நிகர்
1. நிகர்
உறங்கி விழித்தபோது
ஊர் நடுவே
தலையெல்லாம் இலைகளோடும்
பழங்களோடும் பறவைகளோடும்
கம்பீர மரமாக நின்றேன்
எனது காலடியில்
ஒரு கல் இருந்தது
ஜனம்
பூமியில் உடல்பட
விழுந்து விழுந்து
அக்கல்லை வேண்டியது
ஒருநாள் அது களவும் போனது
அன்றிலிருந்து அம் மக்கள் என்னை
மரச் சாமி மரச் சாமி என்று
பக்தியின் திருநீறு வாசனையுடன்
அழைத்தனர்.
கடவுளாக நடந்துகொள்வதில்
முன்பின் அனுபவமில்லாதபோதும்
ஆசீர்வாதமாக
ஒரு இலையையோ
ஒரு கனியையோ
ஒரு எச்சத்தையோ இட்டுச்
சமாளித்தேன்.
ஒருவன் மட்டும் தூரமாக நின்றுகொண்டு
கேவலமான பொறுக்கி மரம்
மோசமான மொள்ளமாரி மரம்
கேடுகெட்ட முடிச்சவுக்கி மரம்
என்று சதா திட்டிக்கொண்டே இருந்தான்.
அவனைப் பார்த்து
அத்தனை இலைகளையும்
உதடுகளாக்கிச் சிரித்தேன்
அது அப்படியொரு சிரிப்பு.