உதிர்ந்தவன்
ப்ரபுத்தா இறந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தபோது, ஆனந்தத்தின் உச்சியில் திளைத்துக்கொண்டிருந்தேன். காரணமற்ற மகிழ்ச்சி அல்ல; உச்சபட்ச சிகரத்தை நோக்கி முன்னேறும் மலையேறிக்கு ஒரு குட்டி முகட்டைத் தாண்டியபிறகு ஏற்படுவது போன்றது. ஆனால் முகட்டின் மறுபுறம் கிடுகிடுவென்ற சரிவு இருக்கத்தானே செய்யும். முன்னுணராதது என்னுடைய தவறேதான்.
‘என்னவொரு அபத்தம்... என்னவொரு அபத்தம்...’ என்று இப்போதுவரை மனம் அரற்றுகிறது. ஆனால் அவனது மரணச் செய்தி கிடைப்பதற்கு முந்தைய கணத்தில் நிரம்பியிருந்த ஆனந்தத்துக்குக் காரணமும் அவனேதான் என்பதில் மனித வாழ்வின் மகத்தான நகைமுரண் ஒளிந்திருக்கிறது.
கிறுக்கன். அவன்தான் அவசரமாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்; நமக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது என்றுதானே நினைப்போம். நிதானமாகச் சொல்கிறேன்.
மிகப் பல ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசின் கலை நிறுவனமொன்று குண்டூரில் நடத்திய கவிதைக் கூட்டத்துக்கு அழைப்பு வந்தது. ஆந்திரத்தில் பிறந்தவரும், ஞானபீட விருதுக்குத் திரும்பத்திரும்பப் பரிந்துரைக்கப்பட்டு இறுதிவரை வழங்கப்படாதவரும், அது ஒன்