ஒளியமைப்பாளனின் மனப்பதிவுகள்
நன்றி: கூத்துப்பட்டறை
கூத்துப்பட்டறை அரங்கில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்று வெளி ரங்கராஜன் இயக்கத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலின் மேடையாக்கத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவல் ஆங்கில மொழியில் ‘Notes of a Death House’ என்ற பெயரில் வெளிவந்தது. இது பின்னர் தமிழில் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ என்னும் பெயரில் பிரசுரமாகியுள்ளது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யாரென்று என் நினைவில் இல்லை. ஆனால் இந்நாவலை எஸ். ராமகிருஷ்ணன், ரமேஷ் இணைந்து அதே பெயரில் நாடகமாக உருவாக்கியுள்ளனர். இந்நாடகம் முதலில் வெளி ரங்கராஜனின் நாடக வெளி என்னும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. பின் அதனையே அவர் தன் நாடகக் குழுவினர்மூலம் கூத்துப்பட்டறையில் மேடையேற்றி இயக்கியுள்ளார்.
தமிழில் இலக்கியரீதியான அளவில் மேடையேற்றுவதற்கான படைப்புக்கள் இல்லாத சூழலில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலை நாடகமாக்கிக் கொடுத்துள்ள இருவரையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் தமிழ் நாடகவுலகில் மேடையேற்றத்துக்கான நாடகப் பிரதிகள் இல்லாத வறிய சூழலில் ஒரு நாவலை நாடகமாக வடிவமைத்துக் கொடுத்தது தமிழ் நாடகவுலகுக்கு மிகவும் தேவையானதாகும்.
பிறப்பு இறப்பு - எப்படி நம் கையில் இல்லையோ அதுபோல நாம் வாழும் வாழ்வும் நம் கையில் இல்லை. சிறைக்குள்ளும் சிறைக்கு வெளியேயும் உள்ள மாந்தர்களின் வாழ்வெல்லாம் அரசு இயந்திரத்தின் எதேச்சாதிகார ஆணையால் கட்டுப்பட்ட ஒன்று. மரண வீடு இங்கு சிறைக்கூடம் மட்டுமன்றி நாம் வாழும் உலகையும் சுட்டுகிறது. இங்கு விதிக்கப்பட்ட வாழ்நெறிமுறைகளே குறிப்புக்களாக உள்ளன. இவை நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன. நோம் சோம்ஸ்கியின் வார்த்தைகளில் சொன்னால் ‘Manufacturing Consent’ எனச் சொல்ல வேண்டும்.
மரண வீடாக உருவங்கொள்ளும் சிறைக்கூடத்தின் அரங்க வடிவம் பாராட்டுக்குரியதாகும். முன்னரங்கின் இரு பக்கத்தையும் இணைக்கும் இரண்டு கறுப்புக் கயிறுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவ்விரண்டையும் ஓரடிக்கு ஒரு கயிறாக இணைத்துச் சிறைக்கூடத்தின் கம்பிகளைப் போலவும் அதன் நடுவே சிறைக்கூடத்தின் கதவையும் ஒரு மூலையில் சிலந்திவலையையும் உருவாக்கப்பட்டிருந்ததைப் பாராட்ட வேண்டும். இச்சிறைக்கூடத்தை உருவாக்கியவர் கூத்துப்பட்டறை நடிகர் ஆரா அஜித். இவரே சிறைக் கைதிகள், சிறை அதிகாரி, காவலரின் உடைகளையும் வடிவமைத்திருந்தார். ஆனால் ஓர் உறுத்தல், சிறைக் கைதிகளின் உடைகள் யாவும் தூய வெண்ணிறம் கொண்டவையாக உள்ளன. அவற்றில் கசங்கலோ அழுக்குக்கறையோ இல்லை. அவர்களின் கழுத்தில் பூட்டப்பட்ட வட்ட வளையத்திலிருந்து இரண்டு கைகளையும் கால்களையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலிகள் பிறந்த நாள் விழாவின்போது வீட்டறையில் கட்டித் தொங்கவிடப்படும் கம்பிக் கயிற்றினை ஒத்தவையாக உள்ளன. அதற்குப் பதிலாக இரும்புச் சங்கிலிகளையே பயன்படுத்தியிருக்கலாம்.
அலெக்சாந்தராக ஆரா அஜித், பெலூசினாக ராகுல், பெடரோவாக நிரஞ்சன், சிரோசாவாக நவீன் நிரஞ்சனா ஆகியோர் நாடகப் பாத்திரங்களாக உருமாறியிருந்தார்கள். சிறை அதிகாரியாக வரும் பிரியதர்ஷினி நடிப்பும் கம்பீரத் தோரணையும் பாராட்டும்படியாக இருந்தாலும் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ், வெண்ணிற முழங்கைச் சட்டை எல்லாமே Otto, Peter England விற்பனைக் கூடங்களில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வரும் Modelling Dress பாணியை ஒத்திருந்தது. பார்வையாளர்களின் கண்ணுக்கு எடுப்பாக இருந்தாலும் எனக்கு என்னவோ தமிழ்த் திரைப்படங்களின் போலீஸ் அதிகாரியாக வரும் நயன்தாரா, தமன்னாவை நினைவூட்டும் வகையில் தோன்றியது. ரொட்டி விற்கும் பெண்ணாக, சீமாட்டியாக இரு வேடங்களில் தோன்றிய தேவி பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றார். அதேநேரத்தில் அவரது மகன், மதன் சிறைக் காவலாளியாக மிக இயல்பாக நடித்திருப்பதையும் சொல்ல வேண்டும்.
‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாடகத்தின் பின்னணி இசையை உருவாக்கிய அலெக்ஸ் பாராட்டிற்குரியவர். கைதிகளின் அவல வாழ்வின் பின்னாலுள்ள சோகத்தின் நினைவூட்டலாக இசையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஒட்டி ஒளியமைப்புப் பற்றியும் சொல்ல வேண்டும். இரண்டு LED விளக்குகளைக் கொண்டு ஒளியமைப்பை உருவாக்கியிருப்பதில் பல பிரச்சினைகள். நடிகர்கள் பெரும்பாலும் இருளில் இருந்தனர். இரண்டு மஞ்சள் வண்ண ஒளியூட்ட ஒளியில் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல இடங்களில் ஒளியமைப்பு இல்லாமல் கருந்திட்டுக்களாகவே அரங்கம் காட்சியளித்தது. ஒளி அமைப்பினை உருவாக்கியவர் விஜயராமன். கூத்துப்பட்டறையில் உள்ள ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்நாடகத்தின் இயக்குநர் வெளி ரங்கராஜன், பணியில் இருந்தபோதும் பணி ஓய்வு பெற்றபோதும் தொடர்ந்து நாடகத் தயாரிப்புகளில், இயக்க வேலைகளில் ஈடுபட்டுவருவது தமிழ் நாடகவுலகுக்கு அவர் ஆற்றும் மிகப் பெரும் பணி. தமிழ் நாடக வரலாற்றில், பத்து ஆண்டுகளாக என நினைக்கிறேன், அவர் நடத்தி வந்த நாடக வெளி சிற்றிதழ் தமிழ் வாசகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் நாடக இயக்குநர்கள், நடிகர்கள், ஆர்வலர்களுக்கான ஒரு கொடை. இச்சிற்றிதழ்கள் தொகுப்பாகக் கிடைக்கும் என நம்புகிறேன். வெளி ரங்கராஜனின் ‘நடுக்கடலில்’ நூல் உலக நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பாகும். இன்றும் முகநூல் பதிவுகளில் அவர் இயக்கத்தில் மேடையேறிய உலக நாடகங்களின் பதிவுகளைக் காணலாம்.
ஒத்திகையின்போது மட்டுமல்ல, அதன் பின்னரும் நடிகர்களோடு சமமாக உணவகங்களில் சாப்பிடும்போதும் தேநீர், காப்பி அருந்தும்போதும், இதர வேளைகளிலும் நாடகத் தயாரிப்புகள்பற்றி அவர் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்நாடகம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் மத்தியிலும் மேடையேற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
மின்னஞ்சல்: craveendran43@gmail.com