழுத்தாளர் நீல பத்மநாபனின் ‘உறவுகள்’(1975) நாவல் காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பாக ஏப்ரல் 2023 இல் வெளியாகியுள்ளது.
மிக அண்மையில் இந்த நாவலை நான் வாசிக்கத் தெரிவுசெய்தபோது இரண்டு நாட்களில் வாசித்து முடிப்பது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முதல் பத்துப் பக்கங்களிலேயே இது நீண்ட வாசிப்பு என்பது எனக்குப் புரிந்தது. இந்நாவலின் முதல் நகல் எடுக்கப் பதினைந்து மாதங்கள் தேவைப்பட்டதாக நீல பத்மநாபன் முன்னுரையில் கூறியிருந்ததற்கான காரணமும் அப்போதுதான் புரிந்தது. தலைப்புக்கேற்ப நாவல் ஆரம்பித்ததுமுதல் முடியும்வரை ஒரு குடும்பத்துக்குள் உள்ள பல்வேறுபட்ட உறவுகளையும் அவர்களோடு தொடர்புபட்ட மக்களையும் அப் பாத்திரங்களுக்கு இடையேயான நெருக்கங்கள், முரண்பாடுகள், மன முறிவுகள் போன்ற பலவற்றையும் நீல பத்மநாபன் தனது நடையில் தந்துள்ளார்.
ஒவ்வொரு பாத்திரமும் மற்றொன்றோடு இணைக்கப்படும் விதம் அபாரமாக உள்ளது. வாசிக்கும்போது நடுவில் பல தடவைகள் நிறுத்திச் சிந்தித்தபோது நாமும் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் இதைத்தானே செய்கிறோம் என்று இருந்தது. நாம் தினமும் காணுகின்ற ஒவ்வொரு பொருளிலும் நபரிலும் ஒரு கதையை எம்மை அறியாமலேயே தேடுகிறோம்; இதுதான் இயல்பு; இதுதான் நியதி.
ராஜகோபாலுக்கு எப்போதெல்லாம் அவரது அப்பா கண்முன் வந்து போனாரோ அப்போதெல்லாம் எனக்கும் எனது அப்பா கண்முன் வந்து போனார். பல தடவைகள் புத்தகத்தை நெஞ்சில் கிடத்திவிட்டு முகட்டை வெறித்துப் பார்த்தபடி இருக்க வைத்தது நீல பத்மநாபனின் எழுத்து. என்னைப்போல் குடும்பத்தில் நெருங்கிய ஒருவரின் மரணத்தை எதிர்கொண்ட இலக்கிய ஆர்வமுள்ள எவராலும் நீல பத்மநாபனை விலக்கிவிட்டு இந்த வரலாற்றைப் பார்க்க முடியாது. அவரது வெற்றி இதில்தான் அடங்கியுள்ளது. அவரது பாத்திரங்களுக்குள் ஏற்படும் சூன்ய உணர்வுப் பிரமைகள் எம்மையும் தாக்கும்போது ஏனைய எழுத்தாளர்களிலிருந்து நீல பத்மநாபன் தனித்துத் தெரியத் தொடங்குகிறார்.
எலிசபெத் குப்லர் ரோசும்(Elisabeth Kubler Rose) டேவிட் கெஸ்லரும்(David Kessler) தமது ‘On Grief and Grieving: Finding the Meaning of Grief Through the Five Stages of Loss’ என்ற நூலில் துக்கத்தின் ஐந்து உளவியல் படிநிலைகளாக ஏற்க மறுத்தல், கோபம் கொள்ளுதல், பேரம் பேசல், மன உளைச்சல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைப் பகுத்து விளக்குகிறார்கள். இந்த ஐந்தையும் தனியொரு தமிழ் நாவலில் படிப்படியாகத் தன்னிலைகொண்டு வாசித்து உணர்ந்தறிய வேண்டுமாயின் அது உறவுகள் நாவலால் மட்டும்தான் சாத்தியம். உளவியல் பேசுகிறேன் என்பதை அறியாமலேயே நீல பத்மநாபன் உளவியல் பேசியுள்ளது நாவலுக்கு மேலும் சிறப்பைக் கொடுக்கிறது. எலிசபெத் குப்லர் ரோஸ் தன் கணவர் இறந்ததற்குப் பின்னர் எழுதிய ‘My own Grief’ நூலின் இறுதியில் கூறுவதுபோல் எப்படி இறந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியமானது. அத்தகையதொரு குடும்பத் தலைவனது இறப்பை இந்நாவலில் கருவாக்குகிறார்.
நீல பத்மநாபன் கதையைக் கொண்டு செல்லும் முறையானது பலராலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படலாம். கதையிலுள்ள பல உணர்வுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தோன்றலாம். பல உத்திகளும் கருக்களும் புதிது புதிதாகத் தோன்றும் இன்றைய காலத்தில் பதின்மூன்று நாட்களை மையப்படுத்தி ஒரே இடத்தில் நகர்கிற கதைக் கருவை இவ்வளவு நீண்ட நாவலாகப் படைப்பது ஒரு காவியத்தைப் படைப்பதைப் போன்றது. இது சுலபமான காரியமல்ல. எல்லோருக்கும் கைவரக்கூடிய காரியமுமல்ல. பல இடங்களில் தான் சமூகத்தில் அவதானித்த சாதாரண விடயங்களை மிக இலகுவாக நீல பத்மநாபன் விளக்கிவிடுகிறார். முகம் காட்டாமல் நித்தம் கிரீச் கிரீச் என்று தாறுமாறாக ஒலியெழுப்பும் வண்டியில் இறுதிப் பயணம் செய்து மருத்துவமனையிலிருந்து வெளியேறும் முகம் தெரியாத மனிதர்களுக்காக ராஜகோபாலின் மனம் பயம் கொண்டு ஏங்குகின்ற ஏக்கத்தை நம்மில் பலர் அனுபவித்திருக்கிறோம். இது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு இல்லை. இவை நீல பத்மநாபனின் நுண்ணிய அவதானிப்புகளாகும். நெருங்கியவரின் மரணத்தை எதிர்கொள்ள விரும்பாத ஒருவருக்கான மனிதாபிமான உணர்வுகளின் சாதாரண வெளிப்பாடுகளுமாகும்.
பக்கத்து வீட்டு முருகேசன், பிரம்பால் நடுங்க வைக்கும் நம்பி வாத்தியார் போன்ற வழியில் பார்க்கும் மனிதர்களும் அவர்கள் பற்றிய ராஜகோபாலின் நினைவுகளின் மீட்டெடுப்புகளும் நாவல் முழுவதும் விரவிக் காணப்படுகின்றன. நம் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் ஏற்படுகின்ற ஒன்றுதான் இந்த மீட்டெடுப்புகள். இது வாழ்க்கை அனுபவத்தினூடாக நாம் பெற்றுக்கொள்வது. இளவயதினருக்கு இதன் தன்மை தெரியாவிடினும், நடுத்தர வயதிலிருந்து இயல்பாகவே எல்லோரிலும் அமைந்துவிடுவதுதான் இந்த நினைவுகளின் மீட்டெடுப்பு. வயது போகப் போக இது அதிகரிக்கும் என்பது நான் எனது பெற்றோரைக் கண்டுணர்ந்த விடயம். அதே சமயம் இன்றைய தலைமுறையினரோடு ஒப்பிடுகின்றபோது இந்த நினைவுகளின் மீட்டெடுப்புக்கான தாத்பரியம் என்னவென்றும் பார்க்க வேண்டும். அவை வலிமையற்றவையாக வெற்று எழுத்துகளாக ஆரம்பத்தில் இளையவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் நடுத்தர வயதை அடையும்போது இந்த நாவல் பொருள் தரக்கூடும்.
நீல பத்மநாபனின் நகைச்சுவையுணர்வு பல இடங்களிலும் ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளது. தாயம்மாள், பெருமாள் கிணற்றில் விழுந்த கதையைப் படிக்கும்போது யாரும் நகைக்காமல் இருக்க முடியாது. சிலேட்டில் முந்நூற்று ஒன்று எழுத வைத்தல், சேலைக்கார ஆச்சி கதை என்று பல இடங்களில் நகைச்சுவை விரவிக்கிடக்கிறது. ராமநாதன்-மீனா உறவு, ராஜகோபாலன் தன்னைத் தானே காமுறுதல் போன்ற இடங்களில் கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன் ஆகியோரது எழுத்துகள் நினைவுக்கு வந்தன. மருத்துவமனையில் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடக்கும் ஒரே காட்சிக்கு இவை இடைச்செருகல்களாக அமைகின்றன.
நீல பத்மநாபனுக்கேயுரிய மொழிநடை பல இடங்களிலும் நாவலில் வெளிப்படுகிறது. அஞ்சமம், சாசுவதச் சத்தியமாய், நிஷ்வீரியம், நியாயீகரித்துக் கொண்டிருந்தாள், ஆவீர்பவித்து, சாட்சாத்கரிக்க, விஷ்ராந்தியாக, அந்தக்கரணம், துவந்த யத்தங்கள் போன்ற சொற்கள் என்னைக் கலைக்களஞ்சியங்களையும் இணையங்களையும் தேடச் செய்தன. இச் சொற்களுள் சிலவற்றிற்கான அர்த்தத்தைக் கடைசிவரை கண்டறிய முடியவில்லை. நோவுடன் சல்லாபித்தவாறு (p: 86), இவன் எப்படி முளைத்தான் (p:86), சோறை விளம்பித் தந்துவிட்டு (p: 158), துளும்பத் துளும்ப (p: 77) போன்ற சொற்பிரயோகங்கள் சற்று வித்தியாசமான அழகியலுடன் புதுமையாகத் தெரிந்தன.
இந்த நாவல் இளைய சமுதாயத்தைப் பிந்தித்தான் சென்றடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் திடீர் மரணத்தைக் குடும்பத்துக்குள் கண்ட எவரையும் இந்நாவல் இலகுவில் சென்றடைந்து எப்போதும் காலத்தை விஞ்சி நிற்கும். எதிர்காலத்தில் ராஜ கோபாலன் போன்ற யாரையேனும் எனது வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தால் கட்டாயமாக உறவுகள் நாவலும் எனது மனதில் மின்னலடித்ததுபோல் தோன்றி மறையும்.
அம்பிகை வேல்முருகு (அம்பி புவி): பரிசோதகர், கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல்: ambi_vel@yahoo.co.uk