தனிவழி நடந்தவர்
இந்திய திரைப்படக் கலையின் தரம் உயர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சமீபத்தில் மறைந்த குமார் சஹானி அவர்களில் ஒருவர். வெளியுலகில் அதிகம் அறியப்படாதவர். திரைப்படத்தைக் காவியமாக உருவாக்க அவர் மேற்கொண்ட நவீன உத்திகளும் முறைகளும் திரைப்படத்தின் தத்துவம், அரசியல் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துகளும் முக்கியமானவை. திரைப்படம் வணிக நோக்கின்றி அழகியலையும் அரசியலையும் வெளிப்படுத்தும் கலையாகப் பரிணமிக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
இப்போது பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திலிருக்கும் லர்கனாவில் 1940இல் பிறந்தார். பிரிவினைக்குப்பின் அவர் குடும்பம் பம்பாயில் குடியேறியது. அரசியலை இளங்கலை பாடமாகப் படித்தபின் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகப் படித்துப் பயிற்சி பெற்றார். அவர் ரித்விக் கட்டக்கின் மாணவர். அந்த மேதைக்கு நெருக்கமானவர். ஜான் ஆபிரகாம், மணி கவுல், அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் அந்நேரத்தில் தீவிர அரசியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தனர். மணி கவுலின் படங்கள் போன்றே இவர் படங்களிலும் ஒன்றுகூட வணிக அளவில் திரைப்பட அரங்குகளில் வெளியாகவில்லை. இருந்தும் திரைப்பட விழாக்கள், திரைப்படச் சங்கங்கள் மூலம் உலக அளவிலும் இந்தியாவிலும் இந்த இருவரின் படங்களும் பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றன.
திரைப்படக் கல்விக்காகப் பிரெஞ்சு அரசின் உதவித்தொகை பெற்று பிரான்ஸ் சென்றார். அங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக எழுந்த 1968ஆம் ஆண்டு மாணவர் எழுச்சியை நேரடியாகக் கண்டார். ராபர்ட் ப்ரெஸ்ஸோனின் முதல் படமான ‘Une Femme Douce’ (1969)இல் பணியாற்றினார். ஐரோப்பிய மேதைகளின் மினிமலிசத்தை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் இந்திய அழகியலையும் மரபையும் அவர் துறந்துவிடவில்லை. ஹோமிபாபா உதவித்தொகையில் இந்திய, புத்த காவிய பாரம்பரியத்தையும் அழகியலையும் முறையாகக் கற்றார்.
பாரீஸிலிருந்து திரும்பிய குமார் சஹானியின் முதல் முழுநீளப் படம் ‘Maya Darpan’ (Mirror of Illusion) 1972இல் வெளிவந்தது. தமிழில் ‘மாயக் கண்ணாடி’ எனலாம். அவர் படங்களில் முதன்மையான இடத்தில் வைக்கப்படும் படைப்பு. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில் வட இந்தியாவில் வாழும் தரங் என்ற பெண்ணின் கதை. செல்வம் மிக்க நிலக்கிழாரின் மகள். அத்தையுடனும் தந்தையுடனும் மிகப் பெரிய மாளிகையில் வாழ்கிறாள்.
‘மாயா தர்ப்பன்’
இடதுசாரிச் சிந்தனைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ரயில்வே பொறியாளர் தரங்கிடம் மனத்தைப் பறிகொடுக்கிறார். செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் அவளை மணமுடிக்க வீட்டில் முயற்சிகள் நடக்கின்றன. மார்க்சியக் கோட்பாடுகளில் ஈடுபாடுள்ள சகோதரன் வீட்டைவிட்டுப் போய் அஸ்ஸாமில் இருக்கிறான். அவளையும் அங்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அவனை நாம் படத்தில் காண்பதில்லை. சுதந்திரச் சிந்தனைகொண்ட தரங் தன் மனத்திலிருப்பதை வெளிப்படையாகத் தந்தையிடம் சொல்லிவிட முடிவு செய்கிறாள்.
படத்தில் நிகழ்பவற்றை ஆழமாகக் காட்சிப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளைக் கொண்டு கதை சொல்வதில் சஹானி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் முதல் உருவவாத (Formalist) திரைப்படம் எனத் திரைப்படக்கலை அறிஞர்களும் ஆர்வலர்களும் பாராட்டினர். எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. சிறப்பான ஒளிப்பதிவு. இதன் ஒளிப்பதிவாளர் கே.கே மஹாஜன் மணி கவுலின் ‘உஸ்கி ரோட்டி’ (Uski Roti) யில் பணியாற்றியவர். சஹானி படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பொழுது புலரும் நேரத்தில் தரங்கின் வீட்டினுள் காமெரா நம்மை அழைத்துச்செல்வதுடன் படம் தொடங்குகிறது. அந்தப் பிரம்மாண்டமான பழைய மாளிகை வீட்டினுள் இடது பக்கமிருந்து வலமாகவும் வலமிருந்து இடதாகவும் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் காமெரா இறுதியில் தரங்கின் படுக்கை அறையை அடைகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. இந்த முதல் பத்து நிமிடத் தொடர் காட்சிகள் அந்தப் பெரிய மாளிகையினுள் நிலவும் வெறுமையையும் தரங்கின் தனிமையையும் நம்மை முழுமையாக உணரச்செய்கின்றன. தனிமையிலிருந்தும் வெறுமையிலிருந்தும் வெளிவரத் துணியும் பெண்ணின் கதை. அதுபோல் பழைய கட்டுகளை உடைத்து உரிமைகளுக்காக எழும் மக்களின் கதை. இரண்டையும் அவருக்கேயான முறையில் படமாக்கியிருக்கிறார்.
1984இல் அவரின் இரண்டாவது படம் ‘தரங்க்’(Tarang) வெளிவந்தது. இதற்கு சஹானி பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருடைய பாணி இப்படத்தில் முதல் படத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது. வழக்கமான திரைப்பட உத்திகளை அவர் பயன்படுத்தியிருக்கும் ஒரே படம் என்று சொல்லலாம். ஒரு பெரிய முதலாளியின் குடும்பக்கதை. தீர்க்க முடியா உட்பூசல்களுடன் வாழும் உயர்நிலையிலுள்ள குடும்பம். அத்துடன் அவருடைய தொழிலாளர்களின் கதையும் இணைகிறது. அமோல் பலேகர், ஸ்மிதா பாட்டீல், ஓம் பூரி, கிரிஷ் கர்னாட் என்று சிறந்த நடிகர்களின் நடிப்பும் சிறப்பான ஒளிப்பதிவும் கொண்ட படம்.
1989இல் வெளிவந்த ‘காயல் கதா’ (Khayal Gatha) காயல் என்ற ராகத்தின் வரலாற்றைப் பற்றிய படம். இந்திய செவ்வியல் நடனத்துடன் இந்த ராகத்தின் தொடர்பை ஆராய்கிறது. பரிசோதனை முயற்சி என்ற வகையைச் சேர்ந்தது. ஆண்டன் செக்காவின் ‘In the Ravine’ கதையைத் தழுவி எடுத்த படம் ‘Kasba’ (1990). சத்ருகன் சின்ஹா, யகுபீர் யாதவ் நடித்துள்ளனர். அடுத்து அவர் இயக்கத்தில் தேசியத்தைப் பற்றி கேள்விகளை எழுப்பிய ரவீந்திரநாத் தாகூரின் இறுதி நாவல் ‘சார் அத்யாய்’ (Four chapters) படமாக வெளிவந்தது.
‘பவந்தரனா’ (Bhavantarana Immanence, 1991), ‘பான்சூரி’ (Bansuri (Bamboo Flute, 2000) இரண்டும் அவருடைய முக்கிய ஆவணப்படங்கள். Bhavantarana பாரம்பரிய ஒடிஸ்ஸி நடனக் கலைபற்றி எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப் படம் . புகழ்பெற்ற ஒடிஸ்ஸி நடன மேதை குரு கேளுச்சரண் மொஹாபத்ராவின் கலையையும் வாழ்க்கையையும் விவரிக்கிறது. Bansuri இந்திய இசையின் முக்கிய இசைக்கருவியான மூங்கில் புல்லாங்குழலையும் அதன் நீண்ட வரலாற்றையும் பற்றிய ஆவணப்படம். இப்படங்களில் அவர் பாணி மாறுகிறது. Khayal Gathaவில் பண்டிட் பிர்ஜு மஹராஜ், Bhavantaranaவில் கேளுச்சரண் மொஹாபத்ரா, Bamboo Fluteஇல் அலர்மேல் வள்ளியும் பிறரும் என்று நடிகர்களுக்குப் பதிலாக நடனக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
ராபர்ட் ப்ரெஸ்ஸோனும் ரித்விக் கட்டக்கும் அவருடைய ஆசிரியர்கள். பன்முகப் பார்வைகொண்ட சரித்திர ஆசிரியர் டி.டி. கோசாம்பியும் அவருக்கு முக்கியமானவர். அவர் ரித்விக் கட்டக்கின் பாணியைப் பின்பற்றியதில்லை. ப்ரெஸ்ஸோன், இத்தாலிய நியோ ரியலிச இயக்குநர் ரபெர்ட்டோ ரொஸ்ஸெலினி இருவரும் தன்னைப் பாதித்த இயக்குநர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தியத் திரைப்பட விழாக்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து அவர் படங்களுக்கு உரிய பரிசுகளை அளித்துக் கவுரவித்திருக்கின்றன. உலகளவில் திரைப்பட விழாக்களிலும் திரைப்படக் கல்லூரிகளிலும் அவருடைய படைப்புகள் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. நெதெர்லாந்தின் ‘ரோட்டெர்டாம்’ உலகத் திரைப்பட விழாக் குழுவினர் அவருக்குச் சிறப்பு இடமளித்து அவருடைய படங்களைத் தொகுப்பாகத் திரையிட்டனர். 1990இல் அவர் இயக்கிய ‘Khayal Gatha’ ரோட்டெர்டாம் திரைப்பட விழாவின் சர்வதேச விமர்சகர் பரிசை - FIPRESCI award - பெற்றது. அவர் படங்களின் தொகுப்பு சீனாவின் பிங்காயோ சர்வதேச விழாவிலும் திரையிடப்பட்டது. அத்துடன் சஹானி ஆசிரியராகப் பங்கேற்ற திரைப்படக்கலை பற்றிய - Master Class - வகுப்புகளும் அந்த விழாவில் நடைபெற்றன.
‘தரங்’
திரைப்படங்களை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் தொடங்கப்பட்ட ‘பிலிம் ஹெரிட்டேஜ் ஃபௌண்டேஷன்’ (Film Heritage Foundation) பணிகளில் ஈடுபட்டிருந்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் சிறந்த திரைப்படக் கோட்பாட்டாளர்கூட. அவர் எழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பு ‘குமார் சஹானி: திஷாக் ஆஃப் டிசயர் அண்ட் அதர் எஸ்ஸேஸ்’ (Kumar Shahani: The Shock of Desire and Other Essays ) என்ற புத்தகமாக வெளிவந்திருக்கிறது.ஒவ்வொரு திரைப்பட ஆர்வலரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். இந்த நூலிலுள்ள கட்டுரைகள் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்டவை. திரைப்படக் கலையின் ஆரம்பக் காலத்தில் அவர் சந்தித்த, கடந்துவந்த பல எதிர்ப்புகளுக்குத் தன் நிலைப்பாட்டைத் தெளிவாகவும் கலாபூர்வமாகவும் அளிக்கும் பதில்களைக்கொண்ட கட்டுரைகளும் உள்ளன. அந்நேரத்தில் தன் சிறப்பான படைப்புகளால் உலகளவில் அறியப்பட்டிருந்த சத்யஜித் ராய் எந்த அளவு வரவேற்பை இவருக்கும் மணி கவுலுக்கும் அளித்தார் என்பதை அறியும்போது மனம் வருந்துகிறது. சஹானியையும் அவர் படங்களையும் பற்றிப் பெருமதிப்பு கொண்டிருக்கும் சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியரும் திரைப்பட இயக்குநருமான லலீன் ஜயமன்னே (Laleen Jayamanne) எழுதியிருக்கும் புத்தகம் ‘தி எபிக் சினிமா ஆஃப் குமார் சஹானி’ (The Epic Cinema of Kumar Shahani).
சஹானி தான் உறுதியாகப் பின்பற்றி படமெடுக்கும் முறைகளில் எவ்வித சமரசத்திற்கும் உடன்படாததால் தனது படங்களின் தயாரிப்பிற்கு மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார். இறுதிவரை அரசு நிறுவனம் NFDCயும் ஒரு சில தயாரிப்பாளர்களும் மட்டுமே முன்வந்தனர். அவருடைய படமெடுக்கும் திட்டங்கள் பல நிறைவேறாது போயிருக்கின்றன; பாதியில் அல்லது ஆரம்பித்துச் சில அடிகள் படமெடுத்தபின் நின்றுபோயிருக்கின்றன. குறும்படத்துடன் 1966இல் தொடங்கிய அவருடைய திரையுலக வாழ்க்கை 2006ஆம் ஆண்டு ஒரு ஆவணப்படத்துடன் முடிகிறது. IMDB கணக்கின்படி ஆவணப்படங்கள், குறும்படங்கள், முழுநீளப் படங்கள் என மொத்தம் 18 படைப்புகள். அவரின் முக்கிய படங்களும் ஆவணப்படங்களும் இணையத்தில் Youtubeஇல் காணக்கிடைக்கின்றன.
அவர் படங்களுக்கு என்று குறிப்பிட்ட அளவு திரைப்பட ஆர்வலர்கள் நம் நாட்டிலும் உலகளவிலும் உண்டு. கேரளா அவருக்கு மிகவும் பிடித்த இடம். கேரள திரைப்பட ஆர்வலர்கள் இறுதிவரை முக்கிய இயக்குநருக்கான மரியாதையை அவருக்கு அளிக்கத் தவறவில்லை. மற்றபடி நம் நாட்டில் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும் 2022இல் திரைப்பட ஆர்வலர்களின் முயற்சியால் ‘Maya Darpan’ படத்தின் 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
2024 பிப்ரவரியில் கொல்கத்தாவில் 83 வயதில் காலமானார். குமார் சஹானி சிறந்த ஆசிரியர். வாழ்நாள் முழுவதும் புனே திரைப்படக் கல்லூரியிலும் கொல்கத்தா சத்யஜித் ராய் திரைப்படக் கல்லூரியிலும் வேறு பல இடங்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியிருக்கிறார்; தனது படங்களைக் காட்டியிருக்கிறார்; கலந்துரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். திரைப்படக் கலையின் சாரத்தை அவரிடமிருந்து பெற்ற அவர் மாணவர்கள் அக்கலையை மேலும் உயரக் கொண்டு செல்வார்கள் என்று நம்பலாம். திரையுலகில் இறுதிவரை துணிவுடன் தனித்து நின்ற இந்தப் படைப்பாளிக்கு அஞ்சலி.
மின்னஞ்சல்: anandsiga@gmail.com