படுகொலைகள்: நீதியைக் கொல்லும் வழி
கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன் வீட்டு வாசலில் வைத்துக் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களென காவல்துறை கைதுசெய்தது. இவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை மாதவரம் ரெட்டேரி பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் திருவேங்கடம் மரணமடைந்தார் எனக் காவல்துறை கூறியது. இதுவரை இவ்வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜூலை 11இல் புதுக்கோட்டையில் துரைசாமி என்பவரும் இதுபோன்ற ‘மோதலில்’ பலியானார். காவல்துறையைத் தாக்கித் தப்பிக்கப்பார்த்தபோது துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்ததாகக் காவல்துறை கூறியது.
கடந்த வருடம் கூடுவாஞ்சேரியில் காவல்துறையுடனான ‘மோதலில்’ ரமேஷ், வினோத் ஆகியோர் பலியானபோதும் இதே காரணம்தான் சொல்லப்பட்டது. மோதல் கொலைகளின்போது அரசும் காவல்துறையும் மக்களைச் சமாதானப்படுத்துவதற்காகக் கூறிக்கொள்ளும் 99 சதவீதக் காரணம் இது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒட்டி அவரது கட்சியினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அரசுக்கும் காவல்துறைக்கும் எதிரான கடும் எதிர்ப்புணர்வு உருவாகிவந்தது. சட்டம், ஒழுங்கு குறித்த அவநம்பிக்கை மேலெழுந்தது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்குக்கூடப் பாதுகாப்பற்ற நிலை என்னும் கோபங்கள் வலுப்பெற்றன. பொதுமனங்களில் இத்தகைய குமுறலும் எதிர்ப்புணர்ச்சியும் உருக்கொள்ளும்போது அரசும் காவல்துறையும் ‘அதிரடி’ நடவடிக்கைகள் மூலம் அவற்றைத் தணிக்க முயல்வது இந்திய அரசியலில் புதிதல்ல. காவல்துறையுடனான ‘மோதலில்’ திருவேங்கடம் பலியானதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
பெருகும் வன்முறை
தமிழகத்தில் காவல்துறை வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. பட்டியல் சாதிகளுக்கு எதிரான போக்குகளும் பெருகியிருக்கின்றன. தொடர்ந்து அரசியல் கொலைகள் நிகழ்ந்தபடியிருக்கின்றன. வேங்கைவயலில் பொதுக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக்கூடக் காவல்துறையால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. நாங்குநேரியில் பள்ளிச் சிறுவர் ஒருவரும் அவருடைய தங்கையும் சாதி இந்து மாணவர்களால் வாள்வெட்டுக்கு ஆளானார்கள். சம்பவத்தை நேரில் கண்ட மாணவரது தாத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியில் இரண்டு மோசமான நிகழ்வுகள். 2022இல் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மச் சாவு, விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுமான சம்பவங்களில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படுபவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கால் கை உடைந்து மாவுக்கட்டுப் போடப்படுகிறார்கள். இதுபோன்ற செய்திகளையெல்லாம் அண்மைக் காலத்தில் அதிகமாகவே காண முடிகிறது. சவுக்கு சங்கர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்ததை உயர்நீதிமன்றம் ரத்துசெய்த பிறகும் வேறொரு வழக்கில் உடனடியாக அவர்மீது குண்டர் சட்டத்தில் காவல்துறை வழக்கு தொடுத்திருக்கிறது. சங்கருக்கும் மாவுக்கட்டு உண்டு. சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூ டியூப் தளத்தை அரசு முடக்கியிருப்பதை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி எஸ். பழனிசாமி கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன எனக் கூறியிருக் கிறார். பெரும்பாலும் கூலிப்படைகளாகக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போதையிலும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாயும் இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரைப் போதைக் கும்பல் அடித்துக் கொலை செய்திருக்கிறது. இது, கொலைகளுக்குப் பின்னுள்ள சமூக - பொருளாதார நிலையைக் காட்டுகிறது. இளையோர் மத்தியில் போதைப் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு பெருகியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. குறிப்பாகக் கல்விக்கூடங்களுக்கு அருகில் போதைப்பொருள்கள் சரளமாகப் புழங்குவதாகச் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளும் அளவில்லாமல் பெருகிவருகின்றன. திருநெல்வேலியின் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங், திருநெல்வேலியில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா, சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சண்முகம், தற்போது ஆம்ஸ்ட்ராங் எனக் கடந்த சில மாதங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குற்றங்களுக்கான எதிர்வினைகள்
இவையனைத்தும் தமிழ்நாட்டில் ஒருபுறம் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகள் அதிகரித்துவருவதையும் மறுபுறம் காவல் துறை நடவடிக்கைகளின் கடுமை கூடிவருவதையும் காட்டுகின்றன. சட்டம், ஒழுங்கு சீர்குலையும்போது காவல்துறையின் கடுமை கூடுவதும் பின்னர் இந்த நடவடிக்கைகளைச் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவை வைத்து நியாயப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது. பொதுவெளியில் நிகழும் குற்றங்களால் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் அச்சத்துக்கும் ஆளாகும் பொதுமக்கள் காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கை களை – ‘மோதல் கொலைகள்’ உள்பட – ஆதரிப்பது புரிந்து கொள்ள க்கூடியதுதான். இந்நிலையில் பொதுவெளியில் நிகழும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் மோதல் கொலைகள் அதிகரிப்ப தற்கும் இடையே உள்ள உறவு மிகவும் வெளிப்படையானது.
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் அண்மைக் காலத்தில் அதிகரித்துவரும் கொலைகள், குற்றச் செயல்கள் குறித்த கவலை கூடுதலாகிறது. சமூகக் குற்றங்கள் அதிக அளவில் நிகழாமல் தடுப்பதிலோ அவை மேலும் தொடர்வதைக் கட்டுப்படுத்துவதிலோ தடுமாறும் அரசு, இவ்வாறான அசம்பாவிதங்களின்போது வெகுமக்களிடமிருந்து எழும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காகத் தன் நடவடிக்கைகளில் கடுமையைக் கூட்டிக்கொள்கிறது. இந்த ஆவேசத்தில் சட்ட நெறிகளும் மனித உரிமை சார்ந்த கவலைகளும் காணாமல்போகின்றன. மோதல் கொலைகள் எந்த விதத்திலும் குற்றங்களைக் குறைக்கப் பயன்படுவதில்லை என்பதையும் மக்களின் கொதிப்பைத் தணிப்பதற்கான நடவடிக்கையாகவே இவை அமைகின்றன என்பதையும் பார்த்துவருகிறோம். பல சமயங்களில் இத்தகைய கொலைகள் ‘வேண்டாதவர்களைக்’ கணக்குத் தீர்க்கும் காரியமாக அமைகிறது. இவை நீதிக்கு எந்தவிதத்திலும் துணைசெய்யக்கூடியவை அல்ல; நீதியின் கண்களைக் கட்டுவதற்கே பயன்படுகின்றன.
அரசியல் கட்சிகள், அரசாங்கங்கள், காவல்துறை ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் ரவுடிகளோ அவர்களுடைய குற்றச் செயல்களோ வளர்வது சாத்தியமில்லை; இதை முன்வைத்துப் பார்க்கும்போது இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள அநீதியின் பரிமாணம் கூடிவிடுவதை உணரலாம்.
சமூகப் பாதுகாப்புக்காகத் தனிமனிதர்கள்மேல் அரசு மேற்கொள்ளும் வன்முறைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதாம் என்னும் பொதுச் சிந்தனை வளர காவல்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது மக்களின் சிந்தனையை ஜனநாயக வழிமுறை யிலிருந்து விலக்கி அழைத்துச்செல்லக்கூடிய போக்காகும்.
குற்றம், அதன் பின்னணி, மெய்க் குற்றவாளிகள் ஆகியவற்றை மறைத்துவிடக்கூடியவையாக மோதல் கொலைகள் உருவாகின்றன. அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படாததால் சமூகத்தின் பாதுகாப்பற்ற சூழலில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. அரசும் காவல்துறையும் அதுசார்ந்த இதர அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பை, அவற்றுக்கான விரிவான ஏற்பாடுகளை உறுதிசெய்யாமல் இருப்பதே பொதுக்குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள்.
நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் காவல்துறையின் போக்குகள், அமைப்புக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பேசியிருக்கின்றன. காவலர்களின் மன ஆரோக்கியம் குறித்துக் கவலை தெரிவித்து, அவர்களுக்கான நெறிமுறைகளை உருவாக்கிக்கொடுத்திருக்கின்றன. அந்த ஆலோசனைகளையும் நெறிமுறைகளையும் காவல்துறை கடைப்பிடிப்பதில்லை. இவற்றைச் செயல்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழு எதுவும் இயங்குவதாகவும் தெரியவில்லை.
காவலர்களின் மனநலம் குறித்த அக்கறைகளும் முக்கியமானவை. சமூக அழுத்தங்கள், வேலைப்பளு, மேலதிகாரிகளின் - அரசியல் புள்ளிகளின் அழுத்தங்கள் போன்றவற்றால் காவல்துறைக்குள் தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவற்றை அரசு கவனத்தில்கொள்வது அவசியம். ஆரோக்கியமான சமூக அமைப்பும் காவல்துறையின் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை.
ஒருவர் குற்றவாளியாகவே இருப்பினும் அவரை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த இந்திய அரசியல் சட்டம் வழிசெய்திருக்கிறது. 1948இல் முன்மொழியப்பட்ட சர்வதேச மனித உரிமைக்கான பிரகடனமும் கண்ணியமான உயிர்வாழ்வுக்கான உரிமையை உறுதிசெய்கிறது. காவல்துறை இவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பதே பண்பட்ட ஜனநாயக அரசின் வழிமுறையாக இருக்கும். காவல்துறை நீதி வழங்கும் அமைப்பாக மாறி மனித உயிர்களைப் பறிக்கும் அதிகாரத்தைக் கைக்கொள்வது மனித உரிமைகள் சார்ந்த கவலையை அதிகரிக்கச் செய்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.